ஞாயிறு, 25 அக்டோபர், 2020

அபிநய சரஸ்வதியும் அப்பாடக்கர்களும்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய மாலை நேர வணக்கம். வழக்கமாக என் பக்கத்தில் காலையில் தானே பதிவு வெளி வரும் - ஆனால் இந்த ஞாயிறில் மாலை நேரத்தில் ஒரு பதிவு! அதுவும் சற்றே மாறுதலாக, இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாகவோ காணொளி பகிர்வாகவோ இல்லாமல் ஒரு பதிவு! பதிவுக்குள் செல்வதற்கு முன்னர் நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள். 

அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான் - அன்னை தெரசா.


&*&*&*&*
தீநுண்மி வந்தாலும் வந்தது, என்னுடைய பயணங்கள் அனைத்துமே நின்றுவிட்டது. வீடு, அலுவலகம், வீடு என்பதாகவே கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக அமைந்து விட்டது. ஏற்கனவே திட்டமிட்டு இருந்த பயணங்கள் கூட, தீநுண்மி காரணமாக ரத்து செய்ய வேண்டிய சூழல். தமிழகத்திற்கு கடைசியாக வந்தது ஜனவரி 2020 கடைசியில்! ஒன்பது மாதமாக தமிழகத்திற்கு, குறிப்பாக வீட்டிற்குக் கூட வர முடியாமல் தில்லியிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. ஜனவரிக்குப் பிறகு இதோ இந்த அக்டோபர் மாத கடைசியில் வந்தே ஆக வேண்டிய சூழல் அமைய, கூடவே விமான வசதிகளும் கொஞ்சம் பரவாயில்லை என்று ஆனபிறகு, நேற்றைய தினம் தில்லியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தாயிற்று! தில்லி-சென்னை-திருச்சி என இண்டிகோ விமானத்தில் வந்து திருவரங்கம் வீடு, குடும்பம் என இருக்க முடிந்திருக்கிறது - ஆண்டவனுக்கு நன்றி! 

பொதுவாக காலை நேரத்தில் விமான நிலையம் செல்வதென்றால் வீட்டருகே இருக்கும் டாக்ஸி ஸ்டாண்டில் திவாரி, குப்தா என இரண்டு மூன்று வாகன ஓட்டிகளில் யாரையாவது அழைத்து அவர்கள் வண்டியில் வந்து விடுவேன். கொண்டுவிட்டு காலியாக திரும்ப வேண்டும் என்பதால் 350, 400 அல்லது 500 ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். இந்த முறை ஊபரில் பயணிக்கலாம் என முதல் நாள் இரவே Trip Schedule செய்து வைத்தேன். சீக்கிரமாகவே எழுந்து தயாராகி விட்டதால் அதனை ரத்து செய்து விட்டு, அப்போதே பயணம் செய்ய முடிவு செய்து ஊபரில் பார்த்தால் ரஷீத் Bபாய் தான் உங்களுக்கான ஓட்டுனர் என்று தகவல் வந்தது. வீட்டைப் பூட்டிக் கொண்டு இறங்கத் தயாராக, ரஷீத் Bபாய் அழைத்து, ”நான் இப்போது தான் விமான நிலையத்திலிருந்து வந்தேன், குருக்ராம் செல்ல வேண்டும், அதனால் நீங்கள் Trip Cancel செய்து விடுங்கள் என்றார்! இரண்டாம் முறை Cancel செய்தால் சிறு கட்டணம் பிடிப்போம் என்று ஊபர் தகவல் சொன்னது. 

மீண்டும் வீட்டிற்கு அருகே இருக்கும் சாலையிலிருந்து டெர்மினல்-2 செல்ல பதிவு செய்ய ரவீந்த்ரா வருவார் என்று தகவல் - ஸ்டார் ரேட்டட் ஓட்டுனராம்! வீட்டை பூட்டிக் கொண்டு பிரதான சாலை வந்து நிற்க, ரவீந்த்ரா காருடன் வந்து சேர்ந்தார். ஏறி அமர, பேச்சே இல்லை! நேரடியாக விமான நிலையம் - 205 ரூபாய் கட்டணம் கொடுத்து, ரவீந்த்ராவுக்கு நன்றி சொல்லி நான் நகர, அவரும் நகர்ந்தார். சிறு வரிசையில் நின்று - கண்ணாடி வழியே பயணச் சீட்டு, அடையாள அட்டை என இரண்டையும் காண்பித்து உள்ளே நுழைந்தேன். இண்டிகோ விமானம் தான் - முன்பதிவு செய்த நாளிலிருந்தே Web Check in Compulsory, Boarding Pass compulsory, Baggage tag compulsory என்று பிடுங்கித் தள்ளியது அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல்கள். அனைத்தையும் ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்திருந்தேன். இண்டிகோ விமானத்திற்கான Counter செல்ல, நுனி நாக்கு ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் எனது Boarding Pass, Baggage tag ஆகியவற்றைக் கொடுத்தேன். 

Baggage tag இது வேண்டாம், நாங்களே தருவோம் என ஒட்டி பெட்டியை அனுப்பி, எந்த நுழைவாயில் என்பதையும் சொல்லி அனுப்பினார் அந்தப் பெண்! செக்யூரிட்டி செக் முடித்து உள்ளே நுழைந்து அமர்ந்திருந்தேன். Web Check in செய்யும் போதே இருக்கைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும் - ஒவ்வொரு இருக்கைக்கும் ஒருவித கட்டணம்! ஜன்னலோர இருக்கை, முன்பக்க இருக்கை ஆகியவற்றிற்கான தொகை அதிகம். நடு இருக்கையாக இருந்தால் குறைவு - அதிக பட்ச கட்டணம் 250/- குறைந்த பட்ச கட்டணம் - 75/- எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அப்படியெல்லாம் சம்பாதிக்க நினைக்கிறது நிர்வாகம்! ஜன்னல் இருக்கை என்றால் முகக் கவசம், சிறிய சானிடைசர் சேஷேக்கள் ஐந்து (Chik ஷாம்பூ தயாரிப்பதுடன் இப்போது சானிடைசரும் தயாரிக்க ஆரம்பித்து விட்டது போல!), ஒரு Face Shield என அனைத்தும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு தருகிறார்கள். நடு இருக்கையாக இருந்தால் ஒரு மெல்லிய ஓவர் கோட் மாதிரி PPE! ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியக்கூடியதை எல்லோரும் மாட்டிக் கொண்டு திரிகிறார்கள்! 

கொஞ்சம் வலை மேயல் முடிந்து விமானத்திற்குள் நுழைந்து என் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து தூங்கலாம் என கண்ணை மூடியபோது இரண்டு குழந்தைகள் ஒரே நேரத்தில் அழத் துவங்கின! ஒரு குழந்தை அம்மாவிடமிருந்து சானிடைசரை வாங்கி கையில் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என அடம் பிடிக்க, அம்மா அலறிக் கொண்டே இருக்கிறார் - “கண்ணா இது Rub Bannanum, தலையில தேய்ச்சுக்கக் கூடாது, அம்மா ட்ரெஸ்ல கொட்டக் கூடாது, அம்மாவால ட்ரெஸ் சேஞ்ச் பண்ண முடியாது” என்று சமாளித்துக் கொண்டிருக்க, மற்ற குழந்தையோ, சீட்டில் உட்கார வைத்துக் கொண்டால் அலறுகிறது. தூக்கிக் கொண்டு நின்று கொண்டே இருக்க வேண்டும் என அடம்! சரி தூங்க முடியாது என கிண்டிலை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன். 

தீநுண்மி காலம் என்பதால் விமானப் பணிப்பெண்களுக்கு ஒரு வேலை மிச்சம் - உணவு விற்பனை செய்யும் வேலை தான். ஆன்லைன் வழி packaged food order செய்திருந்தால் தந்து விட்டால் போதுமானது! மற்றபடி உணவு வேண்டுமா எனக் கேட்டு விற்பனை செய்ய வேண்டாம்! ஆனால் பாவம் அந்த பணிப்பெண்கள் - அவர்களுக்கு வேறு ஒரு வேலை சேர்ந்து கொண்டது - அது விமானத்தில் பயணம் செய்யும் அப்பாடக்கர்களை சமாளிக்கும் வேலை - பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணிவதில்லை - அல்லது கீழே இறக்கி விட்டு விடுகிறார்கள் - அவர்கள் கொடுத்த ஃபேஸ் ஷீல்டும் முன் இருக்கையில் சொருகி வைத்திருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் வந்து அபிநயம் செய்து, கன்னத்தைத் தட்டி, முகக்கவசம் காண்பித்து போட்டுக் கொண்டு தான் பயணம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் - தீபா என்ற அந்த பணிப் பெண் நான் பார்க்கும்போதெல்லாம் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார்! அவர் சொல்லும் போது முகக் கவசம் மூக்கின் மேல் இருக்க, அவர் அப்படிச் சென்ற அடுத்த நொடி, கீழே இழுத்து விடப்படுகிறது! ஒரு அப்பாடக்கர் ஃபேஸ் ஷீல்ட் பிரிக்கவே இல்லை - அப்படியே கைப்பையில் அடைத்து வைத்துக் கொண்டார்! அவரை அணிந்து கொள்ளச் சொல்ல, இவர் பாஷை புரியாத மாதிரி சைகை செய்து கொண்டிருக்கிறார்! பாவம் அந்த அபிநய சரஸ்வதி - கிட்டத்தட்ட நடனமே ஆடிவிட்டார். 

ஒரு வழியாக சென்னை விமான நிலையத்தில் இறங்கி, மீண்டும் செக்யூரிட்டி செக் முடித்து உள்ளே நுழைந்து எந்த நுழைவாயில் என்பதைக் கண்டுபிடித்து அங்கே செல்ல, ஏற்கனவே போர்டிங் தொடங்கி இருந்தது. தில்லி-சென்னை பயணத்திலாவது பரவாயில்லை - நிறைய பேர் முகக் கவசம் அணிந்து வந்தார்கள் - சென்னை-திருச்சி விமானத்தில் நிறைய பேர் முகக் கவசம் அணியவே இல்லை - அணிந்திருந்தாலும் கடமைக்கு காதில் மாட்டி தாடையில் தொங்கிக் கொண்டிருந்தது! ரம்யாவும், சிந்தூரிகாவும் சில முறை சொல்லிப் பார்த்து விட்டு, “ஹூம், இவங்க திருந்த மாட்டாங்க! என்று தங்கள் முகக் கவசங்களை இழுத்து மாட்டிக் கொண்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த அப்பாடக்கர்களிடம் எத்தனை சொல்லியும் பயனில்லை என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். 

இந்தப் பயணத்தில் என்னைப் பொறுத்த வரை ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், தில்லி-சென்னை பயணத்தில் மூன்று இருக்கைகளில் நான் மட்டுமே! சென்னை-திருச்சி பயணத்தில் இரண்டு இருக்கைகளில் நான் மட்டுமே! அதனால் கொஞ்சம் பத்திரமாக வந்து சேர்ந்தாயிற்று! திருச்சி விமான நிலையத்தில் இறங்கி ஓலாவில் வாகனம் புக் செய்து வீடு வந்து சேர்ந்தாயிற்று! தில்லியில் 205/- என்றால் இங்கே 215/- அங்கே செடான் கார் என்றால் இங்கே ஆட்டோ (ஓலா மினி கிடைக்கவில்லை!). வீட்டுக்கு வந்து நேரே குளியலறை தான்! குளித்து முடித்து தான் உணவே! வழியில் எங்கேயும் சாப்பிடக் கூட நேரமில்லை! கிடைக்கவுமில்லை! நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகம் வந்தாயிற்று! ஒன்றிரண்டு வாரங்கள் இருக்க திட்டம் - பார்க்கலாம்! ஆனால் எங்கேயும் பயணிக்கவோ, நண்பர்களை சந்திக்கவோ இயலாது! தீநுண்மி காலம் என்பதால் பயணங்களை தவிர்க்க வேண்டியிருப்பதால் பெரும்பாலும் வீட்டில் தான்! 

திருவரங்கம் வந்திருப்பதால் மற்ற நண்பர்களின் பதிவுகளை படிப்பது சிறிது கடினம். முடிந்த போது படிக்கிறேன். எனது பக்கத்திலும் அவ்வப்போது பதிவுகள் வரும், வராமலும் போகலாம் என்பதைச் சொல்லிக் கொண்டு…

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம். 

நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து...

18 கருத்துகள்:

 1. விமான பயணச்சீட்டின் ஜன்னலோரச் சீட்டு விலை அதிகம் சிரிப்புதான் வருகிறது முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

  குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இருக்க வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி.... பட்ஜட் ஏர்லைன்ஸில் எமர்ஜென்சி கேட் வரிசையில் காலை நீட்டி வைத்துக்கொள்ளும் அளவு இடமிருப்பதால் முன்பு அதற்கு மட்டும் அதிக டிக்கெட் விலை (நான் சொல்வது 5-6 வருடங்களுக்கு முன்பே பஹ்ரைனில் இருந்த பட்ஜெட் ஏர்லைன்ஸ்). அப்புறம் முதல் வரிசைக்கு, டக்குனு எழுந்து செல்லலாம் என்பதால். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த அந்த சீட்களில் Tag போடுவார்கள் (காலியாக இருந்தாலும்). அந்த சீட் வேணும்னா அதிகப் பணம் பயணம் செய்யும்போதே கொடுத்துவிடலாம். மற்றபடி சாதாரண பயணத்தில் செய்வது போல நம் சீட்களை மாற்றி உட்காரமுடியாது.

   நீக்கு
  2. இப்படி பல விஷயங்கள் இருக்கிறது விமான சேவையில் கில்லர்ஜி. புதிது புதிதாக யோசிக்கிறார்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. பட்ஜெட் ஏர்லைன்ஸ் - இந்தியாவிலும் இதே நிலை தான். கொஞ்சம் இடம் அதிகமிருக்கும் கதவு பக்கத்து இருக்கைகளுக்கு எப்போதுமே விலை அதிகம். முன்பெல்லாம் டேக் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது போடுவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 2. விஷேச நாட்களில் குடும்பத்தினருடன் இருப்பது சந்தோஷம் நாட்கள் இனிய நாட்களாக செல்ல வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு பயணம். மகிழ்வாகவே கழிந்தது விடுமுறை நாட்கள் மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்திருப்பது சந்தோஷம்.  இவ்வளவு நாட்கள் பொறுமையாக எப்படிதான் இருந்தீர்களோ...  வேறு வழியும் இல்லை.  விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.

  பயண அனுபவங்கள் சுவராஸ்யம்.  மக்கள் பாதிப்பேருக்கு, இல்லை அதற்கும் மேலே தீநுண்மியின் கொடுமைகள் புரியவில்லை.  அலட்சியமாகவே இருக்கிறார்கள்.  என் ஆட்டோக்காரர் சொல்கிறார்..."அம்மை போடுவது மாதிரிதானே ஸார் இது..."

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுமுறை மகிழ்ச்சியாகவே கழிந்தது ஸ்ரீராம்.

   மக்களுக்கு இதன் கொடுமைகள் இன்னும் புரியவில்லை என்பது நிதர்சனம் - அம்மை போடுவது போல! :) எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அன்பின் நல்வாழ்த்துகளுடன்...
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 5. பயண அனுபவங்கள் அருமை. விசேஷ தினங்களில் வீட்டில் இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  என்ன ஒன்று... திருச்சி வந்தாலும் எங்கும் பயணிக்க முடியாது என்பதுதான். விரைவில் நிலைமை சரியாகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயண அனுபவங்கள் சிறப்பாகவே இருந்தது நெல்லைத் தமிழன்.

   எங்கும் பயணிக்க முடியாதுதான் - பெரும்பாலும் வீட்டிலேயே இருந்து திரும்பி வந்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. கவனமுடன் இருந்து தலைநகர் திரும்பி விட்டேன் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. இந்த நெருக்கடியான நேரத்தில் திருச்சிக்கு சிரம்மம் இல்லாமல் பயணித்தமைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெருக்கடி நேரம் தான். பயணம் முடித்து தலைநகர் திரும்பி விட்டேன் இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. நல்வரவு மீண்டும். தீபாவளி வரை இருந்துட்டுத் தான்போவீங்கனு நினைக்கிறேன். வாழ்த்துகள். ஆதிக்கும், குழந்தைக்கும் மனம் நிறைந்து தளும்பி இருக்கும். ஆசிகள்.

  பதிலளிநீக்கு
 9. தீபாவளி வரை இருந்து தலைநகர் திரும்பியாயிற்று கீதாம்மா.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....