வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கிண்டில் வாசிப்பு – தூரத்திலிருந்து ஒரு குரல் - ஏகாந்தன்

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

நேற்று ஜெயித்தவர் இன்றும் ஜெயிக்கலாம்! ஆனால், நேற்றுத் தோற்றவர் இன்னும் தோற்பார் என்று கட்டாயமில்லை! அவர் இன்றைக்கு ஜெயிக்கலாம்!



”தூரத்திலிருந்து ஒரு குரல்” என்ற தலைப்பினையும் கதை சொல்லும் கட்டுரைகள் என்று உபதலைப்பாகக் கொண்ட இந்தக் கிண்டில் மின்னூலை சமீபத்தில் தரவிறக்கம் செய்து கொண்டேன். வலைப்பதிவர் திரு ஏகாந்தன் அவர்களின் 30 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. அவரது இந்த மின்னூலின் முன்னுரையில் சொன்னது போல, “ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமாக, இன்னுமொரு ‘கதை’யைச் சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது” ஒவ்வொரு கட்டுரையும் புதியதொரு விஷயத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது! 

அரசியல், தமிழகம், தில்லி, பெங்களூர், இரயில் பயணம், பெங்களூரின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என பல விஷயங்களைச் சொல்லும் கட்டுரைகளில், “வடக்கே போகும் ரயில்” கட்டுரை எனக்கும் மிகவும் பிடித்தது. ஒரு ரயில் பயணத்தில் சந்தித்த மனிதர் பற்றிய கட்டுரை இது. பயணத்தில் சந்திக்கும் சில மனிதர்களை நாம் மறக்கவே முடியாது என்று நானும் உணர்ந்திருக்கிறேன். அப்படியான ஒரு மனிதருடனான சந்திப்பு, அந்த மனிதர் செய்து வரும் மகத்தான விஷயம் போன்றவற்றைச் சொன்ன அந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனச் சொல்வேன்.

இந்தக் கட்டுரைத் தொகுப்பிலிருந்து நான் ரசித்த சில பகுதிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! 

*****

”இவனே என் மணாளன் என ஒருவனைக் கைப்பிடித்த நாளிலிருந்து கூடவே இருந்து, தன் பரிசிரமம் பார்க்காமல் அவனுக்கு வேளாவேளைக்கு சோறுபண்ணிப்போட்டு, அவனது அசட்டுத்தனம், அடாவடித்தனம், முட்டாள்தனம், முரட்டுத்தனத்தையெல்லாம் பொறுத்து, எந்நிலையிலும் கைவிடாது அவனோடே உழன்று, வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து, போதாக்குறைக்கு அவனாலேயே ஏற்பட்ட கஷ்டங்களையும் (பெரும்பாலான சமயங்களில் வாயைத் திறக்காமலேயே) சகித்து, உடம்பு சரியில்லாது அவன் தடுமாறிய நாட்களில் மருந்து மாத்திரையெல்லாம் நேரத்துக்கு எடுத்துக் கொடுத்து, தினம் அவனுக்காகப் பிரார்த்தித்து, அவன் தந்த குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கிக் கொண்டு, கடைசி காலம் வரை மனைவி என்கிற ரூபத்தில் கூட வரும் பெண்ணுக்கு, ஒருவன் என்னதான் பிரதி உபகாரமாகச் செய்வது? நினைத்தாலே கனக்கிறதே!” 

*****

”வாழ்வின் ஒரு இடத்திலிருந்து, ஒரு புள்ளியிலிருந்து இன்னொன்றுக்கு, நிம்மதியைத் தேடி தீராப்பயணம். இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது இந்தப் பூமியில் மனித வாழ்க்கை” 

*****

”நாட்டை ஆள்வதற்கென நாம் ஓட்டுப்போட்டு அனுப்பி வைத்த அரசியல் வாதிகள், பசப்பு வார்த்தைப் பேடிகள் பெரும்பணத்தை லஞ்சமாக ரியல் எஸ்டேட் பேய்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, நம் சுற்றுச்சூழலை, இயற்கை வளங்களை, சிதைக்க அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடெங்கும் சீராக நடக்கிறது இந்த சீரழிவு. இன்னமும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.” 

*****

“மரத்தையெல்லாம் வெட்டி சாச்சிப்பிடுறீங்க. ஏரியையெல்லாம் மண்ணையும் கல்லையும் கொட்டி மூடி, ஏடாகூடமா கான்க்ரீட் கட்டடங்களா கட்டித் தள்ளுறீங்க. நெழல் வேணும், காத்து வேணும்னா எங்கேருந்து வரும்?” “அட என்ன சார் நீங்க! மரத்தைக் காணோம், ஏரியைக் காணோம்கிறீங்க! மனுசனோட வாழ்க்கையே காணாமப் போயிட்டிருக்கு சார்!” 

*****

"காலையில் கண்விழிக்கும் குழந்தையை அன்பாகப் பார்த்துச் சிரித்து, அதுகளின் மென்கன்னத்தை வருடி, தலையைக் கோதி, ஆசையாக ரெண்டு வார்த்தை பேசி, அணைத்து, கொஞ்சி… ம்ஹூம், அதெல்லாம் பேசப்படாது, அந்தக் காலம் மலையேறிவிட்டது. இனி வராது. இந்தக் காலத்தில் அதற்கெல்லாம் நேரமில்லை. தூக்கம் சரியாகக் கலையாமல், அழுகையும் திணறுலுமாக இருக்கும் குழந்தைகளை அவசர அவசரமாகத் “தயார்” செய்து, இழுத்துக் கொண்டுபோய் “க்ரெஷ்”களில் கடாசிவிட்டு, வேலைக்கு ஓடுகிறார்கள் நவீன அம்மாக்கள்." 

*****

”பெங்களூரில் தற்போது இருக்கும் எங்கள் அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் நுழைந்து உள்பக்கமாக போய்க் கொஞ்சம் சென்று திரும்பி நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். தற்செயலாக அடுக்கு மாடிச் சுவரின் உயரத்தில் அந்த சிறிய போர்டு கண்ணில் பட்டது. Don’t feed the pigeons. அடப்பாவிகளா! புறாவுக்கு சாப்பிட ஒன்றும் போடக்கூடாதா? பிச்சைக்காரனுக்கும் காசு, கீசு போட்றக்கூடாது, இல்லையா? தெருநாயும், வாசலில் பசியோடு நாளெல்லாம் பட்டினியாகப் படுத்துக் கிடக்கட்டும். எதையும் போடாதே. நாம் மட்டும் நல்லா இருப்போம். டேய், நடக்கக் கூடிய காரியமா இது?” 

*****

முப்பது கட்டுரைகள் கொண்ட இந்த மின்னூல் அமேசான் கிண்டில் வெளியீடாக வந்திருக்கிறது. மின்னூலின் விலை ரூபாய் 140/-. அமேசான் அன்லிமிட்டட் கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தரவிறக்கம் செய்து கொள்ள கீழேயுள்ள சுட்டியைச் சுட்டலாம்! 


நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

38 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசகம்.  நல்லதொரு பகிர்வு.  ஏகாந்தன் ஸாருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நான் இன்னும் கிண்டிலுக்குள் இறங்கவே இல்லை என்பதால் படிக்க ஆசைபப்டும் புத்தகங்களைக் கூட படிக்க முடியாமல் போகிறது.  வாழ்த்துகள் மட்டும் சொல்ல வேண்டி இருக்கிறது.  ஒரு ஆறுதல் சில படைப்புகளை அவர்கள் தளத்தில் வாசித்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிண்டிலுக்குள் இறங்கவே இல்லை! நிறைய மின்னூல்கள் இருக்கின்றன. தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்! நீங்களும் விரைவில் கிண்டில் பக்கம் வர, பயன்படுத்த வாழ்த்துகள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. முக்கிய பகுதிகளை தந்தது அருமை ஜி.
    Aகாந்தன் ஸாருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்துக் காட்டிய பகுதிகள் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. முக்கிய பகுதிகளாகப் பகிர்ந்ததைக் கொண்டே விரிந்த ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கிய புத்தகம் என உணரமுடிகிறது..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான சிந்தனைகள் கொண்ட புத்தகம் தான் ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நல்ல அறிமுகத்திற்கு நன்றி சார் ...

    ஏகாந்தன் சாருக்கும் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாசித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனு ப்ரேம் ஜி.

      நீக்கு
  6. திரு ஏகாந்தன் சார்நல்ல அனுபவசாலி அவரது எழுத்துக்கள் கவரும் என்பதில்சந்தேகமில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவசாலி - உண்மை தான் ஜி.எம்.பி. ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஏகாந்தன் அண்ணாவிற்கு வாழ்த்துகள். இங்கு நீங்கள் ரசித்ததாகச் சொல்லியிருக்கும் சில கட்டுரைகள் அவர் தளத்தில் வாசித்திருக்கிறேன். அந்தப் புறா போர்ட் கட்டுரையும்.

    நீங்கள் ரசித்ததது என்று சொல்லியிருப்பதில் முதலில் சொல்லப்பட்டிருப்பது என்னென்னவோ எண்ணங்களைத் தூண்டுகிறது.

    நல்லா சொல்லியிருக்கீங்க வெங்கட்ஜி நூலைப் பற்றி.

    ஏகாந்தன் அண்ணா எழுதுவதே பல நச்சென்று இருக்கும். அழகாக எழுதுபவர். அவரது அனுபவங்கள் நிறைய என்றும் அவர் பதிவுகளில் இருந்தே அவரது பார்வை அவரது அனுபவங்கள் புரிந்துவிடும்

    வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூலிலிருந்து எடுத்துக் காட்டிய வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஆர்வத்தைத் தூண்டும் நூலறிமுகம். எனது சேமிப்பில் சேர்த்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாசித்துப் பாருங்கள் ஞானசேகரன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நீங்கள் ரசித்த பகுதிகளை, எங்களுக்கு எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் வகையில், பகிர்ந்தமைக்கு நன்றி. தரவிறக்கம் செய்து வைத்துள்ள நூல்கள் இன்னும் வாசிக்கப்படாமலேயே உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரவிறக்கம் செய்து வைத்துள்ள நூல்கள் இன்னும் வாசிக்கப்படாமலேயே உள்ளன - என்னிடமும் அப்படியே! ஒவ்வொரு நாளும் கொஞ்சம் நேரமாவது மின்னூல் வாசிசிப்பிற்காக ஒதுக்க ஆரம்பித்திருக்கிறேன் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பல நடப்பு உண்மைகள் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளீர்கள்... அருமையான விமர்சனம் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அறிமுகத்திற்கு நன்றி ஐய்யா.
    நூலை சீக்கிரம் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - முடிந்த போது வாசியுங்கள் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. நல்ல பகிர்வு. புத்தகத்திலிருந்து போட்டுள்ள பகுதிகள் நல்லா இருக்கு.

    பொதுவா அபார்ட்மெண்டில், புறாக்களுக்கு (மற்ற பறவைகளுக்கும்) உணவிட ஆரம்பித்தால், அது பிடிக்காத மற்ற அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு அது மிகுந்த இடைஞ்சலாகிவிடும் (அசுத்தம், புறா சிறு இறக்கை பலருக்கு அலர்ஜி, டக்ட்களில் குடும்பம் நடத்த ஆரம்பிக்கும் என்பதெல்லாம்). அதுபோல தெரு நாய்களுக்கும் உணவிட ஆரம்பித்தால், அபார்ட்மெண்ட் வாசலில் கூட்டம் கூடி மற்றவர்களுக்குத் தொந்தரவாகும். இதன் காரணமாக அசோசியேஷன்கள் இதனை அனுமதிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      அபார்ட்மெமண்ட்களில் பறவைகளுக்கு உணவிடுவது பல இடங்களில் ஒத்துக் கொள்வதில்லை தான். கட்டப்பட்டதே விளைநிலங்களிலும், மரங்கள் இருந்த பகுதிகளில் எனும்போது அவையும் எங்கே போகும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. புத்தகத்திலிருந்து பகிர்ந்திருக்கும் பகுதிகள் நன்றாக இருக்கிறது.

    நூல் அறிமுகத்திற்கு நன்றி

    வாசகம் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் அறிமுகம், வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. நீங்கள் பகிர்ந்திருக்கும் பகுதிகள் அருமையாகவும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது. ஏகாந்தனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி எடுத்துக் காட்டிய நூலின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  15. கதை சொல்லும் கட்டுரைகள் அருமை.
    புத்தகத்திலிருந்து பகிர்ந்த பகிர்வு மிக நன்றாக இருக்கிறது.
    நன்றாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  16. நல்லதோர் அறிமுகம் வெங்கட்.

    புறாக்களுக்கு உணவளிக்க கூடாது என்பதில் ஒரு ஞாயம் இருக்கின்றது. பொதுவாக பறவைகளும் விலங்குகளும் (வீட் டு செல்ல பிராணிகளை தவிர) மனிதனை அண்டி பிழைக்கும் சுபாவம் கொண்டவை அல்ல. அவை தன்னிச்சையாக பறந்து சென்று உணவு தேடுவதும் அந்த உணவுகொண்டு தன் குட்டிகளுக்கும் குஞ்சிகளுக்கும் கொடுத்து வாழும் ஒரு தற்சார்புள்ள இனம். அவற்றை தர்மம் செய்கின்றேன் தானம் செய்கின்றேன் என்ற எண்ணத்தில் அவற்றின் இயல்பு வாழ்வை மாற்றி நகரின் எல்லா இடங்களிலும் எல்லா குடியிருப்பு பகுதிகளிலும் வந்து அவை ஏறக்குறைய மனிதனையே சார்ந்து வாழும் இனமாக (மாறி விட்டதையும்) மாற்றி விட்டதையும், குற்றாலம், கொடைக்கானல் , ஏலகிரி போன்ற சுற்றுலாத்தலங்களிலுள்ள குரங்குகள் தமது இயற்கை குணமான கடுகளிலுள்ள கனிகளை பறித்து உண்டு வாழும் வாழ்வை முற்றிலுமாக மறந்து அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவை உண்டு பழகி தற்போது ஊரடங்கு விதிகளால் பயணிகள் வருகை தட்டுப்பட்டதால் அந்த குரங்குகள் உணவின்றி வாடி வதங்குவதை அறிந்திருப்பீர்கள். காருண்ய சிந்தனை நல்லதுதான் அதற்காக அதன் வாழ்வாதாரத்தை மாற்ற நினைப்பது ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் புத்தக ஆசிரியரின் கருத்து எனக்கு உடன்பாடு இல்லை. என் கருத்தை சொல்லிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோயில்பிள்ளை.

      விலங்குகளின் இயல்பு வாழ்க்கையை மாற்றுவதில் எனக்கும் உடன்பாடில்லை. நகரமயமாக்கத்தில் சூழல் இழந்த பறவைகளுக்கு உணவளிப்பதில் தவறில்லையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோயில்பிள்ளை.

      நீக்கு
  17. திரு கோயில் பிள்ளை சொல்லி இருப்பதை அப்படியே ஆமோதிக்கிறேன். வன விலங்குகளையும் பறவைகளையும் அதன் இயல்பிலிருந்து மாற்றிப் பழக்கக் கூடாது. அம்பேரிக்காவில் எல்லாப் பறவைகள் சரணாலயங்களிலும் இதைப் பெரிதாக அறிவிப்புச் செய்திருப்பார்கள்.

    ஏகாந்தனின் புத்தக விமரிசனமும், அதில் நீங்கள் எடுத்துச் சொல்லி இருக்கும் பகுதிகளும் அருமை. ஸ்ரீராமாவது கின்டிலுக்குள் போகவில்லை என்கிறார். நான் போயிட்டு அங்கே எதையும் படிக்க முடியாமல் அவதி! ஏதோ ஒரு பிரச்னை! நாலைந்து நாட்களாக ஏடிஎம்மின் "சஹானா இணைய இதழ்" வராமல் படுத்தல். இப்போ இந்தப் படுத்தல். மெதுவா உட்கார்ந்து சரி பண்ணிட்டுப் படிக்கணும். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயல்பிலிருந்து மாற்றுவது நல்லதல்ல என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன் கீதாம்மா.

      பிரச்சனை பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை! நேரில் பார்த்தால் தான் என்ன என்று பார்க்க முடியும். :) இணையம் தொடர்பான உங்கள் பிரச்சனைகள் விரைவில் விலகட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. என்னனு சொல்றது வெங்கட்! கணினியைத் திறந்து ஜிமெயிலுக்கு வருவதிலே ஆரம்பிக்கிறது பிரச்னை! cannot sync/cannot connect என வருது இரு மடிக்கணினிகளிலும். பின்னர் பலமுறை முயன்ற பின்னரே ஜிமெயில் கனெக்ட் ஆகிறது. பாஸ்வேர்ட் தப்பு என்றோ யூசர் ஐடி தப்பு என்றோ சொல்லுவதில்லை. cannot sync/ ஒத்து வரலை என்றே சொல்கிறது. சில சமயங்களில் எரர் 404 எனக் காட்டும்! ஆனாலும் விடாமுயற்சி செய்தால் ஒரு தரம் ஜிமெயில் இணைப்பு வந்துவிடும். அதன் பிறகு பிரச்னைகள் இல்லைனாலும் சில தளங்களில் பிரச்னைகள் இருக்கு. அவை தெரியாது! :)))))) இதிலேயே நேரம் போய்விடுவதால் சரியாகப் பதிவுகள் படிக்கவோ, பதில் சொல்லவோ, பதிவுகள் எழுதி வெளியிடவோ முடியறதில்லை. இணைய இணைப்புச் சரியில்லை எனச் சிலர் சொல்கின்றனர். இணைப்புக் கொடுப்பவர்களிடம் சொல்லியாச்சு. உங்க ரவுட்டர்/மோடம் சரியில்லை என்பதால் இணைப்பு வருவதில்லை என்கிறார்கள். இப்போத் தான் மார்ச் மாதம் புது ரவுட்டர் மாத்தினோம். ஆனால் எனக்கு அது மாத்தினப்புறமாத் தான் இந்தப் பிரச்னை என்று தோன்றுகிறது. கணினி மருத்துவரிடமும் சொல்லியாச்சு. அவர் ரவுட்டர் நல்லா இருக்கு, உங்களுக்கு இணைப்புக் கொடுக்கும் இடத்தில் பிரச்னை என்கிறார். ஆக இப்படியே ஆறு மாதங்கள் ஓட்டியாச்சு! தானாகச் சரியாகட்டும்னு வேண்டிக் கொண்டு இப்போச் சும்மா இருக்கேன். வரச்சே பார்ப்பேன்/ இல்லைனா இருக்கவே இருக்கு புத்தகங்கள்! :)))))))))

      நீக்கு
    3. Cache, history போன்றவற்றை டெலீட் செய்து பாருங்கள். உங்களிடம் இருப்பது பி.எஸ்.என்.எல். கனெக்‌ஷன் தானே? மீண்டும் ஒரு முறை செட்டிங்க்ஸ் வந்து பார்க்கச் சொல்லுங்கள். இணையம் படுத்தினால் கொஞ்சம் கஷ்டம் தான் கீதாம்மா.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. வெங்கட் ஜி, என் மின்னூல் அறிமுகம், அதற்கான விமரிசனம் ஆகியவற்றை அழகாக செய்திருக்கிறீர்கள். வாசகர் கருத்துக்கள் பலவும் அதையே சொல்கின்றன. மன நெகிழ்வுடன் நன்றிகள் பல.

    நூல் அறிமுகம்/விமரிசனம் : உடனே படித்து கருத்து சொன்ன,பாராட்டிய அன்பு உள்ளங்கள் அனைத்திற்கும், இனி வந்து கருத்திடப் போகிற அன்பர்களுக்கும் சேர்த்து மனமார்ந்த நன்றிகளுடன்,
    - ஏகாந்தன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நூலை இங்கே அறிமுகம் செய்து வைக்க முடிந்ததில் மகிழ்ச்சி ஏகாந்தன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....