புதன், 27 மார்ச், 2019

வில்லுடையான்பட்டு கோவில், நெய்வேலி – நினைவுகளைத் தேடி – இரண்டு


சமீபத்தில் எனது பிறந்த/வளர்ந்த ஊரான நெய்வேலி நகருக்கு ஒரு நாள் பயணமாகச் சென்று வந்ததைப் பற்றி இதற்கு முன்னர் எழுதிய பதிவின் சுட்டி கீழே.


நடராஜர் கோவில் தரிசனம் முடித்து, CBS என அழைக்கப்படும் பேருந்து நிலையம், முன்பு திரையரங்கமாக இருந்த அமராவதி வளாகம் ஆகிய இடங்களை வெளியிலிருந்து பார்த்தபடியே அடுத்ததாகச் சென்ற இடம் நெய்வேலியின் வட்டம் 16 இல் இருக்கும் வில்லுடையான்பட்டு கோவில். பங்குனி உத்திரத் திருவிழா இங்கே மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா. ஒவ்வொரு வருடமும் நெய்வேலி பகுதியில் இருக்கும் அத்தனை கோவில்களிலிருந்தும் காவடிகள் எடுத்துக் கொண்டு இந்த வில்லுடையான் பட்டு கோவிலுக்குத் தான் செல்வார்கள். எட்டு ரோடு என அழைக்கப்படும் ஒரு சாலை சந்திப்பிற்குச் சென்று அந்த வழியே வரும் அனைத்து கோவில் காவடிகளையும் பார்த்து கடைசியாக வரும் பறக்கும் காவடி உடன் வில்லுடையான்பட்டு கோவில் வரை நடந்து செல்வது எல்லா வருடமும் நடக்கும் வழக்கம்.



வழி முழுவதும் நீர் மோர், பானகம், உணவு என விதம் விதமான உணவு பொருட்கள், கை விசிறி போன்ற பரிசுப் பொருட்கள் ஆகியவை விநியோகம் செய்வதற்கென்ற பல கொட்டகைகள் போட்டு இருப்பார்கள். காலை நேரத்தில் ஆரம்பிக்கும் காவடி ஊர்வலம் மதியம் தாண்டி கூட போய்க் கொண்டே இருக்கும் என்பதால், தார் சாலைகளில் அவ்வப்போது தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றியபடியே செல்வார்கள். காவடி, பால் குடம் எடுத்துக் கொண்டு செல்லும் பக்தர்கள் சிலருக்கு “சாமி” வர, அவர்களை கட்டுக்குள் கொண்டு வர ரொம்பவே பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். நீட்டிய கைகளில் கற்பூரம் ஏற்றி வைக்க, எரிந்து கொண்டிருக்கும் கற்பூரத்தினை அப்படியே விழுங்கி விடும் பெண்களை வியப்புடன் பார்த்திருக்கிறேன் என் சிறு வயதில். என்ன ஒரு நம்பிக்கை! காவடிகளில் தான் எத்தனை எத்தனை வகைகள்! ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்த நினைவுகள் இன்றைக்கும் பசுமையாக மனதில்.



சிறு வயது நினைவுகளை மனதில் சுமந்தபடியே கோவில் வளாகத்திற்குச் சென்று அங்கே உற்சவ காலங்களில் தெப்போற்சவம் நடக்கும் குளக்கரையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். “”தொப்பம் பார்த்துட்டு வரலாம் வா” என்று அழைத்த ஒரு உறவினர் நினைவுக்கு வந்தார். அவர் போகும்போதும் வரும்போதும், “தொப்பம், தொப்பம்” எனச் சத்தமாக கிண்டல் செய்தது நினைவுக்கு வந்தது! அந்த தூரத்துச் சொந்தமான உறவினருக்கு எடுப்பான பல்கள் என்பதால் “பல்லி” என்றும் அப்போது சொல்வது எங்களுக்கு வழக்கமாக இருந்தது!. தெப்பம் என்பதை அவர் தொப்பம் என்று சொல்கிறார் எனக் கிண்டல் அடித்த நினைவுகள் மனதில் வர புன்னகைத்தேன். அங்கே பார்த்த மூதாட்டி அவரைப் பார்த்து சிரிக்கிறேன் என நினைத்து புன்னகைத்தார். மிகவும் சுத்தமாக இருந்தது குளம்.

குளக்கரையிலிருந்து விலகி கோவிலுக்குள் நுழைந்தேன். முன்பு இருந்ததை விட நிறைய மாற்றங்கள். தரையெங்கும் டைல்ஸ் பதித்து இருக்கிறார்கள். கோவிலில் முருகனுக்கு அப்போது தான் அபிஷேகம் முடிந்து பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. அன்றைய பூஜைக்கு கொடுத்திருந்தவர்கள் உள்ளே அமர்ந்து கொண்டிருக்க பக்தர்கள் கூட்டமாக நின்று தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் பூஜைகளைக் கண்டு பிரகாரத்தினைச் சுற்றி வரலாம் என நகர்ந்தேன். கோவில் வளாகத்தில் நேர்ந்து விடப்படும் மயில்கள், சேவல்கள், மாடுகள் ஆகியவற்றுக்கான இடம் முன்பு இருந்தது. இப்போது அந்த இடம் குறைவாக இருக்க, தினசரி அன்னதானம் கொடுக்கும் கூடம் உள்ளே அமைந்து இருக்கிறது. சிறுவயதில் இக்கோவிலுக்குச் செல்லும்போது முருகனைப் பார்க்கிறோமோ இல்லையோ, மயில்களைப் பார்க்கத் தவறியதில்லை. சுற்றுப் பிராகாரத்தில் ஒவ்வொரு இடமாக நின்று நிதானித்துப் பார்த்துக் கொண்ட வந்த என்னருகே ஒரு முதியவர் வந்து நின்றார்.

என்ன சொல்லப் போகிறார் என்ற கேள்வியுடன் பார்க்க, அன்னதானம் சாப்பிட்ட கையோடு வந்த அவர் என்னிடம் “சாப்பிடு கண்ணா...” என்றபோது, மனதை ஏதோ செய்தது. அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். “எனக்குன்னு யாரும் இல்லைப்பா, எல்லாரும் என்னை விட்டுப் போயிட்டாங்க..... இங்கே கோவில் சாப்பாடு, குளக்கரையில் உறக்கம் – வாழ்க்கை ஓடுது....  என்னிக்கு என்னப்பன் முருகன் என்னை அழைத்துக் கொள்வானோ தெரியல!” என்று சொன்னதோடு, “சரி சரி நீ போய் சாப்பிடு, தீர்ந்துடப் போகுது!” என்று சொல்லி அங்கிருந்து அகன்றார். அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என பர்சை எடுப்பதற்குள் அங்கிருந்து விட்டு விலகிச் சென்று விட, அவரை தொடர்ந்து செல்லாமல் அப்படியே சில நிமிடங்கள் “அவரே இப்படிக் கையேந்தும்போது, அடுத்தவர்களையும் சாப்பிடச் சொல்ல வேண்டும்” என்ற நல்லெண்ணம் இருக்கிறதே எனும் பிரமிப்பில் நின்று விட்டேன்.

கோவில் வளாகத்திலிருந்து அமராவதி திரையரங்கம் செல்லும் வழி எங்கும் இரு பக்கமும் கடைத் தெரு அமைப்பார்கள். அதிசயமான பாம்பு உடல்-மனிதத் தலை, ஒல்லியாகவும், குண்டாகவும் காண்பிக்கும் வித்தியாசமான கண்ணாடிகள், மரணக்கிணறு போன்ற பல நிகழ்ச்சிகள் இந்தச் சமயத்தில் தான் நெய்வேலிக்கு வரும். சிறு வயதில் பயத்தில் எங்கேயும் செல்ல மாட்டேன் – கூடவே அதற்கு காசும் கிடைக்காது என்பதையும் சொல்ல வேண்டும். திருவிழாவிற்குச் சென்றால் அதிக பட்ச செலவே பத்து ரூபாய்க்கு மேல் கிடையாது – அதுவும் எங்கள் மூன்று பேருக்கும் சேர்த்து! அப்படி இருக்கையில் எங்கே மரணக்கிணறும் அதிலே வாகனம் செலுத்தும் சாகசங்களையும் பார்ப்பது – தீனி சாப்பிடவே அந்தப் பணம் செலவாகி விடுமே! அதுவும் நாங்களாகவே எதையும் வாங்கிவிட முடியாது – எதை வாங்கிக் கொடுக்கிரார்களோ அதைத் தின்று வர வேண்டியது தான்!

இதோ பங்குனி மாதம் பிறந்து விட்டது. பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. சுற்று வட்டார கிராமங்கள் அனைத்திலிருந்தும் மாட்டு வண்டிகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்வார்கள் என்ற நினைப்புடன் தலைநகரில் இருக்கிறேன். இந்த வருட உத்திரத் திருவிழாவில் சகோதரியின் மகன் காவடி எடுக்கிறான் என்று சொன்னார். சில வருடங்கள் முன்னர் நான் குடும்பத்தினருடன் பங்குனி உத்திரத் திருவிழாவிற்குச் சென்று வந்தேன்.  பல வருடங்கள் நெய்வேலி நகரில் இருந்திருந்தாலும், ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழா பார்த்து, காவடிகளைப் பின் தொடர்ந்து சென்றிருந்தாலும் ஒரு வருடம் கூட காவடி எடுத்ததில்லை என்பது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது! இனிமையான நினைவுகள்....

கோவிலில் சிறிது நேரம் இருந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு ஒரு இடத்திற்குச் சென்றேன். அங்கே சென்ற கிடைத்த அனுபவம் வேறு ஒரு தனிப்பதிவாக விரைவில்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    இளமை நினைவை இசைத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      நினைவுகள்.... நீக்கமற நிறைந்திருக்கும் நினைவுகள்..,

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. தனக்கு தனக்கு சேர்த்துக் கொள்ளாதவர்களிடம் இருக்கும் பக்குவம் அந்த "சாப்பிடு கண்ணா... தீர்ந்துடப் போகுது..." நீங்கள் ஏதாவது கொடுத்திருந்தால் கூட வாங்கி இருக்க மாட்டார் அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பக்குவம் எளிதில் வந்து விடுவதில்லை பலருக்கும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    குளம் மிக மிக சுத்தமாகப் பார்க்க அழகாக இருக்கிறது.

    பல்லி// இவரை இப்படிக் கலாய்த்ததாக முன்பே ஒரு முறை ஜஸ்ட் ஒரு வரி உங்கள் பதிவில் வாசித்த நினைவு...

    முதியவர் மனதை நெகிழ வைத்துவிட்டார்!! பாவம் முதுமையில் தனிமை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தமாகவே வைத்து இருக்கிறார்கள்...

      புரியாத வயதில் செய்த தவறுகள் - உருவம் கண்டு எள்ளாமை :(

      முதியவர் மறக்க முடியாதவர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. உங்கள் பழைய நினைவுகளை ரசித்தேன். திருநெல்வேலியை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருநெல்வேலி - நெய்வேலி இரண்டும் வேறு. நான் படித்தது/வளர்ந்தது நெய்வேலி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  5. அன்பு வெங்கட், எத்தனை அழகு இந்த விழாக்கள். நான் தென் தமிழகத்தில் பார்த்த விழாக்காட்சிகளை இன்னும் மறக்கவில்லை.
    உங்கள் எழுத்து சுலபமாக நெய்வேலியில் கொண்டு போட்டு விட்டது.
    முன்பெல்லாம் இந்த மஞ்சளாடை இதெல்லாம் பார்த்ததில்லை. இருந்தும் காவடி எடுப்பவர்களின் தீவிரம் வியக்க வைக்கும்.

    அந்த முதியவர் தான் எத்தனை கருணை படைத்தவர்.
    மனம் நிறை நன்றி மா. தில்லி முருகன் கோவில் போய் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  6. முதியவர் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. நெய்வேலி நினைவலைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! இருமுறை நெய்வேலி நகரினை கடந்து மாயவரம் வரை சென்றுள்ளேன். அங்கு இறங்கி ஊரைச்சுற்றி பார்த்தது இல்லை. ஒரு முறை பார்க்கவேண்டும் என்ற உந்துதலை தந்தது தங்களின் பதிவு. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  8. “சாப்பிடு கண்ணா...”
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  9. கோவில் பங்குனி உத்திரதிருவிழா எங்கூர் திருவ்ழாவினை ஞாபகப்படுத்தியது. அந்த பக்குவம் முதியவரின் அனுபவ வாழ்க்கையின் முதிர்ச்சி. அவரின் வாழ்க்கை மனம் கனக்கவைத்துவிட்டது. நீங்கள் கொடுத்திருந்தாலும் வாங்கியிருக்கமாட்டார் என்றே எண்ணுகிறேன்.
    அருமையான ஊர் நினைவுகள். தொடருங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரியசகி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  11. இளவயதுத் திருவிழாக்காலங்கள் மறக்க முடியாதவை! எப்போவும் நினைவில் நிற்கும். அந்த அளவுக்கு இப்போதைய திருவிழாக்கள் நம்மைக் கவராது! நம்குழந்தைகளுக்குக் கவர்ச்சியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  12. கோவிலுக்கு சென்று வந்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது பதிவைப் படித்ததும். பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....