வெள்ளி, 6 ஏப்ரல், 2012

மணக்கும் மனோரஞ்சிதம்….


[பட உதவி: கூகிள்]

மல்லிகைப் பூ என்றால் தினசரி பார்க்கலாம். மனோரஞ்சிதம் அப்படியில்லை.   பச்சை நிறத்தில், இலை போன்று தோற்றமளித்தாலும், மனதை சந்தோஷப்படுத்தும் மணம் கொண்டது மனோரஞ்சிதம்.  பூவை முகர்ந்து பார்த்தால், நாம் என்ன மணத்தினை மனதில் நினைக்கிறோமோ அதே மணத்தினைத் தரவல்லது மனோரஞ்சிதம் பூ. 

அதுபோலவே நம் மனதிற்குத் தான் எத்தனை சக்தி.  நினைத்த நேரத்தில் நினைத்த பொருளை மனக்கண்ணில் தெரிய வைக்கிறது மனது.  ”நேற்று ஒரு பூந்தோட்டத்திற்குச் சென்றோமே அங்கே எத்தனை எத்தனை மலர்கள், அவற்றின் அழகு, வசீகரம் ஆகியவற்றை நினைத்தால் மனதில் நமக்கு அதன் உருவம் தெரிகிறது.  இருந்தாலும் அவற்றை மீண்டும் கண் கொண்டு பார்க்கவேண்டுமானால் அப் பூந்தோட்டத்திற்குத் திரும்பச் செல்ல வேண்டும், அப்பூக்களை நீங்கள் புகைப்படம் எடுத்திராவிட்டால்!

உங்கள் வீட்டில் நிகழும் விழாக்கள் எல்லாவற்றிலும் புகைப்படங்கள் எடுத்து, அதை ஒரு அழகிய ஆல்பத்தில் போட்டு அவ்வப்போது எடுத்துப் பார்த்து அந்த நாளில் நடந்த நிகழ்வுகளை மனதுக்குள் நினைத்து ரசிக்க புகைப்படங்கள் தானே உங்களுக்கு உதவியாக இருக்கின்றன.  [பலர் கல்யாண ஆல்பம் பார்த்து மனதுக்குள் அழுவது வேறு விஷயம்! அதை எதுக்கு இங்கே நினைவு படுத்தணும்?]

புகைப்படங்கள் எடுப்பது எனக்கு பொழுதுபோக்கு. அவ்வப்போது பயணம் செல்லும்போது மறக்காமல் எடுத்து வைப்பது எனது டிஜிட்டல் காமிராவை – அப்போது தானே நிறைய புகைப்படங்களை எடுத்து அவற்றை வலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.  நான் எடுத்த சில புகைப்படங்கள் கீழே.


ரோஜா... ரோஜா....  


ஜெய்விலாஸ் பேலஸ், குவாலியர்.


மருமகள் கோவில், குவாலியர்


நாங்களும் சர்க்கஸ் காட்டுவோமில்ல.... தில்லி விலங்கியல் பூங்கா 


பேடாகாட், ஜபல்பூர்

புகைப்படக்கலை என்பது மிகவும் செலவு வைக்கும் ஒரு விஷயம் என்பதால் முன்பெல்லாம் பலர் இதில் அவ்வளவாக விருப்பம் காட்டியதில்லை. இப்போது டிஜிட்டல் காமிராக்களால் அதிக தொடர் செலவு இல்லை என்பதால் நிறைய பேருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இன்று வலைச்சரத்தில் புகைப்படங்கள் பற்றிய வலைப்பூக்களை பார்க்கலாம்.  இன்றைய வலைச்சரத்தில் மனோரஞ்சிதம் மணம் வீசுகிறது.  நுகர்ந்து மகிழுங்கள்….

மீண்டும் நாளை சந்திப்போம் வேறொரு மலரோடு!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

வியாழன், 5 ஏப்ரல், 2012

தாழம் பூவே வாசம் வீசு….



தாழம்பூ என்றால் உடனே என் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாறுபட்ட ஒரு வேடத்தில் நடித்த “கை கொடுக்கும் கை” படத்தில் வரும் “தாழம்பூவே வாசம் வீசு! தாயின் தாயே கொஞ்சிப் பேசு!” என்ற இனிய பாடல் தான். இன்றைய பகிர்வினை இந்த இனிய பாடலுடன் ஆரம்பிப்போமே!


என்ன நண்பர்களே இனிமையான தாழம்பூ பாடலைப் பார்த்து ரசித்தீர்களா? இனி விஷயத்திற்கு வருகிறேன்.

இன்றைய வலைச்சரத்தில் நான் தொடுத்திருப்பது தாழம்பூ. இந்தத் தாழம்பூவை சிவபெருமானுக்கு பூஜை செய்யப் பயன்படுத்துவதில்லை.  ஏன் என்றால் அதற்கு ஒரு கதை இருக்கிறது! 

படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய  திருமாலும்  இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மகா சிவராத்திரி நாளாகும். [நன்றி விக்கிப்பீடியா!]

என்ன கதை படிச்சீங்களா? நல்லா இருந்ததா?

இயற்கை அன்னை எத்தனை எத்தனை வியப்பான விஷயங்களை நமக்குத் தந்திருக்கிறாள். மரங்கள், செடி-கொடிகள், விலங்குகள், பறவைகள், நீர் நிலைகள் என அள்ளி அள்ளித் தந்திருக்கிறாள். நெய்வேலி நகரில் மா, பலா, புளி, முழு நெல்லிக்காய், அறி நெல்லிக்காய், வேம்பு, கல்யாணமுருங்கை, முருங்கை, எலுமிச்சை, வாழை என விதம் விதமாய் மரங்கள் சூழ வாழ்ந்து மரங்களின் அருமையை உணர்ந்தவன்.

இயற்கையைப் போற்றும் பதிவுகள் தமிழில் எழுதுபவர்கள் மிகக் குறைவுதானோ!  அப்படி எழுதுபவர்களும் அவ்வப்போது தான் எழுதுகிறார்கள்.  அப்படிப் பட்ட இயற்கை பற்றிய பகிர்வுகளை, இன்றைய வலைச்சரத்தில் தாழம்பூ சரமாகத் தொடுத்திருக்கிறேன். 

வந்து பார்த்து இயற்கையை ரசியுங்களேன் நண்பர்களே.

மீண்டும் நாளை சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 4 ஏப்ரல், 2012

கொன்றைப் பூ…. கடைமொழி மாற்றுப் பாடல்



ஆஸ்திரேலியாவின் தேசிய மலர் கொன்றை மலர். 
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலின் தல விருட்சம் கொன்றை மரம்.
சிவ பெருமானுக்கு உகந்த மலர் கொன்றை மலர்.
தமிழ் இலக்கியத்தில் பல இடத்தில் வரும் ஒரு மலர் கொன்றை மலர்.

அப்படி இலக்கியத்தில் வரும் கொன்றை மலர் பாடல் கீழே!

கொன்றை மலர் தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்

- காளமேகப் புலவர்.

இது ஒரு கடைமொழி மாற்றுப் பாடல். கடைசி அடியை முதலில் வைத்து படித்தால், காளமேகப் புலவர் சொல்லவந்தது புரியும்.

”சிக்கலில் வாழும் சிவபெருமான் கொன்றை மலர் மாலை தரித்தவர். கோபாலன் ஆன கண்ணன் புல்லாங்குழல் ஊதினார். நீண்ட சடை உடைய சிவபெருமான் ருத்திராட்சம் [அக்கு] அணிந்திருந்தார். மாயனான திருமால் பார்க்கடலில் ஆதிசேஷன் மீது துயில் கொண்டு இருந்தார்” என்பது இப்பாடலின் பொருள்.

இந்த பாடலில் சொல்லப்பட்ட கொன்றை மலருக்கு ஒரு சிறப்பு. இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மலரும் அற்புத மலர். அது போலவே நம் எல்லோருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தானே பிறந்த நாள் வருகிறது [அதுக்குன்னு 29 ஃபிப்ரவரி பிறந்தவருக்கு நாலு வருஷத்துக்கு ஒரு முறை தான் பிறந்த நாள் வரும்னு சொல்லக்கூடாது!]. 

இந்த கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்கி, பார்ப்பவர்கள் கண்ணுக்கு விருந்து படைக்கிறது. அது போலவே இன்றைய வலைச்சரத்தில் பிறந்த நாள் பதிவுகள், வாசிப்பவர்களுக்கு விருந்து படைக்கிறது.

அது என்ன இன்னிக்கு பிறந்த நாள் பதிவுகள்? வலைச்சரத்துக்கு வாங்க, இன்னிக்கு யாருடைய பிறந்த நாள் எனத் தெரியும் உங்களுக்கு!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

செண்பகப் பூ…. எழுத்தாளர் யார்?


[செண்பகப் பூ]

”அன்று சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி.  போதாதற்கு வானத்தைக் கருமேகங்கள் மூடியிருந்தன.  இரண்டொரு மழைத்தூறலும் விழுந்தது. 
 
அத்தகைய காரிருளில் காவேரி நதியின் ஓரமாக ஜலத்தைக் கிழித்துக் கொண்டு படகு செல்லும் சலசலப்புச் சத்தம் கேட்டது. கொஞ்சம் உற்றுப் பார்த்தோமானால், ஒரு சிறுபடகு கிழக்கேயிருந்து, மேற்கே கரையோரமாகப் போவதைக் காணலாம். படகில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பதும் மங்கலாய்த் தெரிகிறது. கரையில் நின்ற வண்ணம் ஒருவர், படகைக் கயிற்றினால் இழுத்துக் கொண்டு போவதும் தெரிகிறது.”
 
”ஏறக்குறைய நள்ளிரவு ஆன சமயத்தில், X படகை நிறுத்தி மெல்லிய குரலில், ‘Y!, இறங்கு! வந்து விட்டோம்!’ என்றான்”.  
 
“X படகை அங்கிருந்த மரத்தின் வேரில் கட்டினான்.”
 
”பிறகு இருவரும் கரைமேல் ஏறினார்கள்.  அங்கே ஒரு நீண்ட மதிற்சுவர் இருந்தது. அந்தச் சுவரில் ஒரு வாசற்படி காணப்பட்டது. அதன் கதவு பூட்டியிருந்தது. X தன் மடியிலிருந்து ஒரு கொத்துச் சாவியை எடுத்து ஒரு சாவியினால் பூட்டைத் திறந்தான்.” 
 
”இருவரும் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள்”.  
 
”’கம்’ என்று செண்பகப் பூவின் நறுமணம் வந்தது.”

என்ன வெங்கட்? என்னவோ X – Y படகில் பயணம் செய்கிறார்கள், பயணத்தின் முடிவில் பூட்டைத் திறந்து உள்ளே போனால் செண்பகப் பூ வாசம் என்று சொல்றீங்க! என்னதான் சொல்ல நினைக்கிறீங்க? என்று கேட்பவர்களுக்கு…..

மேலே உள்ளது ஒரு பிரபலமான எழுத்தாளரின் ஒரு நாவலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி. எழுத்தாளரைக் கண்டுபிடிப்பது பிரம்ம சூத்திரம் அல்ல. எழுத்தாளரையும் நாவலையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்… 

மேலே சொன்னது போலவே செண்பகப் பூ மணம் கமழும் பயணப் பதிவுகள் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். வந்து பார்த்து ரசியுங்களேன்…..

மீண்டும் நாளை சந்திப்போம் வேறோரு மலரோடு…

நட்புடன்

வெங்கட். 
புது தில்லி.



திங்கள், 2 ஏப்ரல், 2012

வலைச்சரத்தில் மகிழம்பூ….


மகிழம் பூ….. 


மரத்தில் உதிரும் மகிழம்பூ
மகிழ்ச்சியூட்டும் மகிழம்பூ!
நூலில் கோர்த்து அணியும்பூ
நெஞ்சம் போற்றி மகிழும் பூ!
வண்டிச் சக்கரம் போன்றதாம்
வடிவம் ரொம்பச் சின்னதாம்!
மணிச்சரம் போல் தொடுக்கலாம்
மாலையாக்கிச் சூடலாம்!
பூத்தவுடனே வாசம்
பொங்கிப்பொங்கி வீசும்!
வாடும்போதும் வாசம்
வள்ளல் போல வீசும்!
இரவில் வீழ்ந்த பூவை
எடுத்துச் சூடலாம் காலை!

-    கவிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்.

வலைச்சர ஆசிரியர் – பதிவுலகில் சில பதிவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு அந்தஸ்து! நான் பதிவுலகில் கால் பதித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள், இல்லை இல்லை, மாதங்கள் கழித்து எனக்கு அந்த அந்தஸ்து இப்போது கிடைத்திருக்கிறது. ஆம். இன்று முதல் ஆரம்பிக்கும் வாரத்தில் வலைச்சரத்தில் நான் தொடுக்கப் போகிறேன் சரம்சரமாய் வலைப்பூக்கள்… வலைச்சரத்தில் முதல் பூவாய் மகிழம்பூ! என் சுயச்சரமாக!

வலைச்சர ஆசிரியர் பதவி இப்போது தான் வாய்த்தது என்றாலும் வலைச்சரம் எனக்கோ, நான் வலைச்சரத்திற்கோ புதியவன் இல்லை. எனது வலைப்பூ இது வரை இருபது முறை வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. எனது வலைப்பூவினை அறிமுகம் செய்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

இப்படி மகிழம்பூவாய் ஒரு சுயச்சரம் இன்றைய வலைச்சரத்தில். வந்து பாருங்களேன்…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.