திங்கள், 20 ஜூலை, 2020

கல்யாணக் கனவுகள் – கதை மாந்தர்கள்

அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய காலையை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


வாழ்க்கையே இங்கே நிரந்தரமில்லாத போது, நமக்கு வரும் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும்?  இதுவும் கடந்து போகும்! நம்பிக்கை கொள்வோம்.


*****

இன்றைய பதிவு என் நண்பர் ஒருவர் எனக்குச் சொன்ன கதை!  இனி அவர் வார்த்தைகளில் கதைமாந்தரைப் பற்றிக் கேட்கலாம் வாருங்கள்!


எனக்கும் அவருக்கும் பதினைந்து அல்லது இருபது வயது வித்தியாசம் இருக்கலாம்.  என்னை “Bபேடா(t)!” அதாவது மகனே என்று தான் அழைப்பார்!  ஒரு நாளைக்கு எத்தனை முறை என்னை மகனே என அழைப்பார் என கணக்கே இல்லை!  அவருடனான எனது பரிச்சயம், பழக்கம் மிகச் சில வருடங்களே என்றாலும், என்னை முதல் முதலில் பார்த்தபோதே என்னை அவர் அழைத்தது மகனே என்று தான்.  ஏனோ என்னை அவர் மகனாகவே நினைத்திருந்தார்.  அவரைத் தெரிந்தவர்களுக்கு, அவரை அவ்வளவாகப் பிடிப்பதில்லை! அவரைப் பற்றி ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மூத்த அதிகாரி என்றாலும் கூட அவர் சொல்லும் வேலைகளை எப்படியாவது தட்டிக் கழிக்கத்தான் முயற்சி செய்வார்களே அன்றி செய்வதில்லை என்பதால் எப்போதுமே கோபத்துடன் அவர்களை  கடிந்து கொள்வதால் அப்படி பிடிக்காமல் போயிருக்கலாம்! 


அதே பெண்மணி, முதல் நாளிலிருந்தே என்னை மகனே என அழைப்பதைக் கண்ட பல ஆண்களுக்குக் கொஞ்சம் பொறாமை கூட வரும்.  அவர் இல்லாதபோது அவரைப் பற்றி என்னிடத்தில் இல்லாததையும் பொல்லாததையும் கூறி திசை திருப்ப முயற்சி செய்வார்கள். பொதுவாக ஒரு பெண்மணியைப் பிடிக்காமல் போனால் அவரைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவது தானே பெரும்பாலான மனிதர்களின் வேலை – அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், தனக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி அவதூறு சொல்வதில் பலத்த போட்டியிருப்பது வழக்கம் தானே. ”எதுக்கும் அந்தப் பெண்மணியிடம் ஜாக்கிரதையாகவே இரு! அவள் குடும்பம் பற்றி உனக்கு எதுவும் தெரியாது! நீயோ இப்போது தான் இங்கே வந்து அவள் பிரிவில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாய்! உன்னுடைய நல்லதற்காகவே நாங்கள் இதைச் சொல்கிறோம்!” என்று ஒருவர் பின் ஒருவராக வந்து அறிவுரைகளை அள்ளி வீசுவார்கள்.  இருப்பதிலேயே மிகச் சுலபமான வேலை அடுத்தவர்களுக்கு அறிவுரை வழங்குவது தான் என எனக்குத் தோன்றுவதுண்டு.


இப்படி பலரும் தனக்கு எதிராகவே பேசுவது அந்தப் பெண்மணிக்குத் தெரியாமல் போய்விடுமா என்ன? எத்தனை நாளைக்கு தான் மூடி மறைத்தே பேச முடியும்? ஒரு நாள் அந்தப் பெண்மணி என்னை அழைத்து “மகனே உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்! நான் எப்பொழுதும் காலை ஒன்பது மணிக்கே வந்து விடுவேன். மற்றவர்கள் பெரும்பாலும் பத்து மணிக்கு தானே வருகிறார்கள். அதனால் நாளைக்கு நீயும் ஒன்பது மணிக்கே வந்து விடு!” என்று சொல்லி இருந்தார்.  கூடவே வேறு யாரிடமும் இதைப் பற்றி பிரஸ்தாபிக்க வேண்டாம் என்றும் சொல்லி அனுப்பினார். அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கே அலுவலகம் வர, அந்தப் பெண்மணியும் வந்து காத்திருந்தார்!  ”வா மகனே! நான் உன்னிடம் சில விஷயங்களைப் பேச வேண்டும் என்று தான் உன்னை இன்றைக்கு சீக்கிரமாக அழைத்தேன்.  நீ இங்கே வந்த பிறகு என்னைப் பற்றி இங்கே உள்ளவர்கள் என்னைப் பற்றி பலதும் உன்னிடம் சொல்லி இருக்கக் கூடும்! அதை நான் உன்னிடம் கேட்கப் போவதில்லை. ஆனாலும், என்னைப் பற்றி, என் குடும்பம் பற்றி உன்னிடம் சொல்ல வேண்டும் என, எனக்குத் தோன்றியது! அதனால் தான் இப்படி அழைத்தேன்” என பலமான பீடிகை போட, அமைதியாக அவர் சொல்லப் போவதைக் கேட்கக் காத்திருந்தேன்.


”எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பேர் – நான்கு சகோதரிகள் ஒரே ஒரு சகோதரன்.  அம்மா கடைசி பிள்ளைப் பேற்றில் உயிரிழக்க, அப்பா மறுமணம் செய்து கொள்ளாமல் எங்கள் அனைவரையும் கண்ணும் கருத்துமாக வளர்த்தார்.  இருப்பதிலேயே நான் தான் மூத்த மகள். அம்மா இறக்கும்போது எனக்கு பதினைந்து வயது!  அதனால் வீட்டின் பொறுப்புகள் எனது தலையில் தான்.  அப்பாவும் அரசுப் பணியிலிருந்தவர் தான். பணம் ஒரு பிரச்சனையாக இல்லை. தில்லியின் பிரபல பகுதி ஒன்றில் எங்களுக்கு மூன்று மாடி வீடு இருந்தது.  நாங்கள் சிறுமிகளாக இருந்தவரை வீட்டில் இரண்டு மாடிகளை வாடகைக்கு விட்டு இருந்தார் அப்பா! பணம் எப்போதுமே இருந்து கொண்டிருந்தது என்றாலும் வீட்டில் அம்மா இல்லாதது ஒரு பெரும் குறை தான் – அதுவும் நான்கு பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அம்மாவின் துணை இல்லாமல் இருப்பது கொடுமை! பெண்மை குறித்த பல விஷயங்களை நானாகவே தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது எனக்கு.


சகோதரிகளுக்காவது தாய் போன்று நான் இருந்ததால் எனக்குத் தெரிந்ததை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும், என்னைப் பொறுத்த வரை தாயில்லாமல் வளர்ந்தது ஒரு பெரிய குறை! எல்லோருக்கும் அம்மாவாக நான் இருந்ததால் அவர்களை கரையேற்றும் பாரம் எனக்கு இருந்தது.  எனக்கும் கல்யாணக் கனவுகள் இருந்தது. எனக்கென்று ஒருவன் பிறந்திருக்காமலா இருப்பான்? என்று நினைத்தாலும், எனக்கு வருபவன் என் சகோதரிகளையும் ஆதரிக்க வேண்டும், அவர்களுக்கும் நாங்கள் சேர்ந்து திருமணம் செய்து வைக்கவேண்டும் என நினைத்துக் கொள்வேன்.  அப்படி ஒருவனுமே வரவில்லை!  அனைவருமே எங்களிடமிருந்த சொத்துக்களை பங்குபிரித்துக் கொண்டு போகத் தயாராக இருந்த அளவு பொறுப்பினை ஏற்கத் தயாராக இல்லை!  திருமண வயது வந்து சகோதரிகளை பார்க்க மாப்பிள்ளைகள் வந்தாலும் அவர்களது எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்யவே இயலவில்லை.  எங்கள் பிரிவில் பெண்ணுக்குத் தரவேண்டிய வரதட்சிணை கொஞ்சம் அதிகமே! நான்கு பேருக்கும் இப்படி அள்ளிக் கொடுத்து திருமணம் செய்து வைக்க அப்பாவால் முடியவில்லை.


எங்களுக்கும் ஒரு சில வரன்களுக்குப் பிறகு கல்யாணம் என்கிற விஷயத்தின் மீதே வெறுப்பு வந்து விட்டது. சகோதரன் மட்டும் காதல் மணம் புரிந்தான். ஆனாலும், அவனது மனைவி எங்களுடன் சேர்ந்து இருக்கத் தயாராக இல்லை. சகோதரன் மணம் புரிந்து ஒன்றிரண்டு வருடங்கள் எங்கள் அனைவருடைய வாழ்க்கையுமே நரகமாக இருந்தது. ஒரு நிலையில் என் சகோதரனை விட்டு விட்டு தன்னுடைய வீட்டிற்கே திரும்பிச் சென்று விட்டாள் காதலித்து திருமணம் புரிந்து கொண்ட சகோதரனின் மனைவி. அப்பாவும் எங்களில் எவருக்குமே திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற சோகத்திலேயே மறைந்து விட்டார்.  இப்போது மூன்று மாடி வீட்டில், நாங்கள் நான்கு சகோதரிகள் மற்றும் சகோதரன் என அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். அனைவரும் நன்கு சம்பாதிக்கிறோம், வேண்டியதை வேண்டியபோது சாப்பிடுகிறோம். பூஜைகள், கோவில், குளம் என வாழ்க்கை நடக்கிறது. 


திருமணம் என்ற ஒரு சுகம் எங்கள் வாழ்க்கையில் இல்லை என்பதைத் தவிர வேறு குறைகளில்லை.  என்றைக்காவது கல்யாணக் கனவுகள் அனைத்துமே கனவுகளாகவே போய்விட்டதே என்ற வருத்தம் வராமல் இல்லை! என்றாலும் விதி விட்ட வழி இது எனும்போது என்ன செய்ய முடியும்!  ஏதோ என்னுடைய வாழ்க்கை பற்றிய சில விஷயங்களை உன்னிடம் சொல்லத் தோன்றியது! என் சோகக் கதையை உன்னிடம் சொல்லி, உன்னையும் வருத்தியிருந்தால் மன்னித்து விடு!  இப்போதைக்கு எனக்குத் தேவை நிம்மதி!  இங்கே இருப்பவர்கள் எவருமே என்னை, என் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்லை. உன்னைப் பார்த்த நாளிலேயே என் மகன் போல உன்னை நினைத்துக் கொண்டதால் உன்னிடம் இந்த விஷயங்களைச் சொல்லி விட்டேன். இப்போது கொஞ்சம் மனதில் பாரம் குறைந்திருக்கிறது. அதற்காக நன்றி! கண்களில் கண்ணீருடன், “நான் கொஞ்சம் வாஷ்ரூம் வரை சென்று வருகிறேன்!” நீயும் வேலையைக் கவனி! மற்றவர்கள் வருகின்ற நேரமாகி விட்டது! நாம் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருந்தால் அதைப் பற்றியும் தவறாகத் திரித்துப் பேசக் கூடும்! என்னைப் பற்றி எனக்குக் கவலையில்லை! உன்னைப் பற்றிய அவதூறுகளும் வரக்கூடும்!” என்று சொல்லி அவர் செல்ல, நானும் என் இருக்கை நோக்கிச் சென்றேன்.


அடுத்தவரை பற்றி என்னவேண்டுமானாலும் சொல்லலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள் இந்த மனிதர்கள்.  தனக்குப் பிடிக்கவில்லை எனில் எதையும், எப்படியும் கதை திரிக்கலாம் என இருப்பவர்களிடம் பேசி என்ன பலன்! என்று எண்ணியபடி அன்றைய நாளைக் கழித்தேன்!  எனக்குக் கிடைத்த அனுபவத்தினை உன்னிடமும் சொல்லி விட்டேன்! இதை நீயும் ஒரு அனுபவமாகத் தெரிந்து கொள்! நீ தான்  ஏதோ எழுதுவாயாமே – வலைப்பூவில்! இதையும் வேண்டுமானால் எழுதேன்!” என்று சொல்லிச் சென்றான் அந்த நண்பன்!   


இதோ நண்பன் சொன்ன விஷயங்களை எழுதி விட்டேன். இன்றைய பதிவின் வழி அந்த நண்பன் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் கருத்துகளை பின்ன்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

44 கருத்துகள்:

  1. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வித விதமான பிரச்சனைகள்.

    திருமணம் முடித்தவர் பேச்சிலராகவே ருந்திருந்தால் பொறுப்புகள் இல்லாமல் இருந்திருக்கும், வாழ்க்கையை இஷ்டப்படி அனுபவிக்கலாம் என எண்ணுவதும், திருமணம் ஆகாதவர், திருமணத்துக்கு ஏங்குவதும் வினோதம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். பிரச்சனை இல்லாதவர்கள் யாருமில்லை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அந்தப் பெண்மணிக்கு வயதாகும்போது, சகோதரிகளும் சகோதரனும் துணையாக இருக்க வேண்டும் என்றுதான் ப்ரார்த்திக்கத் தோன்றியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணமும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. கனவாகிப் போன கனவுகளால்
    மனம் கனக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவாகிப் போன கனவு - நல்ல வார்த்தை விளையாட்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  4. திருமணமாகாமல் தனியாக வாழும் பெண்களுக்கு இப்படிப்பட்ட பேச்சுகள் ஒரு சாபம். தன்னைக் காத்துக்கொள்ள கோபத்தை முகக்கவசமாக்கி உலவும் பெண்களின் உணர்வுகளை நெருங்கிப் பழகும் ஒரு சிலரால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும். அந்த வகையில் உங்க நண்பர் அந்தப் பெண்மணிக்கு மகனாக கிடைத்தது பாக்கியம். அருமையான பதிவு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருமணமாகாமல் தனியாக வாழும் பெண்களுக்கு இப்படிப்பட்ட பேச்சுகள் ஒரு சாபம்// உண்மை தான் அபிநயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. தற்போது அவர் பணி ஒய்வு பெற்றிருப்பார். என்னதான் பெண் உரிமை என்றாலும் அலுவலகத்தில் பெண்களுக்கு கீழ் வேலை செய்வதையும் அதுவும் திருமணம் செய்யாத பெண்களின் கீழ் வேலை செய்வதை ஆண் ஊழியர்கள் வெறுக்கிறார்கள் என்பது உண்மை. அதில் நீங்கள் ஒருவர் விலக்கு. காரணம் நீங்கள் வளர்ந்த தென் இந்திய சூழ்நிலை.

      Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நண்பருடைய அனுபவம். எழுதி இருக்கிறேனே ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. திரு ஸ்ரீபதி அவர்களின் கருத்து வாட்ஸ்அப் வழி:

    பரிதாபம். இருந்தும் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் சுமயை இறக்கி விட்டதும் வெளிப்படையாக அவரை பற்றி கூறியதையும் நினைத்தால் அவரின் விசாலமான மனதை காட்டுகிறது. போற்றப் பட வேண்டியவர். ஒன்று சொல்ல வேண்டுமானால் நாம் நமக்காக இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக இல்லை. இது நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீபதி அண்ணாச்சி.

      நீக்கு
  7. இயல்பான நட்புகளையும், பழக்கங்களையும் அவதூறாகப் பேசுவது பலருக்கு கலையாகிவிட்டது. அவரின் மனம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை உணரமுடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவரின் மனம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும்// உண்மை தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அந்த தாய்க்கு உறுதியாக மனபாரம் குறைந்திருக்கும்... அவர்கள் அனைவரின் வாழ்வும் விரைவில் சிறக்க வேண்டும்... சிறக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்து கொண்டதில் மனபாரம் நிச்சயம் குறைந்திருக்கும் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நாக்குக்குத் தான் நரம்பே இல்லையே! எதை வேண்டுமானாலும் பேசத்தான் செய்யும். ஆனாலும் திருமணம் புரிந்து கொண்ட அந்தச் சகோதரனாவது நிம்மதியாய் இருந்திருக்கலாம். தனியாகக் குடித்தனம் வைத்திருக்கலாம். என்ன பணம் இருந்து என்ன? அந்தப்பெண்ணின் கல்யாணக் கனவுகள் நிறைவேறவே இல்லை! ஆண்டவன் படைப்பில் இப்படியும் சிலர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாக்குக்குத் தான் நரம்பே இல்லையே!// அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. அவதூறு பேசுகிறவர்களுக்கு இந்தக் கஷ்டங்கள் எல்லாம் என்ன தெரியப் போகிறது! அவளுக்கென்ன! சம்பாதிக்கிறாள் என்றே நினைப்பார்கள்/பேசுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவளுக்கென்ன! சம்பாதிக்கிறாள்// இப்படித்தான் பலருடைய எண்ணமும் இருக்கும் கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. மனம் பாரமாகி விட்டது இந்நிகழ்வு படித்ததும் எத்தனை வகை மனிதர்கள் வாழ்கிறார்கள் உலகில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலவகை மனிதர்கள், பல வித பிரச்சனைகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  12. ஏனோ மனிதர்களுக்கு தன்னைப்பற்றி விடுத்து அடுத்தவர்கள் பற்றியே கவலை.  தன் வாழ்க்கையை அவர்கள் வாழ்வதே இல்லை போலும்.  பாவம் அந்தப் பெண்மணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரும் இப்படித்தான் அடுத்தவர்கள் பற்றியே பேசிக்கொண்டு தனது வாழ்க்கையை வீணடித்து விடுகிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    மனிதர்களுக்கு மற்றவரைப் பற்றி வம்பு பேசாவிட்டால் தூக்கமே வராது போலும்..உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள். அந்தப் பெண்மணி பாவம்.. சிறுவயதிலிருந்தே எவ்வளவு கவலைகளை தன் மனதிற்குள் சுமந்து வருகிறார். "துயரங்களை சொல்லி அழ ஒரு சுவராவது வேண்டும்" என்றொரு பழமொழி உண்டு. ஆறுதலாக ஒரு மகன் கிடைத்ததும் அத்தனையும் சொல்லி தன் மன பாரங்களை குறைத்துக் கொண்டார்.இனியாவது பிறரின் குறை சொல்லும் பேச்சுக்கள் அவர் மனதை பாதிக்காமல், அவர்கள் வாழ்வில் நல்லதே நடக்க நாமும் பிரார்த்திப்போம். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வம்பு பேசுவது பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. அவர்களுக்கு இது அலுப்பதே இல்லை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. படித்த பிறகு மனம் வேதனை அடைந்தது. ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள பிரச்சினைகளை பற்றி கவலைபடாமல் அவர்களைப்பற்றி அவதூறு பேசுவது தவறு என்பதை உலகம் உணர்ந்தால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவர்கள் பற்றிய அவதூறு பேசுவது சரியல்ல. ஆனால் ஒருவருக்கும் இது புரிவதில்லை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசுவாமி ஜி.

      நீக்கு
  15. இது போலவே இன்னும் கன்னியாக இருக்கும்
    பஞ்சாபிப் பெண் எனக்குத் தோழி. என்னை விட வயதில் மிக
    சிறியவர்.
    அதே தில்லி.
    இரண்டு சகோதரிகளும் ,சகோதரரும் மணம் முடித்துச் சென்று விட்டனர்.
    நல்ல வேலை.நிறையப் பணம்.
    ஒரே ஒரு நிம்மதி,இப்போது தனியாக வேறொரு மானிலத்துக்கு
    மாறிவிட்டார்.
    இனி துணை கிடைக்குமா,வாழ்வு எப்படித்திரும்பும் என்பதேல்லாம்
    கேள்வி. ஐம்பது வயதை நெருங்கும் பொது
    என்ன தோன்றுமோ.:(
    நீங்கள் சொல்லி இருக்கும் பெண்மணியின்
    சோகம் அளவிட முடியாதது.
    மேற்கொண்டு அமைதி பெற இறை வழி செய்யட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான பலரை இங்கே சந்திக்க முடிகிறது.ஒவ்வொருவருக்கும் ஏனோ இப்படியான சூழல்கள். ஆண்டவன் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும். நல்லதே நடக்கும் என நம்புவோம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  16. மகனாக நினைக்கும் உங்கள் நண்பரிடம் அந்த தாய் தன் மனக்குமுறலை சொல்லி விட்டார்.
    அவருக்கு ஆறுதல். கேட்ட நமக்கு மனதில் பாரம். இப்படியும் அடுத்தவர்களைப்பற்றி பேசும் மனிதர்கள்!


    ஓவ்வொருத்தறும் மனதில் எத்தனை, வேதனை, எத்தனை சுமைகளை சுமந்து கொண்டு இருக்கிறார்களோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரிடம் சொன்னதால் அவர்களுக்கு மன ஆறுதல் கிடைத்திருக்கும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  17. பதில்கள்
    1. உண்மைதான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. போன தலைமுறையில் முதிர்கன்னிகள் இருந்தார்கள். இந்தத் தலைமுறையில் நேரெதிர் நிலை. எனக்குத் தெரிந்து முதிர்கன்னர்கள் அதிகரித்து வருகின்றனர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதிர் கன்னர்களும் இப்போது அதிகரித்து விட்டார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும் கௌதமன் ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. தமிழ்நாட்டில் இதுபோல் அனைத்து வசதிகளும் இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் நடக்காமல் நிறைய ஆண்கள் உள்ளனர் அந்த வகையில் எனக்கு தெரிந்து நான்கைந்து நபர்கள் இங்கு உள்ளனர்அவர்களுக்கு ஆறுதல் கூறுவதைவிட அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயல்வதுதான் சிறந்த பண்பாடு ஆகையால் அவர்களின் தொடர்பு எண் எதுவும் தெரிந்தால் எனக்கு பதிவிட்டால் இங்கு எனக்கு தெரிந்த நபர்களிடம் கூறி தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளேன் இப்படிக்கு திருச்சி நரசிம்மன் தமிழ்நாடு
    7904670895

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகை யோ திரு நரசிம்மன்? அவரது தொடர்பு எண் என்னிடத்தில் இல்லை. கிடைத்தால் பதிவிடுகிறேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஆமாம் முதல் வருகை தான் பொதுவாக நான் யாருக்கும் பின்னூட்டம் இடுவதில்லை படிப்பதோடு சரி இங்கு மற்றொரு பதிவில் கூறியது போல் முதிர் கண்ணன்கள் தான் அதிகமாக உள்ளனர் எனக்கு தெரிந்து முதிர்கன்னிகள் என்று தமிழ்நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை இது இப்போதைய நிலவரம் ஆகையால் பின்னூட்டம் இட்டேன் வித்தியாசமாக இருந்தது என்று வேறு ஒன்றும் இல்லை

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நரசிம்மன் ஜி.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரிரங்கன்.

      நீக்கு
  21. தனியாக இருக்கும் பெண்களின் பாதுகாப்பே அவர்கள் யாரிடமும் இளிக்காமலும் வழியாமலும் இருப்பதுதான் என்பதை உணர்ந்தவர் அந்த மாதாஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோ.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....