புதன், 5 செப்டம்பர், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – வானத்தில் பறக்கலாம்



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 26

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்


தொடரும் தலைப்பாகை...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்


கதவுகளும் நுணுக்கமான வேலைப்பாடுகளும்...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்

மெஹ்ரான்கட் கோட்டையின் உள்லே இருந்த கடைகளில் இருந்த பொருட்களைப் பார்த்தபடியே வெளியே வந்தோம். அந்த வாயிலுக்கு அருகிலேயே ஒரு கோவிலும் இருந்தது – நாங்கள் அங்கே செல்லவில்லை. வெளியே இருந்த ஓவியம் மட்டும் படம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். அந்த இடத்தில் சரியான வழிகாட்டும் பதாகை வைப்பது நல்லது. இரண்டு வழிகள் – எந்த வழியில் வெளியே செல்ல வேண்டும் என்பதை குறிப்பிட்டு இருக்கவில்லை. நாங்கள் சென்ற வழி வெளியே செல்லும் வழி அல்ல – அது எங்களை இன்னுமொரு கோவிலுக்கு அழைத்துச் சென்றது. ஆனால் அப்படிச் சென்றதும் நல்லதற்கே – சில படங்கள் அங்கே எடுக்க முடிந்தது. சில பாரம்பரிய இசைக் கலைஞர்களையும் பார்த்து அவர்களின் இசையை ரசிக்க முடிந்தது.


பாரம்பரிய இசை கேட்டு ரசித்தீர்களா?
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்


கோட்டையின் வெளிப்புறத்தில்...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர் 


அந்த ஊர் புகழ்பெற்ற பாந்த்னி துணி பற்றி...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்


ப்ளூ சிட்டி - வேறு கோணத்தில்...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்



கோட்டையின் வெளிப்புறத்தில் இப்படி சில கலைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து கருவிகளை இசைக்கிறார்கள். சிறிது நேரம் நின்று கேட்கலாம். ஒரு இடத்தில் சில நிமிடங்கள் நின்று இசையைக் கேட்டு ரசித்தோம். குடும்பத்துடன் உட்கார்ந்து கொண்டு பாரம்பரிய இசை – கணவர் இசைக்கருவியை வாசித்தபடி பாட, கூடவே அவரது மனைவியும் [காணொளியில் முகத்தை மூடிக்கொண்டு இருப்பவர்] பாடுகிறார். மகள் அமர்ந்து தாளம் போடுகிறார். இப்படி சில குடும்பங்கள் உண்டு. அவர்களையும் படம் எடுத்துக் கொண்டு மேடான பாதையில் ஏறிச் சென்றோம். அங்கே கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. கோட்டைக்கு வெளியே சில மரங்கள் உண்டு. அங்கே நிழலில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி…..  


கோட்டையின் உள்ளே மாளிகை...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர் 


கோட்டைக் கதவுகளின் வெளியே கோவில்...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்

அந்த மூதாட்டியின் வேலை, கேட்பவர்களுக்கு எல்லாம் தண்ணீர் கொடுக்கும் புண்ணியமான வேலை. அவரைச் சுற்றி மண்பானைகள். பானையிலிருந்து எடுத்து தண்ணீர் கொடுக்கிறார். நானும் அவரிடம் சென்று, தண்ணீர் வாங்கிக் குடித்தேன். பெரும்பாலான வட இந்திய நகரங்களில் பொது இடங்களில் இந்த மாதிரி வழக்கம் உண்டு – பியாவு எனப் பெயர் – அறைக்குள் அமர்ந்து கொண்டு ஒர் சிறிய இடைவெளி வழியே கையை நீட்டினால் சொம்பிலிருந்து குடிக்க நீர் ஊற்றுவார்கள். வாங்கிக் குடித்து விட்டு நடையைக் கட்டலாம். இன்றைக்கும் இப்படிச் சில பியாவுக்கள் தலைநகரில் – குறிப்பாக பழைய தில்லியில் உண்டு. கடும் கோடையில் தண்ணீர் கொடுப்பது நல்ல விஷயம் தானே. கடந்த சில வருடங்களாகத்தானே இந்த பாட்டில் குடிநீரெல்லாம். முன்பு இப்படியான வசதிகள் சாதாரணம்.


உணவகத்தில் எங்களுக்காகக் காத்திருந்த இருக்கைகள். ஒரு பறவையும் காத்திருந்தது...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்


கோட்டை ஓவியங்களில் இன்னும் ஒன்று...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்

வடக்கே பெரும்பாலான ஊர்களில் இந்த பியாவு வைக்கவில்லை என்றாலும் சாலை சந்திப்புகளில் பானைகள் வைத்து குடிநீர் வைத்திருப்பார்கள். சுத்தமாகவும் இருக்கும் – கடமையாக தினம் தினம் பானையைச் சுத்தம் செய்து குடிநீர் ஊற்றி வைப்பார்கள். இன்றைக்கும் இது தொடர்கிறது – நம் ஊர் போல தண்ணீர் பந்தல் போடுகிறோம், காசு கொடுங்கள் என வசூலிப்பதில்லை – அரசியல் தலைவர்கள் பெயர் போடுவதில்லை, அரசியல் செய்வதில்லை. இவை சாதாரணமாகவே நடக்கும் விஷயங்கள். அந்த மூதாட்டியும் அங்கே வரும் அனைவருக்கும் தண்ணீர் அளித்து தாகம் தீர்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் அத்தனை சுருக்கங்கள். அவரை அருகில் சென்று படம் எடுக்க இயலவில்லை. தூரத்திலிருந்து Zoom செய்து ஒரு படம் எடுத்துக் கொண்டேன். நல்ல குடிநீர் குடித்து மேலே நடந்தோம்.


இது என்ன, சாப்பிடலாமா கூடாதா......
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்


ஒரு இசைக் கலைஞர்...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்

மன்னர் ராவ் ஜோதா இங்கே கோட்டை கட்டியபோது இப்பகுதியில் இருந்த முனிவர்களை அகற்றி விட, அவர்கள் சாபம் கொடுத்து விட்டார்களாம் – கோட்டை கட்டினாலும் இங்கே தண்ணீர் கிடைக்காது என! அதற்கு என்ன மாற்று என யோசித்து, கோட்டையின் தெற்குப் பகுதியில் CHசாமுண்டா மாதாவிற்கு ஒரு அழகிய கோவில் அமைத்து பூஜைகள் செய்தாராம். அதன் பிறகு மன்னர் குலத்திற்கு மட்டுமல்லாமல் இப்பகுதி மக்கள் அனைவருக்குமே இந்த CHசாமுண்டா மாதா இஷ்ட தெய்வமாக இருந்து அனைவருக்கும் அருள் பாலிக்கிறார். அந்தக் கோவிலுக்கு நாங்கள் மேடான பாதை வழியே ஏறிச் சென்று பார்த்தால் – ஒரு பெரிய இறக்கம் – பிறகு மீண்டும் படிகள் ஏறி தரிசனம் செய்ய வேண்டும். மீண்டும் வந்த வழியே திரும்ப வேண்டும். அதனால் தூரத்திலிருந்தே கோவில் பார்த்து விட்டு சில படங்களை எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பினோம்.


கோட்டை வெளிப்புறத்தில் - எத்தனை நுணுக்கம்...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்


ஒரு இசைக் குடும்பம்...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்

காலையிலிருந்து அங்கே நடந்து, சுற்றி இருந்ததில் அனைவருக்கும் கொஞ்சம் ஓய்வு தேவையாக இருந்தது. தேநீர் போன்ற எதுவும் குடித்தால் நல்லது. கோட்டைக்குள் ஒரு உணவகம் உண்டு என்றாலும் அதற்கு திரும்பவும் மேலே ஏற வேண்டும். வழியில் வேறு ஒரு இடம் இருந்தது – பாதையோரத்தில் அழகிய இருக்கைகள் போட்டு வைத்திருக்க அங்கே தேநீர் போன்றவை கிடைக்கும். Self Service – தேவையானவற்றை வாங்கிக் கொண்டு இருக்கைகளில் அமர்ந்து கொஞ்சம் ஓய்வெடுத்தபடியே தேநீர் அருந்தலாம். அவரவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து சற்றே ஓய்வெடுத்தோம். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினைச் சந்திக்க, அவர்கள் தில்லியில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வண்டி தேவை எனச் சொல்ல, ஓட்டுனர் ஜோதியின் எண்ணைக் கொடுத்தோம்.


தண்ணீர் தரும் மூதாட்டி...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்


என்னையா ஃபோட்டோ புடிக்கிறாங்க.....
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்

என்னப்பா, தலைப்பில் ஏதோ “வானத்தில் பறக்கலாம்” ந்னு போட்டு இருக்கே, அது பத்தி ஒண்ணுமே இது வரைக்கும் வரலையே! என்ற எண்ணம் வந்திருக்கலாம். அதைத் தான் இப்போது சொல்லப் போகிறேன். மெஹ்ரான்கட் கோட்டைக்குப் போக வேண்டும் என்ற போதே இங்கே இருக்கும் ஒரு வசதியை கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும் என நினைத்திருந்தோம். அந்த வசதி கோட்டையின் மேலே இருக்கும் Zip Line வசதி. இரும்புக் கம்பிகளில் தொங்கியபடியே ஜோத்பூர் நகரம், கோட்டை என எல்லாவற்றையும் பறவைப் பார்வையில் பார்க்கும் வசதி – கொஞ்சம் உடற்பயிற்சி தேவையான விஷயம் இது. இந்த வசதி மெஹ்ரான்கட் கோட்டைப் பகுதியில் இருக்கிறது. அந்த Zip line-ல் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது.


ராஜா கட்டிய சாமுண்டா தேவி கோவில்...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர் 


உழைப்பாளிகள் - தொடரும் பராமரிப்புப் பணியில்...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்

எங்கள் குழுவினரில் இருந்தவர்களில் இருவர் மட்டுமே 18 வயதுக்குட்பட்டவர்கள் – அவர்களுக்கும் எனக்கும் இந்த வசதியைப் பயன்படுத்த ஆசை இருந்தது. கோட்டைப் பகுதியில் இருந்த அவர்களது அலுவலகம் அருகே விசாரித்தபோது ஒன்றரை மணி நேரம் இந்த Tour என்றும் இணையம் வழி முன்பதிவு செய்யாவிட்டால் அதற்கு 1999/- [ஒருவருக்கு] கட்டணம் என்றும் சொன்னார்கள். கொஞ்சம் அதிகம் தான் இல்லையா? கூடவே அந்த நேரத்தில் இடம் இல்லை என்றும் சொல்ல கொஞ்சம் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. விசாரித்ததை நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் சரி பரவாயில்லை பிறகு இந்த அனுபவம் கிடைக்கும் என்று சொல்லி விட்டார்கள். ஆசைப்பட்ட மூவருக்கும் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது!


இந்தப் பொம்மை குதிரை வாங்கிக்கோங்களேன் ப்ளீஸ்...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர் 


கோட்டை சுற்றிய அலுப்பில் ஓய்வெடுக்கும் தம்பதி...
மெஹ்ரான்கட் கோட்டை, ஜோத்பூர்

மெஹ்ரான்கட் கோட்டை பார்க்கச் சென்றால் கண்டிப்பாக தவற விடக்கூடாத விஷயம் இந்த Zip Line. அங்கே செல்வதென்றால் இணையம் வழி முன்பதிவு செய்து கொள்ள முடியும். இணையம் வழி பதிவு செய்தால் கட்டணமும் 1650/- மட்டுமே. இந்த வசதியைத் தரும் நிறுவனம் Flying Fox – அதன் இணைய தளம் – Flying Fox. கடந்த நான்கு பகுதிகளாக கோட்டை பற்றிய தகவல்களும் அனுபவங்களும் மட்டுமே பகிர்ந்து இருக்கிறேன். இன்னும் கூட எழுதலாம். இந்த கோட்டைக்கு மட்டுமே ஒரு நாள் தேவை என்பதால் அதற்குத் தகுந்த மாதிரி திட்டமிட்டுக் கொள்வது நல்லது.  கோட்டையிலிருந்து அடுத்ததாக நாங்கள் எங்கே சென்றோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. ஒருவேளை அப்படி ரசிக்காமல் சென்று விடப்போகிறார்களே மக்கள், என்றுதான் வழி சொல்லாமல் அங்கு வரவழைக்கிறார்களோ என்னவோ... குட் மார்னிங் வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      வழி சொல்லாமல் வரவழைக்கிறார்களோ... :)

      நிறைய படிக்கட்டுகள் இறங்கி ஏற வேண்டியிருக்கும் - மீண்டும் இறங்கி மேடு மீது ஏற வேண்டும் - அதனால் கோவிலுக்குப் போகவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. இருக்கிறதே - கடைசியில்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. கையை உள்ளே நீட்டினால் சொம்பிலிருந்து நீரூற்றுவார்கள் என்றால் கையிலா? போதுமா? டம்ளர் போல எதுவும் கிடையாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பெல்லாம் கையில் தான் - நம் ஊர் பைப்பில் கைகளை ஏந்தி குடிப்பது வழக்கம் தானே. அதே மாதிரி தான். எவ்வளவு வேண்டுமோ குடித்துக் கொண்டே இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. தெருக்களிலும் தண்ணீர்ப்பானை வைத்திருப்பது நல்ல வழக்கம். நம்மூர்த் தண்ணீர்ப்பந்தல்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. உணவக நாற்காலியில் குருவி நீங்கள் படமெடுக்கக் காத்திருக்கிறதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூர் தண்ணீர் பந்தல்கள் - அதுவும் சமீப காலங்களில் - அரசியல் வேறென்ன சொல்ல.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படங்கள் ரசித்தேன். அந்த மூதாட்டி படம் கடைசியில் வந்திருக்கிறது போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை தேர்ந்தெடுத்து போடும் போது வந்த மாற்றம். அப்படியே விட்டுவிட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. படிக்க ஆரம்பிக்கும் முன்னரே ராஜஸ்தானி இசை ஆரம்பிச்சாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ... ஆட்டோ ரன் ஆப்ஷன் இருந்திருக்கலாம் - அதனால் அப்படி வீடியோ வர ஆரம்பிக்கும். எனக்கு அப்படி இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. பதில்கள்
    1. இதுக்கு என்ன அர்த்தம்.... இவங்களோ பலவற்றைச் சுருக்கிச் சொல்பவர்கள்.... ஒண்ணுமே புரியலையே.... அவங்களே வந்து அர்த்தம் சொன்னாத்தான் உண்டு! ஹாஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    2. ஹையா... ஜாலி.... உங்களுக்கும் புரியலையா ஸ்ரீராம்.....

      நீக்கு
    3. ஹிஹிஹி, ஒரு குட்டிப் பயல் பேரன் முறை பெண்களூரில் இருந்து வந்திருக்கான். அவன் லாப்டாப்பில் விளையாடும்போது நான் கவனிக்காமல் பப்ளிஷ் கொடுத்திருக்கேன். இஃகி, இஃகி, இஃகி! ஜாலியா இருக்கு!

      நீக்கு
    4. ஹாஹா.... குழந்தையிடம் கணினி மாட்டிக்கொண்டதா! :)

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. தங்களால் நானும் ஜோத்பூர் பார்த்த உணர்வு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. மெஹ்ரான்கட் கோட்டை அழகு. பாரம்பரிய இசை கேட்டு மகிழ்ந்தேன்.
    படங்கள் எல்லாம் அழகு.
    அணில் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. எவ்வளவு வேலைப்பாடுகள் அன்றைய மனிதர்கள் தங்களது வேலையை சரித்திரத்தில் நிலைக்க வைப்பதற்காக செய்தார்கள். கூலிக்காக மட்டுமல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூலிக்காக அல்ல.... உண்மை. இப்போது கூலி அதிகம் கொடுத்தாலும் ஒழுங்காக வேலை செய்வதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. புண்ணியமான வேலை சிறப்பு...

    கட்டிடகலை அசர வைக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. மெஹ்ரான்கட் கோட்டை..அற்புதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    மெஹ்ரான்கட் கோட்டை மிகவும் நன்றாக உள்ளது. அதன் வேலைப்பாடுகள் அற்புதம்.கோட்டையின் அத்தனைப் படங்களும் கண்ணை கவர்ந்தன.
    பாரம்பரிய ராஜஸ்தானிய இசையும் கேட்டேன். அணில் படமும், தங்களுக்காக காத்திருந்த பறவையின் படமும் மிக அழகு

    சிம்மத்தின் மேல் சாமுண்டி தேவியின் ஓவியம் அழகாக உள்ளது. கோவிலும் மிக நன்றாக உள்ளது. கோவிலிலும் அதே உருவத்துடன்தான் அம்பாள் சிலையா?

    தவித்த வாய்க்கு தண்ணீர் தர வேண்டும் என்பார்கள் அந்த புண்ணியத்தை செய்து வருகிறவர்கள் மிகவும் நன்றாக இருப்பார்கள். குதிரை பொம்மையுடன் சிறுவன் அழகாயிருக்கிறான். அனைத்தும் விபரமாக கூறியிருப்பதால், தங்களுடன் நாங்களும் கோட்டையின் அழகை ரசித்து, ஊர் சுற்றிய உணர்வு வரப் பெற்றோம்.
    விபரமாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    நான் இன்று அனைத்து வலைதளங்களுக்கும் தாமதமாகத்தான் வருகை தர முடிந்தது. கொஞ்சம் வேலைகள். அதனால் தாமதம். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  14. யோசிக்கிற அணில் அழகு! கட்டுரை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....