புதன், 1 ஜூன், 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள் - பகுதி மூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பாதைகளில் தடைகள் இருந்தால் அதைத் தகர்த்து விட்டு தான் செல்லவேண்டும் என்பதில்லை; தவிர்த்து விட்டும் செல்லலாம் - எறும்பைப் போல!


******


நதிக்கரை நகரங்கள் - பகுதி ஒன்று இங்கே. பகுதி இரண்டு இங்கே.


ஏப்ரல் மாதத்தின் அதிகாலை நேர குளிர் கொஞ்சம் எங்களை அவதிக்குள்ளாக்கியது குறித்து சென்ற பகுதியில் சொல்லி இருந்தேன். காலை நேர பயணம் சுகமானது தான் என்றாலும், தகுந்த உடை இருந்தால் இந்தக் குளிரை சமாளித்து இருக்கலாம்!  எனக்கும் நண்பருக்கும் அந்தக் குளிர் பிடித்து இருந்தது.  ஆட்டோ ஓட்டுநர் சிறப்பாக வாகனத்தினை செலுத்தி நைமிசாரண்யம் சென்று அடைந்தார்.  சென்ற பகுதியில் அறிமுகம் செய்திருந்த தில்லி நண்பர் திரு சாய்ராம் (பயண ஏற்பாட்டாளர்)  அவர் குழுவினருடன் நைமிசாரண்யம் செல்லும்போது சுற்றுலா பயணிகளை தங்க வைக்கும் ஒரு தங்கும் விடுதியின் முகவரியை எங்களுக்கு சொல்லி இருந்தார்.  SAINI GUEST HOUSE என்பது அந்த தங்கும் விடுதியின் பெயர்.  வட இந்தியர்கள் நடத்தினாலும், எங்கே பார்த்தாலும் தெலுகு மொழியில் எழுதி வைத்திருக்கிறார்கள்.  அவர்களது VISITING CARD-இல் கூட தெலுகு மொழி ஆதிக்கம்! அதிதி தேவோ பவ! என்பதை முழுதும் நம்புகிறார்கள் போலும்.  


நைமிசாரண்யத்தில் இருக்கும் பிரதான சாலையான லலிதா தேவி மந்திர் சாலையிலேயே இருக்கிறது இந்த தங்குமிடம்.  எந்த தங்குமிடமாக இருந்தாலும் இணைய வழி முன்பதிவு செய்து கொண்டாலும் அந்த இடம் சரியாக இருக்குமா என்பது தளத்தில் இருக்கும் REVIEW பார்த்து தெரிந்து கொண்டாலும், அவை எழுதியது அந்த தங்குமிட உரிமையாளராகவே கூட இருக்கலாம்! இந்த தங்குமிடம் குறித்து நண்பர் சொல்லி இருந்தாலும், உள்ளே சென்று பார்த்தபோது எங்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.  உள்ளே சென்று பார்த்தபோது அறைகளும் சிறியவையாக இருந்தது மட்டுமின்றி சுத்தமாகவும் இல்லை.  புறாக்கூண்டு போன்ற சிறு அறைகளாக இருக்க அங்கே தங்குவதற்கு மனம் விரும்பவில்லை. ஒரே ஒரு நாள் தான் தங்கவேண்டும் என்றாலும் ஏனோ அந்த இடம் பிடிக்கவில்லை.  


நைமிசாரண்யம் பகுதி கிராமம் என்றும் சொல்ல முடியாது நகரம் என்றும் சொல்ல முடியாது! அப்படி ஒரு இடம் தான். 2011 சென்சஸ் கணக்கெடுப்புப்படி, இங்கே உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 3120; மொத்த மக்கள் தொகை - 18388 (ஆண்கள் - 9695, பெண்கள் - 8693).  இந்த ஊரில் விவசாயம் எந்த அளவுக்கு மக்களுக்கு உதவியாக இருக்கிறதோ அதே அளவு இந்த ஊரில் உள்ள கோவில்களும், அதன் காரணமாக வரும் எண்ணற்ற பக்தர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.  சிறு சிறு கடைகள், தங்குமிடங்கள், உணவகங்கள் என அனைத்துமே இருந்தாலும், அவற்றில் இருக்கும் வசதிகள் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்காது! இந்த மாதிரி ஒரு சிற்றூரில் ஐந்து/மூன்று நட்சத்திர வசதிகளை எதிர்பார்த்துச் செல்வீர்கள் என்றால், உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். அதனால் இப்படியான வசதிகளில் தான் நான் தங்குவேன் என்று சொன்னால், இந்த இடத்தினை தவிர்க்கலாம் அல்லது காலையில் சென்று மாலைக்குள் அருகிலே (120 கிலோமீட்டர்) இருக்கும் உத்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகராகிய லக்னோ சென்று விடுவது உத்தமம்.  பரவாயில்லை, நான் சமாளித்து விடுவேன் என்பவர்களுக்கு, இங்கே சில தங்குமிடங்கள் உண்டு - குறிப்பாக சொல்வதென்றால் நிறைய DHதரம்ஷாலா என்று ஹிந்தியில் சொல்லப்படும் தர்மசத்திரங்கள்! 


அதில் பெரும்பாலான இடங்களில் பார்த்தால் தெலுகு மொழியில் எழுதி இருக்கிறார்கள் - காரணம் இங்கே வரும் சுற்றுலா வாசிகளில் அதிகமானவர்கள் ஆந்திர தேசத்தவர்களே! நம்மவர்களும் வருவார்கள் என்றாலும் அந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்! 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த இடத்திற்கு திவ்ய தேசங்களை தரிசிக்க வரும் நபர்கள் மட்டுமே வருகிறார்கள் என்பதால் நம் மாநிலத்திலிருந்து இங்கே வருபவர்கள் குறைவு தான். பல இடங்களில் தெலுகு மொழியில் எழுதி இருப்பதோடு, பெயர்களிலும் எப்படியாவது “ஆந்திரா” என்பதையோ, “பாலாஜி” என்பதையோ நுழைத்து விடுகிறார்கள்!  நாங்கள் அப்படிப் பார்த்த பக்கத்திலேயே வேறு எதாவது இடம் இருக்குமா எனப் பார்த்த போது பாலாஜி அதிதி Bபவன் (ஆந்திரா லாட்ஜ்) என்ற பதாகை இருக்க உள்ளே சென்று தங்குமிடத்தினை பார்த்தோம்.  நாங்கள் அன்றைய நாள் தங்கியது இந்த ”Bபாலாஜி அதிதி Bபவன் - Andhra Lodge"!  தங்குமிடத்திற்கான ஒரு நாள் வாடகை - நான்கு படுக்கைகள் கொண்ட அறைக்கு 800 ரூபாய் மட்டும். 


இது தவிர இங்கே இருக்கும் இ-ரிக்ஷா ஓட்டுனர்கள், Pபண்டாக்கள், தங்குமிட உரிமையாளர்கள் என அனைவருமே தெலுகு மொழியில் சில வார்த்தைகள்/வாக்கியங்களைக் கற்று வைத்திருக்கிறார்கள்! தென்னிந்திய தோற்றம் இருந்தாலே போதும் - தெலுகில் மாட்லாட ஆரம்பித்து விடுகிறார்கள்! அவர்களைப் பொறுத்த வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற வித்தியாசமெல்லாம் இல்லவே இல்லை! தெரிந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. ஹிந்தி தெரிந்தவர்களுக்கு இந்த இடங்களுக்குச் சென்று வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை! இல்லை எனில், At least தெலுகாவது கற்றுக் கொள்ளுங்கள்!  


உத்திரப் பிரதேசத்தில் பார்த்த பல தங்குமிடங்களில் ஒரு விஷயம் சொல்வதா, வேண்டாமா என்று யோசனையாகவே இருந்தது. ஆனாலும் சொல்லி விடுகிறேன் - பொதுவாக Attached Bathroom வசதி உண்டு அல்லவா? அதில் குளியலுக்கு ஒரு பகுதி இருப்பதோடு கழிவறையும் இருக்கும். Indian அல்லது Western வசதியாகவே இருக்கும்.  இந்தப் பகுதிகளில் இருக்கும் தங்குமிடங்களில், அதிலும் குறிப்பாக நான்கு பேர் தங்கும் படியான அறைகளில் Attached Bathroom - இல் ஒரு Indian, ஒரு Western என இரண்டையும் பக்கம் பக்கமாக வைத்திருக்கிறார்கள்! “உனக்கு எது வசதியோ அதுல போய்க்கோ!” என்பதை இப்படிச் சொல்கிறார்களோ?  🙂 


நைமிசாரண்யம் குறித்து மேலும் தகவல்கள் தொடரும்! இப்போதைக்கு இந்த தகவல்கள்.  உங்களில் யாருக்கேனும் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சியே! வரும் பகுதிகளில் மேலும் பல அனுபவங்களை எழுதுகிறேன்.  அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 


*****


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

24 கருத்துகள்:

  1. நல்ல தகவல்கள்.  

    //"அட்லீஸ்ட்" தெலுங்காவது கற்றுக்கொள்ளுங்கள்..! //

      "ஹா..  ஹா..  ஹா..."

    சில வயதானவர்களுக்கு வெஸ்டர்ன் டைப் கழிவறைகள் ஒத்து வருவதில்லை.  அதனால் இருக்கலாம்.  நிச்சயம் ஒரே சமயத்தில் இரண்டு பேர் உபயோகிக்க முடியாது - குழந்தைகளாய் இருந்தாலொழிய!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பேர் ஒரே சமயத்தில் உபயோகிக்க முடியாது..... அதே தான் ஶ்ரீராம். ஏதோ இப்படி சில இடங்களில் இருக்கிறது. கீழே கில்லர்ஜி கூட இது போல நன்பரின்வீட்டில் கட்டி இருப்பதை சொல்லி இருக்கிறார்.

      பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  2. வாழ்க்கையில் முதல் முறையாக, இரண்டுவகை டாய்லெட் இருக்கும் ஒரே பாத்ரூமை இப்போதான் பார்க்கிறேன்.

    பல இடங்களில் இன்டியன் மேட் வெஸ்டர்ன் டாய்லட் (பளிங்கில் செய்யப்பட்டது) பார்த,திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்படி பார்த்ததில்லை நெல்லைத்தமிழன். வித்தியாசமாக இருந்தது. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. நாங்கள் பொதுவாக பாலாஜி மந்திரில் இருக்கும் அறைகளில் தங்குவோம், கொஞ்சம் வசதிக்குறைவாக இருந்தபோதும். பயண விவரங்கள் நன்று. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலாஜி கோவிலுக்கும் சென்றோம். அங்கே இருக்கும் வசதிகளை நாங்கள் பார்க்கவில்லை. கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தது.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. யாத்திரைகளில் பெரும்பாலும் சங்கடமாக உணர்வது, டாய்லெட், அதன் சுத்தம் பற்றித்தான். மற்றவிஷயங்களை எப்படியோ அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூற்றுக்கு நூறு உண்மை. அந்த வசதிகள் சரியாக இருக்க வேண்டும். தொற்று பிரச்சினைகள் வந்துவிடும் என்பதால் இதில் அதிக கவனம் தேவையாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  5. சமீபத்தில் மதுரையில் நண்பருக்காக நான் கட்டிய வீட்டில் இதேபோல் டாய்லெட்தான் வெஸ்டர்ன் மற்றும் இண்டியன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..... இரண்டும் பக்கம் பக்கமாக ஒரே அறையில் இருக்கிறதா? தகவலுக்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. நைமிசாரண்யம் பயணக்கட்டுரை விவரங்கள் அருமை.
    அங்கு போக விரும்புவர்களுக்கு உதவியாக இருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் கட்டுரை சிலருக்காவது பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. "மாட்லாட" வேண்டியது முக்கியம் உட்பட தகவல்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  8. அன்பின் வெங்கட்,
    என்றும் நலமுடன் இருங்கள்.
    நைமிசாரண்யம் அருமை. ராமனை நினைத்துக் கொண்டே
    சென்று வந்து விடலாம்.

    டாய்லெட் சுத்தமாக இருந்தால்
    தொற்று வராது.

    நமக்கெல்லாம் தெலுகு மாதிரி பேசத்தான் வரும்.:)
    நல்லதொரு கைட் நீங்கள். நன்றி மா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  9. விவரங்கள் மிக அருமை வெங்கட்ஜி!!! ரொம்ப நன்றாக நுணுக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள் சிறு விஷயங்கள் கூட. மிகவும் பயனுள்ளவை.

    கழிவறை பரவாயில்லை. இதுதான் மிக முக்கியம். சுத்தமாக இல்லை என்றால் கஷ்டம். இதில் இரண்டு இருப்பது நல்லதே என்று எனக்குப் பட்டது. ஏனென்றால் எனக்கு Western இருந்தால் வீட்டிலேயே கூட (இங்கெல்லாம் 99% வீடுகளில் இதுதான். இந்திய முறையானதுஇருப்பதில்லை) வேறு வழியில்லாமல் பயன்படுத்த வேண்டியிருக்கிறதே என்று நினைப்பேன். இந்திய முறையானது பிடிக்கும். சுகாதரத்திற்கும் உகந்தது என்பதால்.

    ரா ரா தானே!!! ஹாஹாஹாஹா சமாளித்துவிடலாம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Western சவுகரியம் என்று சொன்னாலும் பொது இடங்களிலும் அதிக நபர்கள் இருக்கும் வீடுகளிலும் தொற்று பிரச்சினைகள் வந்துவிட வாய்ப்பு அதிகம் தான் கீதா ஜி. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  11. நைமிசாரண்யம் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  12. "பாதைகளில் தடைகள் இருந்தால் அதைத் தகர்த்து விட்டு தான் செல்லவேண்டும் என்பதில்லை; தவிர்த்து விட்டும் செல்லலாம் - எறும்பைப் போல"!... அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாஞ்சில் சிவா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....