வெள்ளி, 2 அக்டோபர், 2020

நல்லதைச் செய் நல்லதே நடக்கும் – ஆட்டோ வாலா கியான் சிங்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

நம்மிடம் இருக்கும் தனிப்பெரும் சக்திவாய்ந்த சொத்து நம் மனம்தான். அதனைச் சிறப்பாகப் பயிற்றுவித்தால், ஏராளமான செல்வத்தை அதனால் உருவாக்க முடியும் - புத்தர். 

***** 
”பாபுஜி, குல்லா ஹேஹா?” கியான் சிங் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே இது தான். கியான் சிங் – சமீபத்தில் இவரது ஆட்டோவில் தான் அலுவலகத்திலிருந்து வீடு வரை பயணித்தேன். சர்தார்ஜி – அவர் பஞ்சாபி என்பதால் என்னுடன் பஞ்சாபியிலேயே ஆரம்பித்தார் – பெரும்பாலான பஞ்சாபிகளுக்கு பஞ்சாபி மொழி கலக்காமல் ஹிந்தி பேசுவது கடினம்! இவரும் அப்படியே! இத்தனை வருட தில்லி அனுபவத்தில் இப்படி பல சர்தார்ஜிகளைச் சந்தித்திருக்கிறேன். நான் பயணிக்கும் தூரம் குறைவு என்பதோடு பத்தே நிமிடப் பயணம்! நானும் அவருக்கு, அவர் மொழியிலேயே ”சில்லறை இருக்கிறது” என்று பதில் சொல்லி உள்ளே அமர்ந்தேன். இந்த நேரங்களில் ஆட்டோக்குள் செல்லும்போது அதன் கம்பிகளைக் கூட பிடிக்காமல் தான் உள்ளே நுழைய வேண்டியிருக்கிறது! என்னதான் உடனே சானிடைசர் போட்டுக் கொண்டாலும் கம்பிகளைப் பிடிக்காமல் உள்ளே நுழைய பழகிக் கொண்டு விடுவது நல்லது. சர்தார்ஜி கொஞ்சமல்ல நிறையவே பேசுபவர் என்பதை உள்ளே நுழைந்து அமர்ந்த சில நொடிகளில் புரிந்து கொள்ள முடிந்தது. 

“இப்பதான் ஒரு பெண்மணியை அவரது அலுவலகத்திலிருந்து வீடு வரை கொண்டு விட்டு வந்தேன் – 70 ரூபாய் கட்டணத்திற்கு 500 ரூபாய் நோட்டை நீட்டுகிறார். சாதாரண நாட்களிலேயே சில்லறை தட்டுப்பாடு! இந்த தீநுண்மி நாட்களில் கேட்கவே வேண்டாம் – நோட்டுகள் வழி தீநுண்மி வந்துவிடுமோ என ஒருவருமே சில்லறை தருவதில்லை. மிகவும் கஷ்டப்பட்டு தான் அவருக்கு மீதி பணம் தரமுடிந்தது. அதனால் தான் முன்ஜாக்கிரதையாக உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டேன்” என்று சொன்னார் கியான் சிங். அலுவலகத்திலிருந்து வீடு வரை பயணிப்பதற்குள் அவரது வாழ்க்கையைப் பற்றி பல விஷயங்களை என்னிடம் சொல்லிவிட்டார் – அவரது பெயர் முதல் தொழில் வரை, மனைவி, அம்மா, அப்பா, குழந்தைகள் என அனைவர் குறித்த சில தகவல்களையாவது சொல்லிவிட்டார்! சிலருக்கு பேசிக் கொண்டே இருப்பதென்பது சர்வ சாதாரணமான விஷயம். பேசாமல் அவர்களால் இருக்கவே முடியாது! அவர்களுக்கு எதற்காகவாது தண்டனை தரவேண்டுமென்றால், “பேசாமல் இருக்க வேண்டும்” என்று சொல்லி விட்டால் அதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது! 

இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினை சமயத்தில் இந்தியாவிற்கு தங்கள் மூதாதையர்கள் குடும்பம் வந்ததாகவும், கிழக்கு தில்லியின் ஒரு பகுதியில் வீடு வாங்கிக் கொண்டு தற்போது இருப்பதாகவும் தெரிவித்தவர், தான் ஒரு ஆட்டோ பார்ட்ஸ் கடை நடத்தி வருவதாகவும் சொன்னார். அவரது பிரதானத் தொழில் கடை தான் என்றாலும், அப்பா விட்டுச் சென்ற ஆட்டோக்களை வாடகைக்கு விட்டு அதன் வழி பெரும் வறுமானத்தினை அம்மாவிடம் தந்துவிடுவதாகவும் சொன்னார். பெரும்பாலும் வாடகைக்கு தான் அவரது ஆட்டோக்கள் ஓடுகின்றன என்றாலும் சில சமயங்களில், குறிப்பாக மாலை நேரங்களில் தான் ஆட்டோ ஓட்டுவதாகச் சொன்னார் – கூடவே இன்னும் ஒரு விஷயமும் – அவர் ஆட்டோ ஓட்டுவது அவரது குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை என்றும் ஆட்டோ ஓட்டக் கூடாது என்றும் சொல்வதாகவும் சொன்னார்! ஆனாலும் சில சமயங்களில் ஆட்டோ வாடகைக்கு எடுத்தவர்களிடம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஓட்டிச் செல்லும் போது வழியில் கிடைக்கும் சவாரிகளை ஏற்றிக் கொள்வேன் என்றார். ஒவ்வொரு நாளும் தான் சந்திக்கும் மனிதர்கள் பற்றியெல்லாம் சொன்னார். 

சமீபத்தில் வீடு திரும்பும்போது, நாற்பது நாற்பத்தி ஐந்து வயது பெண்மணி தனியாக நின்றுகொண்டிருக்க, இவர் அந்த வழி வந்தபோது நிறுத்தி, தன்னை புதுதில்லி இரயில் நிலையம் அருகில் இருக்கும் ஒரு தரம்ஷாலாவில் கொண்டு விடும்படிச் சொன்னதோடு, தன்னிடம் ஐம்பது ரூபாய் மட்டுமே இருக்கிறது என்றும் கூறினாராம். நமது கியான் சிங் தான் பேச்சில் வல்லவராயிற்றே – அந்தப் பெண்மணியிடமும் பேசி இருக்கிறார். அவர் பீஹாரின் ஒரு சிறு கிராமத்திலிருந்து ஒரு அரசியல்வா(வியா)தி, தனது கட்சித் தலைமை(வி)யிடம் அழைத்துச் சென்று இவருக்கு உதவிகள் பெற்றுத்தருவதாக அழைத்து வந்ததாகவும், உதவிகள் ஒன்றும் கிடைக்காவிட்டாலும், இரவு இரயிலில் பீஹார் திரும்பாமல், இரவு தங்குவதற்கு அவருடன் ஹோட்டலுக்கு வரும்படி அழைக்கவே இவர் தயங்கி, அவருக்குத் தெரிந்த தரம்ஷாலாவில் தங்குவதாகச் சொல்லி வந்ததாகவும் சொல்லி இருக்கிறார். இதில் இன்னுமொரு விஷயமும், அந்த அரசியல்வா(வியா)தி, இந்தப் பெண்மணியிடம் மகளையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னதாகவும், இவர் தான் வேண்டாமென வீட்டில் விட்டுவிட்டு வந்ததாகவும் சொன்னபோது, நமது ஆட்டோவாலா கியான்சிங் “நல்லவேளையாக நீங்கள் அழைத்து வரவில்லை” என்று சொல்லி, என்னவேண்டுமானாலும் நடக்கலாம் – யாரையும் இங்கே நம்புவதற்கில்லை என்று சொன்னதாகவும் சொன்னார். பணம் வாங்கிக் கொள்ளாமலேயே அவர் சொன்ன தரம்ஷாலாவில் அந்தப் பெண்மணியை விட்டுவிட்டு வந்ததையும் சொன்னார் கியான் சிங். 

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதை தனது சிறு வயது முதலே தனது அம்மாவும் அப்பாவும் சொல்லி வளர்த்ததாகவும் சொன்ன கியான் சிங், எங்கள் அம்மா எப்போதுமே நல்லதே செய்ய வேண்டும் என்ற அறிவுரையை எங்களுக்கு வழங்கினார். எந்த நேரத்திலும் அடுத்தவருக்கு தீங்கு நினைக்கக் கூடாது என்பதை மட்டுமே தங்களுக்கு மிக முக்கியமான அறிவுரையாகச் சொல்லி இருப்பதைச் சொன்னார். தற்போது அவரது அப்பா உயிருடன் இல்லை என்றாலும் நல்ல விஷயங்கள் மட்டுமே எப்போதும் செய்ய வேண்டும் என்று சொல்லிச் சென்றதை தாம் இப்போதும் கடைபிடிப்பதாகச் சொன்னார். இவருக்கு எந்த நேரத்தில் எந்த தேவை என்றாலும், அது நல்லதொரு விஷயத்திற்காக இருப்பின் அவரது அன்னை பணம் தந்து உதவி செய்வார் என்றும் அதே நேரத்தில் அது தேவையில்லாத, கெட்ட விஷயமாக இருப்பின் பணம் தரமாட்டார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். பத்து பதினைந்து நிமிடங்களில் பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்ட கியான் சிங், எனது வீடு அருகே இறக்கி விட்டபோது மீண்டும் சொன்னது – “நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும்”! 

அச்சா பாபுஜி, ஆப்சே மில்கர் குஷி ஹுயி!” (ஐயா, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி) என்று சொல்லி தனக்குரிய கட்டணத்தினை வாங்கிக் கொண்டு நகர்ந்தார். நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும்! நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு எதையாவது சொல்லிச் செல்கிறார்கள்! அவற்றை எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் நம் விருப்பம்! கியான் சிங் சொன்னதும் நல்ல விஷயம் தான்! நல்லதே செய்வோம்! நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்! 

இன்றைய பதிவு வழி உங்களுடன் சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை… 

நட்புடன், 
வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

14 கருத்துகள்:

 1. உண்மையில் சர்தார்ஜிக்கள் பழகவும், பேசவும் இனிமையானவர்கள். அவர்களில் பலரும் தங்களுக்கு நேர்ந்தவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டு உட்காராமல் "அடுத்தது என்ன?" என்றே நினைத்துக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்குவார்கள். பிச்சை எடுக்கும் ஒரு சர்தாரைக் கூடக் காண முடியாது! பொதுவாக வடமாநிலங்களிலேயே பிச்சை எடுப்பது கேவலம் என்றாலும் உத்திரப் பிரதேசம் போன்ற நெருக்கமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் பிச்சையும் எடுக்கிறார்கள். குழந்தைகளை ஏவியும் பிச்சை எடுக்கிறார்கள். ஆனால் பஞ்சாபில் அத்தகைய காட்சிகளைப் பார்க்கவே முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் - சர்தார்ஜிகளில் பிச்சை எடுப்பவர்களைப் பார்ப்பது அபூர்வம் தான். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில்! வேறு மாநிலங்களில் இவர்களில் சிலரை இப்படிப் பார்த்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 2. கியான் சிங் அவர்களின், பெற்றோர்களை வணங்குகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. கொரோனாவைவிட அரசியல்வாதிகள்(எல்லாகட்சியை சார்ந்தவர்களும்) மிக மோசமானவர்களாகவே இருக்கிறார்கள் அவர்களின் ஆசைகளுக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாக் கட்சிகளிலும் - நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு! ஆசைக்கு அளவில்லாமல் போவது கொடுமை தான்.

   சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. சர்தார்ஜிகள் நன்றாக பழக கூடியவர்கள் என்பதை டெல்லி வந்தவுடன் புரிந்து கொண்டேன். மிக கடினமான உழைப்பாளிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடினமான உழைப்பாளிகள் - உண்மை தான் இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும் .... உண்மை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

   நீக்கு
 6. சர்தார்ஜிகள் பெரும்பாலும் நேர்மையானவர்களே... ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. வாசகம் நன்றாக இருக்கிறது. ஆட்டோ வாலா சொன்னது எல்லாம் அருமை.


  //அப்பா உயிருடன் இல்லை என்றாலும் நல்ல விஷயங்கள் மட்டுமே எப்போதும் செய்ய வேண்டும் என்று சொல்லிச் சென்றதை தாம் இப்போதும் கடைபிடிப்பதாகச் சொன்னார்.//

  அவர் அப்பா சொன்னதை கடை பிடிப்பது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அப்பா சொன்னதை கடை பிடிப்பது மகிழ்ச்சி// நல்ல விஷயம் தான் கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....