புதன், 26 செப்டம்பர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – வெஜிடபிள் பேட்டீஸ் - ஷிம்லா ஒப்பந்தம் இங்கே தான்…


ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 4

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!






தங்குமிடத்திலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் முதன் முதலாகச் சென்று நின்ற இடம் IIAS, Shimla அதாவது Indian Institute of Advance Studies, Shimla. காலை உணவு வழியில் எங்காவது சாப்பிடலாம் என நினைத்தால், ரஞ்சித் சிங் [ஓட்டுனர்] நாம் போகும் இடத்திலேயே கிடைக்கும் என்று சொல்லி அழைத்துச் சென்றார். சரி அங்கே பார்த்துக் கொள்ளலாம் என விட்டோம் – அது சரியான முடிவாக இருக்கவில்லை. உணவகம் என பெரிதாக ஒன்றும் இல்லை. ப்ரெட்-பட்டர் டோஸ்ட் தீர்ந்து விட்டது என்று சொல்லி, தேநீருடன் வெஜிடபிள் Pபேட்டீஸ் கிடைக்கும் என்றார்.  வெஜிடபிள் Pபேட்டீஸ் என்பது நம் ஊர் பப்ஸ் போன்ற ஒன்று. மைதா மாவில் செய்யப்படுவது – உள்ளே மசாலா சேர்த்த வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது பனீர் இருக்கும். கேரள நண்பர்கள் கேள்விப்பட்டதில்லை என்று சொல்ல, சரி அதையே சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம்.



நாங்கள் IIAS சென்றபோது நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டபோது சில நிமிடங்களில் அடுத்த Conducted Tour ஆரம்பிக்கும், அதற்குள் நீங்கள் இங்கே சாப்பிடலாம் எனச் சொன்னார் அங்கே இருந்த சிப்பந்தி. அதுவும் நல்லதற்கு என நாங்கள் வெஜிடபிள் Pபேட்டீஸ் சாப்பிட்டு தேநீர் குடித்து காலை உணவை முடித்துக் கொண்டோம். பெரும்பாலான வட இந்தியர்களின் காலை உணவு ப்ரெட் டோஸ்ட், பழங்கள் மற்றும் பால் தான். சில இடங்களில் பராட்டா – ஒன்று அல்லது இரண்டு. அவ்வளவு தான் வித்தியாசம். ஷிம்லாவில் இவை சாப்பிடாமல் நாங்கள் சென்ற நேரத்தில் கிடைத்ததை உண்டு வயிற்றை நிரப்பினோம். சாப்பிட்டு முடித்த பிறகு நுழைவாயில் அருகே சென்றோம். வெளிப்புறத்திலிருந்து சில படங்கள் எடுத்து முடிக்க, அடுத்த Conducted Tour துவங்கியது.



உள்ளே நுழைவதற்கு முன்னரே அவர் சொல்லி விட்டார் – உங்கள் கேமரா, மொபைல் போன்றவற்றை மூடி உள்ளே வையுங்கள் – நிழற்படம், காணொளி எடுக்க அனுமதி இல்லை – என்று! உள்ளே சில நூற்றாண்டு கால விஷயங்கள் இருக்கின்றன. மூன்று மாடிகளுடன் [சில பகுதிகளில் ஐந்து மாடிகள்] கொண்ட பிரம்மாண்டமான இடம் – பர்மாவிலிருந்து டன் கணக்கில் தேக்கு மரம் கொண்டு வரப்பட்டது இந்த கட்டிடத்திற்காக – தவிர உள்ளூரில் கிடைக்கும் தேவதாரு மரங்களும் கேதுரு [Cedar] மரங்களும் பயன்படுத்தப்பட்டன.  330 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் அமைக்கப்பட்டாலும் தற்போது இந்த இடம் சுருங்கி 110 ஏக்கராக மட்டும் இருக்கிறது. கட்டிடம், தோட்டங்கள், மழை நீர் சேகரிப்பு என பல விஷயங்கள் ஆச்சரியம் தருபவை.  




தலைநகர் தில்லியின் சூடு ஒத்துக்கொள்ளாத ஆங்கிலேய Governor General மற்றும் Viceroy-கள் குளிர் பிரதேசமான ஷிம்லாவுக்கு அவ்வப்போது சென்று விடுவார்கள். அங்கே போகும்போது தங்குவதற்கு சரியான இடம் இல்லை என்று இவர்கள் தங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட கட்டிடம் தான் இந்த கட்டிடம். Observatory Hill என்று அழைக்கப்பட்ட மலைப்பகுதியாக இருந்த இடத்தினை சமதளமாக்கி அதில் உருவாக்க முடிவு செய்தார் Lord Lytton. Royal Engineers-ன் Captain H.H. Cole அவர்கள் தான் இந்த Vice-regal residence கான முதல் வரைபடத்தினை தயாரித்தார். பல மாற்றங்களுக்குப் பிறகு 1886-ஆம் ஆண்டு கட்டிடம் கட்டத் துவங்கினார்கள். 23 ஜூலை 1888-ஆம் ஆண்டு Lord and Lady Dufferin இந்தக் கட்டிடத்தில் தங்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட 800 விருந்தாளிகளைத் தங்க வைக்கும் வசதி இந்த இடத்தில் உண்டு.



Ball Room, Billiards Room, Library, Dining Room போன்றவையும் மிகப்பிரம்மாண்டமாகக் கொண்ட இடம் இது. பல ஆங்கிலேய Lord Governor General, Vice-regal-களின் தங்குமிடமாக இருந்த இந்த கட்டிடத்தில் இருந்த மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 700! 38 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த Vice-regal residence என்று அழைக்கப்பட்ட கட்டிடத்தின் பராமரிப்பு செலவு மட்டும் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் – அதாவது 1888-ஆம் வருட கணக்கில்! இன்றைய மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நிறைய விஷயங்கள் இந்தக் கட்டிடத்தில் தான் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றன.  இந்திய தேசியத்தின் பல முடிவுகள் இங்கேதான் எடுத்திருக்கிறார்கள்.  இரண்டாம் உலகப் போர் முடிவு பெறும் சமயத்தில் ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்த இந்தியாவில் சூழல் அத்தனை சரியாக இல்லை.    



14 ஜூன் 1945 – ஆம் ஆண்டு - Shimla Conference என அழைக்கப்பட்ட கூட்டத்தினை கூட்ட, தனது ரேடியோ ஒலிபரப்பு மூலம் அழைப்பு விடுத்தார் Lord Wavell. அந்தச் சமயத்தில் இருந்த பிரச்சனைகளைத் தீர்க்கவும், இந்தியாவின் தன்னாட்சி குறித்த விஷயங்களைப் பேசவும் கூட்டம் கூட்டினார். Congress, Muslim League தலைவர்கள் மற்றும் British Viceroy Commander in Chief ஆகியோர் கூடி விவாதிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. 25 ஜூன் முதல் 14 ஜூலை 1945 வரை இந்தக் கூட்டம் நடந்தது. இந்தியாவினை இரண்டாகப் பிரிவதை தடுக்க இயலாமல் போனது. நேரு, ஜின்னா, போன்ற பல தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். காந்தி ஷிம்லாவிலேயே இருந்தாலும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை! கூட்டம் தோல்வியுற்றதாகக் கருதப்பட்டது. மார்ச் 1946 உலகப் போர் முடிவுக்கு வந்தது. 5 – 12 மே 1946 மீண்டும் ஒரு கூட்டம் – இந்தக் கூட்டத்திலும் பிரிவினை வாதமே வென்றது. இந்தியா – பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிளவு பட்டது. இரண்டு கூட்டங்களும் நடந்த இடம் இந்த Viceregal Building!



இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு இந்த இடம் இந்திய அரசின் கீழ் வந்தது. ராஷ்ட்ரபதி நிவாஸ் என்ற பெயருடன் இந்தியாவின் ஜனாதிபதி வருடத்தின் சில நாட்கள் மட்டுமே தங்குவதற்காக இந்த இடம் ஒதுக்கப்பட்டது. எப்போதாவது ஜனாதிபதி தங்குவதற்கு இவ்வளவு பெரிய இடம்! நல்ல வேளையாக சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது இந்த இடத்தினை சரியான விதத்தில் பயன்படுத்த முடிவு செய்தார் – இங்கே Indian Institute of Advance Studies உருவானது. அதனை அவரே திறந்து வைத்தார். மேற்படிப்புக்காக பலரும் இங்கே வந்தார்கள். இன்றைக்கும் இந்த இடத்தில் பல Research Scholar-கள் தங்கி படித்து வருகிறார்கள். கட்டிடம் பற்றிய விவரங்கள், ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சி, அங்கே வைத்திருக்கப்பட்டும் பொருட்கள் என அனைத்தையும் பற்றி Conducted Tour மூலம் நமக்குத் தெரிவித்தார் அங்கே பணிபுரியும் ஊழியர். நிறைய விஷயங்கள் இந்தக் கட்டிடத்தில் நடந்திருக்கலாம். அனைத்தும் வெளியே வந்ததா என்பது சந்தேகமே.


கட்டிடம் தவிர சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும் பூங்கா, அக்காலத்திலேயே மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு வசதி போன்றவற்றையும் பார்த்தபடி, மீண்டும் ஒரு நிழற்பட செஷன் – வெளிப்பகுதியில் தான்! இந்திய சுதந்திரம் மற்றும் பிரிவினை பற்றிய பல வெளிவராத தகவல்களின் மௌன சாட்சியாக இன்றைக்கும் இந்தக் கட்டிடம் உயர்ந்து நின்று கொண்டிருக்கிறது. அழகான இடம் – ஷிம்லா சென்றால் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த இடமும் ஒன்று. நான் இங்கே சொன்ன விஷயங்கள் கொஞ்சமே. மேலும் தெரிந்து கொள்ள இங்கே ஒரு விசிட் போகலாம்! இங்கே செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு – ஒருவருக்கு 40 ரூபாய் மட்டும்! அடுத்த இடம் எங்கே, அங்கே என்ன பார்த்தோம் என்பதை வரும் வெள்ளியன்று சொல்கிறேன்.

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

24 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். இன்று சற்று நேரமான பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      முன்னரே Schedule செய்து வைக்க முடியவில்லை! வேலைப்பளு அதிகம் சில நாட்களாக...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஒருவகையில் நம் பழமையான விஷயங்களை படமெடுக்க அனுமதி தராதது நல்லதுதான்... ஆனாலும் அவ்வளவு நேரம், பணம் செலவு செய்து அந்த இடத்துக்குச் சென்று அந்த நினைவுகளைச் சேமிக்கா விட்டால் வருத்தமாகவும் இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் நம்மை படம் எடுக்க அனுமதிப்பதில்லை. அவர்களாகவே படம் எடுத்து விற்பனை செய்கிறார்கள்! :)

      நினைவுகளைச் சேமிப்பது மட்டும் தான் நமக்குத் தேவை. இன்றைய அதீத சோசியல் மீடியா பயன்பாடு கொஞ்சம் பயமுறுத்துகிறது இல்லையா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அந்த இடத்தின் தகவல் விவரங்கள் யாவும் சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய தகவல்கள் இருந்தன என்றாலும் அனைத்தும் எழுத விருப்பமில்லை - வரலாறு கொஞ்சம் போரடிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. தேவையான விபரங்களுடன் கூடிய பதிவு. நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  5. வியப்பாக இருக்கிறது ஐயா
    அககாலத்திலேயே மழைநீர் சேகரிப்பு வசதி பிரமிப்பை ஏற்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கும் அந்த வசதி வேலை செய்கிறது என்பதும் ஆச்சரியமான விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. துளசிதரன்: நிறைய தகவல்கள் வெங்க்ட்ஜி! வரலாறு அறிந்தோம். சிம்லாவிலேயே நிறைய இடங்கள் இருக்கு போல!!! பார்க்க சான்ஸ் கிடைக்குமா என்று தெரியவில்லை. உங்களோடு இதோ படங்களின் வழி எழுத்து வழி பயணம்!!! மிக்க நன்றி ஜி.

    கீதா: புதிருக்கு வந்த படம் இல்லையா ஜி? அழகான இடம். இதை நாங்கள் சிம்லா சென்ற போது பார்க்க நினைத்து பார்க்காமல் விட்டோம். மகனுக்கு அப்போது இது போன்ற இடங்களைப் பார்ப்பதில் விருப்பமிருக்கவில்லை. அவன் அப்போது மிகவும் சிறியவன்...

    தகவல்கள் அறிய முடிந்தது உங்கள் பதிவில். விரிவாக ஸ்வாரஸ்யமாகச் சொல்லியிருக்கீங்க ஜி. தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். புதிர் பதிவில் இந்தப் படம் கொடுத்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி.

      நீக்கு
  9. இப்போது ஷிம்லாவில் தண்ணீர் பஞ்சமென்று படித்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் - சில நாட்கள் இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  10. அருமையான பதிவு.
    வரலாற்று சிறப்பு மிக்க இடத்தின் செய்திகள் தெரிந்து கொள்ள உதவும் பதிவு.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. இன்டெரெஸ்டிங்... இந்தியாவைச் சுற்றிப் பார்க்கவே, அதுவும் முக்கியமான இடங்களை, ஆயுள் போதாது போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி. நிறைய இடங்கள் இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. தகவல்கள் சிறப்பு ஜி தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....