வியாழன், 8 அக்டோபர், 2020

நவராத்திரி நினைவலைகள்…

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ஆயிரம் உறவுகள் துணை இருந்தாலும்… வாழ்வை தனியாகவே எதிர்கொள்ள வேண்டும். அவரவர் பாதை அவரவர் மனம் அவரவர் வாழ்க்கை… 

***** 

இந்த தீநுண்மி காலத்தில் பண்டிகைகள் கொண்டாட்டம் என்பது பல குடும்பங்களில் பெரும் கனவாகவே மாறிப்போயிருக்கிறது. இதோ அக்டோபர் மாதம் வந்து விட்டது! இப்போது தான் ஆரம்பித்த மாதிரி இருக்கிறது! அதற்குள் தீநுண்மியுடன் ஆறு மாதங்களைக் கடந்து விட்டோம்! ஆரம்ப காலத்தில் இருந்த கட்டுப்பாடுகள் இப்போது இல்லை – தீநுண்மியுடன் வாழ பலரும் பழகி விட்டார்கள்! தலைநகர் தில்லியில் எப்போதும் போல சாலைகளில் வாகனங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. நவராத்திரி, தீபாவளி சமயங்களில் தலைநகர் எப்போதுமே பிரம்மாண்டமான கொண்டாட்டங்களைச் சந்திக்கும்! இந்த வருடம் அந்த அளவுக்குக் கொண்டாட்டங்கள் இருக்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது. 

நவராத்திரி சமயத்தில் வீட்டின் அருகே இருக்கும் காளி கோவிலில், மேற்கு வங்கத்தினைச் சேர்ந்தவர்கள் மிகச் சிறப்பாக உற்சவங்களை நடத்துவார்கள் – இந்த வருடமும் கொண்டாட்டம் இருக்கும் என்றே தோன்றுகிறது – பெரிய அளவு பந்தல் போட ஆரம்பித்து விட்டார்கள்! கொண்டாட்டங்கள் எப்படி இருந்தது என்பதை பிறகு எழுதுகிறேன். இன்றைக்கு கொஞ்சம் நவராத்திரி நினைவலைகள் – நான் எழுதப் போவது இல்லை! சரியாக ஒன்பது வருடம் முன்னர், இதே நாளில் என் இல்லத்தரசியின் வலைப்பூவான “கோவை2தில்லி”-யில் வெளி வந்த பதிவினை இங்கே மீண்டும் பதிவேற்றுகிறேன் – இங்கேயும் ஒரு சேமிப்பாக! அப்போது பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை வாசிக்க விரும்பினால் இந்தச் சுட்டி வழி வாசிக்கலாம்! அப்போது பதிவுலகில் இருந்த சிலர் இப்போது இங்கே இல்லை! பாதி பேர் எழுதுவதே இல்லை என்பது வேதனையான விஷயம்! வாருங்கள் அந்தப் பதிவினை வாசிக்கலாம்!

*****

நவராத்திரி நினைவலைகள் சிறுவயதிலிருந்தே எங்கள் வீட்டில் கொலு வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் வீட்டில் வழக்கம் இல்லை. அம்மாவின் பிறந்த வீட்டில் கொலு வழக்கம் உண்டு. ஆனால் அப்பா வீட்டில் இல்லை. அதனால் எனது கொலு வைக்கும் ஆசை நிராசையாகிவிட்டது. 

வருடா வருடம் நாங்கள் இருந்த பகுதியில் சிலர் கொலுவுக்கு அழைப்பார்கள். உள்ளூரிலேயே மாமா வீடு இருந்ததால் மாமா வீட்டு கொலு பார்க்கவும் செல்வோம். எங்கள் பகுதியில் இருந்த எங்கள் தூரத்து உறவினரின் வீட்டில் கொலு பார்க்க போகலாம் என்று அம்மா அழைத்தாலே எனக்கு வெலவெலத்துப் போகும். வேண்டாம் என்று தவிர்ப்பேன். அடிக்கடி செல்லாவிட்டாலும் இந்த மாதிரி வரலஷ்மி நோன்புக்கு, நவராத்திரிக்கு, பொங்கலுக்கு, என்று என்னை இழுத்துக் கொண்டு செல்வார். 

தெனாலி படத்தில் வரும் கமல் மாதிரி எனக்கு எல்லாவற்றிற்குமே பயம்! அப்படியிருக்க அவங்க வீடே ஒரு சின்ன மிருகக்காட்சிசாலை மாதிரி நாய், பூனை, முயல், பறவைகள், என்று விதவிதமாக அதுக இஷ்டத்துக்கு உலாவிக் கொண்டு இருக்கும். இவற்றை எல்லாம் கூண்டில் அடைத்து வைக்க அவர்களுக்கு பிடிக்காது. படி ஏறும்போதே நாயின் ”கிர்….” என ஆரம்பித்து குரைப்பதைக் கேட்டதும் வயிற்றுக்குள் டி[D].டி.எஸ்.-சில் ட்ரம்ஸ் அடிக்க ஆரம்பித்து விடும். 

என் மேல் அந்த நாய் பாய்ந்து விடாமல் இருக்க, அதை அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். பத்து நிமிடம் நடுங்கிக் கொண்டே கொலுவை பார்ப்பது போல பாவனை செய்து விட்டு (உதறும் உதறலில் கொலுவை எங்கே பார்ப்பது? நேரடியாக நாயைப் பார்த்து, ஓரக்கண்ணால் கொலுவை பார்த்து) வெற்றிலை பாக்கை வாங்கிக் கொண்டு ”கிளம்பலாம்” என்று அம்மாவை இழுத்துக் கொண்டு ஓடி வந்து விடுவேன். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் கூத்து. வருடம் தான் கூடியதே தவிர என் பயம் போகவேயில்லை. 

திருமணமாகி வந்த பின்னாலாவது கொலு வைக்கலாமென்றால் புகுந்த வீட்டிலும் கொலு வைக்கும் வழக்கமில்லை. தில்லியில் நாங்கள் இருந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. எப்படியும் இந்த ஒன்பது நாளிலும் குறைந்த பட்சம் 35 வீடுகளிலிருந்தாவது கொலுவுக்கு அழைப்பார்கள். தினமும் நாலைந்து வீடுகளுக்காவது செல்வோம். தினம் தினம் விதவிதமான சுண்டல் சேகரிப்பு தான் போங்க! அத்தனையும் என்ன செய்யறது என்று குழம்பிப் போனபோது என் தோழி சொன்ன யோசனை தான், நவராத்திரி சுண்டல் சப்ஜி

இப்ப வீடு மாத்தி வந்த பிறகு இந்த ஏரியாவில் முதல் நவராத்திரி. யாரையும் தெரியாது என்று நினைத்து ‘நவராத்திரி கலெக்‌ஷன்’ போச்சே என சோகமாய் இருந்தபோது, தெரிந்த நண்பரின் மனைவி ஒரு பட்டியல் கொடுத்து ”தினமும் இந்தந்த வீடுகளில் கொலு வைத்து, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடக்கிறது, பாராயணத்துக்கு ஆள் இல்லை, அதனால கண்டிப்பா வந்துடுங்க” எனச் சொன்னார்கள். 

இந்த ஒன்பது நாளும் ஒவ்வொரு வீட்டில் நடந்த லலிதா சஹஸ்ரநாம பாராயணம் சென்றதில், இந்த ஏரியாவில் யாரும் தெரியலையே என்று இருந்ததற்கு புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். நிறைய பேர் வீட்டில் விதவிதமான பொருட்களும் தாம்பூலத்துடன் வைத்துக் கொடுத்தார்கள். அவற்றில் சில கீழே…. 


இன்னும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது இந்த நவராத்திரியில். ரோஷ்ணியும் என் கூட தினமும் வந்ததால் அவளுக்கும் இந்த ஸ்லோகங்கள் சொல்வதில் நாட்டம் வந்து இருக்கிறது. இப்போது ஐந்து-ஆறு ஸ்லோகங்களை மனப்பாடமாகச் சொல்கிறாள். “நாமும் கொலு வைக்கலாமே, அம்மா”ன்னு சொல்ல ஆரம்பித்து விட்டாள். அடுத்த வருடமாவது எங்களது வீட்டிலும் கொலு வைக்க வேண்டும். பார்க்கலாம். 

-    ஆதி வெங்கட்

***** 

பத்து வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் கொலு வைக்க ஆரம்பிக்க வில்லை. சில வருடங்களுக்கு முன்னர் கொலு வைக்கும் வழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டோம். ஆனால், தொடர்ந்து மூன்று வருடமாக (இந்த ஆண்டையும் சேர்த்து), நெருங்கிய உறவினர்களின் விண்ணுலகப் பயணம் காரணமாக எங்களுக்கு பண்டிகைகள் இல்லை என்பதால் கொலு இல்லை! அடுத்த வருடமாவது கொலு வைக்க வேண்டும்! பார்க்கலாம் எப்படி இருக்கப் போகிறது அடுத்த வருடம் என! இன்றைய பதிவு வழி உங்களுடன் சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை… 

நட்புடன், 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

22 கருத்துகள்:

 1. அடுத்த வருடம் நிச்சயம் மிக நல்ல ஆண்டாக இருக்கும் அப்போது விழா பெரியதாக கொண்டாடிவிடுங்கள்.. இங்கே வருடம் வருடம் நண்பர்கள் கொலுவிற்கு அழைத்து விருந்து வைப்பார்கள் இந்த வருடம் எப்படி என்று தெரியவில்லை.. மற்றவர்களை கூப்பிடவில்லை என்றாலும் எங்கள் குடும்பத்திற்கு மட்டும் நிச்சயம அழைப்பு இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த வருடம் நல்லதாகவே இருக்கட்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 2. உங்கள் இந்தப் பதிவைப் படித்த நினைவு இருக்கிறது. இந்த வருஷம் கட்டாயமாய்க் கொலு வைத்துக் கொண்டாட அந்த அம்பிகை அருள் புரிவாள். அந்தச் சாக்கிலாவது நான் வீட்டை விட்டு வெளியே வந்து உங்க வீட்டுக்கு வர முடியுதானு பார்க்கலாம். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வருடமும் எங்களுக்கு பண்டிகைகள் கிடையாது! வரும் வருடத்தில் தான்! ஜனவரி கடைசியில் தான் முடிகிறது கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வெங்கட், நேற்று உங்களுக்கு ஒரு மின் மடல் கொடுத்திருக்கேன். முடிஞ்சப்போப் பார்க்கவும். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலையில் தான் பார்க்க முடிந்தது கீதாம்மா. பார்த்து பதிலும் தந்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அடுத்த வருடம் மக்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்திட இறைவன் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லதே நடக்கட்டும் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. நல்லதே நடக்கட்டும் நாகேந்திர பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. நவராத்திரி நினைவலைகளை மீண்டும் படித்தேன்.
  அடுத்த வருடம் நவராத்திரி கொலு வைக்க இறைவன் அருள் புரிவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. நல்லதே நடக்கட்டும் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. நல்லதே நடக்கட்டும் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. சுவாரஸ்யமான நினைவலைகள்.

  ஒரு வரலக்ஷ்மி விரதத்துக்கு வெற்றிலை பாக்கு வாங்க வந்தார் எங்கள் அலுவலக பெண் ஊழியர் ஒருவர்.  அப்போது நாங்கள் பிரௌனியை வளர்த்து வந்தோம்.  அவருக்கு(ம்) ஏற்கெனவே நாய் என்றால் பயம்.  அவர் கிளம்பும் நேரம் இது கட்டை அறுத்துக்கொண்டு ஓடி ஓடி போக்கு காட்ட...   களேபரமாகிப் போனது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டை அறுத்துக் கொண்டு ஓடி ஓடி போக்கு காட்ட - ஹாஹா... அந்தப் பெண்மணியின் நிலை கொஞ்சம் கஷ்டமாகவே இருந்திருக்கும். பாவம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. சுவாரஸ்யமான நினைவலைகள். வரும் ஆண்டு முதல் மீண்டும் கொண்டாட்டங்கள் தொடரட்டும். எல்லாம் நன்றே நடக்கும்.

  தசரா விழாக் கொண்டாட்டங்கள் பொதுவில் பெரிய அளவில் நடைபெறுவது சரிதானா தெரியவில்லை. பெங்களூரில் எப்படி எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவலைகள் ஸ்வாரஸ்யம் தான்.

   தசரா விழாக் கொண்டாட்டங்கள் பொதுவில் பெரிய அளவில் நடைபெறுவது சரிதானா - எனக்கும் சரியென்று தோன்றவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 11. சூழல் காரணமாக கும்பகோணத்தைவிட்டு தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தோம். கும்பகோணத்தில் நான் இழந்தனவற்றில் முக்கியமான ஒன்று. நினைவு தெரிந்த நாள் முதல் கொலு என்றால் கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் வைத்த கொலுவே நினைவிற்கு வரும். குடும்ப சூழல் காரணமாக கும்பகோணத்தைவிட்டு தஞ்சாவூர் வந்த பின்னர் அந்த அழகினை ரசிக்கும் வாய்ப்பினை இழந்தேன். அந்த நாள்களை நினைவுபடுத்தியது உங்கள் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் நினைவலைகளையும் இப்பதிவு மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....