புதன், 14 அக்டோபர், 2020

பாசிட்டிவ்-னா சந்தோஷப்படணும்!

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

THE MEANING OF LIFE IS TO GIVE LIFE A MEANING! 

******* 



அழைப்பு - 1:

“என்னய்யா, எப்படி இருக்கே? நல்லா இருக்கியா? டெஸ்ட் ரிசல்ட் என்னாச்சு?” வரிசையாக கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தார் சோமசுந்தரம். 

அலைபேசி வழி அவருடன் பேசிக் கொண்டிருந்தது ராமசுப்பு. சோமசுந்தரம் உயரதிகாரியாக இருக்கிற அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் ராமசுப்பு. கடந்த நான்கு நாட்களாக ராமசுப்புவிற்கு உடல் நலம் சரியில்லை. ஜூரம், ஜலதோஷம், உடல் அசதி என ஒவ்வொன்றாக வந்திருந்தது. வீட்டிலிருந்த படியே வேலை செய்து கொண்டிருக்க, இரண்டு நாட்கள் முன்னர் நுகரும் சக்தியும் குறைந்து விட, தீநுண்மிக்காக பரிசோதனைக்கு கொடுத்தாயிற்று. அதன் முடிவு தெரிந்து கொள்வதற்காகவே சோமசுந்தரம் ராமசுப்புவிற்கு அலைபேசியில் அழைத்திருந்தார். 

”டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சு சார். பாசிட்டிவ் தான். மாநகராட்சியிலிருந்து ஃபோன் பண்ணாங்க… மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்திருக்காங்க! தனிமைப்படுத்தணுமான்னு இன்னும் சொல்லலை. கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு!” பதில் சொன்னார் ராமசுப்பு. 

“இதுல கஷ்டப்படறதுக்கு என்னய்யா இருக்கு! சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான்! அவனவன் ஆஃபீஸ் வரதுக்கு கஷ்டப்பட்டுட்டு பாசிட்டிவ்-னு பொய் சொல்லிட்டு வீட்டுல உட்கார்ந்துருக்கான்! Asymptomatic, ஆனா பாசிட்டிவ்- நு சொல்லிட்டு வீட்டுல இருக்கான்! உனக்கு பாசிட்டிவ் கூடவே, Symptoms-உம் இருக்கு! சந்தோஷமா வெளியில சொல்லிக்கலாம்! சரியாகற வரைக்கும் வீட்டுல ஜாலி தானே!” என்று சோமசுந்தரம் சொல்லிக் கொண்டே போக, ராமசுப்பு அழறதா, சிரிக்கறதா தெரியாம, திகைச்சுப் போய் கேட்டுட்டே இருந்தான்! 

அழைப்பு-2:

”அண்ணே நல்லா இருக்கீங்களா? நான் காயத்ரி பேசறேன் அண்ணா. நீங்க, அண்ணி, பொண்ணு எல்லாம் நல்லா இருக்காங்களா?” 

”நான் நல்லா இருக்கேன் காயத்ரி. வீட்டிலயும் எல்லாரும் நல்லா இருக்காங்க! நீ, உன் புருஷன் ராமசுப்பு எல்லாம் எப்படி இருக்கீங்க?” 

”அவர் நல்லாதான் இருக்காரு! வீட்டில் தனிமைப்படுத்தி இருக்காங்க! நான் தான் நல்லா இல்லை! உங்க ஃப்ரெண்டுக்கு கொஞ்சம் நீங்க சொல்லக் கூடாதா? ரொம்பவே படுத்தறாரு!” 

“அட என்னாச்சு காயத்ரி?” அவன் அப்படியான ஆளுல்லயே! 

”ஆமா… நீங்க தான் மெச்சிக்கணும் உங்க ஃப்ரண்ட! பாசிட்டிவ்-னு ரிசல்ட் வந்தாலும் வந்தது… ஊரெல்லாம் ஃபோன் பண்ணி, எனக்கு பாசிட்டிவ், எனக்கு பாசிட்டிவ்-னு சொல்லிட்டு இருக்காரு! தமுக்கு மைதானத்துல, தண்டோரா போடாதது ஒண்ணு தான் குறைச்சல்! ஊர்ல ஒருத்தர் உடாம தெரிஞ்சு போக, ஒருத்தரும் இந்த தெரு பக்கமே வரதுல்ல! காய்கறிக்காரன்லருந்து மளிகைக்காரன் வரை, பால்காரன் கூட வர மாட்டேங்கறான்! ஊரே சேர்ந்து ஒதுக்கி வச்சா மாதிரி இருக்கு எங்க நிலை! நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் – நல்லா ஆகற வரைக்கும் யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு… கேட்டாதானே” புலம்பி ஓய்ந்தாள் காயத்ரி! 

”சரி காயத்ரி. நான் ராமசுப்புகிட்ட பேசறேன்! நீ ஒண்ணும் கவலைப் படாதே… ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளு!” சரியா.


***** 

மேலே எழுதியிருப்பதில் அழைப்பு-1 நண்பருடனான ஒரு சம்பாஷணையில் அவர் சொன்னது! இப்படியும் சிலர்! வலியும் வேதனையும் மட்டுமல்ல, தீநுண்மியும் அவரவருக்கு வந்தால் தான் அதன் கஷ்டங்கள் புரியும்! என்னவோ, ஆஃபீஸ் போகறதுக்கு சோம்பேறித்தனம் பட்டுட்டு இப்படி எல்லாம் பாசிட்டிவ்-னு பொய் சொல்றதா நினைச்சா என்ன பண்ணறதுப்பா என்று என்னிடம் கேட்ட போது நண்பருக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை! 

அழைப்பு-2 அதே நண்பரின் மனைவியிடமிருந்து – பொண்டாட்டி சொல்லியே கேட்காதவன் நான் சொல்லியா கேட்கப் போறான்! அப்படின்னு மனசுக்குள் நினைச்சாலும் அப்படி பதில் சொல்ல முடியலையே! இவங்க ரெண்டு பேருக்கும் பதில் சொல்லணும்! என்ன பதில் சொல்லலாம்!  உங்களுக்கு எதாவது நல்ல பதில் தெரிஞ்சா சொல்லுங்களேன்! 


நட்புடன் 





வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

28 கருத்துகள்:

  1. அந்தப் பதினைந்து அல்லது 21 நாட்கள் தனிமை கொடுமையான அனுபவம்.  மனதளவிலும், உடலளவிலும்.   நான் பாதிக்கப்பட்டபோது என்னை விசாரித்த சில நண்பர்களுக்கு இப்போது வந்திருக்கிறது.  என்னைவிட அதிகம் பாதிக்கப் பட்ட நண்பர் ஒருவரும் உண்டு.  முடிவின் வாசலைத் தொட்டு விட்டு வந்திருக்கிறார்.  ஆனால் அவருக்கு வந்ததே எனக்குத் தெரியாது.  அவர் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அவரே அலைபேசி விவரம் சொல்லி, "நீங்க பேசுவீங்கன்னு நினைச்சேன்" என்றபோது கஷ்டமாகவே இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதளவிலும் உடலளவிலும் கொடுமையான நாட்கள் - உண்மை தான் ஸ்ரீராம். நண்பர்களைக் காணும்போது புரிந்து கொள்ள முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கஷ்டம் தான் இங்கே நாங்க வீட்டிற்கு வரும் ஆட்களை எல்லாம் கீழேயே சுத்தம் செய்து கொண்டு தான் வரச் சொல்லி இருக்கோம். என்றாலும் வங்கிகளிடமிருந்து ரூபாய் நோட்டுகள் வாங்கினால் அவற்றைச் சுத்தம் செய்வது பெரும்பாடாக இருக்கு. ஒவ்வொரு நொடியும் கவலையிலும், பயத்திலுமே கழிகிறது. விரைவில் எல்லாம் சரியாகும். அந்த நபர் இது என்னமோ பெருமைக்குரிய விஷயம்னு நினைச்சுட்டுத் தண்டோரா போடுகிறார் போல! என்னமோ போங்க! மனித மனங்களே விசித்திரமானவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலையிலும், பயத்திலும் கழியும் நாட்கள் - உண்மை தான் கீதாம்மா. பலருக்கும் இதே நிலை தான். வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் இன்னும் அதிகம் கவலைப் பட வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வெங்கட்.
    இது விளையாடுகிற சமாச்சாரமே இல்லையே.
    நண்பர் நிலையும் சங்கடம்.
    மனைவி நிலையும் சங்கடம்.
    தொற்றுக்கு இப்படி ஒரு பக்கமா.
    வேதனை.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா. விளையாடும் விஷயம் இல்லை என்பதை பலரும் புரிந்து கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நமக்கே நல்ல பதில் ஒன்றும் தெரிய வில்லை...

    சொல்வது எதையும் கேட்டுக் கொள்ளாமல் திரியும் காலம் இது...

    நலமே வாழ்க ( கஷ்டப்பட்டாலும்!)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /சொல்வது எதையும் கேட்டுக் கொள்ளாமல் திரியும் காலம் இது...// உண்மை தான் துரை செல்வராஜூ ஐயா. பலருக்கும் அலட்சியம், சிலருக்கு இது சாதாரண நிகழ்வு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அணைவருக்கும் காலை வணக்கம்.
    நோய் தொற்று வருபவர்களில் சிலர் தங்கள் மன அழுத்தத்தைக் கையாள இப்படி அணைவருக்கும் ஃபோன் செய்து தண்டோரா போடுவதும் உண்டு.
    அது, அவர்களுக்கு அவர் மனம் கண்டுபிடித்த மருந்து.
    மணைவியிடம் இதை எடுத்துச் சொல்லி, அவரிடம் பரிவோடு தொடர்ந்து கலகலப்பாக அவருக்கு பிடித்ததை பேசினால் அவரே நிலமையை உணர்ந்து மாறிவிடக் கூடும்.
    அதை விடுத்து அவரின் செய்கைகளை குறை கூறிக்கொண்டே இருந்தால், அவர் மேலும் வெளியே ஃபோன் மூலம் தண்டோரா தான் போடுவார்.
    மேலும், வீட்டுக்கு தேவையான பொருட்களை ஊழியர்கள் வாசலிலேயே வந்து வைத்து விடுவதாக கொரானாவால் பாதிக்கப்பட்ட என் அலுவலக நன்பர்கள் கூறினார்கள்.
    அவர்கள் மனத்திற்கு அவர்களுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை, தனிமையில் இல்லை என்னும் நம்பிக்கையை அவர்கள் வீட்டார் கொடுத்தால் போதும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த்.

      மன அழுத்தம் நிறைந்த நாட்கள் என்பது உண்மை தான் அரவிந்த். நம்பிக்கை தரும் வார்த்தைகள் அவசியத் தேவை இந்த நாட்களில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சொல்ல முடியாத உறவுகளின் இழப்பு, மனதை பாழ் படுத்துகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவுகளின் இழப்பு - வேதனை. இதுவும் கடந்து போகும். கடந்து போக வேண்டும் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இப்படியும் ஒரு மறு பக்கம் இருக்கிறதா . பதில் சொல்வது கஷ்டம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் சொல்வது கடினமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  8. இருவரின் நிலையுமே தர்மசங்கடம்தான். இருந்தாலும் அதனை எதிர்கொள்கின்ற சூழலானது எதிர்மறை விளைவுகளைத் தந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தர்மசங்கடமான நிலை தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. சங்கடமான சூழல் அவரவர் மனம்போல்தான் வாழ, பேச நினைக்கிறோம்.

    யாரும் இங்கு யாரையும் மாற்ற முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யாரும் இங்கே யாரையும் மாற்ற முடியாது// - நூற்றுக்கு நூறு உண்மை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இதைப் படித்தவுடன், மார்ச்சில், வெளியில் (வளாகத்தில்) காய்கறி வாங்கப் போகும்போது கூட, இருமல், தும்மல் வந்துவிடக்கூடாதே என்று டென்ஷனாக இருந்தது நினைவுக்கு வந்துவிட்டது.

    'பாசிடிவ்' என்று வெளியில் சொல்லிக்கும்படியாகவா நிலைமை இருக்கு? லைட்டா இருமுவது போலத் தெரிந்தாலே அவனவன் விடு ஜூட் என்று ஓடிவிடுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவனவன் விடு ஜூட் என்று ஓடிவிடுவான்// உண்மை தான். அதனால் தான் நண்பரின் மனைவி சொல்லக் கூடாது என்று சொல்கிறார் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. இருவர் நிலையும் சரியே..அவரவர் வரையில்...ஆனால் பொதுவில் அதன் தீவீரத்தன்மையை இன்னும் பெரும்பாலோர் உணரவில்லையோ எனத் தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீவிரத் தன்மையை பெரும்பாலோர் உணரவில்லையோ எனத் தோன்றுகிறது - உண்மை தான் ரமணிஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. தனியார் துறையில் (கடை) வேலை செய்பவர்கள் கொரானா வந்து குணமாகி திரும்ப வேலைக்கு செல்லும்போது இனிமேல் இங்கே வேலை இல்லை என்று திரும்பி அனுப்பப்படுகின்றனர்.  வேறு இடத்தில் வேலை கேட்டாலும் கொரோனா வந்து குணமானவன் என்றால் வேலைக்கு எடுப்பதில்லை. இதை எங்கே சொல்வது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியார் துறையில் பணிபுரிந்தவர்களின் நிலை வேதனை தான். பல இடங்களில் பணி இல்லாமல் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  13. இந்த காலக் கட்டத்தில் இருவரின் நிலையும் கஷ்டம் தான். நோய் வந்தவரிடம் ஜாலியாக வீட்டில் ஓய்வு எடுங்கள் என்றால் என்ன சொல்வது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜாலியாக வீட்டில் ஓய்வு எடுங்கள்// இப்படிச் சொல்பவர்களைக் கண்டால் வேதனை தான். ஒன்றும் சொல்ல முடிவதில்லை கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....