வியாழன், 27 ஆகஸ்ட், 2020

கிண்டில் வாசிப்பு – 90-களின் தமிழ் சினிமா - அரவிந்த்

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

TIME IS STILL THE BEST ANSWER; FORGIVENESS IS STILL THE BEST PAIN KILLER; GOD IS STILL THE BEST HEALER. 

***** 

இன்றைய பதிவாக நாம் பார்க்கப் போவது ஒரு கிண்டில் வாசிப்பனுபவம் – நண்பர் அரவிந்த் அவர்களின் எழுத்தில்! 90-களின் சினிமா பற்றி திரு ஆர். அபிலாஷ் என்பவர் எழுதிய மின்னூலை வாசித்து அந்த வாசிப்பனுபவத்தினை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் நண்பர் அரவிந்த். சினிமா பிடித்தவர்களுக்கு, இந்தப் புத்தகமும் பிடிக்கலாம்.  ஓவர் டு அரவிந்த்! 

***** 

90களின் தமிழ் சினிமா: சமூக மாற்றங்களின் அடையாளம் 




உலகின் பெரும்பாலோரின் பொழுதுபோக்கான சினிமாவை வெறும் மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சக ஊடகமாக ஒதுக்கிச் செல்ல முடியுமா என்ற கேள்வி என் மனதில் வெகு நாள் இருந்தது. 

”அக்காலத்தில் கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் என்றால், எனக்கு இன்று சினிமா’” என எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் பலமுறை கூறியதிலிருந்து அனைத்துக் கலைகளின் சங்கமமான சினிமாவின் முக்கியத்துவம் புரிகிறது. 

நம்மால் மாற்ற முடியாத சமூகப் பிரச்சனைகளுக்கு அடுத்தவரைக் குறை சொல்லும் நம் உளவியல் அனைத்து தவறுகளுக்குமான ஊற்றுக் கண்ணாக சினிமாவையே எண்ணுவதால் அதை என்னால் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 

நம்மையும், நம் பண்பாட்டையும் அறிய முயலும் வெளி நாட்டாருக்கு எளிய சாதனமாக இருப்பது சினிமா என்ற நிலையில், அதைப் பற்றி மேலும் சிந்திக்கவும் ஆராயவும் ஒரு ஆரம்பக் கட்டமாகத் திகழ்வது யுவபுரஸ்கார் விருது வென்ற எழுத்தாளரும், ஆங்கிலப் பேராசிரியருமான திரு ஆர். அபிலாஷ் அவர்களின் ”90களின் தமிழ் சினிமா” நூல். 

சினிமா என்பது வெறும் மிகைப்படுத்தப்பட்டக் கனவுலகம் என எண்ணும் நமக்கு, 90 களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் முதல் நம் உளவியலிலும், நம்பிக்கைகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் திரைப்படங்களிலும் இன்று வரை பிரதிபலிப்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. காதலை, சாதிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் ஒரு அருமருந்தாகக் காட்டிய தொண்ணூறுகளின் சினிமா, பின்னர், காதலர்களுக்குக் காதலே சிக்கலாகவும், சுதந்திரமான சிந்தனைகள் உடைய இன்றைய தலைமுறைப் பெண்களிடம் பழகும் முறைகளைப் புரிந்து கொள்ளாத ஆண்களின் இடர்பாடுகளைக் காட்டும் கண்ணாடியாகவும் பல திரைப்படங்கள் இருப்பதை அறிய இந்நூல் உதவுகிறது. அதற்கும் மேல், காதலை ஒரு கிடைத்தற்கரிய பொருளாகக் காட்டிய இதயம், காதலன் போன்ற படங்களில் இருந்து, காதலை வெறும் வீடியோ கேம் போல மலிவானதாகக் காட்டும் ”ஓ காதல் கண்மணி” போன்ற படங்கள் வரை, படங்களில் காட்டப்பட்டவை இச்சமூகத்திலும் பிரதிபலிப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். 

இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், குடும்ப அமைப்பைக் கடந்து காதலை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையே வெற்றி பெற்ற அமர காதல் படங்களும், இயக்குனர் சேரனின் மகள் காதல் விவகாரம் போன்ற நடைமுறைச் சம்பவங்களும் காட்டுவது மூலம், குடும்ப அமைப்பின் குறையாத வலிமையும், அவ்வமைப்பின் அங்கமாகவே பெரும்பாலான இன்றைய இளைஞர்கள் சார்ந்து இருப்பதையும் உணரலாம். நாயகர்களின் காதலுக்கு உதவும் நண்பன் என்ற உறவு முறை, தொண்ணூறுகளுக்குப் பிறகு பிணக்கும் ஊடலும் நிறைந்த ஆண்களின் நட்புறவாகப் பரிணமித்திருப்பதை சுவாரசியமாகக் காட்டும் இயக்குனர் பாலா, ராஜேஷ், வெங்கட் பிரபு போன்றோரின் புரோமான்ஸ் படங்கள்; ஆண்கள், உண்மையான சுதந்திரத்தை உணர்வது பெண்கள் அருகில் உள்ள போதா, அல்லது தன் நண்பர்களோடு உள்ள தருணங்களா என ஆரம்பித்து ஆண்மைக்குள் பெண்மையையும், பெண்மைக்குள் ஆண்மையையும் சித்தரிக்கும் திரைப்பட நுட்பங்களை நடைமுறை எதார்த்தங்களோடு சுவையாக பொருத்தி சொல்லியிருக்கிறார் ஆசிரியர். 

சினிமாவின் ஜனரஞ்சகமான வெற்றிக்கு மற்றொரு காரணமான வன்முறையைச் சித்தரிக்கும் தேவர் சாதி வரிசைப் படங்களும், அதற்கு ஒப்பீடாகக் காட்டப்பட்ட மலையாள நாயர் சமூக வீரப் படங்களும் பாலிவுட் காட்ஃபாதர் படங்களைப் பற்றிய தகவல்கள் நூலின் சுவாரசியமான பகுதிகள். நிலப் பிரபுத்துவக் காலத்தைக் கடந்து வெவ்வேறு துறைகளில் களம் புகுந்தும், இவ்வகை பழைய வன்முறை விழுமியங்கள் ரசிக்கப்படுவதற்கானக் காரணங்கள்; வன்முறைக்கு எதிராகப் பேசுவதாகச் சொல்லும் இப்படங்கள், வன்முறையையே நாயகன் ஆண்மையின் சின்னமாகப் பிரதிபலித்தல் போன்ற வியக்கத்தக்க சுவாரசியமான விவாதங்கள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன. 

இன்னொரு பக்கம், நாயகனைக் கவர்ச்சிகரமாகவும், நாயகனின் ஆண்மையை விட வில்லன்களின் ஆண்மையையும் அவர்கள் தரப்பு நியாயங்களையும் பெரிதாகக் காட்டி வெற்றிபெற்ற இயக்குனர் திரு கௌதம் மேனன் படங்களில் கையாளப்பட்ட அதிசய நுட்பங்கள் நம்மை அறியாமலே நம்மை வியக்கச் செய்கின்றன. இவற்றிற்கு அப்பால், இக்காலத்தில் பெரும் வெற்றி பெற்ற பிரம்மாண்ட இயக்குனர் திரு சங்கர் அவர்களின் படங்களில் உபயோகிக்கப்பட்ட நவீன யுக்தி பற்றிய விவரணங்கள் எல்லாம்; வாசகர்களே வாசித்து, அனுபவிக்க வேண்டியவை. 

இவ்வாறு, நாம் பார்த்த திரைப்படங்கள் குறித்த பல புது சுவாரஸ்யமான தவல்களையும் நம் ரசனையின் பல சிடுக்குகளையும் அனுபவிக்க இந்நூலை பின்வரும் சுட்டியில் வாங்கி வாசிக்கலாம். 


இரா. அரவிந்த் 

***** 

இன்றைய பதிவில் நண்பர் அரவிந்த் பகிர்ந்து கொண்ட வாசிப்பனுபவம் பற்றிய எண்ணங்களையும், கருத்துகளையும் பின்னூட்டமாகச் சொல்லுங்களேன்.  விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

28 கருத்துகள்:

  1. நல்லதொரு விமர்சனம்... நண்பர் அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐய்யா.

      நீக்கு
  2. //..90-களின் சினிமா பற்றி திரு ஆர். அபிலாஷ் என்பவர் எழுதிய மின்னூலை ..//

    ‘ஆர்.அபிலாஷ் ‘என்பவர்’ - ஆ? ஆ! வெங்கட் ஜி!

    உங்களுக்குத் தெரியவில்லைபோலும். சொல்கிறேன் :
    ஆர்.அபிலாஷ் வளர்ந்து வரும் தமிழ்ப்படைப்பாளிகளில் ஒருவர். Already established as a literary writer of some promise. 2014-ல் சாஹித்ய அகாடமி அபிலாஷுக்கு ‘யுவபுரஸ்கார்’ விருது வழங்கியிருக்கிறது, இவரது ‘கால்கள்’ என்கிற முதல் நாவலுக்காக. கவிதைத் தொகுப்பு ஒன்றும், கட்டுரைத்தொகுப்புகளும் சிலவும் வெளிவந்திருக்கின்றன. Deepti Naval-இன் கவிதைகள் சிலவற்றையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். வேகமாக தமிழ் எழுத்துலகில் இயங்கிவருபவர் அபிலாஷ்.

    (உபரி : ஆங்கிலத்தில் முதுகலை படித்தவர், ஆங்கிலப்பேராசிரியர், முனைவர் பட்டத்திற்காகவும் முயற்சி...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியர் குறித்த நல்லதொரு அறிமுகம் தந்துள்ளீர்கள் ஐய்யா.
      நாங்களும் கால்கள் நாவலை மாற்றுத்திறனாளிகள் வாசிக்கும் வண்ணம் கிண்டிலில் வரும் நாளை எதிர் நோக்கியுள்ளோம்.
      தங்களின் படைப்புகளையும் விரைவில் வாசிக்கிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐய்யா.

      நீக்கு
    2. மனமார்ந்த பதிலுக்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
    3. மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி ஏகாந்தன் ஜி.

      நீக்கு
  3. நூலைக்குறித்த விளக்கவுரை அசத்தலாக இருக்கிறது.

    இரா. அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐய்யா.

      நீக்கு
  4. அருமையான விமர்சனம்
    தரவிறக்கம் செய்து படிக்கிறேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐய்யா.

      நீக்கு
  5. இன்றைய பதிவின் துவக்க வரிகள் சிந்திக்க வைத்தன. பகிர்ந்தமைக்கு நன்றி! திரு ஆர்.அபிலாஷ் அவர்களின் ‘90களின் தமிழ் சினிமா’ என்ற மின் நூலைப்பற்றிய தங்களின் மதிப்புரை அந்த நூலை படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கிவிட்டது. அருமையாக திறனாய்வு செய்து இருக்கிறீர்கள். பாராட்டுகள்! மின் நூலை படிக்க இருக்கிறேன். திரு ஆர்.அபிலாஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐய்யா.

      நீக்கு
  6. நல்ல விமர்சனம். அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு விமர்சனத்தை பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  8. வாழ்த்துக்கள் அரவிந்த்.

    பதிலளிநீக்கு
  9. புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் நல்ல விமரிசனம். திரு. அரவிந்தனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. திரைப்படம் வெறும் பொழுதுபோக்கும் சித்திரமாக இல்லாமல் புரையோடிப்போன சமுதாய சீர்கேடுகளை களையும் தளமாகவும் அமையவேண்டும் ... தங்களின் நூல் விமர்சனம் அருமை ... வாழ்த்துக்கள் அரவிந்த்.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

      நீக்கு
  11. ஆர். அபிலாஷின் எழுத்துக்களை அவரது வலைப்பக்கத்திலும் உயிர்மையிலும் வாசிப்பதுண்டு. அரவிந்தின் விமர்சனத்தைப் படித்ததும் 90களின் தமிழ் சினிமாவை கிண்டில் நூலையும் வாசிக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானசேகரன் ஜி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  13. விமரிசனம் எப்படி எழுத வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கும் அரவிந்த் அவர்களுக்குப் பாராட்டுகள். நல்லதொரு விமரிசனம் புத்தகத்தைப் படிக்கத் தூண்டும். அதோடு ஏகாந்தன் அவர்கள் ஆசிரியர் பற்றிக் கொடுத்த அறிமுகமும் புத்தகம் படிக்கத் தூண்டுகோல். நல்ல இடுகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....