சனி, 20 ஜூன், 2020

காஃபி வித் கிட்டு – நல்லதே நடக்கட்டும் – அம்மா – லடாக் – மின்னூல் - சுஜாதாட்ஸ்


காஃபி வித் கிட்டு – பகுதி 72


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:


நினைப்பது ஒன்று; நடப்பது இன்னொன்று. நாம் நடப்பதை எல்லாம் நல்லதாய் எண்ணிக் கொள்வோம்…. நாம் நினைப்பதும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும்….

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக… ஃபிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து ஒரு விளம்பரம் – நமக்குத் தெரிந்த ஜான்ஸன்ஸ் பேபி பௌடருக்கான விளம்பரம் தான் – ஒரு மதர்ஸ் டே சமயத்தில் வெளியிட்ட விளம்பரம் – ரொம்பவே பிடித்துப் போன ஒரு விளம்பரம்.  பாருங்களேன்.

 

அடுத்த பயணத்திற்கான ஆசை:


ஆசைகள் இல்லாத மனிதர்கள் உண்டோ? விரல் விட்டு எண்ணிவிடலாம் அப்படி இருந்தால்.  எல்லோருக்கும் ஆசைகள் உண்டு.  அந்தமான் பயணத்திற்குப் பிறகு எங்குமே பயணம் செய்ய முடியவில்லை – ஒரு முறை நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்து திரும்பியது தவிர வேறு எங்கேயும் பயணிக்கவில்லை.  பயணம் செய்து இத்தனை நாட்களாகிவிட்டது.  எங்கேயும் பயணிக்க முடியாத சூழல்.  அடுத்த பயணம் எங்கே என்ற கேள்வி வரும்போதெல்லாம், லடாக், கோவா, லக்ஷத்வீப், மஹாராஷ்ட்ரா என ஒரு பெரிய பட்டியலே மனதில் தோன்றுகிறது.  எங்கேயாவது சென்று வந்தால் மனதுக்குக் கொஞ்சம் புத்துணர்வு கிடைக்கும் என்ற நினைவு வந்து கொண்டே இருக்கிறது.  இன்றைய சூழல் அதற்கு ஒத்து வரவில்லை என்பதால் இப்போதைக்கு இணைய வழி, போக நினைக்கும் இடங்களின் காணொளிகளைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படி பார்த்த ஒரு காணொளி இதோ உங்களுக்காக…. எட்டு நிமிடம் மட்டுமே ஆகும்! வாருங்கள் லடாக் நோக்கி ஒரு சாலைப் பயணம் எப்படி இருக்கும் எனப் பார்க்கலாம்!

 

யூவில் காணொளியை இணைத்தவர்களுக்கு நன்றி.


திரிவேணி சங்கமம் - தரவிறக்கம்


திரிவேணி சங்கமம் என்ற தலைப்பில் வெளியான மின்னூல் – காசி மற்றும் அலஹாபாத் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் என அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட மின்னூல் வரும் செவ்வாய்க் கிழமை மதியம் வரை அமேசான் தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!


என்னுடைய அனைத்து மின்னூல்களின் பட்டியலுக்கான சுட்டி கீழே:


மின்புத்தகங்கள் பட்டியல்


இந்த வாரத்தின் கேள்வி பதில்:


கேள்வி: உங்கள் வீட்டு வாசலில் நாளை காலையில், ஒரு பெட்டியில் ஒரு கோடி ரூபாயுடன் "10 வருடங்களுக்குமுன் நீங்கள் செய்த உதவிக்கு நன்றி" என்ற கடிதமும் இருந்தால் என்ன செய்வீர்கள்?


ஜான்ஸன் ஸ்டீஃபன் என்பவரின் பதில்: நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாமல் போனாலும் சரி. தகுந்த கைப்பேசி பட ஆதாரங்களோடு நேரடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று ஒப்படைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். உங்கள் சிந்தனைக்காக ஒரு சிறிய பிளாஷ்பேக். நடந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன். 2007ல் முதன்முதலாக அயல்நாட்டு வேலையில் சேர்ந்திருந்தேன். அரபு நாடு ஆதலால், வார விடுமுறை நாள் வெள்ளிக்கிழமை. வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களுக்குப் பின்னர், ஒரு வெள்ளியன்று நல்ல உச்சிவெய்யிலில், சற்று தொலைவில் இருந்த மசூதிக்கு அருகில் இருந்த கடைக்குச் சென்றபோது, அங்கே சாலையோரத்தில் ஒரு "கொழுத்த" பணப்பை கிடந்தது. நான் தங்கியிருந்த இடத்தில், எந்தவொரு CCTV கேமராக்கள் எதுவுமே இல்லை. பிரித்துப் பார்த்தால், ஏறக்குறைய 45,000/- அமீரக திர்காம்கள் உடன் பல்வேறு வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உள்ளே இருந்தது.

ஒரே ஒரு நிமிடம் கூட, எந்தவொரு சிந்தனைக்கும் இடமளிக்காமல், கிட்டத்தட்ட ஒன்றரை கி.மீ. தூரத்தில் இருந்த காவல் நிலையத்தில் நடந்தே சென்று ஒப்படைத்து விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்த்தேன். தற்பெருமைக்காகவோ, இதைப் படித்துவிட்டு "ஆகா, உங்களைப் போன்ற ஆளை இந்தக் கலிகாலத்தில் காணவே முடியாது " என்று கருத்துக்களைப் பெறவோ நான் இதை இங்கே பதிவிடவில்லை. எனது சுபாவம் அடுத்தவர் பொருளுக்கு உயிரே போனாலும் ஆசைப்படக்கூடாது என்பது தான். அது ஒரு பைசாவானாலும் சரி, நீங்கள் சொன்ன ஒரு கோடி ரூபாய் ஆனாலும் சரி. என்னிலைமை எந்தக்காலத்திலும் ஒன்றே. வாழ்க வளமுடன்.


அது சரி, இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்!


பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:


2014-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவு – ஃப்ரூட் சாலட் - 96 தொகுப்புப் பதிவு ஒன்றிலிருந்து சில வரிகள்…


ஒரு எழுத்தாளன் தன்னால் எழுதப்படாத ஒரு கதையை விமர்சிக்கும் போது பல அம்சங்கள் விமர்சனத்தின் நேர்மையைக் கலைக்க முற்படுகின்றன. சிறுகதை படிக்கும்போது கதையின் ஆதாரமான செய்தியையும் அமைப்பையும், ஒரு வாசகனைப் போல கவனிக்காமல், ‘இந்த வாக்கியத்தை இப்படி எழுதி இருக்கலாமே, இந்தப் பாராவை அங்கு அமைத்திருக்கலாமே, கதையை இந்த இடத்தில் முடித்திருக்கலாமே என்று அடிக்கடி அவன் பாண்டித்யம் குறுக்கிடும். நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் மற்றவர்கள் கதையை யோக்கியமாகப் படிக்கிற ஜாதி இல்லை என்பதை அவர்களுடன் பேச்சில் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் பொழுது போக்குக்கு தத்தம் சொந்தக் கதைகளையே படித்துக் கொண்டிருப்பார்கள் என்றும் தோன்றியது! – சுஜாதாட்ஸ்


முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...


ஃப்ரூட் சாலட் - 96


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி


42 கருத்துகள்:

  1. நல்ல வாசகம். பயணம் சென்று கொண்டேயிருக்கும் உங்கள் கால்களைக் கட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் கைகள் காணொளியிலும் இதுபோன்றவற்றைத் தேடிப் பார்ப்பதை்நிறுத்த முடியாது. மின் நூலுக்கு வாழ்த்துகள். சுஜாதாட்ஸ் என்னிடமும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தேடிப்பார்ப்பதை - காணொளியாகப் பார்ப்பதை நிறுத்த முடியாது - ஹாஹா... உண்மை தான்.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      சுஜாதாட்ஸ் - ஆஹா...

      நீக்கு
  2. இன்றைய பொழுது நல்ல பொழுதாக
    அமையட்டும் எல்லாருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. ஜான்ஸன் ஸ்டீஃபன் அவர்களின் கொள்கைதான் எனதும் அரபுநாடெ என்பதால் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    ஆனால் இந்தியாவில் கிடைத்தால் முடிந்த அளவு இழந்தவர் யாரென்று அறிய அந்தப் பணத்தில் செலவு செய்தே முயல்வேன். இயலாதபோது இனி காண வழியில்லை என்றால் அந்தப்பணத்தை நானே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தக செலவை ஏற்றுக்கொள்வேன்.

    பெயர் எனக்கு கிடைத்தாலும் புண்ணியம் பணத்தை இழந்தவருக்கு கிடைக்க இறைவனை தொழுவேன்.

    விளம்பரம் தாய்மையின் அன்பை வெளிப்படுத்தியது.

    தொடர்ந்து பயணியுங்கள் ஜி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவில் என்றால் - நல்ல சிந்தனை.

      விளம்பரம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      பயணம் - சூழல் சரியான பிறகு பயணிக்க வேண்டும். பார்க்கலாம்.

      நீக்கு
  4. உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள். இயல்பு நிலை திரும்பிய பின்னர் ஒரு முறை தஞ்சாவூர்/கும்பகோணம் பகுதிக்கு வாருங்கள். கோயில், கலை ரசனை தொடர்பான இடங்களைத் தெரிவு செய்து தருகிறேன். சென்று பாருங்கள். உங்கள் காமராப்பார்வையிலும், எழுத்து நடையிலும் எங்கள் பகுதியின் பெருமையை எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்துப் பணி - நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      சூழல் சரியான பிறகு தஞ்சை/கும்பகோணம் பகுதிக்கு வர வேண்டும். திட்டம் இருக்கிறது. நீங்கள் தேர்ந்தெடுத்துத் தந்தால் அந்த இடங்கள் சிறப்பாகவே இருக்கும். பயணம் செய்யலாம் ஐயா.

      நீக்கு
  5. அசத்தலான காணொளி...

    ஜான்ஸன் ஸ்டீஃபன் என்பவரின் செயல் போலவே...


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. கோவிட்-19 நம்முடைய பல அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் செய்து விட்டது. கடந்த மே மாதத்தில் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் லடாக்கில் மெடிடேஷன் வகுப்புகள் நடத்துவதாக இருந்தார்கள். நானும் என் தோழியும் அதில் கலந்து கொள்வதாக இருந்தோம். கொரோனா எல்லாவற்றையும் தகர்த்து விட்டது. நீங்கள் பகிர்ந்திருக்கும் லடாக் பயண சுட்டி ஆவலைத் தூண்டி விட்டு விட்டது.
    விளம்பரப் படம் நெகிழ்சி! மின் நூலுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... லடாக் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தீர்களா? ஆஹா... சூழல் சரியான பிறகு சென்று வாருங்கள்.

      லடாக் காணொளி - உங்களுக்கும் பிடித்ததில் அம்கிழ்ச்சி.

      விளம்பரம் - மனதைத் தொட்டது இல்லையா.

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பானும்மா...

      நீக்கு
  7. பலமுறைகள் தெருவில் கண்டெடுத்த பர்சுகள், விலை உயர்ந்த செல்போன், என் வங்கி கணக்கில் தவறாக வரவு வைக்கப்பட்ட தொகைகள் இவற்றை உரியவரிடம் திரும்ப கொடுத்திருக்கிறேன். என்னதான் பெறப்பட்ட உதவிக்கு கைமாறு என்றாலும், இத்தனை பெரிய தொகையை பெற்றுக் கொள்வது முறையாகாது. முடிந்தவரை அனுப்பியவரை தெரிந்து கொண்டு பணத்தை திருப்பி கொடுக்க பார்ப்பேன். இல்லாவிட்டால் அதை வேறு நலப் பணிகளுக்கு பயன்படுத்துவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலமுறை தெருவில் கிடைத்த பொருட்களை சரியாக திரும்பிக் கொடுத்ததை அறிந்து மகிழ்ச்சி. நலப்பணிகளுக்கு பயன்படுத்துவதும் நல்லதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா...

      நீக்கு
  8. குழந்தைக்கான பவுடர் விளம்பரம் பார்த்தேன். கலங்க வைத்தது...

    வீட்டு வாசலில் பணம் இருந்தால்?!
    முடிந்தவரை நேர்மையாக இருக்க முயற்சி செய்வேன். ஒருவேளை ,வீட்டில் யாரையாவது காப்பாற்ற பணம் தேவைப்பட்டால் எடுத்துக்கலாமான்னு யோசிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் பவுடர் விளம்பரம் - மனதைத் தொடும் விளம்பரம் தான் ராஜி.

      உங்கள் என்ணங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. "அடுத்தவர் பொருளுக்கு உயிரே போனாலும் ஆசைப்படக்கூடாது" என்ற இன்றைய பதிவின் கருத்து அருமை.
    எழுத்தாளர்களின் அரிவு வட்டம் சிறியது என்றாலும் அதிலும் இப்படி ஒரு அரசியல் இருப்பது வேதனை. யாராவது ஒருவர் விமர்சித்தால் கருத்துகளின் தரம் பாராமல் விமர்சிப்பவனின் பின்னணியை பார்த்து தாக்குவது அரிவார்ந்த விவாதங்களை திசை திருப்புகிறது.
    சுஜா தாட்ஸ் தேடி படித்து பார்க்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்தவர் பொருளுக்கு உயிரே போனாலும் ஆசைப்படக்கூடாது// உண்மை தான்.

      சுஜா தாட்ஸ் - இணையத்தில் இருந்தால் படித்துப் பாருங்கள் அரவிந்த்.

      நீக்கு
  10. அந்த நாலு நாள் தமிழக பயனம் வச்சு ஒரு தொடர் எழுதலாமே ஐய்யா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலு நாள் பயணம் வைத்து ஒரு தொடர் - ஹாஹா.... ஒன்றிரண்டு பதிவுகள் எழுதினேன் அரவிந்த். தொடர் எழுதும் அளவிற்கு அதில் விஷயம் இல்லை.

      நீக்கு
  11. பயணம் செய்த கால்கள் கட்டிப்போடப்பட்டிருக்கின்றன! சூழ்நிலை அப்படி! என்ன செய்வது! எனக்குக் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி அடுத்தவர் பணத்துக்கு எல்லாம் ஆசைப்படக் கூடாது. நான் யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் இருக்கையில் சும்மாவானும் பணத்தைக் கொடுத்தால் அது எப்படி வாங்கிக்க முடியும்! அரசுக்கு முறையாகச் சொல்லி யாரிடம் கொடுக்கணுமோ அவரிடம் கொடுத்துடுவேன். வாங்கிக்கிறவங்களும் ஒழுங்கானவங்களா இருக்கணும்.:( இங்கே அதான் பிரச்னை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூழல் அப்படி - ஆமாம். சூழல் சரியான பிறகு பயணம் செல்லலாம் கீதாம்மா. காத்திருக்கிறேன்.

      பணம் - உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  12. வாசகம், விளம்பரம் அருமை. லடாக் எல்லாம் போகும் சான்ஸ் இல்லை எனவே காணொளி கண்டு ரசித்தேன்.

    கேள்வி பதில்- அவரது பதில் அருமை. அதையே வழி மொழிகிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன்.

      நீக்கு
  13. முதலில் லடாக் ஆஹா! மணாலி வரை சென்ற போது நானும் மகனும் அடுத்து ஸ்பிட்டி, அப்படியே லடாக் அடுத்த ட்ரிப் என்று பேசிக் கொண்டோம். அப்புறம் எல்லாமே தலைகீழ். ஹா ஹா ஹா. இப்போதோ எங்குமே செல்ல முடியாத நிலை. இதோ இங்கிருக்கும் ஹளபேடு கூடச் செல்ல முடியாத நிலை. அதை விடுங்கள் சிட்டி மெஜஸ்டிக் கூடச் செல்ல முடியாத நிலை. எப்போது நிலைமை சீராகி பயணம் செய்ய முடியுமோ தெரியவில்லை. இப்போது லடாக்கில் டென்ஷன். என் தில்லி/குருகிராம் தங்கை லடாக் போய்விட்டு வந்துவிட்டாள் சென்ற வருடம். அவர்கள் வெட்டிங்க் டேக்கு. அப்புறம் வேறு சில அருமையான இடங்களுக்கும் சென்று வந்தாள். பெயர் டக்கென்று நினைவில்லை. அழகான அருவி பாறைகளின் வழி ட்ரெக் செய்து இறங்கிப் பார்க்க வேண்டும். அப்புறம் அழகான குடவரை...

    லடாக் காணொளி வாவ்! ரசித்தேன். நானும் இப்படிப் பல இடங்கள் யு வில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். வேறு என்ன செய்ய இப்போ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணாலி செல்லும்போது எனக்கும் இந்தத் திட்டம் இருந்தது. ஆனால் நாங்கள் சென்றபோது கூட பனிப்பொழிவு இருந்ததால் அனுமதி இல்லை என்று தெரிந்தது. சூழல் சரியாகட்டும். பயணங்கள் செய்து விடலாம்!

      லடாக் காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  14. வாசகம் அருமை. காணொளிகள் மிக அருமை. ஒன்று தாய்மை. ஒன்று இயற்கை அள்ளி தந்த அழகு.
    வெள்ளைபனி மழை பொழிந்து பாதை எங்கும் அழகு.நாங்கள், கேதார்நாத், சார்தம் போன போது இந்த மலைகளிலிருந்து பனி உருகி பாதை எங்கும் பரவி இருப்பதையும், அதை சுத்தம் செய்து பாதையின் இருமருங்கிலும் வைத்து இருப்பதே பெரியபனி மலை போல் இருப்பதை பார்த்தோம்.
    சூழ்நிலை சரியானதும் போய் வாருங்கள் லடாக்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா....

      கேதார்நாத் - சார்தாம் பயணத்திலும் பனிப்பொழிவு காணமுடியும் மா....

      சூழல் சரியானதும் - ஆமாம். சரியானதும் பயணிக்கலாம் என காத்திருக்கிறேன்.

      நீக்கு
  15. விளம்பரம் செம! தாய்மை! மனம் பூரித்தது மனதைத் தொட்டது!

    வாசகம் மிகவும் பிடித்தது.

    அடுத்தவர் பணம் நெவர்! அதை முடிந்தால் உரியவரிடம் ஒப்படைத்தல் அல்லது போலீஸ் ஸ்டேஷனில். இப்படி நிறைய அனுபவங்கள் உண்டு. போலீஸ் ஸ்டேஷனில் கொடுப்பதைக் கூடியவரை இறுதியாகத்தான். முடிந்தவரை கண்டுபிடித்து நேரில் கொடுக்க முயற்சி.

    உதவிக்குக் கிடைத்த பணம் மிக மிக அதிகம் எனவே அதைத் திருப்பிக் கொடுத்தலே நான் செய்வது. நாம் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லையே. இப்படிக் கிடைத்தாலும் மறுத்துவிடுவது. உதவி செய்யறப்ப கிடைக்கும் அது சிறிய அன்பளிபபாகவே இருந்தாலும் கூட மனம் கூசும்.

    அமேசான் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ஜி.

    சுஜாதாட்ஸ் - சரிதானே. என்று நினைக்க வைத்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      அமேசான் புத்தக வெளியீடு - வாழ்த்தியமைக்கு நன்றி.

      சுஜாதாட்ஸ் - உண்மைதானே...

      நீக்கு
  16. இரண்டு காணொளியும் நன்றாக இருந்தது. லடாக் நோக்கி ஒரு சாலைப் பயணம் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  17. மின் நூலுக்கு வாழ்த்துகள்.
    விளம்பரம் மனதைத் தொட்டது!
    லடாக் பக்கம் போக ...
    அமைதி திரும்பி பின் சென்று வாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்நூல் - வாழ்த்தியமைக்கு நன்றி அபயா அருணா ஜி.

      விளம்பரம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      லடாக் - பார்க்கலாம் - சூழல் சரியாகவேண்டும் முதலில்.

      நீக்கு
  18. விளம்பரப் படத்துக்கும் ( நிச்சயமாக ஒரு திரைப்பட விமர்சனம் போல எழுத வேண்டிய அளவிற்கு இயக்குநர் பின்னி பெடல் எடுத்துள்ளார்) லடாக் காட்சிக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் மற்றும் லடாக் காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜோதிஜி.

      விளம்பரம் - ஒரு திரைப்பட விமர்சனம் போல எழுத வேண்டிய அளவு - உண்மை தான். மிகவும் பிடித்த விளம்பரமாக இருந்தது. நன்றி ஜோதிஜி.

      நீக்கு
  19. அன்பு வெங்கட்,
    என்னாளும் இனிய நாளாக இருக்க வாழ்த்துகள்.
    உடல் நலம் ,மன நலம் சிறப்பாக இருக்க வேண்டும்.

    பயணம் செய்ய முடியாத வருத்தம் தெரிகிறது.
    பரவாயில்லை மா. அனைவரும் இந்தத் தொற்றுக்குத் தப்பிப் பிழைக்க வேண்டும் என்பதே நம் குறிக்கோள்.

    அந்த அம்மா பாப்பா விளம்பரம் மனதை நெகிழ
    வைத்து விட்டது.
    எத்தனை அற்புதமாகப் படமாக்கி இருக்கிறார்கள்.
    அதே போல் லடாக் காணொளி
    மிக ஆச்சரியம். எங்கள் மகனின் நண்பனை
    நினைத்துக் கொண்டேன்.
    லடாக் வரை அவனும் பைக்கில் சென்று வந்தான்.
    இப்பொழுது திருமணம் ஆனபிறகு அவனால் அப்படிப்
    பயணிக்க முடியவில்லை:)
    அந்தப் பனிப்பாறைகள் குறுகலான பாதைகள் எல்லாமே
    மிக அபூர்வக் காட்சிகள்.
    இந்த சீன நாகம் மீண்டும் படமெடுக்கிறதே.
    என்ன செய்வது!!

    கோடிப்பணம் எல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது.
    பிறர் பொருள் எப்போதும் நமக்கு வேண்டாம்.
    இருப்பது தங்கினால் போதும்.
    மின்னூலுக்கு மனம் நிறை வாழ்த்துகள் மா.
    இன்னும் வளமாக இருக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் செய்ய முடியாத வருத்தம் - ஹாஹா.... வருத்தம் என்பதை விட கொஞ்சம் கட்டிப் போட்டது போல இருக்கிறது. வேலை அழுத்தத்திலிருந்து கொஞ்சம் விடுபடலாமே என்ற எண்ணமே அதிகம்.

      விளம்பரம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா....

      லடாக் - எனது நண்பர்கள் சிலரும் சென்று வந்தார்கள். எனக்கு இன்னும் வாய்ப்பு/வேளை வரவில்லை. திருமணம் ஆன பிறகு பயணிக்க முடியவில்லை - ஹாஹா.... பலருக்கும் அப்படியே!

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  20. காஃபி வித் கிட்டு 72 இல் வந்த விளம்பரத்தையும், லடாக் பயண அருமையான காணொளியையும் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    தங்களின் ‘திரிவேணி சங்கமம்’ மின் நூலை பதிவிறக்கம் செய்துள்ளேன். படித்து கருத்து சொல்கிறேன். சுஜாதாட்ஸ் ஐ‌ முன்பே தங்கள் பதிவில் படித்திருந்தாலும் திரும்பவும் படித்து சுஜாதாவின் எழுத்தை இரசித்தேன். மொத்தத்தில் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் மற்றும் லடாக் பற்றிய காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே.நடனசபாபதி ஐயா.

      மின்னூல் - தரவிறக்கம் செய்து கொண்டதற்கு நன்றி. படித்த பிறகு உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள் ஐயா.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  21. லடாக் அருமையாக இருக்கிறது. பார்த்து ரசிக்கலாம் நமக்கு செல்வதற்கு வாய்ப்பு இல்லை.
    பணம் உரியவர்களிடம் ஒப்படைக்க முயற்சி செய்வேன் இல்லாது விட்டால் தர்மகாரியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லடாக் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      பணம் உரியவர்களிடம் ஒப்படைக்க முயற்சி செய்வேன் - நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....