திங்கள், 18 மார்ச், 2019

பீஹார் டைரி – புத்த கயா – தி க்ரேட் புத்தா மற்றும் சில தலங்கள்


80 அடியில் ஒரு அமைதிப்பார்வை...

புத்த கயா சென்ற போது முதன்மையான மஹாபோதி புத்தர் கோவிலுக்குச் செல்லும் முன்னர் ஒரு பேட்டரி ரிக்‌ஷாவில் பல நாடுகளிலுள்ள புத்த சமயத்தினர் புத்தருக்கு ஞானம் கிடைத்த ஸ்தலமான புத்தகயாவில் அமைத்திருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வந்தோம் என்பதை தாய்லாந்து கோவில் பதிவில் சொன்னது நினைவில் இருக்கலாம். இன்றைக்கு அப்படிப் பார்த்த சில வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அங்கே கிடைத்த தகவல்கள், அனுபவங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.
 







ஒவ்வொரு வழிபாட்டுத் தலமாகச் சென்று அங்கே சில நிமிடங்கள் பிரார்த்தித்து, சில பல படங்களை எடுத்துக் கொண்டு அடுத்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்தோம். அப்படிச் சென்ற இடங்களில் எடுத்த சில படங்கள் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த வழிபாட்டுத் தலங்களில் மிகவும் பிடித்த இடமாக இருந்தது 80-அடி உயரம் உள்ள புத்தர் சிலையை தன்னகத்தே கொண்டிருந்த இடம். நுழைவாயிலில் இருந்து சற்றே நடந்து உள்ளே செல்லும் போதே பிரம்மாண்டமான புத்தர் நம்மை அன்புடன் அழைக்கும் தோற்றம் தெரிகிறது. அமைதியான சூழலை ரசித்தபடியே உள்ளே நுழைகிறோம். இந்த இடம் பற்றிய பதாகை பார்த்தவுடன் அங்கே நின்று படித்தது மட்டுமல்லாது படமாகவும் எடுத்து வைத்துக் கொண்டேன்.





Daibutsu என ஜப்பானிய மொழியில் அழைக்கப்படும் Great Buddha Statue புத்தருக்கு ஞானம் கிடைத்த போதி மரம் அமைந்திருக்கும் புனித பூமியான புத்தகயாவில் அமைக்கப்பட்டது – The Daijokyo Sect என அழைக்கப்படும் நகோயா, ஜப்பானின் புத்தமத பிரிவினைச் சேர்ந்தவர்கள் புத்தரின் புனித மொழிகளை உலகினருக்கு பரப்பவும், அமைதி மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகவும் அமைத்தார்கள்.  இந்த பிரம்மாண்ட புத்தர் சிலை அமைத்ததில் நம் தமிழர் ஒருவரின் பங்கும் உண்டு – அவர் தமிழகத்தினைச் சேர்ந்த கண்பதி ஸ்தபதி! சிலை அமைப்பதற்கான வரைபடம் அவர் தயாரிக்க, கொல்கத்தாவினைச் சேர்ந்த திரு ரிஷிகேஷ் தாஸ்குப்தா அவர்கள் மாதிரி சிலை தயாரிக்க, இந்த சிலை மற்றும் இடத்தினை ஏற்படுத்தியவர்கள் உத்திரப் பிரதேசத்தினைச் சேர்ந்த ஒர் நிறுவனம்.







இந்தச் சிலையை அமைத்து முடிக்க நான்கு வருடங்கள் ஆனது. 18 நவம்பர் 1989-ஆம் ஆண்டு தலாய் லாமா அவர்கள் திறந்து வைத்தார்கள். இங்கே புத்தர் சிலை தவிர புத்தர் பெருமானின் முதன்மையான 10 சீடர்கள் சிலைகளும் பின்னர் நிர்மாணிக்கப்பட்டு அவை பீஹார் மாநிலத்தின் அப்போதைய கவர்னர் டாக்டர் ஏ.ஆர்.கித்வாய் அவர்களால் 20 ஃபிப்ரவரி 1996-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. சிலையின் உயரம் 80 அடி எனச் சொல்லப்பட்டாலும் அது மொத்த உயரம் – சிலை 64 அடி, புத்தர் அமர்ந்திருக்கும் தாமரை 6 அடி, கீழே உள்ள பீடம் 10 அடி! ஆக மொத்தம் 80 அடி! மிகவும் அமைதியான சூழலில் த்யான முத்ராவில் தாமரை மலர் மீது அமர்ந்து இருக்கிறார் புத்தர் பெருமான். காலை ஏழு மணி முதல் மதியம் பன்னிரெண்டு மணி வரை மற்றும் மதியம் இரண்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை இந்த வழிபாட்டுத் தலத்திற்குச் செல்ல முடியும்.






இந்த இடம் தவிர ஜப்பான் மற்றும் சில நாடுகள் அமைத்திருக்கும் வழிபாட்டுத் தலங்களையும் நாங்கள் சென்று பார்த்தோம். எல்லா இடங்களிலும் அப்படி ஒரு அமைதி. அங்கே எழுதி வைத்திருந்த ஒரு வாசகம் புன்னகைக்க வைத்தது – ”இங்கே அமைதி காக்கவும். மேலே ஏற முயற்சி செய்ய வேண்டாம்.” என்பது முதல் வரி! ஆனால் அடுத்த வரி தான் புன்னகை வரவழைத்த வரி – “இங்கே தூங்க முயற்சி செய்ய வேண்டாம்!” என்பது தான் அந்த வரி! பிரார்த்தனை செய்கிறேன் என்று அமைதியான சூழலில் சிலர் தூங்கி விடுகிறார்கள் போலும்! வேறு ஒரு வழிபாட்டுத் தலத்தில் இரண்டு புத்த மதபிக்குகள் சிலைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள் – கடமையே கண்ணாக இருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுத்தார் நண்பர் பிரமோத். அப்படியே அவர்களை படம் எடுத்துக் கொள்ளலாமா என அனுமதி கேட்க, கைகளை கூப்பியபடி போஸ் கொடுத்தார்கள். படம் எடுத்துக் கொண்டு நன்றி சொல்லி அங்கிருந்து அடுத்த இடம் நோக்கிச் சென்றோம். இந்த வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் புத்தர் பெருமான் தான் முக்கியமாக வழிபாடு செய்யப்படுகிறார் என்றாலும் தனித்தனி முறைகளில் கோவில்கள் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே அனைத்திடங்களிலும் பார்த்த இன்னும் ஒரு விஷயம் வளாகத்தில் தூய்மை. பூங்காக்களும் அமைத்திருக்கிறார்கள்.




வழிபாட்டுத் தலங்களில் பார்த்த சில விஷயங்கள் ரசிக்கும்படி இருந்தது. அப்படிப் பார்த்த ஒரு விஷயம் கதவைத் தட்ட இருந்த வளையம். இப்படி சில விஷயங்களை ரசிக்க முடிவதும் பயணங்களில் கிடைக்கும் ஒரு அனுபவம். இந்தப் பதிவில் சொன்ன விஷயங்கள் மற்றும் பகிர்ந்த படங்களை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பதிவு மற்றும் படங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

42 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி.

    80 அடி புத்தர் சிலை அட்டகாசமாக இருக்கிறது. படங்களும் ரொம்ப அழகாக இருக்கின்றன.

    //இந்த பிரம்மாண்ட புத்தர் சிலை அமைத்ததில் நம் தமிழர் ஒருவரின் பங்கும் உண்டு – அவர் தமிழகத்தினைச் சேர்ந்த கண்பதி ஸ்தபதி! //

    மகிழ்வான விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

      படங்களையும் பகிர்வினையும் ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. பெரிய புத்தர் சிலையும் முழு அளவுக் குறிப்புகளும் அறிந்தோம்.

    உள்ளே இருக்கும் புத்தர் வடிவங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன.

    //“இங்கே தூங்க முயற்சி செய்ய வேண்டாம்!”//

    ஹா ஹா ஹா ஹா ஜி இது பல இடங்களிலும் நடக்கிறது என்று தோன்றுகிறது.

    யோகா வகுப்பிலும் கூட கடைசியாக ரிலாக்சேஷன் என்று சவாசன நிலையில் படுக்கும் போது பலரும் தூங்கிவிடுவார்கள். எனக்கும் தூக்கம் வந்ததுண்டு!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சவாசன நிலையில் தூங்குவது - ஹாஹா... எனக்கும் அப்படி தூக்கம் வந்ததுண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. புத்த பிட்சுகள் அழகான சிரிப்பு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதியான சிரிப்பும் கூட!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. அருமை ! உங்க்ளிடம்தான் கேக்கணும்..... தில்லியில் இருந்து சண்டிகர் போகும்போது ஒரு சமயம் மாற்றுப்பாதை பயன்படுத்த வேண்டி இருந்தது. அப்போ ஒரு பெரிய புத்தர் சிலையை ஒரு விநாடி பார்த்தேன். அது எந்த இடமாக இருக்குமுன்னு இதுவரை மண்டைக்குடைச்சல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கே உங்கள் வருகை - மகிழ்ச்சி...

      கௌதம் புத் நகர் என அழைக்கப்படும் நோய்டா - உத்திரப் பிரதேச நுழைவாயில் அருகே ஒரு பெரிய புத்தர் சிலை அமர்ந்து கொண்டு தியானம் செய்யும் சிலை உண்டு. நீங்கள் எந்த வழி சென்றீர்கள் எனத் தெரிந்தால் மேலும் விவரங்கள் சொல்ல முயற்சிக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  5. குட்மார்னிங் வெங்கட். அதிகாலையில் அமைதியான பிரம்மாண்ட புத்தர் தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      புத்தர் தரிசனம் - இன்றைய தினமும் வரும் எல்லா தினங்களும் அமைதி நிலவட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. தியானம் என்ற பெயரில் தூங்கி விடுவது சிறப்பு!!! அப்படியாவது தூக்கம் வருகிறதே.... தூக்கமும் ஒருவகை தியானமே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கமும் ஒரு வகை தியானமே! ஹாஹா... இப்படியும் சமாளிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. படங்கள் அனைத்தையும் ரசித்தேன். அழகிய புத்தர் படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. படங்களை எடுத்த கோணங்கள் மிகவும் அருமை ஜி தகவல்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. அனைத்து படங்களும் அருமை, அழகு.
    அசோகமரங்களுக்கு நடுவில் கம்பீரமாக இருக்கும் புத்தர் மனதைக் கவர்ந்தார்.

    //“இங்கே தூங்க முயற்சி செய்ய வேண்டாம்!” என்பது தான் அந்த வரி! பிரார்த்தனை செய்கிறேன் என்று அமைதியான சூழலில் சிலர் தூங்கி விடுகிறார்கள் போலும்! //

    எங்கள் மன்றத்திலும் தவம் செய்ய்யும் போது தூங்கிவிடுவார்கள் சிலர்.

    புத்தம் சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தர் படம் மனதைக் கவர்ந்த படம் என்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. வாழ்வில் ஒருமுறையேனும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தங்களின் பதிவு தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முறையேனும் சென்று பார்க்க வேண்டிய இடம் இது. முடிந்த போது சென்று வாருங்கள் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. நீங்கள் சென்றுள்ள இந்த கோயில்களுக்கு, எங்களது புத்தகயா பயணத்தின்போது சென்றோம். இந்தியாவில் வேறெங்கும் ஒட்டுமொத்தமாக புத்தர்களை வேறெங்கும் காணமுடியாது. நேரில் பார்த்தவற்றை, உங்கள் பதிவால் இன்று மறுபடியும் காணும் வாய்ப்பு பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் சென்று வந்த நீங்கள் மீண்டும் இப்பதிவு மூலம் காண வாய்ப்பு... மகிழ்ச்சி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. அமைதியா இருந்தால் தூக்கம் வருவது இயல்புதானே?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  14. புத்தர் சிலை குறித்த தகவல்கள் படங்கள் எல்லாமே சிறப்பு.

    பெரிய புத்தர் சிலை பிரம்மாண்டமாய் அழகாய் இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  15. உடலில் தெம்பு இருக்கும்போதே பார்க்க விரும்பும் இடங்களுக்குச் செல்ல வேண்டும் இல்லையென்றால் என்னைப் போல் பார்த்த இடங்களை மட்டும் நினைவில் கொள்ளவேண்டி இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கயா எனப்படுவதும் இதுவும் ஒன்றா

      நீக்கு
    2. கயாவிலிருந்து மிக அருகே போத் கயா எனப்படும் இந்த புத்த கயா உள்ளது.

      நீக்கு
    3. உடம்பில் தெம்பு இருக்கும்போதே... உண்மை தான் ஐயா. ஆனால் பலருக்கும் இது சாத்தியப்படுவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
    4. கயா, புத்தகயா இரண்டுமே அருகே அருகே இருக்கின்றன. கயா அருகே மஹா போதி ஆலயம் இருக்கும் இடத்தினை புத்தகயா என அழைக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
    5. ஆமாம். இரண்டுமே அருகே இருக்கும் இடங்கள் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  17. புத்த பிக்ஷுக்கள் சிரித்தமுகத்துடன் நன்றாகவே போஸ் கொடுத்திருக்கின்றனர். எல்லாப் படங்களும் அருமை. பிரம்மாண்டமான புத்தர் ஆச்சரியப்படுத்தினாலும் நேபாளத்தில் இதை விட உயரமான புத்தரோ என நினைக்கிறேன். யோசிக்கணும். இன்னொரு முறை காசி சென்றால் புத்தகயா முக்கியமாப் பார்க்கணும்னு நினைச்சுப்பேன். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசி சென்றால் புத்தகயாவும் செல்லலாம். கயா வரை சென்ற போதே அங்கேயும் சென்றிருக்கலாம். இருந்தாலும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  18. பிரமாண்ட புத்தரும் தகவல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....