புதன், 28 நவம்பர், 2018

கதம்பம் – கம்பு தோசை – நூறு ரூபாய் நோட்டு – கஜா புயல் – நீயா நானா – குழமா உப்புமா



சாப்பிட வாங்க – கம்பு தோசை - 14 நவம்பர் 2018:


ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பது நம்மில் பலருக்கும் வரும் கேள்வி – என்னவரிடம் கேட்டால், எதோ ஒண்ணு சமையேன்!” என்று சொல்லி விடுவார்! கடந்த வாரத்தில் செய்த ஒரு டிஃபன் - கம்பு தோசை, தேங்காய் சட்னியுடன்!!! முகநூலில் பதிவு செய்த போது கீதாம்மா சொன்ன கமெண்ட் – ”வெங்காயச் சட்னி இன்னும் நல்லா இருக்கும். சிவப்பு மிளகாய் வைத்து! :)”



புது நூறு ரூபாய் நோட்டு - 15 நவம்பர் 2018



இன்று வந்த பூக்காரம்மா புது நூறு ரூபாய் நோட்டைக் காண்பித்து, இதோ பாருங்கம்மா!! அங்க ஒரு அம்மா கொடுத்தாங்க என்றார்.. நானும் பார்ப்பது முதல்முறை என்பதால் வாங்கிப் பார்த்தேன்..மகளும் உடன் இருந்தாள்..

பின்புறம் "ராணி கி வாவ்" இடம்பெற்றிருந்தது.. நாங்கள் சொன்னவுடன், என்ன இடம்மா?? எங்க இருக்கு?? என்றார்.. வடக்க இருக்கு! இது ஒரு கிணறு!! ராஜாக்கள் காலத்துல கட்டினது!! உள்ளே ஒவ்வொரு நிலையா போய்க்கிட்டே இருக்கும்!! உள்ளே நிறைய சிற்பங்கள் இருக்கும்!! உலகப்புகழ் பெற்றது!!

அப்படியாம்மா!! நீங்க போயிருக்கீங்களாம்மா?? என்றார்.. இல்லம்மா!! என் வீட்டுக்காரர் அவங்க ஃப்ரெண்ட்ஸோட போய் ஃபோட்டோவெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கார்.. புக்குல கூட வந்திருக்கு!! என்றேன்..:) இது மாதிரி நிறைய இடத்துக்கு போவார்.


குழம்பு மாவு உப்புமா!! - 15 நவம்பர் 18:



கொழமா உப்புமா என்று என் புகுந்த வீட்டில் சொல்வார்கள்..என் கணவருக்கு மிகவும் பிடித்தமானது. என் மாமியார் கணவருக்காக எப்போதும் செய்து தருவார். குழம்பு திக்காக இருக்க அரிசிமாவு கரைத்து விடுவார்கள் அல்லவா! (நான் அதெல்லாம் விடுவதில்லை) அதனால் இந்தப் பெயர் வந்திருக்கலாம். அரிசிமாவுடன் மோர் சேர்த்து செய்வார்கள்.

என் பிறந்த வீட்டில் இந்த அரிசிமாவில் புளித்தண்ணீர் சேர்த்து பிசறி செய்வார்கள். அதனால் இதை புளி உப்புமா என்று சொல்வார்கள்.

எது எப்படியோ!! இன்று இரவு உணவுக்கு சுடச்சுட கொழமா உப்புமா எடுத்துக்கோங்க.

கஜா புயல் - 16 நவம்பர் 2018

திருச்சியை எந்த மழையோ காத்தோ அசைச்சுக்க முடியாதுன்னு நினைச்சேன்!! "கஜா" காத்தா பிய்த்துக் கொண்டு அடிக்குது!!! நாலு மணிக்கு எழுந்துட்டேன் அப்ப கரண்ட்டும் இல்ல!! எப்ப போச்சோ தெரியலை!! சிறு தூறல் தான்!! எதிர்த்தாற் போல் தென்னந்தோப்பும், மாந்தோப்பும் தான்.. காத்து அடிக்கும் போது மரங்கள் அசையறது அவ்வளவு சத்தமா இருக்கு!!

பாவம்!! கடலோர மாவட்டங்களில் இருக்கும் மக்கள்!! எத்தனை இழப்பு…

பச்சை சுண்டைக்காய் – 19 நவம்பர் 2018:



வாரச் சந்தையில் சுண்டக்காய் வாங்கினேன். அதில் கொஞ்சம் சாம்பாரில் போட்டு செலவாச்சு. மீதியுள்ளதை கூட்டு பண்ணலாமான்னு யோசிக்கும் போது, முன்பு ஒருமுறை Geetha Sambasivam மாமி சொன்ன டிப்ஸ் நினைவுக்கு வந்தது. வடுமாங்காய் போட்ட தண்ணீரில் சுண்டக்காய்களை ஓரிரு நாள் போட்டு ஊறியதும் வெயிலில் காயவைத்து வறுக்கச் சொல்லியிருந்தார். உப்பும், காரமும் அந்தத் தண்ணீரில் இருப்பதால் வறுக்கும் போது சுவையாக இருக்குமாம்.

அதன்படி சுத்தம் செய்த சுண்டக்காய்களை நசுக்கி மாவடுத் தண்ணீரில் போட்டு வைத்தேன். மகளுக்கு சிறுவயது முதலே கொடுத்து பழக்கியதால் ஒவ்வொரு வாய்ச் சாப்பாட்டிற்கும் சுண்டக்காய் வைத்துத் தரச் சொல்வாள்.

மாமி தந்த டிப்ஸுக்கு நன்றி.

ரோஷ்ணி கார்னர் - மெஹந்தி – 25 நவம்பர் 2018




மகள் நேற்று இரவு தன் கையில் தீட்டிக் கொண்டது!!

தமிழ் ஆர்வம் – நீயா நானா  - 25 நவம்பர் 2018

இன்றைய "நீயா நானா"வில், தமிழ்நாட்டிலேயே இருந்தும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத தமிழ்மக்களும், வடக்கில் இருந்து இங்கு வசிக்கும் மக்களுக்கு தமிழ் மீது உள்ள ஆர்வமும் என ஒரு மணிநேரம் சிறப்பாக இருந்தது..மகள் தான் இதைப் பார்க்க வேண்டும் என ஆவலோடு இருந்தாள்.

என் நட்புவட்டத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கலாம். மகள் இரண்டாம் வகுப்பிலிருந்து தான் தமிழ்நாட்டில் படிக்கிறாள். அதுவரை அவளுக்கு தமிழில் பேச மட்டுமே தெரியும். இரண்டாம் வகுப்பில் சொற்றொடரே வந்துவிட்டன. இவளுக்கு அ, ஆ விலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்குள்ளாகவே பிடித்துக் கொண்டு விட்டாள். செய்யுள், இலக்கணம், காப்பியங்கள் என ஒவ்வொன்றையும் ஆர்வத்தோடு படிப்பாள். அன்று முதல் இன்று வரை தமிழில் வகுப்பில் முதலிடத்தை பெறுகிறாள்.

ஆசிரியரே கரும்பலகையில் எழுதும் போது தவறுதலாக எழுதியிருந்தாலும் எழுந்து சரி செய்யச் சொல்வாள். கையெழுத்தும் அழகாக இருக்கும். சிலநேரங்களில் கவிதையும் எழுதுவாள்.

எல்லாம் நன்மைக்கே!! என்ற வாக்கியத்துக்கு ஏற்ப தில்லியிலிருந்து இடம்பெயர்ந்ததிலும் ஒரு நன்மையே!! அங்கு இருக்கும் போது எங்கள் நண்பர்களின் குழந்தைகள் பேசும் தமிழைக் கேட்டிருக்கிறேன் :)

மகளின் இந்த தமிழார்வம் என்றும் தொடர வேண்டும்.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி

    கம்பு தோசை சாப்பிட வந்தாச்சு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!

      முந்தைய பதிவு ஸ்பெஷல் - உங்க ஊர் பத்மநாபன் எழுத்தில்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    2. வெங்கட்ஜி பார்த்தேன்....காலையிலேயே...ஆனா வாசிக்க முடியலை..எபி போய்ட்டு கொஞ்சம் கண்ணுல பட்டதுக்கு கருத்து போட்டுட்டு ...அப்புறம் பவர் இல்ல...பவர் வந்ததும் வீட்டு வேலைகல்....இப்பத்தான் வலை வந்தேன்...இதோ வாசிக்கிறேன்...இந்தப் பதிவே இன்னும் முடிக்கலை...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. முடிந்த போது படித்துக் கொள்ளலாம் என்பது தானே இங்கே வசதி. உங்கள் ஊர்க்காரரின் எழுத்து என்பதால் சொன்னேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. ரோஷ்னி வழக்கம் போல் ராக்ஸ்!!

    தமிழ், மெகந்தி என்று....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. கம்பு தோசை சூப்பர். மூங்கில் கம்பா, முருங்கைக் கம்பா என்று சொல்லவேயில்லையே..... ஹி....ஹி....ஹி... ஜோக்காமாம்....

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம்.

      ஹாஹா.... உங்களுக்கு எந்தக் கம்பு பிடிச்சுருக்கோ அது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. புது நூறு ரூபாய் நோட்டு இன்னமும் கூட என் கண்ணில் சிக்கவில்லை. "நான் பார்த்ததில்லை, அவர் பார்த்திருக்கார்" என்னும் வரிகளில் லேஸான ஏக்கம் தெரிகிறதோ..... நாராயண... நாராயண...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புது 100 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்து விட்டதே.... நீங்கள் இன்னும் பார்க்கவில்லையா?

      நாராயண நாராயண! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கஜா புயலின் தாண்டவ முழு விவரங்கள் வெளிவெளிவர பாதிப்பு அதிகம் என்று தெரிகிறது. பாவம் மக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளி வர வர பாதிப்பின் தாக்கம் எந்த அளவிற்கு எனத் தெரிகிறது. இயற்கையின் சீற்றத்திற்கு முன் மக்கள் எம்மாத்திரம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. ரோஷணிக்கு பாராட்டுகள். சுண்டைக்காய் - நாங்களும் ஒருமுறை அப்படிச் செய்து பார்த்ததுண்டு. கதம்பத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீங்களும் சுண்டைக்காயை இப்படிச் செய்து இருக்கிறீர்களா? நான் இன்னும் சுவைத்ததில்லை. அடுத்த பயணத்தில் தான் சுவைக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. >>> மகளின் இந்த தமிழார்வம் என்றும் தொடர வேண்டும்... <<<

    அன்பின் நல்வாழ்த்துகள்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. மகளின் தமிழார்வம் சிறப்பு... பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. கதம்பம் வழக்கம்போல அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா ஜி.

      நீக்கு
  11. கதம்பம் அருமை.
    முகநூலில் பார்த்தேன், இங்கும் பார்த்தேன், படித்தேன்.
    வாழ்த்துக்களையும் சொல்லிக்கிறேன் ரோஷ்ணிக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  12. புது நூறு ரூபாய் நோட்டு இன்னும் கண்ணில் படவில்லை. குழம்பு மாவு உப்புமா சிலர் வரட்டரிசி மாவு உப்புமா என்றும் கூறுவார்கள். சூடாக சாபப்பிட நன்றாக இருக்கும். ரோஷ்ணியின் கை வண்ணத்தையும், தமிழ் ஆர்வத்தையும் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புது 100 ரூபாய் நோட்டு - இன்னும் சில இடங்களில் பரவலாக புழக்கத்திற்கு வரவில்லை போலும்.

      எனக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் ஒன்று இந்த குழமா உப்புமா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  13. புது 100 ரூபாய் பார்த்துட்டேன்..கையிலும் கிடைத்தது....அதை ஃபோட்டோ எடுக்கனும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது ஏதொ வாங்கும் போது கொடுத்துவிட்டேன் கடைக்காரர் 500க்கு சேஞ்ச் இல்லை என்றதால் போயே போச் அப்புறம் கையில் கிடைக்கல..

    கம்பு தோசை சூப்பரா இருக்கு...ஆதி...கீதாக்கா சொல்லிருக்காப்புல தக்காளி வெங்காயம் ப்ளஸ் சி மி போட்டு அரைத்த .சட்னி சூப்பர் கோம்போ....சோள தோசையும் நல்லாருக்கும்...சோளம் கம்பு சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும்...இதுக்கும் அந்த சட்னி செம கோம்போ....இட்லி செய்யலாம் இப்படி நிறைய...

    சுண்டடைக்காய் குழம்பு, உசிலி, பொரியல் சப்பாத்திக்கு க்ரேவி, வத்தல் என்று செய்யலாம்..
    சமையல் என்பது நம் கற்பனை, உற்சாகம், புதியது செய்யும் ஆர்வம் முயற்சி பெர்ம்யூட்டெஷன் காம்பினேஷன் என்று நம் கையில்....அஃப் கோர்ஸ் வீட்டில் கினி பிக்ஸ் இருக்கனும் ஹா ஹா ஹா ஹா...

    எஸ் ஆதி எங்க பிறந்த வீட்டுலயும் புளி சேர்த்து செய்யறத புளி உப்புமான்னும் மோர் சேர்த்து செய்யறத இல்லைனா மோர்க்கூழ் அல்லது கூழ் உப்புமா என்றும் சொல்லுவாங்க. என் மாமியார் வீட்டில்தான் குழம்புமா உப்புமா னு சொல்லுவாங்க. எனக்கு முதலில் புரியவில்லை அப்புறம் தான் புரிந்தது. எனக்கு இரண்டுமே ரொம்பப் பிடிக்கும்...புளி உப்புமா செய்தால் உசிலி போல உதிர் உதிராக நன்றாக இருக்கும்..என் ஃபேவரைட் இரண்டும்...

    எல்லாமே சூப்பர்...அந்த சிற்பங்கள் படம் அழகு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

      அட புது ரூபாய் கிடைத்தும் இல்லாமல் போனதே! வேறு நோட்டு விரைவில் கிடைக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  14. எல்லாமே நன்றாக இருக்கின்றன. சாப்பாடு ஐட்டம்ஸ் எல்லாம் நன்றாக இருக்கிறது ஆனால் எங்கள் வீட்டில் செய்வதில்லை என்பதால் சொல்லத் தெரியவில்லை.

    ரோஷ்ணி எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கிறார். வாழ்த்துகள்.

    100 ரூபாய் நோட்டு பார்த்து கையில் புழங்கியும் வருகிறது. ஆனால் அதிகம் இல்லை. கலர் பழக கொஞ்சம் நாட்கள் எடுக்கும் என்று தோன்றுகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பாடு ஐட்டம் - தங்கள் வீட்டிலும் செய்து சுவைக்கலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....