திங்கள், 20 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – மதிய உணவு - உணவகம் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல!



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 20

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


பனீர் Bபுர்ஜி
படம்: இணையத்திலிருந்து....
 
தொடர்ந்து பயணித்ததில் எங்களுக்கு பசி வந்தது. நாங்கள் பயணித்த சாலையில் வெகு தொலைவிற்கு எங்கேயும் சரியான உணவகம் இல்லை. ஓட்டுனர் ஜோதியிடம் நல்ல உணவகம் வந்தால் நிறுத்தச் சொல்லி விட்டு தொடர்ந்து எங்கள் குழுவினருடன் பேசிக் கொண்டும், பாட்டுக் கேட்டுக் கொண்டும் தொடர்ந்தது பயணம்.  சென்ற பதிவில் பார்த்த ராஜஸ்தானி பக்தர்களைத் தொடர்ந்து எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. சாலை எங்கும் அவர்களே ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள். நாத்துவார் பற்றிய பதிவில் சொல்ல விட்டுப்போன ஒரு விஷயத்தினை இங்கே சொல்கிறேன். அங்கே இருந்த கடைத்தெருவில் ஒரு பெண்மணி ஏதோ ஒரு பொருளை விற்பனை செய்து கொண்டிருந்தார் – Bபஞ்சாரா என இங்கே அழைக்கப்படும் இனத்துப் பெண்மணி!


மூட்டு வலிக்கு மருந்து...



அந்தப் பொருளின் படம் மேலே கொடுத்திருக்கிறேன். ஏதோ புளியங்கொட்டை போல இருக்கிறதே என பார்த்து அதை புகைப்படம் எடுத்துக் கொண்டேன் – அப்படியே அந்தப் பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்து, இது என்ன, எதற்குப் பயன்படும் என்று கேட்க, ஏதோ ஒரு பெயரைச் சொன்னார் – மலைப்பகுதியில் மட்டுமே கிடைக்கும் என்றும், அதிலிருந்து தயாரிக்கப்படும் களிம்பு போன்ற மருந்து மூட்டு வலிக்கு மிகச் சிறந்த நிவாரணி என்றும் சொல்லி ஒரு சிறிய பாட்டில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்ல, “எனக்கு மூட்டு வலி இல்லையே, அதனால் வேண்டாம்” என்று பதில் சொன்னேன். வீட்டில் யாருக்காவது மூட்டு வலி வந்தால் இதைத் தடவலாம், வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.


மிக்ஸ் வெஜ்....

படம்: இணையத்திலிருந்து...


அதன் பெயர் புரியவில்லை, மீண்டும் கேட்கலாம் என அவரிடம் பேசினால், ஒரு பாட்டிலை என் தலையில் கட்டிவிடும் அபாயம் இருந்ததால் “வேண்டாம்” எனச் சொல்லி அங்கிருந்து விலகினேன். ராஜஸ்தானின் பல பகுதிகளில் இந்த Bபஞ்சாரா இனத்தவர்கள் உண்டு – நாட்டு மருந்துக் கடைகளை சாலையோரங்களில் அமைத்து சில நாட்கள் விற்பனை செய்வார்கள். ஒரு இடத்தில் ஒரு மாதத்திற்கு மேல் இருக்க மாட்டார்கள். ஊர் ஊராகச் சென்று கொண்டே இருப்பார்கள். தலைநகர் தில்லியில் கூட இவர்களது நாட்டு மருந்து விற்பனைக் கூடம் அவ்வப்போது முளைக்கும்! ஒரு பழைய Van நிறுத்தி வைத்து அதன் அருகே தற்காலிக இருப்பிடம் அமைத்து விற்பனை செய்வார்கள் – பிறகு அங்கிருந்து புறப்பட்டு அடுத்த இடம்! இப்படியே வாழ்க்கை முழுவதும் பயணம் தான் அவர்களுக்கு!


மஞ்சூரியன்....

படம்: இணையத்திலிருந்து...


அவர்கள் பயணிப்பது இருக்கட்டும் – நாங்களும் பயணித்துக் கொண்டிருந்தோம். சாலையின் ஓரத்தில் ஏதாவது உணவகம் தென்படாதா என்று பார்த்துக் கொண்டே இருந்ததில் ஒரு உணவகம் தென்பட்டது! சரி அங்கே வண்டியை நிறுத்துங்கள் என ஜோதியிடம் சொல்ல – வண்டியை ஓரங்கட்டி நிறுத்திய பிறகு தான் உணவகத்தின் பெயரை எழுதி இருந்த பதாகையைப் பார்த்தோம்! – பெயர் பார்த்ததுமே எங்களுக்கு கொஞ்சம் பயமும் அருவருப்பும் வந்தது – இந்த உணவகம் நமக்குச் சரிப்படாது என்று அங்கிருந்து வண்டியிலிருந்து இறங்காமலேயே புறப்பட்டோம். வேறு உணவகம் தான் தேடவேண்டும் என அந்த உணவகத்தின் பெயரைப் பார்த்த உடனேயே முடிவு செய்து விட்டோம்! அப்படி என்ன பெயர் அந்த உணவகத்திற்கு என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன் – பதிவின் கடைசியில்!


மதிய உணவு இங்கே தான்.....



தொடர்ந்து பயணம் செய்து பாலி மாவட்டத்தில் உள்ள தேசுரி எனும் இடத்தில் இருந்த ஹோட்டல் விருந்தாவன் எனும் உணவகத்தின் வாயிலில் நின்றது எங்கள் வாகனம். வெளியிலிருந்து பார்க்கும்போதே நன்றாக இருக்கவே வாகனத்தினை நிறுத்தி உள்ளே சென்றோம். இரண்டு மூன்று டேபிள்களை சேர்த்து அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து கொள்ள வசதி செய்தார் ஹோட்டல் சிப்பந்தி. மெனு கார்டு பார்த்து அவரவர்களுக்குத் தேவையான உணவுகளைச் சொல்லி கொஞ்சம் நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இங்கே பெரும்பாலான உணவகங்களில் நாம் சொன்ன பிறகு தான் உணவு தயாரிக்கிறார்கள் என்பதால் கொஞ்சம் நேரம் எடுக்கும் – ஆனாலும் உணவு சுவையாகவும் ஃப்ரெஷ் ஆகவும் இருக்கும்.


உணவகத்தில் இருந்த சுவரோவியம்.....



உணவகத்தில் இருந்த ராதாகிருஷ்ணர் சுவர் சித்திரம் ஒன்று ரொம்பவே அழகாக இருந்தது. அங்கே வைத்திருந்த ஒரு சிலையும் அழகாய் இருந்தது. உணவு வரும் வரை காத்திருந்த சமயத்தில் சில பல படங்களை அவரவர் கேமராவிலும், அலைபேசிகளிலும் எடுத்துக் கொண்டிருந்தோம். பொறுமையாக ஒவ்வொரு வகை உணவும் வந்து சேர – பனீர் Bபுர்ஜி, தால் மக்கனி, வெஜ் புலாவ், சப்பாத்தி, நான், வெஜ் மஞ்சூரியன், மிக்ஸ் வெஜிடபிள், ராய்தா, சலாட் - அனைவரும் அவரவருக்கான உணவினை சாப்பிட்டோம். காலையில் நாத்துவாரில் போஹா மற்றும் தஹி Bபல்லா சாப்பிட்டது. அதனால் அனைவரும் மகிழ்ச்சியோடு பேசியபடியே, உணவினை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் உணவு உண்ட பிறகு பில் வந்தது – 14 பேர் சாப்பிட ஆன செலவு – டிப்ஸ் உட்பட – 1900 ரூபாய்.  


உணவகத்திலிருந்த சிற்பம்.....



மதிய உணவு சாப்பிட்ட பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. நாங்கள் ஏற்கனவே எங்கள் குழுவிலிருந்தவரின் அலுவலகம் மூலமாக ஜோத்பூர் பகுதியிலிருந்த ஒருவரின் உதவியோடு தங்குமிடத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த நண்பருடன் ஏற்கனவே பேசியிருந்தாலும், ஜோத்பூர் வருவதற்கு முன் சொல்லுங்கள் இடம் என்ன, எப்படி வருவது என்பதையெல்லாம் சொல்கிறேன் எனச் சொல்லி இருந்தார். அதனால் அவரைத் தொடர்பு கொள்ள, அவர் தங்குமிடத்தின் முகவரியை அனுப்பினார். கூகிள் மேப் துணையுடன் அங்கே சென்று சேர்ந்தோம். அவரவர் அறையில் உடைமைகளை வைத்து விட்டு கொஞ்சம் இளைப்பாறல் – தங்குமிடத்தில் உணவகம் இல்லை என்பதால் தேநீர் கூட வெளியே தான்!


dhதால் மக்கனி....

படம்: இணையத்திலிருந்து...


ஒரு குளியல் போட்டு, இரவில் எங்காவது சென்று உணவு உட்கொள்ளலாம் – மாலை நேரமாகிவிட்டதால் எங்கேயும் செல்ல முடியாது - அது வரை ஏதாவது பேசிக் கொண்டிருப்போம் –என்று முடிவு எடுத்தோம். அனைவரும் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. இரவு உணவு சாப்பிட இந்த இடத்திற்குப் போனால் நல்லது என ஜோத்பூரில் இருந்த நண்பர் சொல்ல அங்கேயே போகலாம் என முடிவு செய்தோம். ஆனால் அந்த முடிவு தவறானது என்பதை பிறகு தான் தெரிந்து கொண்டோம். ஏன் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். இப்போது இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன, உணவகத்தின் பெயர் பார்த்து சாப்பிட வேண்டாம் என முடிவு செய்த உணவகம் பற்றி சொல்கிறேன்!


நான்.....

படம்: இணையத்திலிருந்து...


நாங்கள் முதலில் நின்ற உணவகத்தின் பெயர் பார்த்த உடனேயே அங்கே சாப்பிடப் பிடிக்கவில்லை எனச் சொல்லி இருந்தேன். அப்படி என்னதான் பெயர் அந்த உணவகத்திற்கு? உணவகத்தின் பெயர் கீழே…

ஆய் ஜி ரெஸ்டாரெண்ட்!

பெயரைப் பார்த்த பிறகு அங்கே சாப்பிடத் தோன்றவில்லை. ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். சில வார்த்தைகள் ஒரு மொழியில் கெட்ட வார்த்தையாக இருந்தால் அதே வார்த்தை வேறு மொழியில் நல்ல வார்த்தையாகவும் இருக்கலாம். இப்படி நிறைய வார்த்தைகள் உண்டு – தமிழில், தெலுங்கில் உள்ள சில மரியாதையான வார்த்தைகளுக்கு ஹிந்தியில் அசிங்கமான வார்த்தைகள்! அதே மாதிரி தான் மேலுள்ள வார்த்தையும் – மராட்டியில் ஆய்ஜி என்றால் அம்மா என அர்த்தம். இப்படி நிறைய வார்த்தைகள் சொல்ல முடியும்! மொழிக்கு மொழி மாறுபாடுகள் இப்படி இருப்பது இயல்பு தானே. அடுத்த பதிவில் மற்ற அனுபவங்களைத் தொடர்ந்து பார்க்கலாம்!

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட்.

    அந்த மூட்டு வலி மருந்து ஒன்று வாங்கிப் பார்த்திருக்கலாமே...! உபயோகித்தவர்கள் அவர்களைத் திட்டவோ, மீண்டும் வாங்கவோ அதே இடத்தில் வந்து தேடிவிட்டால் என்ன செய்வது என்றுதான் இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      வாங்கிப் பார்த்திருக்கலாம்! :) எனக்குத் தேவையில்லை என்பதால் வாங்கவில்லை. இடம் மாற அதுவும் ஒரு காரணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. முட்டுவலி மருந்து வாங்கி கீசாக்காவுக்கு கொடுத்திருக்கலாம்.

      நீக்கு
    3. ம்ம்ம்ம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜே.கே. ஜி!

      நீக்கு
  2. 14 பேருக்கு 1900 என்பது சீப்தான். பெயர்தான் வாயில் நுழையமாட்டேன் என்கிறது!! படங்கள் கவர்கின்றனதான் என்றாலும் காலை ஐந்து மணிக்கு இவற்றைப் பார்ப்பதால் பசி உணர்வு ஏற்படவில்லை. காஃபி அருந்திக் கொண்டே பதிவு பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பெயர் நுழையவில்லை - ஹோட்டல் விருந்தாவன் ? :) அங்கே தான் சாப்பிட்டோம்.

      காலையில் ஐந்து மணிக்கு என்பதால் பசிக்கவில்லை - ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. உணவகத்தின் பெயர் புன்னகைக்க வைத்தது. நீங்கள் சொல்வது போல மொழிக்கு மொழி ஒரே வார்த்தை - அர்த்தங்கள் மாறுபடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வார்த்தைகள் மாற்று மொழியில் விவகாரமான வார்த்தையாக இருக்கும். இங்கே பலமுறை அப்படியான வார்த்தைகளின் அவஸ்தைகள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. பனீர்புர்ஜி படம் பார்த்ததும் ஆஹா வெங்க்ட் ஜி பண்ணியதோ என்று நினைத்து வந்தேன்... ஹும்ம் ஏமாத்தீட்டீங்க.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனீர் புர்ஜி - எப்போதாவது செய்வதுண்டு மதுரைத் தமிழன். அடுத்த முறை செய்யும்போது பதிவிடுகிறேன்.

      சற்றே இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஆமாம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. மிக அருமையான மெனு. சாப்பிடத் தோன்றுகிறது. ஆனால் வயிற்றை நினைச்சால் தான் பயம்! :)))) எப்போவும் தொந்திரவு கொடுக்கும் இடும்பை கூர் என் வயிறோடு நானும் வாழ்ந்து வருகிறேன். :))))) ஜோத்பூரில் சாப்பிடப் போன இடத்தில் என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயிறு - சில சமயங்களில் தொல்லை தான். பெரும்பாலும் அந்தந்த ஊர் உணவினையே சாப்பிடுவதால் பிரச்சனை இருப்பதில்லை.

      ஜோத்பூர் - உங்கள் யூகம் சரியாக இருந்ததா என்று பிறகு சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. அந்த போர்டுல உன்வாகம் என்று எழுதியிருக்கு. उनवगम இல்லையோ? ண தட்டச்சுல வரலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருந்தாவன் என்று ஹிந்தியில் எழுதி இருக்கிறது. உன்வாகம் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. உணவுப் படங்களை ஏன் இணையத்திலிருந்து எடுத்துப் போடறீங்க? பயணத்தில் உண்ணுவதற்கு முன்னால் படம் எடுத்துக்கொள்ளலாமே.

    பனீர் புர்ஜி, ஒரு தடவை பஹ்ரைனில் சாப்பிட்டுவிட்டு அலர்ஜி வந்தது. அது பனீர் புர்ஜியினாலா இல்லை சப்பாத்தியினாலா என்று அப்போ தெரியலை. நான் "ஆய் ஜி" என்பதை இங்கிருக்கும் வாங்க வாங்க. கடையைப்போல் வாருங்கள் என்று அழைப்பதாக நினைத்தேன்.

    நீங்க சாப்பிட்ட உணவு மிக விலை குறைவு. நல்லா இருந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி குழுவாக இருக்கும் போது உணவின் படங்களை எடுக்க முடிவதில்லை. சில சமயங்களில் மட்டுமே எடுக்க முடிகிறது.

      அலர்ஜி - பனீர் புர்ஜியால் இருந்திருக்க வாய்ப்பில்லை.

      வாங்க வாங்க - அது ஆவோ ஜி! அல்லது ஆயியே ஜே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. அனைத்துமே ஆய் தானே ஆகப்போகிறது ஜி...?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. உணவகத்திற்கு சித்திரம் அழகு.
    பயண அனுபவம் நன்றாக இருக்கிறது.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. Dதால் மக்கானி படமும், நான் படமும் ரொம்ப நல்லா இருக்கு. நீங்க செஞ்சதை அல்லது கடைல வாங்கினதையே படமாப் போடுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை செய்யும்போது படம் பிடித்துப் போடுகிறேன் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. ஆய் என்பது ஆயர் குல[1] மன்னர்களையும் மற்றும் அவர்கள் ஆண்ட நாட்டையும் குறிக்கும் பெயர்.


    நல்ல சொல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜே.கே. ஜி!

      நீக்கு
  14. முதல் படத்தில் இருப்பது ஹேசில் நட்ஸ் போல இருக்கே.

    சமையல் டிஸ் எல்லாமே பார்க்க சூப்பர், ஆனா இதில முக்கியமானது என்னவெனில் அவர்கள் எவ்வகையான சோஸ் சேர்க்கிறார்கள் என்பதே.. குறிப்பு சொன்னால்தானே நாமும் செய்து பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேசில் நட்ஸ்.....

      செய்வதுண்டு. அடுத்த முறை இவை செய்யும் போது படம் எடுத்து போடுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    மூட்டு வலி மருந்தை பார்த்ததும், ஏதோ சின்ன வெங்காயம் மாதிரி இருந்தது. அது மாதிரி எதையோ பற்றிய தகவல் போலிருக்கிறது என நினைத்தேன்.

    சாப்பிட்ட உணவுகளின் படங்கள் எல்லாம் நன்றாக உள்ளது. நான் இந்த மாதிரியெல்லாம் வித்தியாசமான உணவுகளை சாப்பிடுவது ரொம்ப குறைவு. பார்க்கும் போது சாப்பிட தூண்டுகிறது. அந்த உணவகத்திலிருந்த ஓவியம் மிகவும் அழகு.

    மராட்டி "அம்மா உணவகம்" விளக்கம் அறிந்து கொண்டேன். தொடருங்கள். நானும் பயணத்தில் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த ஊருக்குச் செல்கிறேனோ, அந்த ஊர் உணவையே - சைவம் மட்டும் - சாப்பிடுவது என் வழக்கம். அதனால் பிரச்சனைகள் வராது வயிற்றுக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  16. உங்கள் அடுத்த பதிவு 1700 வதுதானே அதை முதலில் வாசித்துவிட்டதால் இந்த கருத்துரை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. ஜோத்பூர் பற்றி உங்கள் எழுத்தில் அறிய ஆவலாக உள்ளேன். 1987 முதல் 1990 வரை அங்கிருந்தேன். இரயில் நிலையத்தில் எனது சைக்கிள் தொலைந்து போனது அங்கேதான். சைக்கிளிலேயே அங்கிருக்கும் கோட்டை வரை சென்றதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீங்கள் இருந்த ஊரா... மகிழ்ச்சி பொன்சந்தர். ஜோத்பூரில் நாங்கள் பார்த்த இடங்கள் பற்றி விரைவில்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பொன்சந்தர் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....