எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, September 17, 2015

4000 கொடுத்தால் 75000!


 படம்: இணையத்திலிருந்து.....

சமீபத்தில் திருவரங்கத்திலிருந்து அலைபேசியில் ஒரு அழைப்பு.  “அண்ணே ஒரு சின்ன உதவி வேணும்.  தில்லில ஒரு முகவரி சொல்றேன். அது எங்க இருக்கு?, அங்கே கொஞ்சம் எனக்காக போய் விசாரிக்க முடியுமா?இப்படித் தான் ஆரம்பித்தது அவரது அழைப்பு! சரி ஏதோ விஷயம் போல இருக்கு என நானும் “சொல்லுங்க! என்ன முகவரி? என்ன விஷயம்?என்று கேட்க அவர் சொன்ன விஷயம் – 4000 ரூபாய் கொடுத்தால் 75000 ரூபாய்!

ஒரு விளம்பரம்.  ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்களாக சொல்லிக்கொண்டு ஒரு விளம்பரம் – 4000 ரூபாய் மட்டும் கொடுத்து 75000 மதிப்புள்ள பல்வேறு பொருட்களை குறிப்பாக 25000 மதிப்புள்ள நவீன தொடுதிரை அலைபேசி, காமெரா, LED தொலைக்காட்சி என பலவற்றை இலவசமாக நீங்கள் பெற முடியும்! ராஜ பரம்பரை என்று வேறு சொல்லவே நிச்சயம் உண்மையாகத் தான் இருக்கும் என அந்த விளம்பரங்களைப் பார்த்த அவர்  முடிவு செய்து விட்டாராம். 

இந்த திட்டம் நல்ல திட்டமாக தெரிகிறதே, எவ்வளவு உழைத்தும் நம்மிடம் பணம் சேர்வதில்லையே என இந்த திட்டத்தில் சேர்ந்திருக்கிறார்.  முதலில் தில்லியில் உள்ள முகவரிக்கு தனது முகவரியைத் தெரிவித்து திட்டத்தில் சேர்வது பற்றிய தகவலை அனுப்ப, அவர்களும் இவருக்கு அலைபேசியில் அழைத்து விவரங்களைத் தந்திருக்கிறார்கள். 

சில நாட்களுக்குள் அவரது முகவரிக்கு கூரியர் மூலம் ஒரு பார்சல் வர, அதை வாங்கிக் கொண்டு கொண்டு வந்தவரிடம் 4000 ரூபாயைக் கொடுக்க, அவரும் அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். அதன் பிறகு இவர்கள் ஆர்வத்துடன் பார்சலை பிரித்துப் பார்க்க அதிலே புத்தம் புதிய அலைபேசியோ, காமிராவோ இல்லை! அதில் இருந்தது வெறும் பேப்பர் துண்டுகளும் ஒரு சில கற்களும் மட்டுமே....

அதிர்ச்சி அடைந்த அவர் தில்லியில் உள்ளவருக்கு அலைபேசியில் அழைக்க, அங்கே பதில் இல்லை.  பல முறை தொடர்ந்து அழைத்த பிறகு ஒருவர் பேச, அவரிடம் பேப்பர் குப்பை மட்டுமே இருந்ததைச் சொல்ல, ஓஹோ,  அப்படியா? தவறு நடந்து விட்டது போல, நாங்கள் இன்றே மீண்டும் அனுப்புகிறோம்என்று சொல்லி இருக்கிறார்.  சில நாட்கள் காத்திருந்த பின் வராமல் போகவே, மீண்டும் அலைபேசி அழைப்பு. இப்படி பல முறை சொன்ன பிறகு இவருக்கு கோபம் வந்து அலைப்பேசி மூலம் திட்ட, தில்லியிலிருந்து பேசிய நபர் “உன்னால என்ன செய்ய முடியுமோ செய்....  நீ கொடுத்த காசு திரும்ப கிடைக்காது, பொருட்களும் கிடைக்காதுஎன்று சொல்லி விட்டாராம்.

அதற்குப் பிறகு எத்தனை முறை அழைத்தாலும் அவர்களுடன் பேச முடியவில்லை.  கொடுத்த 4000 ரூபாயும் ஸ்வாஹா... இதைத் தவிர அலைபேசி அழைப்புகளுக்கு ஆன செலவும் சேர்ந்து கொண்டது. கூடவே ஏமாந்து விட்டோமே என்ற மன உளைச்சலும்.... பணம் இருந்திருந்தால் நல்ல வழியில் பயன்படுத்தி இருந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்து கஷ்டப் படுத்தி இருக்கிறது. 

நான் தில்லியில் இருப்பதால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க என்னை அழைத்தாராம்.  அவரிடம் தில்லி அலைபேசி எண்ணையும், முகவரியையும் கேட்டு வாங்கினேன்.  அலைபேசியில் அழைத்து ஹிந்தியில் பேசி விசாரிக்க “ராங் நம்பர் ஜி!என்று வைத்து விட்டார்கள்.  முகவரி பார்த்து அப்பகுதியின் அருகில் இருக்கும் நபரை அங்கே சென்று பார்க்கச் சொல்ல, முகவரியில் யாரும் அப்படி இல்லையாம்.  சில நாட்களுக்கு முன்னர் இருந்தவர்கள் காலி செய்து விட்டார்கள் என்று தெரிந்தது.

இவர்களது வேலையே இது தான்.  ஒவ்வொரு இடமாக மாறி மாறி வலை விரித்து அதில் சிக்கியவர்களிடம் கிடைத்ததை சுருட்டுவது தான் இவர்களுக்கு வேலை.  4000 ரூபாய் கொடுத்தால் 75000 ரூபாய் கிடைக்கும் என்று நம்பும் மக்களை என்ன சொல்ல! மீண்டும் அவருக்கு அலைபேசியில் அழைத்து உங்களது பணத்தினை மறந்து விடுங்கள். வேண்டுமெனில் காவல் துறையில் யாராவது நண்பர்கள் இருந்தால் அவர்கள் மூலம் புகார் செய்யுங்கள் எனச் சொன்னேன். அதுவும் காசு கொடுக்காது வேலை நடக்கும் என்றால்! 

ஏமாந்து போகும் நபர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.... வேறென்ன சொல்ல!

என்றென்றும் அன்புடன்

42 comments:

 1. ஆஹா, நல்ல ஐடியா கொடுத்தீர்கள், நாகராஜ். இன்றே ஒரு கம்பெனி ஆரம்பித்து விடுகிறேன். நீங்கள்தான் முதல் கஸ்டமர். 4000 ரூபாய் கொடுத்து 75000 ரூபாய் பொருட்கள் வேண்டுமா? ஒரு பிச்சைக்காரன் பரம்பரை கேட்கிறது. உதவுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஐ.... ஆசை தோசை அப்பளம் வடை! நீங்க இனிமே தான் ஆரம்பிக்க போறீங்க.... நான் ஏற்கனவே ஆரம்பிச்சுட்டேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 2. நான் வெள்ளை மாளிகையை விற்காலம் என நினைக்கிறேன் உங்கள் ஊரில் யாரவது இளிச்சவாயன் இருந்தால் சொல்லுங்கள் அவருக்கு ஒரு லட்சத்தீற்கு அதை விற்க நான் ரெடி ஹீஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. யார் வீட்டு சொத்தை யார் விற்பது 300 வருடங்களுக்கு முன்பே அது எங்க பரம்பரை சொத்தாக்கும். அதை வாடகைக்கு விட்டிருக்கிறோம் அண்ணாச்சி நியாபகம் இருக்கட்டும்.

   Delete
  2. ரொம்ப காலத்துக்கு முன்னாடி, ஒருத்தன் ஈஃபல் டவரையே வித்திருக்கான்.

   Delete
  3. ஏற்கனவே வெள்ளை மாளிகை ஒருத்தர் வாங்கிட்டாரே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
  4. ஆஹா அது உங்க சொத்தா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அன்பே சிவம்.

   Delete
  5. நம்ம ராஷ்ட்ரபதி பவன் கூட விக்கலாம்னு இருக்காங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 3. காலங்காலமாக இவை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. நாம் சுதாரித்துக்கொள்ள வேண்டியது அவசியம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete

 4. இது போன்று நடப்பவைகள் பற்றி ‘ஏமாற்றுவதும் ஒரு கலை’ என்ற தலைப்பில் எனது பதிவில் எழுதியிருந்தேன், ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரைக்கும் ஏமாற்றுகிறவர்களுக்கு கொண்டாட்டம்தான்

  ReplyDelete
  Replies
  1. அந்த நபர் அலைபேசியில் அழைத்து இதைச் சொன்னபோது உங்கள் கட்டுரைகளைத் தான் நினைத்துக் கொண்டேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. உண்மைதான் ஐயா
  உழைக்காமல் சம்பாதிக்க ஆசைப் படுபவர்கள் இருக்கும் வரை
  இதுபோன்றஏமாற்றுப் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள்
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. பல வருடங்களுக்கு முன்பாக வேக்கூம் கிளீனர் ஒன்று ரூ 300 க்குத் தருவதாக அந்த படமும் அதில் இருந்தது. இன்டர்நெட் இல். அனுப்புபவர் என்கிருந்து என்ற விவரம் இல்லை.

  ரூ 300 தானே என்று நானும் ஆர்டர் செய்தேன். கிடைத்தது வாகும் கிளீனர் .தான் ஆனால் பொம்மை . கையில் வைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய பின்னை அல்லது அதை விட சிறிய துகளை ஈர்க்கிறது.

  வேடிக்கையான அனுபவம்.

  எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் ...
  எண்ணுவம் என்பது இழுக்கு.

  விநாயகனை வேண்டி எல்லாச் செயலையும் புரிய
  நல்லது நடக்கும்.

  நம்பி அந்த
  தும்பிக்கை ஆள்வானை நாம்
  வழி படுவோம்.

  வேங்கடநாகராஜ் , அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும்
  எனது வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.
  சென்னை வரும்போது செல் அடியுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. சென்னை வரும் போது பெருமாபாலான சமயங்களில் இரவு அல்லது அதிகாலை..... அதனால் தான் யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்த பயணத்தின் போது அழைக்க முயல்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   Delete
 8. ஆசையே துன்பத்துக்கு காரணம்
  அதிக ஆசை அதிக துன்பம் + நஷ்டம்
  பேராசை பெருந்துன்பம் + பெரும் நஷ்டம்
  பணம் கட்டுவதற்கு முன் கேட்டிருந்தாலாவது
  பரவாயில்லை! இப்போது சொல்லி என்னத்தை பண்ண..?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அன்பே சிவம்.

   Delete
 9. நான் சிறுவனாக இருக்கும் போது பேப்பரில் அடிக்கடி இதுபோன்ற விளம்பரங்கள் வரும். அப்போது டேப்ரெக்கார்டர் மோகம். அதனால் குறைந்த விலைக்கு அவற்றை அனுப்புவதாக விளம்பரம் செய்வார்கள். நம்பி அனுப்புபவர்களுக்கு கல்லும் குப்பையும்தான் வரும். நல்ல விழிப்புணர்வு பதிவு!
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 10. கூடவே ஒரு கஷ்ஷ்டமான கணக்கும் கொடுத்திருப்பார்களே!

  பிள்ளையாரப்பா! எல்லோரையும் காப்பாத்துப்பா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 11. ஏமாந்தவர்தான் குற்றவாளி கொஞ்சமாவது .யோசிக்க வேண்டாமா ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 12. வணக்கம்
  ஐயா
  பதிவின் வழி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா த.ம6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 13. நம் மக்களுக்குக் குறைந்த செலவில் விலை உயர்ந்த பொருட்களைப்பெறுவதில் உள்ள மோகம் ஒழிந்தால் தான் இம்மாதிரி ஏமாற்று வேலைகள் குறையும். இவரைப் போன்றவர்கள் எவ்வளவு பட்டாலும் திருந்தவே மாட்டார்கள். :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 14. அடப் பாவமே. இன்னுமா இதெல்லாம் நம்புறாங்க.. ஹ்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   Delete
 15. என்னிடம் ஒரு 150 வருடங்களுக்குமுன் வெளியான புத்தகம் ஒன்றுண்டு. பெயர் 'மதிமோச விளக்கம்'. இதுபோல் நூற்றுக்கணக்கான ஏமாற்றுவித்தைகள் குறித்த அருமையான தகவல்கள். தப்பெல்லாம் எப்போதும் ஏமாளிகள் மேல்தான்!

  ReplyDelete
  Replies
  1. மதிமோச விளக்கம்..... பெயரே செமையா இருக்கு......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   Delete
 16. டெல்லி செட் ரேடியோ என்று சொல்லி அந்தக் காலத்திலிருந்தே நடக்கும் ஒரு கூத்து இது! நிறையப் பேர்கள் செங்கல் வாங்கி இருப்பர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 17. தேவைாயான விழிப்புணர்வளிக்கும் பதிவு நண்பரே.
  எனக்கு இதுபோல எண்ணிலடங்கா மின்னஞ்சல்கள், கணக்கிலடங்காத குறுந்தகவல்கள், நான்கு அலைபேசி அழைப்புகள், 2 தொலைபேசி அழைப்புகள் வந்தன அவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை.
  உழைக்காத பணம் நிலைக்ககாது! என்பது எனது கருத்து.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் இரா. குணசீலன்.

   Delete
 18. பாவம், 4000 க்கு 75,000 கொடுக்க அவர்களுக்கு என்ன வேறு வேலை இல்லையா என யோசிக்க மறந்துவிட்டாரே ! எல்லாம் பேராசைதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 19. அடச் சே ஒரு 4 நாள் வலைத்தளம் வர முடியாம போன சைக்கிள் காப்ல என்னவெல்லாமோ டீல் நடந்து வித்து, வாங்கி இருக்காங்க....அடடா வெள்ளை மாளிகை, ஈஃபில் டவர், ராஷ்ட்ரபதி பவன் எல்லாம் போச்சா....ஹப்பா இங்க அம்மா மாளிகையாவது விட்டு வைச்சாங்களே....அதுக்குக் கிட்ட யாரும் போக முடியாதுன்றதுனாலயோ...ஹஹ

  இந்த மாதிரியான ஏமாற்று வேலைகள் இப்போதும் தொடர்கின்றது என்பது தெரிகின்றது...

  ReplyDelete
  Replies
  1. ஏமாந்து போக பலத்த போட்டி இருக்கும் வரை ஏமாற்று வேலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....