திங்கள், 27 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – ப்ளூ சிட்டி - மெஹ்ரான்கட் கோட்டை



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 23

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


கோட்டை - நுழைவாயில் அருகிலிருந்து...
ஜோத்பூர் - மெஹ்ரான்கட்....






கோட்டை - பறவைப் பார்வையில்...

ஜோத்பூர் - மெஹ்ரான்கட்....
படம்: இணையத்திலிருந்து...

மெஹரான்கட்[ர்] கோட்டை – 400 அடி உயரமுள்ள ஒரு சிறு குன்றின் மேல் 100 அடி உயரத்துடன் ஒரு கோட்டை – நினைத்துப் பார்க்கும்போதே அதன் பிரம்மாண்டம் உங்களுக்குப் புரியலாம். உங்கள் வசதிக்காக, கோட்டைபற்றிய இணைய தளத்திலிருந்து பறவைப் பார்வையில் ஒரு படம் மேலே.  அய்யப்பன் கோவிலிலிருந்து அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் மெஹரான்கட் கோட்டை தான். ஜோத்பூர் நகருக்குச் சென்றால் கண்டிப்பாக பார்க்கத் தவறக்கூடாத இடம் ஒன்று உண்டு என்றால் அது இந்த கோட்டை. கோட்டையையும் அங்கே இருக்கும் அனைத்து விஷயங்களையும் பார்க்க உங்களுக்கு அரை நாளாவது தேவை – நுணுக்கமாகப் பார்க்க நினைத்தால் ஒரு நாள் கூட போதாது என்று சொல்வேன்.


ப்ளூ சிட்டி - கோட்டை மேலிருந்து...

ஜோத்பூர் - மெஹ்ரான்கட்....



ஜோத்பூர் நகரம் - கோட்டை மேலேயிருந்து - ஒரு பறவைப் பார்வை...

ஜோத்பூர் - மெஹ்ரான்கட் கோட்டை....


குன்றின் மேல் அமைந்திருந்தாலும், கோட்டை வாயில் வரை உங்கள் வாகனத்திலேயே பயணிக்க முடியும் என்பது ஒரு வசதி. ஜெய்பூர் நகரை பிங்க் சிட்டி எனச் சொல்வது வழக்கம். அதே போல ஜோத்பூர் நகரை ப்ளூ சிட்டி என அழைக்கிறார்கள். கோட்டை அமைந்திருக்கும் பழைய நகரில் இருக்கும் பெரும்பாலான வீடுகள் நீல வண்ணத்தில் தான் இருக்கும். 1459-ஆம் ஆண்டு இந்தக் கோட்டையைக் கட்டிய ராவ் ஜோதா அவர்களின் ஆணைப்படி இங்கே இருக்கும் அனைத்து வீடுகளும் நீல வண்ணம் பூசப்பட்டது என்று தகவல். கோட்டைப்பகுதியிலிருந்து நகரைப் பார்த்தாலும் எங்கெங்கும் நீலம் – நீல வண்ண வீடுகள் பார்க்க அப்படி ஒரு அழகு! இதற்கும் சில காரணங்களை கட்டுக்கதைகளாகச் சொல்வார்கள் என்றாலும் உண்மையான காரணம் ராவ் ஜோதா அவர்களுக்கே வெளிச்சம்.


கோட்டை - நுழைவாயில் அருகில் ஒரு சுவர் ஓவியம்...

ஜோத்பூர் - மெஹ்ரான்கட்....


கோவிலிலிருந்து கோட்டைக்குச் சென்று சேர்ந்ததும், வாகனத்தினை அதற்குரிய இடத்தில் நிறுத்தி, உள்ளே சென்றோம். இந்தக் கோட்டை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை [கடைசி நுழைவுச் சீட்டு தரும் நேரம்] வாரத்தின் அனைத்து தினங்களும் திறந்திருக்கும். கோட்டைக்குச் செல்ல நுழைவுச் சீட்டு கண்டிப்பாக உண்டு – வெளிநாட்டவர்கள் எனில் 600 ரூபாயும் உள்நாட்டவர்களுக்கு நூறு ரூபாயும் நுழைவுக் கட்டணம். கோட்டையின் நுழைவாயில் அருகிலேயே நுழைவுச் சீட்டு வாங்குமிடம் இருக்கிறது. அங்கேயே ஒவ்வொரு கேமராவிற்கும் [ஸ்டில்] கட்டணமாக 100 ரூபாய் கொடுக்க வேண்டும். வீடியோ கேமரா எனில் கட்டணம் 200 ரூபாய். கோட்டைக்குள் செல்ல பாதை இருக்கிறது என்றாலும் மேல் தளத்திற்குச் செல்ல மின் தூக்கி வசதியும் உண்டு – ஆளொன்றுக்கு 50 ரூபாய் கட்டணம்!


இந்த இடத்தில் நின்று ஆடியோ கைடில் எண் 7-ஐ அழுத்தினால் இடம் பற்றிய தகவல்கள் உங்கள் காதில் ஒலிக்கும்!
ஜோத்பூர் - மெஹ்ரான்கட் கோட்டை....

மேலே சொன்னவை தவிர ஆடியோ கைடு, கைடு வசதிகள் உண்டு – அவை உங்களுக்குத் தேவை எனில் அதற்கான கட்டணமும் அந்த இடத்திலேயே கட்டினால் வசதிகள் கிடைக்கும்! காசு கொடுத்தால் அனைத்தும் கிடைக்கும்! இப்போது இந்தியாவின் பெரும்பாலான கோட்டைகள், சுற்றுலாத்தலங்களில் இந்த ஆடியோ கைடு வசதிகள் இருக்கின்றன. கருவியைக் காதில் மாட்டிக் கொண்டு உள்ளே நுழைந்து ஆங்காங்கே Head-Phone Symbol இருக்கும் இடத்தில் நின்று அந்த இடத்திற்கான எண்ணை அழுத்தினால் அந்த இடம் பற்றிய தகவல்களை நீங்கள் கேட்க முடியும். ஒரு முறை கேட்டது புரியவில்லை எனில் மீண்டும் அதே எண்ணை அழுத்திக் கேட்க முடியும். ஹிந்தி, ஆங்கிலம், ஃப்ரென்ச் மற்றும் ஜெர்மன் மொழிகளில் கேட்கும் வசதி இந்த மெஹ்ரான்கட் கோட்டையில் இருக்கிறது.


கோட்டையின் ஒரு பகுதி - நுழைவாயில் அருகிலிருந்து....

ஜோத்பூர் - மெஹ்ரான்கட் கோட்டை....


இந்த ஆடியோ கைடு நல்லதொரு வசதி. பயன்படுத்திக் கொள்ளலாம். நாங்கள் 13 பேர் – அனைவருக்குமான கட்டணங்களை கார்டு மூலம் கொடுத்து, சீட்டு வாங்கிக் கொண்டோம். இப்போதெல்லாம் பல இடங்களில் Credit/Debit Card மூலம் கட்டணம் செலுத்தும் வசதி இருப்பதால், பணம் கையில் வைத்துக் கொண்டு சுற்ற வேண்டியதில்லை. அட்டையைத் தேய்த்தால் போதுமானது! ஆனாலும் எப்போதும் கொஞ்சம் பணம் இருப்பதும் முக்கியம் – சில இடங்களில் இந்த அட்டைகள் உதவிக்கு வருவதில்லை! நாங்கள் நுழைவுச் சீட்டுகளை வாங்கி வருவதற்குள் சில பல ஃபோட்டோ செஷன்கள் முடிந்திருந்தன. நண்பர் அவரது மொபைலில் தொடர்ந்து படங்களைச் சுட்டுத் தள்ளினார் – இந்தப் பயணத்தில் மட்டும் அவர் எடுத்த படங்கள் கணக்குப் பார்த்தால் அசந்து போவோம் – பெரும்பாலும் குழுவினரையும் சில பல செல்ஃபிகளும்!



கோட்டை - ஒரு பகுதி....

ஜோத்பூர் - மெஹ்ரான்கட் கோட்டை....



சற்றே கிட்டப்பார்வையில்...

ஜோத்பூர் - மெஹ்ரான்கட் கோட்டை....


மெஹ்ரான்கட் கோட்டை – இந்தியாவில் இருக்கும் கோட்டைகளிலேயே மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட கோட்டையாக இந்தக் கோட்டை பெயர் பெற்றுள்ளது. ராஜ்புத் மன்னர்களில் முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்த ராதோட்-கள் அமைத்த கோட்டை தான் இந்த கோட்டை. மார்வார் பகுதியை ஆண்ட பன்னிரெண்டாம் ராதோட் ஆன ராவ் சுண்டா [1384-1428] அவர்கள் தனக்கு திருமணச் சீதனமாக கிடைத்த மாண்டோர் பகுதியில் தனது தலைநகரை அமைத்தார்.  இரண்டு தலைமுறைகளுக்கு அடுத்து வந்த ராவ் ஜோதா [1438 – 89] அவர்கள் அங்கே தனித்திருந்த குன்றின் மேல் அமைத்த கோட்டை தான் இந்த மெஹ்ரான்கட் கோட்டை – சூரியனின் கோட்டை என்று அர்த்தம். தங்களைச் சூரியனின் சந்ததியாகக் கருதுகிறார்கள். கோட்டையின் வெளிப்புறச் சுவர் சில இடங்களில் 120 அடி உயரம் வரை அமைத்திருக்கிறார்கள். கோட்டைக்குக் கீழே உருவான நகரம் தான் ஜோத்பூர்.


வரவேற்கும் பிள்ளையார் - கோட்டை வாயிலில்...

ஜோத்பூர் - மெஹ்ரான்கட் கோட்டை....



சேர்ந்திருக்கும் பாறைகள் பற்றிய பதாகை....
ஜோத்பூர் - மெஹ்ரான்கட் கோட்டை....




இரு வேறு குணமுள்ள பாறைகள்....

ஜோத்பூர் - மெஹ்ரான்கட் கோட்டை....


கோட்டை வாயிலில் சிகப்பு வண்ணப் பிள்ளையார் – கருப்புப் பாம்பினை முப்பிரிநூலாக அணிந்து வருபவர்களுக்கு அருள் புரிகிறார். அவரையும் படம் எடுத்துக் கொண்ட பிறகு உள்ளே நுழைந்தோம். நாங்கள் மின்தூக்கி வழிச் சென்று திரும்பும்போது நடக்கலாம் என மின்தூக்கி நுழைவுச் சீட்டு வாங்கி இருந்தோம். அங்கே ஒரு பதாகை – இந்த இடத்தில் இரு விதமான பாறைகள் ஒன்றுக்கு ஒன்று இணைந்திருப்பதைப் பார்க்க முடியும் என எழுதி வைத்திருக்கிறார்கள். அதையும் பாறையையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மின்தூக்கிக்காக காத்திருக்கும் இடத்திலும் படம் எடுத்துக் கொண்டோம் மின்தூக்கி நேராக நம்மை கோட்டையின் மேல் தளத்திற்குக் கொண்டு விடுகிறது. மேலே கோட்டையைக் காக்க வைத்திருந்த பீரங்கி ஒன்று பார்த்ததும் குடும்பம் குடும்பமாக ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். என்னையும் வைத்து குழுவில் இருந்தவர் எடுத்தார்.  


கோட்டை மீது பீரங்கி....
ஜோத்பூர் - மெஹ்ரான்கட் கோட்டை....




பீரங்கியை இயக்குவதாக ஒரு பாவனை...
அருகே நண்பர்...
ஜோத்பூர் - மெஹ்ரான்கட் கோட்டை....




அதெல்லாம் சும்மா இழுத்து வீசிடுவேன்... என்று சொன்ன நண்பர்

ஜோத்பூர் - மெஹ்ரான்கட் கோட்டை....


இந்த மாதிரி பயணங்களில் கேமரா வைத்து எவ்வளவு படம் எடுத்தாலும் நம்மை நாமே எடுத்துக் கொள்வது கடினம் – என்னதான் அலைபேசி மூலம் எடுக்கலாம் என்றாலும் கேமராவில் எடுப்பது போல இருக்காது! கூட வருபவர்கள் நம்மை படம் எடுத்தால் தான் உண்டு! நண்பர் ஒருவர் கூட இந்த இடங்களுக்குப் போகும்போது உங்களை நீங்கள் அந்த இடங்களில் படம் எடுத்துக் கொள்வதே கிடையாதா என்று கேட்பார். செல்ஃபி நமக்கு அத்தனை வசதியாக இல்லையே! கோட்டையின் மேல் பகுதியிலிருந்து ப்ளூ சிட்டி நகரமான ஜோத்பூர் நகரையும் – எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள், கட்டிடங்கள், கட்டிடங்கள் தவிர வேறொன்றுமில்லை - படம் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைகிறோம். மெஹ்ரான்கட் கோட்டை – மிகப் பிரம்மாண்டமான கோட்டை என்பதால் கோட்டை பற்றிய தகவல்களும், அனுபவங்களும் ஒரு பகுதியில் சொல்லி முடிக்க முடியாது. அதனால் அடுத்த பகுதியிலும் கோட்டை பற்றியே பார்க்கலாம்!

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

20 கருத்துகள்:

  1. மெஹ்ரான்கட் கோட்டை மிக அழகான கோட்டை.

    //மின்தூக்கி நேராக நம்மை கோட்டையின் மேல் தளத்திற்குக் கொண்டு விடுகிறது.//
    ஆஹா! வயதானவர்களுக்கு நல்ல செய்தி.
    குறுகலான படி வழியாக போவது ஒரு திரில் அனுபவம். இப்போது அப்படி போக வேண்டாமா?
    மேல்தளம் மட்டும்தானே இதில் போனீர்கள்?
    தொடர்கிறேன் பதிவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறுகலான படிகள் - அதுவும் ஒரு த்ரில் தான் - கட்ச் பகுதியில் அப்படி சில இடங்களில் சென்ற அனுபவம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. உங்களின் வர்ணனை மெஹ்ரான்கட் கோட்டைக்கு செல்ல வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள் தனபாலன். நல்ல இடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பறவைப்பார்வையில் கோட்டைப் படம் பிரமிக்க வைக்கிறது. குட் மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைப் பார்வையில் கோட்டை - படம் இணையத்திலிருந்து எடுத்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ஊரில் இப்போது நீலவண்ணம் குறைந்து விட்டது போலும். அவ்வளவாகக் காணோம்! எனக்கும் பிடித்த நிறம் நீலவண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது குறைவு தான். என்றாலும் பழைய வீடுகள் பல இன்னும் நீல வண்ணத்தில் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. ஆடியோ மெசேஜ் ஒருமுறை புரியாமல் மறுமுறையும் அழுத்தவும் மறுபடியும் கட்டணம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முறை கட்டணம் கட்டினால் உங்களிடம் கொடுத்து விடுவார்கள் - காதில் மாட்டிக்கொண்டு சுற்ற வேண்டியது தான் - அந்தந்த இடங்களில் குறிப்பிட்ட எண்ணை அழுத்திக் கேட்கலாம் - எத்தனை முறை வேண்டுமானாலும்! :) சில இடங்களில் நேரக் கட்டுப்பாடு உண்டு! அதாவது இரண்டு மணி நேரத்திற்கு அல்லது ஒரு மணி நேரத்திற்கு என!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. இந்த இடத்தின் பிரம்மாண்டத்தை / அழகை நேரில் பார்த்த உங்களுக்கே முழு திருப்தி இருந்திருக்காது. படத்தில் மட்டுமே பார்க்கும் எங்களுக்கு?

    :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழு திருப்தி - உண்மை. இன்னும் நிறைய நேரம் அங்கே தேவை.... நேரில் பார்க்காத போது கஷ்டம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. கமல் நடித்த “விக்ரம்” படத்தில் வரும் சலாமியா தேசமாக காட்டப்படுவது ஜோத்பூர்தான். இந்த கோட்டையிலும் சில காட்சிகள் படத்தில் வரும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாமியா தேசமாகக் காட்டப்படுவது ஜோத்பூர் - மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி பொன்சந்தர் ஜி. நீங்கள் இருந்த ஊர் ஆயிற்றே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மிக அழகாக இருக்கிறது. கோட்டையின் பிரம்மாண்டம் படத்திலேயே அசத்துகிறது. நேரில் பார்த்தால்! அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசத்தலான இடம் தான். நீங்கள் ராஜஸ்தானில் இருந்த போது, இங்கே சென்று பார்க்கவில்லையா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    மிக அழகான படங்கள். கோட்டையின் பிரம்மாண்ட உயரம், வேலைப்பாடுகள். பிரமிக்க வைக்கின்றன. நீங்கள் கோட்டையை விதவிதமான கோணத்தில் காட்டியிருக்கும் படங்கள் மிகவும் ரசிக்க வைத்தது.

    பறவை பார்வையில் பார்க்கும் போது நீலநிற வண்ணத்தில் கோட்டையும், கட்டிடங்களும் எவ்வளவு அழகாக இருந்திருக்கும். கற்பனையில், மனக்கண்களின் வாயிலாக ரசித்தேன்.

    முகப்பிலிருக்கும், சுவர் ஓவியமும், சிகப்பு பிள்ளையாரும் பார்ப்பதற்கு மிகவும் அழகு.

    மின் தூக்கி வசதி இருப்பது மிகவும் நன்று. ஆனால் அது செல்லும் போது, இவ்வளவு பெரிய உயரத்தை எட்டும் போது ஒரு சிறு பய உணர்ச்சியும் ஏற்படுமோ?

    பீரங்கி படங்கள் அருமையாயிருந்தது. எப்போதுமே நாம் சென்ற, நமக்கு பிடித்தமான இடங்களில் படங்கள் எடுத்துக் கொள்வது ஒரு சுகமான நினைவலைகளை அவ்வப்போது மீட்டிக் கொள்ளத்தானே!

    நீங்கள் படங்களுடன் காட்டியிருக்கும் இடங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைப்பது அரிதெனினும், தங்கள் பதிவின் வாயிலாக, தங்களுடைய விரிவான வர்ணனைகளுடன் ரசித்த திருப்தி மனதை மகிழ்வடையச் செய்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....