திங்கள், 7 ஆகஸ்ட், 2017

”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” – திரு G.M.B. ஐயாவின் கவிதைத் தொகுப்பு - வாசிப்பனுபவம்




இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே WWW.PUSTAKA.CO.IN மூலம் வெளியான தனது முன்று மின்புத்தகங்களை அன்பளிப்பாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திருந்தார் G.M.B. ஐயா. சில பல காரணங்களால், மின்புத்தகங்களை வாசிக்க முடியாமல் தட்டிக்கொண்டே போனது. மேலும், புஸ்தகாவில் மின்புத்தகங்களை கணினியில்/அலைபேசியில் படிப்பதில் சில சிக்கல்கள்! குறிப்பாக அன்பளிப்பாக வந்த புத்தகங்கள் அலைபேசியில் காணமுடிவதில்லை. கணினியில் படிக்கும்போதும் சற்று கஷ்டப்பட்டே படிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும் இந்த வாரத்தின் ஞாயிறில் அவர் அனுப்பிய மின்புத்தகங்களில் ஒன்றாவது படித்து முடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இதோ படித்து, அந்த வாசிப்பனுபவத்துடன் உங்களோடு!


காக்க காக்க!” என்ற முதல் கவிதையோடு ஆரம்பிக்கிறது தொகுப்பு - இறைவனிடம் பட்டாம்பூச்சியைக் காப்பாற்ற வேண்டிய பாலகன், விஷமம் செய்த போது அம்மா அடிக்க, கடவுளிடம் வேண்டிக்கொள்கிறான் – ”பட்டாம்பூச்சியைக் காத்த கடவுளே, என்னையும் இவர்களிடமிருந்து காப்பாற்று!

கவிதைத் தாகம்” என்ற தலைப்பிட்ட இரண்டாம் கவிதையில்….

எண்ணியதனைத்தையும் கவிதைக்குள்
முக்கியெடுக்கும் ஆற்றலுமில்லை.
நானென்ன,
வார்த்தைகளால் தவமியற்றி
வரங்கேட்கும் கவிச்சித்தனா….
பார்த்தவற்றை கவிதைக்குள்
பதுக்கி வைக்கும் பகல் திருடனா….
பாட்டை ஆளும் பாட்டாளியா….!
ஊர்க்குருவி நானும் பறக்கிறேன்,
ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவே.

என்று சொன்னாலும் தொகுப்பில் உள்ள கவிதைகள் பலவும் தேர்ந்த ஒரு கவிஞரால் எழுதப்பட்டவையே என்பதில் சந்தேகமில்லை.

வயோதிகம் பற்றிய கவிதையில்,

“உலகத்தோரே உங்களிடம் கேட்கிறேன்,
வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட தண்டனையா?”

என்று கேட்கும் இவர், நிலையாமை பற்றிச் சொல்லும்போது,

பெயர் ஒன்று கொண்டு புவியில் திரிந்தவர்
போகையிலே வெறும் பிணமே வெறும் சவமே
கையில் கடிகாரம் கட்டினால்
காலத்தை வென்றவர் ஆவோமா? என்று கேட்கிறார்.

ஹாப்பி பர்த் டே” எனும் தலைப்பிட்ட கவிதையில் இன்றைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கண்டு மனம் வருந்துகிறார் நூலாசிரியர் – ”பிறந்த நாள் நல்ல நெறி கற்பிக்கும் நாட்களாகக் கூடாதா?” என்ற கேள்வியோடு, ”உள்ளதை இல்லாதாருடன் பகிர்ந்து மகிழும் நாளாகப் பழக்கப்படுத்தி, பிள்ளைகளைப் பாங்காக வளர்க்கலாமே…. வளர்ந்தபின் உதவும் எண்ணம் விதையாகிப் பின் விருட்சமாகாதா?” என்ற செய்தியோடு….

என்ன நீதி?” என்ற தலைப்பிட்ட கவிதையில் நான் ரசித்த சில வரிகள்…

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்
என்றோ ஓதியது, எண்ணத்தில் ஓடியது…
எண்ணில் எழுத்தில் இறைபுகழ் பாட என்னால்
இயலவில்லை. கண்முன்னே விரியும் அவலங்கள்
அவனும் அறிந்தவன்தானே? தீயவை தலை தூக்க
தர்மம் நிலைநாட்ட யுகந்தோரும் மீண்டும்
மீண்டும் அவதரிப்பேன் என்றவன் இன்னும் அவன்
வருகை நிகழ்த்தாதிருத்தல் என்ன நீதி?

ரசித்த இன்னுமொரு கவிதை – ”உயிலொன்று எழுத” என்ற தலைப்பிட்ட கவிதை… அதிலும் அந்த கடைசி வரிகள்…..

நான் செய்த புண்ணியங்கள் அனைவருக்கும்
சேரட்டும், காட்டிய அன்பு பல்கிப் பெருகட்டும்
ஈட்டிய பாவங்கள் என்னுடலோடு எரியட்டும்.
இதுவன்றி உயிலில் எழுத எனக்கேது சொத்து.

இப்படி நிறைய கவிதைகள்…. தசாவதாரக் கதைகளில் சிலவும் கவிதையாகப் படைத்திருக்கிறார். அவையும் நன்றாகவே இருக்கின்றன. எல்லாவற்றையும் இங்கேயே சொல்லி விட்டால் எப்படி!  அதனால் ரசித்த கவிதை வரிகள் இங்கே கொஞ்சம் மட்டும்…..

127 பக்கங்கள் கொண்ட இந்த மின்புத்தகத்தினை படிக்க விரும்புபவர்கள் WWW.PUSTAKA.CO.IN தளத்தின் மூலம் வாடகைக்குப் படிக்கலாம் அல்லது வாங்கி உங்கள் கணினி/அலைபேசி மூலமும் படிக்கலாம். விலை ரூபாய் 75 மட்டும். மேலதிக விவரங்கள் இங்கே

என்ன நண்பர்களே… பதிவினை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

நாளைய பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



38 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு.

    என்ன நீதி கவிதையின் கடைசிவரி புரியவில்லை. உயிலொன்று எழுத - நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி வரி வார்த்தையில் இருந்த பிழையை சரி செய்து விட்டேன். நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம், உலகில் அநியாயங்கள் நடக்கும் போது இறைவன் அவதரித்து நீதியை நிலைநாட்டுவதாகத்தானே ஒவ்வொரு அவதாரமும் சொல்லப்படுகிறது. அதர்மம் நடக்கும் போது தர்மத்தை நிலை நாட்ட மீண்டும் அவதரிப்பேன்னு சொன்னதாகத்தானே புராணங்கள் சொல்லுகின்றன? இல்லையோ? அப்படியிருக்க இப்போது இத்தனை அநீதிகள் நடக்கும் போது நீதியை நிலைநாட்ட இன்னும் ஏன் இறைவன் அவதாரம் எடுக்கவில்லை என்ற கேள்வியே அது என்றுதான் படுகிறது....

      கீதா

      நீக்கு
    3. அதே அதே சபாபதே.....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா.

      நீக்கு
  2. ஐயாவின எழுத்தைப்பற்றி அனைவரும் அறிந்ந்த விடயமே... விமர்சனம் ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. //கையில் கடிகாரம் கட்டினால் காலத்தை வென்றவர் ஆவோமா?
    ரசித்தேன்.

    இந்த புஸதகா தளம் சப்ஸகரைப் பண்ணுனு தொந்தரவு பண்ணுது.. அதனால தான் பக்கம் போறதில்லே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  4. ஜிம்பி அவர்களுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. நல்ல பகிர்வு ஜி!

    உயில் மனதைத் தொட்டது!

    அது போன்று என்ன நீதியும்!!

    /////கையில் கடிகாரம் கட்டினால் காலத்தை வென்றவர் ஆவோமா?//// சூப்பர் என்று சொல்ல வைத்தது.

    மிக்க நன்றி ஜி பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  7. ஐயாவின் கதை, கவிதை, ஓவியம், மொழிபெயர்ப்பு என்ற அனைத்தையும் நாம் ரசித்துள்ளோம். தற்போது அவருடைய கவிதையின் மதிப்புரையை தங்கள் மூலமாக அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. நல் நூல் பகிர்வு...அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  11. நல்ல பகிர்வு. ஜி.எம்.பி சார் பல்கலை வித்தகர். அவரது ஆர்வம், வயதை மீறியது. அவருக்கு இத்தருணத்தில் என் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன்.

    வயோதிகம் செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா? - பாலகனாய் பெற்றோருக்குச் செய்த குற்றங்களுக்கும், பெரியேன் ஆயினபின் பெற்றோருக்குக் கடனைச் செலுத்தாத குற்றங்களுக்குமான தண்டனைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. எழுதிய தொகுத்த தந்த மூவருக்கும் வாழ்த்துகள்!த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  13. நல்ல பகிர்வு.
    பாலசுப்பிரமணியம் சார் கவிதைகள் அனைத்தும் அருமை.

    //நான் செய்த புண்ணியங்கள் அனைவருக்கும்
    சேரட்டும், காட்டிய அன்பு பல்கிப் பெருகட்டும்
    ஈட்டிய பாவங்கள் என்னுடலோடு எரியட்டும்.//
    அன்பான கவிதை.

    உங்களுக்கும், சாருக்கும் வழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  14. அன்பின் வெங்கட் நாகராஜுக்கு இப்பதிவை வெளியிட்டதற்கு நன்றி நான் எழுதி இருந்த வாழ்வின் விளிம்பில் நூலை நீங்கள் வாசிக்கவில்லை என்று தெரிகிறது மின்னூலாக சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன் என்பதையும்கூறிக் கொள்கிறேன்நூலில் இருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு genre ல் இருக்கும் என்பதைப் பார்த்திருப்பீர்கள் விமரிசனத்துக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மற்ற இரு நூல்களும் வாசித்து முடிக்கவில்லை. வாசித்த பிறகு அந்த அனுபவமும் பகிர்ந்து கொள்வேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  15. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி எழுத்துக்கள் என்றாலே வாழ்வியல் சிந்தனைகள் தானே. நல்ல நூல் விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.....

      நீக்கு
  16. கவிதைகளை ரசித்தேன் ,அதிலும் என்ன நீதி என்று கேட்டுள்ளது எனக்கும் உடன்பாடே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  17. Review என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு விமர்சனம், மதிப்புரை ஆகிய சொல்கள் இருப்பது தெரியும். படிப்பனுபவம் என்னும் சொல்லும் அருமை; பதிவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

      நீக்கு
  18. திரு GMB அவர்களின் கவிதைகள் அருமை. அவருக்கு வாழ்த்துகள்! அதை தாங்கள் தந்திருக்கும் விதமும் அருமை. நான் புஸ்தகாவில் உறுப்பினராக இருக்கிறேன் அவசியம் கவிதைகள் முழுதையும் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....