புதன், 15 ஜூலை, 2020

வாசிப்பனுபவம் – மனம் தரும் பணம் – இரா. அரவிந்த்


அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளினை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள். 


வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.  


*****

இந்த வாரத்தின் வாசிப்பனுபவமாக நண்பர் இரா. அரவிந்த் அவர்களின் அனுபவம் – நெப்போலியன் ஹில் எனும் ஆங்கில எழுத்தாளர் எழுதிய “THINK AND GROW RICH” என்ற புத்தகத்தினைச் சுருக்கி, ஒரு செயல்முறைக் கையேடாக, தமிழில் திரு உதயகுமார் என்பவரால் மொழியக்கம் செய்யப்பட்ட ஒரு நூலைப் பற்றிய அனுபவத்துடன் வருகிறார். நண்பர் அரவிந்த்.  சுய முன்னேற்றத்திற்கென்று பல நூல்கள் உண்டு. அந்த வரிசையில் இந்த நூலும் ஒன்று.  அமேசான் தளத்தில் மின்னூலாகவும், அச்சுப் புத்தகமாகவும் கிடைக்கிறது. மின்னூல் விலை ரூபாய் 105/-. அச்சுப் பிரதி எனில் ரூபாய் 200/-. புத்தக வாசிப்பனுபவத்தினை நண்பர் இரா. அரவிந்த் அவர்களின் வார்த்தைகளில் படித்து இரசியுங்கள் – வெங்கட் நாகராஜ், புது தில்லி.    


*****


மனம் தரும் பணம்: நம் மனத்தைப் பின்தொடரும் பணத்தின் அதிசய ரகசியம்


நம்முடைய அனைத்து தேவைகளையும் நம்மால் தன்னிச்சையாகப் பூர்த்தி செய்ய முடியாத இவ்வுலகில் அவற்றை அடைய இன்றியமையாதது பணம்.


சிறு வயதிலிருந்தே பணக்காரர்களையும், அவர்களின் சொத்துக்களையும் கண்டு மலைக்கும் நாம், அதை ஈட்டும் ரகசியம் அறியாமல் எல்லாம் தவறான வழிகளில் பலரை காக்கா பிடித்து ஈட்டப்பட்டவையே என்று பொதுவாக நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொள்கிறோம்.


இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து பல அற்புதப் புத்தகங்களை எழுதிய திரு நெப்போலியன் ஹில் அவர்களின் பிரபல "THINK AND GROW RICH" நூல், பணம் ஈட்டும் அறிய ரகசியத்தை எளிய முறையில் தந்துள்ளது.


இருப்பினும், நூலைப் படிக்க பொறுமையோ நேரமோ இல்லாதவர்களுக்கும் அக்கருத்துகள் எளிதில் சென்றடையும் நோக்குடன், திரு உதயகுமார் அவர்களால் கண்ணதாசன் பதிப்பகம் வாயிலாக தமிழில் சுருக்கமாக ஒரு செயல்முறைக் கையேடாக   வெளியிடப்பட்டதே "மனம் தரும் பணம்".


நூலின் பெயருக்கேற்ப, ஆழ்மனதின் சக்தி குறித்தும், பிரபஞ்சத்திற்குக் கட்டளையிடும் அதன் ஆற்றல் குறித்தும் எண்ணற்ற சொற்பொழிவுகளைக் கேட்ட பலர் "அவை கேட்கத்தான் இனிதாக இருக்கும், பின்தொடர்வது கடினம்" என அலுத்துக்கொள்வதும் உண்டு.


செயல்முறைக் கையேடு என்ற வடிவம், இதற்கு மாறாக எளிய கேள்விகளுடன் பதில் நிரப்ப இடம் வழங்கி, வாசகர்களின் ஐயங்களுக்கு அவர்களே விடை கண்டு தங்கள் இலக்குகளையும், பலங்களையும், பலவீனங்களையும் உணர்வதோடு, நூலின் கருத்துக்களைச் சுலபமாக புரியவும் வைக்கிறது.


ஒவ்வொருவர் உள்ளும் புதைந்து கிடக்கும் கொழுந்து விட்டெறியும் ஆசைகளே பணம் ஈட்டுவதற்கான திறவுகோல். அவ்வாசைகளுள் தலையாய ஆசையை அடையாளம் காணல், அதை அடைவதற்கான தடைக்கற்களை வெற்றிப் படிகளாக உணர்தல், அதை அடையும் செயல் திட்டத்தை வகுத்தல், நம் குறைகளைப் பட்டியலிட்டு களைதல், நம் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணித்து பாதகமானவற்றைக் களைதல், எதிர்மறை மனிதர்களிடமிருந்து விலகுதல், சரியான நேர்மறை உணர்வுகளோடு நாம் வழிபடும் ஆளுமையைத் தொடர்ந்து இலக்கை அடைதல் என இக்கையேடு நம் வாழ்வு முழுமைக்கும் ஒரு ஒளி விளக்காய்த் திகழும் தகைமை கொண்டது.


குழந்தைகளுக்கு அவர்கள் சிந்தையை ஒழுங்குபடுத்தி வழி நடத்தும் வல்லமையை மட்டும் தருவதல்ல இக்கையேடு.


இலக்கை நோக்கிய பாதையில் தடம் பிறழ்ந்து தடுமாறும் அனைத்து வயதினரும், மீண்டும் தாங்கள் செய்த தவற்றை உணர்ந்து, உற்சாகத்தோடு பாதியில் கைவிட்ட முயற்சிகளை மீண்டும் தொடரும் வழியையும் வழங்கும் இக்கையேடு, கொரோனாவால் பொருளியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டோருக்கும் புத்துயிர் அளிக்கும் ஒரு சஞ்சீவி மூலிகை எனலாம்.


தனி நபராகச் செயல்படாமல் ஒத்த சிந்தையுள்ள நண்பர்களோடு இணைந்து பல்வகை அனுபவங்களின் தொகுதியான ஒரு Master Mind-ஐ உருவாக்கிப் பயணிக்க ஊக்குவிக்கும் இக்கையேட்டைப் பெறக்  கீழ்க் காணும் சுட்டியில் காணலாம்.  நிறைவான செல்வத்தோடும் குறைவில்லா சுற்றத்தோடும் வாழ்வாங்கு வாழ்வோம்.


மனம் தரும் பணம்


நட்புடன்,

இரா. அரவிந்த்


*****


பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்கள்.   மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

25 கருத்துகள்:

  1. நல்லதொரு விமர்சனப் பகிர்வு.  பாராட்டுகள் அரவிந்த்.

    பதிலளிநீக்கு
  2. நூலைக் குறித்த குறிப்புகள் ஆவலைத் தூண்டுகிறது நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நன்றி ஐய்யா.
      தங்களின் விக்கிப்பீடியா வழிகாட்டி நூலை வாசித்தேன். மிகவும் உபையோகமாக உள்ளது.

      நீக்கு
  4. இன்றைய சூழலுக்கு பலருக்கும் தேவைப்படும் நூல் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. நெப்போலியன் ஹில் எழுதிய “THINK AND GROW RICH” என்ற புத்தகத்தை படித்து இருக்கிறேன். மிகவும் அருமையாக தமிழில் மொழி பெயர்திருக்கும் உதயகுமாருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  6. //எதிர்மறை மனிதர்களிடமிருந்து விலகுதல், சரியான நேர்மறை உணர்வுகளோடு நாம் வழிபடும் ஆளுமையைத் தொடர்ந்து இலக்கை அடைதல் என இக்கையேடு நம் வாழ்வு முழுமைக்கும் ஒரு ஒளி விளக்காய்த் திகழும் தகைமை கொண்டது.//

    படிக்க தூண்டும் அருமையான விமர்சனம்.

    வாழ்த்துக்கள் மொழி பெயர்திருக்கும் உதயகுமார் அவர்களுக்கு. இங்கு பகிர்ந்த அரவிந்த் அவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. Vasakam arumai. One should not miss to read the book. We read some of the books by Napoleon Hill.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  8. அருமையான நூல் அறிமுகம் ஐயா
    அவசியம் வாங்கி வாசிக்கின்றேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. நல்ல அறிமுகம் அண்ணா...
    எழுதிய நண்பருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அன்பு வெங்கட் . அருமையான வாசகத்துக்கு நன்றி.

    நண்பர் அரவிந்தனின் நூல் விமரிசனம்
    அதைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
    எல்லோருக்கும் பயன்படும்.
    அதுவும் ஆழ் மன சிந்தனையைத் தூண்டி விட்டு
    நம் வாழ்க்கையை மேம்படுத்துவது மிகச் சிறப்பு.
    அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான நூலறிமுகம் அரவிந் சார். இடுகையிட்ட வெங்கட் சாருக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. நல்லதோர் புத்தக அறிமுகம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....