புதன், 1 ஜூலை, 2020

கிண்டில் வாசிப்பு – பயணங்கள் – கரந்தை ஜெயக்குமார்

அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளினை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள். 

 

”உலகம் ஒரு புத்தகம்… தினமும் நீங்கள் பயணிக்கவில்லை என்றால், புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்”.


*****


 

தமது பதிவுகள் வழி மிகச் சிறந்த விஷயங்களைச் சொல்லும் நல்லாசிரியர், கணிதத்தை பயில்விப்பவர் என்றாலும் தமிழின் மீது தீராத காதல் கொண்டவர், தஞ்சையின் மைந்தர், கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்கள் சமீபத்தில் தனது நான்கு மின்னூல்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் வசதியை அளித்திருந்தார்.  அமேசான் தளத்தில் வெளியிட்ட அவரது மின்னூல்களை நானும் தரவிறக்கம் செய்து கொண்டேன்.  மொத்தம் நான்கு மின்னூல்கள் – பயணங்கள், உறைபனி உலகில், வெற்றிவேல் முருகன் பேசுகிறேன், போர்க்கள கடிதங்கள் – என்ற நான்கு மின்னூல்களை தரவிறக்கம் செய்து கொண்டேன்.  அதில் முதலில் படித்தது – ஹாஹா… நீங்கள் சரியாகவே யூகித்து இருக்கிறீர்கள் – எனக்குப் பிடித்தது பயணம் தானே! அதனால் “பயணங்கள்” என்ற தலைப்பிட்ட அவரது மின்னூலையே முதலில் படித்தேன்.  இதோ அந்த நூல் பற்றிய தகவல்களோடு இன்றைக்கு உங்களைச் சந்திக்க வந்துவிட்டேன்.  ஐயாவின் தமிழார்வம் பற்றியும், அவரது எழுத்துத் திறமை பற்றியும் நான் சொல்ல வேண்டியதில்லை – தமிழ் தெரியும், தமிழில் எழுதுகிறேன் என்பதாலேயே அடுத்தவர்களை விமர்சனம் செய்யும் தகுதி எனக்கில்லை!  இது ஒரு வாசிப்பனுபவம் மட்டுமே – விமர்சனம் அல்ல!

 

1729 – நம்மைப் பொறுத்த வரை இது சாதாரண எண் மட்டுமே!  ஆனால் கணித மேதை இராமானுஜன் அவர்களுக்கு இதுவும் ஒரு சிறப்பான எண்ணே!  - it is the smallest number that could be expressed by the sum of two cubes in two different ways – அதாவது 13 + 123 = 93 + 103 = 1729. இந்த எண்ணுக்கே ‘இராமானுஜன் எண்” என்ற பெயரைத் தரச் செய்தவர் கணிதமேதை இராமானுஜன்.  அவர் கும்பகோணத்தில் வசித்த இல்லத்திற்கு தான் நம்மை முதலில் அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.

 

கணித மேதை இராமானுஜன் இல்லம்:  “வீட்டின் முன்புறம் இடது புறத்தில் சிறிய திண்ணை. வலது புறம் வீட்டினுள்ளே செல்வதற்கான வழி வீட்டினுள் காலடி எடுத்து வைத்தேன். உடலிலும், உள்ளத்திலும் இனம் புரியாத ஓர் உணர்வு மெல்ல, மெல்லப் பரவ, வீட்டினுள் நுழைந்தேன்”. இந்த வரிகளைப் படிக்கும்போதே நாமும் அங்கே பாதம் பதித்ததைப் போல உணர முடியும்.  “தனது கணிதத் திறமையால், உலக கணித அறிஞர்கள் அனைவரையும் திக்குமுக்காட வைத்த இராமானுஜன், தான் மட்டும் ஏழ்மைச் சூழலில் சிக்கி, கரையேற முடியாமல் தத்தளித்தது தான் வாழ்வின் யதார்த்தம்” என்று நூலாசிரியர் சொல்வது சாலப் பொருத்தம். 

 

யானையை விழுங்கும் பாம்பு: தஞ்சை பெரிய கோயில். ஆஹா கட்டிடக் கலைக்குப் பெயர் போன ஒரு இடமாயிற்றே. ஆயிரம் வருடத்தினையும் தாண்டி இன்றைக்கும் ஒரு நினைவுச்சின்னமாக நம்மிடையே ஒரு அழியாத சின்னமாக இருக்கிறதே.  அந்த கோயில் பற்றிய சில தகவல்களை இரண்டாம் தலைப்பாகச் சொல்லுகிறார் நூலாசிரியர். தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் துவாரபாலகர்கள் தமது காலடியில் ஒரு பாம்பினை வலது காலால் மிதித்துக் கொண்டிருப்பது போல இருக்கும். அந்தப் பாம்பானது ஒரு யானையை விழுங்கிக் கொண்டிருக்கும். இந்த அற்புதச் சிலையைப் பற்றிய விளக்கத்தினை இந்தக் கட்டுரையில் தந்திருக்கிறார் நூலாசிரியர்.  படிக்கப் படிக்க அப்படி ஒரு வியப்பு நமக்குள். இக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன் என்றாலும் இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்ததில்லை என்பதற்காக வெட்கப் படுகிறேன். இந்தக் கட்டுரை மூலம் பெரிய கோயில் சொல்லவரும் தத்துவத்தை நமக்கும் உணர்த்துகிறார் நூலாசிரியர்.

 

கொள்ளிடத்தின் நடுவில்: கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமைந்திருக்கும் ஒரு சிறு நிலப் பரப்பில், ஒரு திட்டில் அமைந்திருக்கும் அவரது குலதெய்வம் கோயிலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் இந்தக் கட்டுரை மூலம். மரங்களால் சூழப்பட்ட வனப்பகுதி போல இருக்கும் ஒரு திட்டில் அமைந்திருக்கும் கோயிலுக்கு நம்மை அழைத்துச் செல்வது ரொம்பவே சிறப்பான ஒரு பயணம்.  கோயிலில் குடிகொண்டிருக்கும் தெய்வம், அருள்மிகு அரிய தங்கம், கூத்தாயி உடனுறை அப்பாலிக் கூத்தர் என்பதாகும் என்ற தகவலையும் நமக்குத் தருகிறார். இந்தக் கோயிலுக்கு மணல்வெளி வழியே நடந்தே செல்ல வேண்டியிருக்கும்.  ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் இந்தத் தீவு/திட்டுக்குச் செல்ல முடியாது. அங்கே இருக்கும் மக்களும் வெளியே வர இயலாத சூழல் என்று படிக்கும்போதே – இன்றைக்கும் இப்படியான ஊர்கள் இருப்பதை நினைத்து வியப்பு தான் மிஞ்சுகிறது.

 

கங்கை கொண்ட சோழபுரம்:  நூலாசிரியர் அடுத்ததாக நம்மை அழைத்துச் செல்வது கங்கை கொண்ட சோழபுரம்… ஆஹா… எனக்கு ஒரு ஆசை உண்டு. என்றைக்காவது ஒரு நாள் இங்கே சென்று வர வேண்டும் என்ற ஆசை தான் அது – ஆசைக்கு அளவேது?  எனக்கு வாய்ப்பு கிடைக்கும் முன்னர் நூலாசிரியரின் கட்டுரை வழி கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு உலா வந்தேன். ஆகா அற்புத அனுபவம் அது! படிக்கும்போதே மிகவும் பிடித்திருந்ததே, நேரில் கண்டால் எப்படி இருக்கும் என்று மனதில் தோன்றாமல் இல்லை. இந்தியா மட்டுமல்லாது நம்மை இந்தப் “பயணங்கள்” நூல் வழி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்றிருக்கும் ஆசிரியர் கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய பகுதியின் முடிவில் மலேசியா பற்றியும் சில சிறப்பான தகவல்களைத் தந்திருக்கிறார்.

 

யானையின் பிரசவம் சிற்பமாக இருப்பது – அதுவும் நம் தமிழகத்திலேயே இருப்பதை நீங்கள் அறிவீர்களா?  ஆமாம் நம் தமிழகத்தின் திருபுவனம் பட்டுக்குப் பெயர் பெற்றது. அங்கே இருக்கும் பெரிய கோவிலில் யானைக்கு பிரசவம் ஆவதை சிற்பிகள் சிலையாக வடித்திருப்பதைப் பார்த்து, அதனை வர்ணித்து இருப்பது மிகவும் சிறப்பான ஒன்று.  முடிந்தால் அந்தக் கோவிலுக்குச் சென்று சிற்பங்களை ரசித்து வரலாம்!

 

வெட்டுடைய காளி பதிவு வழி வேலு நாச்சியாரின் கதையையும், ராணியைக் காப்பதற்காக தனது உயிரையும் துச்சமென மதித்து வெட்டுண்டு வீழ்ந்த உடையாளின் கதையையும் சொல்கிறார் நூலாசிரியர்.  கூடவே அடுத்தவர் வாழ்வை அழிக்க வேண்டும் என வேண்டுதலோடு நாணயங்களை அங்கே வெட்டி வீசும் பழக்கத்தினையும்  சாடுகிறார்.

 

பிச்சாவரம், டாப் ஸ்டேஷன் (மூணாறு), காளையார் கோவில், சிவகங்கை இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், வேலுநாச்சியார் அவர்களுடன் போரில் பங்கேற்ற வீரத்தாய் குயிலி – அவர் தன் உயிரையும் மதிக்காது, ஆங்கிலேயர்களின் வெடிமருந்துக் கிடங்கில் புகுந்து தன்னையும் மாய்த்துக் கொண்டு கிடங்கையும் அழித்த கதை – என ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான இடங்களுக்கு நம்மை நூல் வழி அழைத்துச் சென்றிருக்கிறார் நூலாசிரியர்.  இப்படி நூலாசிரியர் பயணம் செய்த ஒவ்வொரு இடமாக, மின்னூல் வழி நம்மை அழைத்துச் செல்லும்போது  நாமும் அங்கே இருப்பது போன்ற உணர்வு.  வேறு எங்கே எல்லாம் அழைத்துச் செல்வார் என்பதை எல்லாமே இங்கேயே சொல்லி விட்டால் எப்படி? மின்னூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாமே நண்பர்களே…


இந்த மின்னூல் அமேசான் தளத்தில் கிண்டில் வெளியீடாக வெளியிட்டு இருக்கிறார். மின்னூலின் விலை ரூபாய் 100/- மட்டும்.  Amazon Kindle Unlimited கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களது மாதாந்திரக் கட்டணத்திலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய சுட்டி கீழே....


பயணங்கள்

 

பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

36 கருத்துகள்:

  1. அருமையான வாசகம்.  நல்லதொரு பகிர்வு.   புதுப்புது எழுத்துருவில் கலக்குகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      புதுப்புது எழுத்துரு - ஒன்றிரண்டை மட்டும் தரவிறக்கினேன். ஒரு மாறுதலுக்காக!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அன்பின் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுடன் பழகும் வாய்ப்பினைப் பெற்ற எனக்கு அவரது கை வண்ணங்கள் இங்கே எடுத்தாளப் பட்டிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  3. நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். படித்துவிடுகிறேன். இன்றைய உங்கள் பதிவின் எழுத்துரு நன்றாக இருக்கிறது. அது என்ன font?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படித்து விடுங்கள் கௌதமன் ஜி.

      பதிவின் எழுத்துரு - எழிலான இந்த எழுத்துருவின் பெயர் “எழில்”....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    நல்ல வாசகம். அருமையான நூல் விமர்சனம். நூலை முழுதுமாக படிக்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது. கணித மேதையின் வீட்டை தரிசித்து கொண்டேன். உங்களின் புது எழுத்துருக்கள் அழகாக உள்ளது. இந்த நூலை அருமையாக எழுதிய திரு, கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும், அதை சிறப்பாக அறிமுகப்படுத்திய உங்களுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. மின்னூல் வழி சொன்ன விஷயங்கள் சிறப்பாக இருக்கின்றன. முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.

      எழுத்துரு - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருமையான அறிமுகம் ....நானும் தரவிறக்கி வைத்து உள்ளேன் ....வாசிக்க வேண்டும்


    எழுத்துரு வித்தியாசமாக அழகாக இருக்கிறது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் தரவிறக்கம் செய்து கொண்டது அறிந்து மகிழ்ச்சி. முடிந்த போது வாசியுங்கள்.

      எழுத்துரு - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  6. மின்னூல் பெயரை வாசித்தவுடன் உங்களின் ஞாபகம் வந்தது...

    ரசனையான விமர்சனம்... கலக்கலான எழுத்துரு...

    ஒவ்வொரு நாளும் மின்னூல் வாசிப்பு நேரம் என்று ஒதுக்க வேண்டும் போல...!

    கரந்தை ஐயாவின் மின்னூல் உட்பட பலரின் மின்னூல்களை படித்தாலும், ஒரே ஒரு குறை உண்டு...

    ஸ்டார் ரேட்டிங் செய்வது ஒருபுறம் இருந்தாலும், விமர்சனப் பகுதியில் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும்... அமேசான், தமிழில் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் நாள் விரைவில் வரும் என்று எதிர்ப் பார்க்கிறேன்... அவை மேலும் மின்னூல் வெளியிடுவோர்க்கு உற்சாகம் தரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /மின்னூல் பெயரை வாசித்தவுடன் உங்களின் ஞாபகம் வந்தது...// ஆஹா... மகிழ்ச்சி.

      வாசிப்பனுபவம் பற்றிய உங்கள் கருத்திற்கு நன்றி. எழுத்துரு - நன்றி!

      ஒவ்வொரு நாளும் மின்னூல் வாசிப்பு நேரம் - ஒதுக்குவது நல்லதே.

      ஒரே ஒரு குறை - தமிழிலும் விமர்சனம் - வந்தால் நல்லதே. ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்பதால் பலரும் எழுதுவதில்லை என்றே தோன்றுகிறது. தரவிறக்கம் செய்து கொண்டாலும் பல பேர் அதைப் படித்து விமர்சனம் எழுதுவதில்லை.

      நீக்கு
  7. கரந்தை ஜெயக்குமார் சார் திறமையாளர். எதைப் பகிர்ந்துகொண்டால் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்குமோ அவற்றைத்தான் தன் தளத்தில் பகிர்வார்.

    இருமுறை கரந்தை பள்ளி வழியாக பயணித்திருக்கிறேன். அவழைச் சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை.

    நூல் அறிமுகம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எதைப் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்குமோ// உண்மை.

      கரந்தை பள்ளி வழியே நானும் ஒரு முறை பயணித்திருக்கிறேன். ஆனால் தஞ்சை பெரியகோவிலில் அவரையும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவினையும் ஒரு முறை சந்தித்தேன்.

      நூல் அறிமுகம் - நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. அழகாக விமர்சித்து இருக்கின்றீர்கள் ஜி.
    அமேசானுக்குள் இப்பொழுதுதான் நுழைய பழகி இருங்கிறேன் விரைவில் அனைவருடையதும் படிப்பேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      அமேசானுக்குள் நுழைய பழகி வருவது நல்லதே. தொடரட்டும் உங்கள் மின்னூல்கள்.

      நீக்கு
  9. கிண்டில் ஆப் இறக்கி வச்சிருக்கிறதோடு சரி. இன்னும் அந்த பக்கம் போகல. நம்மாளுங்க புத்தகம்லாம் இருக்குன்னு போகனும்ன்னு நினைச்சாலும் போகமுடியல. ஒருவேளை பிள்ளைகள்லாம் கிளம்பினப்பின்னர்தான் அந்த பக்கம் போவேனோ என்னமோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது கிண்டில் வழி வாசிக்கத் துவங்குங்கள் ராஜி. நிறைய மின்னூல்கள் அங்கே உண்டு.

      நீக்கு
  10. நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் முயற்சி போற்றத்தக்கதாகும். அவரைப் பற்றி உங்களின் பார்வையில் பகிர்ந்த விதம் மிகவும் அருமை. அவருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போற்றத்தக்க முயற்சி தான் முனைவர் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. வாச்கம் நன்றாக இருக்கிறது.

    நல்ல நூல் அறிமுகம் சிறப்பாக இருக்கிறது ஜி. வாழ்த்துகள் கரந்தை சகோவிற்கு.

    எழுத்துரு நன்றாக இருக்கிறது. நானும் சென்ற பதிவில் இடையில் பயன்படுத்தினேன் இப்ப முழு பதிவும் ஒரு எழுத்துருவில். ஏற்கனவே எடுத்து வைத்திருந்தேன். இன்னும் சில எடுத்து வைத்திருக்கிறேன் அதையும் பயன்படுத்துஅ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நூல் அறிமுகம் - நன்றி.

      எழுத்துரு - சில எழுத்துருக்கள் நன்றாகவே இருக்கின்றன. நானும் ஒன்றிரண்டு தரவிறக்கம் செய்தேன். முடிந்தால் பயன்படுத்தலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  12. ஆகா, எனது மின்னூல் அறிமுகத்தை தங்களின் வலையில் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
    மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி ஐய்யா.
      கணிதம் சொல்லிக் கொடுப்பதோடு நில்லாமல் அதிலேயே திளைத்தவரின் வீட்டையும் அறிமுகம் செய்வித்தது சிறப்பு.
      சிவன், முயலகனை காலுக்கடியில் அடக்கிவைப்பது போல இங்கும் துவாரபாலகர்கள் பாம்பை அடக்கிவைத்திருக்கிறார்களா?
      இதன் பின்னுள்ள தத்துவ உண்மையை ஜெயமோஹன் அவர்களின் "தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்" நூலிலும் வாசித்து வியந்திருக்கிறேன்.
      தங்கள் நூலிலும் அது குறித்து விரைவில் வாசிக்கிறேன்.
      தங்களின் நூல்களை வாங்கிவிட்டேன், விரைவில் படிக்கிறேன்.
      நல்ல நூலை அறிமுகம் செய்த வெங்கட் ஐய்யாவிர்க்கு நன்றிகள்.

      நீக்கு
    2. உங்களது மின்னூலை எனது தளத்திலும் அறிமுகம் செய்ய முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
    3. அவரது நூல்களை தரவிறக்கம் செய்திருப்பது அறிந்து மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. வாசகம் அருமை.
    சகோ கரந்தை ஜெயக்குமார் மின்னூல் விமர்சனம் அருமை.
    புதிய எழுத்துரு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      விமர்சனம் - வாசிப்பனுபவம் அருமை என்று நீங்கள் சொன்னதற்கு நன்றி.

      புதிய எழுத்துரு - நன்றிம்மா...

      நீக்கு
  14. கரந்தை ஜெயக்குமார் பயணங்கள் அற்புதம். நாம் நேரில் சென்றால்கூட இத்தகைய விஷயங்களை கவனித்து இருப்போமா என்பது சந்தேகம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் ஐயாவின் நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. தெளிவான விமர்சனம், நூலின் ஒரு நூலிழையை கூட விடாமல் வாசித்தீர்கள் என்பது உங்களின் விமர்சனத்தில் விளங்குகின்றது. நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோயில்பிள்ளை.

      நீக்கு
  16. வாசித்தது மட்டுமில்லாமல் அதன் சிறப்பை சிறப்பாகப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கௌசி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. புத்தகத்தை படிக்கும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது உங்கள் விமர்சனம். உங்கள் புத்தகங்களையும் தரவிரக்கி வைத்திருக்கிறேன். இனிதான் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது மின்னூல்களைப் படித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள் ஞானசேகரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....