செவ்வாய், 15 செப்டம்பர், 2015

டெங்கி ஜூரமும் தில்லியும்



ஒவ்வொரு வருடமும் இந்த நாட்களில் தில்லியை டெங்கி [Dengue] ஜுரம் ஆட்டிப் படைக்கிறது! இந்த வருடமும் விதிவிலக்கல்ல. ஜுரத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் தான் மிக அதிகம் என்று செய்திகளிலும், ஊடகங்களிலும் படிக்கும்/பார்க்கும் போது மனதில் ஒரு கலக்கம்.

அரசாங்கமும் பொது மக்களும் சேர்ந்தால் இந்த டெங்கி ஜுரம் வருவதற்கான காரணிகளை அழிக்க முடியாதா? எச்சரிக்கை தகவல்களை அரசு சொல்லிக் கொண்டே இருந்தாலும், என் வீடு சுத்தமாக இருந்தால் போதும், அடுத்தவர்களைப் பற்றி எனக்கென்ன கவலைஎன தேவையில்லாத கார் டயர்கள், பூந்தொட்டிகள் ஆகியவற்றை தெருவில் போட, அதில் தேங்கிய மழை நீரில் டெங்கி உண்டாக்கும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் அனைவருக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

தில்லி போன்ற பெருநகரத்தில் நிறைய மருத்துவ வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகளை விட அங்கே வரும் நோயாளிகள் பல மடங்கில் இருக்கிறார்கள்.  அதனால் பல நோயாளிகள், அவர்களை மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்க்க வேண்டிய அவசியம் இருந்தாலும், முதலுதவி செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப் படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகள் பற்றி சொல்லவே வேண்டாம். பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் ஐந்து நட்சத்திர விடுதிகள் போலத்தான் செயல்படுகின்றன.

காசு கொடுத்தால் அங்கே அனுமதி கிடைக்கும். அதிக பண பலம் இல்லாத நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியாமலும், தனியார் மருத்துவமனையில் கேட்கப்படும் பெருந்தொகையைக் கொடுக்க வழியில்லாமல் திரிசங்கு லோகத்தில் திண்டாடுகிறார்கள்.  பணம் படைத்தவர்களும், அதிகார பலம் படைத்தவர்களும் சிறந்த சிகிச்சை பெறுவதில் எந்த வித தடையும் இருப்பதில்லை.  ஒன்றும் இல்லாதவர்களும் “விதியைநொந்து கொண்டு வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்என்று இருந்துவிடுகிறார்கள். 


 படம்: இணையத்திலிருந்து....

சாதாரண நாட்களிலேயே மருத்துவமனைகளின் நிலை இப்படி இருக்க, டெங்கி ஜூரம் அதிகமாக பரவி இருக்கும் இந்த நேரத்தில் அளவுக்கதிகமான நெருக்கடி. டெங்கி ஜூரத்துடன் வரும் அத்தனை நோயாளிகளும் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை தர வேண்டும் என அரசு ஆணை பிறப்பிக்கும் அளவுக்கு நெருக்கடி.  பெரும்பாலான மருத்துவமனைகள் படுக்கை இல்லை என பெரும்பாலான டெங்கி நோயாளிகளை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றன. 

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு ஏழு வயது சிறுவன். டெங்கி ஜுரத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அவனது பெற்றோர்களால் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட, அங்கே படுக்கை இல்லை என திருப்பி அனுப்பப்படுகிறார்.  தொடர்ந்து அடுத்து மருத்துவமனை, அங்கிருந்தும் திருப்பப்பட, அடுத்த மருத்துவமனை. இப்படி தொடர்ந்து ஏழு மருத்துவமனைகள் திரும்பி அனுப்பிவிட, எட்டாவது மருத்துவமனைக்குச் சென்றபோது காலம் கடந்து விட்டது. சிறுவனை காலன் அழைத்துக் கொண்டான்......

இந்த சோகத்தினை விட பெரிய சோகம் அதன் பிறகு நடந்தது. தனது ஒரே மகனை இழந்த சோகத்தில் இருந்த பெற்றோர்கள் மகனை சிதையில் மூட்டியபிறகு, அந்த இரவிலேயே அவர்களது வீட்டின் மொட்டைமாடியில் இருந்து கீழே விழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  முதலாவது கொலை – தகுந்த நேரத்தில் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துக் கொண்டு சிகிச்சை அளித்திருந்தால், அச்சிறுவன் பிழைத்திருக்கக் கூடும்.  படுக்கை இல்லை என்ற ஒரே காரணம் காட்டாது சிறுவனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தேவையான சிகிச்சை அளிக்க முன்வராத அத்தனை மருத்துவமனை/மருத்துவர்களும் கொலையாளிகள்......

சோகத்தினை தாங்காது பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டாலும் அதனை செய்து கொள்ள தூண்டியதும் இந்த மருத்துவமனைகளே!  மூன்று உயிரிழப்புகள் ஆன பிறகு அரசும் அதிகாரிகளும் பலவித உத்தரவுகளைப் பிறப்பித்தும், காரணம் காட்டும்படி நோட்டீஸ் அனுப்பியும் இருக்கிறது.  கண்கெட்ட பின்னே சூரிய உதயம்...... 

இன்னுமொரு கொடுமையான விஷயம் – தில்லி மாநகராட்சியின் அலுவலகர்கள், இறந்து போன சிறுவனின் வீட்டின் கதவில், “டெங்கிநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வழிமுறைகளை ஒட்டி இருக்கிறது.  கூடவே டெங்கி நோய் காரணிகள் அவ்வீட்டில் இருப்பதற்கான அடையாளமும்..... 


படம்: இணையத்திலிருந்து....

இருக்கும் படுக்கைகளில் ஒரே படுக்கையில் ஒரே சமயத்தில் இரண்டு நோயாளிகள் இருப்பதும் பார்த்திருக்கிறேன்.  அரசின் சில மருத்துவமனைகளில் ஒரு சமயம் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் 6 X 3 கட்டிலில் படுத்து அசையவே முடியாது கிடப்பதையும் பார்த்திருக்கிறேன். இன்னமும் அதே நிலை தான்..... இன்னமும் அந்த இறப்பிற்கான காரணங்களை அலசி, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதிலேயே காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். தில்லி அரசாங்கத்தின் சுகாதாரத் துறை உடனேயே 1000 படுக்கைகளை வாங்க உத்தரவு போட்டிருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தியாக இருந்தாலும் மாற்றங்களும், முன்னேற்றங்களும் இன்னும் தேவை.

என்னமோ போங்க! இந்தியத் தலைநகர்னு தான் பேரே தவிர மிஸ்டர் பொதுஜனம் இன்னும் அல்லாடிக்கிட்டு தான் இருக்கார் இங்கே!

என்றென்றும் அன்புடன்
  
 



32 கருத்துகள்:

  1. கொடுமையிலும் கொடுமை... மிகவும் வேதனை தரும் நிகழ்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமை தான் தனபாலன். ஒரு குடும்பமே அழிந்து போனதே......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. நேற்றைய செய்தித்தாளில் சென்னை தாம்பரத்தில் டெங்கி பரவுவதாக செய்தி படித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. என்றுதான் நம் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களோ
    வேதனைதான் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. தங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத அரசாங்கத்தை எதிர்த்து போராடாமல் மக்களின் இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படி மெளனியாக இருக்கப் போகிறார்களோ?

    இந்த பெற்றோர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு மக்களுக்கி சேவை செய்யாத அதிகாரிகளை அமைச்சர்களை நாலு பேரையாவது போட்டு தள்ளிவிட்டு தற்கொலை செய்து இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  5. உண்மைதான் சகோ,
    எல்லா இடங்களிலும் காணப்படும் கொடுமை இது,,
    என்று மாறும் எனும் மனம் வேதனைதான் மிச்சம்.
    பகிர்வு அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  6. மனதுக்கு கஷ்டம் தரும் செய்தி. அரசு மருத்துவமனைகளில் போதிய வசதி செய்து கொடுத்து அனைவருக்கும் ஏற்றதாழவு பார்க்காமல் மருத்துவ உதவி செய்யவேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  7. இதில் பாதிக்கப்படுபவர்கள் கீழ் மத்தியதர வகுப்பினரும் ஏழைகளும்தான். கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்படாமல் நம் அரசாங்கங்கள் செயல்படுவது வருத்தத்திற்குறியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. வெங்கட் அவர்கள் குறிப்பிட்டது ஒரு நோயாளியைப்பற்றி, தினமும் இதுபோல இன்னும் பல தெர்டர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இரவு நேரங்களில் விபத்துப் பிரிவின் அரசு அவசர சிகிச்சை பிரிவில் நடக்கும் கூத்துக்கள் இதைவிட மோசம், புது தில்லி அரசின் கட்டுப்பாட்டில் மொத்தம் 39-அரசு மருத்துவமனை (24-மணி நேர ) சேவையில் செயல்படுகிறது, இந்த 39-அரசு மருத்துவமனைகளுக்கும் மொத்தம் 15000- படுக்கை வசதிகள் தேவைப்படும் நிலையில் அரசு வெறும் 8000 படுக்கை வசதிகளை மட்டுமே செய்து தந்திருப்பதாக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது, அதிலும் தற்போது 6950 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது என்றும், இது சென்ற 10 வருடங்களாக தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படாமலும் இருப்பதாக அதே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் புது தில்லியை விட அதிக அரசாங்க மருத்துவமை கொண்ட மும்பை படு மோசம் அங்கு இறந்தவர்களின் உடலைக்கூட தேவையானதை எடுத்துக்கொண்டுதான் தருகிறார்கள்.... ஒரு இரண்டு நாள் தொடர்ந்து இந்த இரண்டு நகரங்களின் மருத்துவமையை சுற்றிப்பார்தாலே உங்களின் மனதில் இருக்கும் தன்னம்பிக்கை முழுவதும் காற்றில் பறந்துவிடும். இப்படிக்கு மனம் வருந்தும் கோகி என்னும் கோபாலகிருஷ்ணன் ரேடியோ மார்கோனி. புது தில்லியிலிருந்து .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன். இந்தியா முழுவதிலுமே இருக்கும் வசதிகள் குறைவு தான். தில்லியின் சில பெரிய மருத்துவமனைகளில் இரவு நேரத்தில் சுற்றி இருக்கிறேன் - அவசர சிகிச்சை பிரிவுகளில்! எல்லா இடங்களும் மோசமான நிலைதான்.....

      நீக்கு
  9. இதை படித்தாலே ஜூரம் வருவதுபோல் இருக்கிறது நண்பரே... விளிப்புணர்வு பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. என்ன ஒரு கொடுமை வெங்கட். தில்லியில் இந்த நிலமையா.
    இங்கே ப்ளேக் இருப்பதாக் நேற்று செய்தி படித்தேன். ஆண்டுக்கு ஏழு நபர்களாவது பாதிக்கப் படுகிறார்கள் என்று ஒரே
    கூக்குரல்.
    உயிர் மதிக்கப் படும் நிலை இங்கே,.

    மிக மிக வருத்தமாக இருக்கிறது.
    பத்ரமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  11. டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலைச் சாறுதான் நல்ல மருந்து. சாறு திக்காக இருக்கவேண்டும். இயற்கை முறையில் Blood platelet எண்ணிக்கை குறையாமல் இருக்க அதுதான் ஒரே வழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். பப்பாளி இலைச்சாறு ஒரு நல்ல மருந்து. தில்லியில் இதையும் விற்க ஆரம்பித்து விட்டார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பொன்சந்தர்.

      நீக்கு
  12. இங்கேயும் அதே கதைதான்.நான் அங்கு இருந்தபோது,கூலர் உபயோகத்தில் இல்லதபோது தண்னிர் இருக்கிறதா என்று வந்து பார்த்து அபராதம் போடுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  13. டெல்லியில் வருடா வருடம் தவறாமல் டெங்கு பரவுவதன் காரணம் என்னவோ ?ஆராய்வது நல்லது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  14. நிச்சயமாக மருத்துவமனைகளும், டாக்டர்களும் தான் கொலையாளிகள். எப்படி அவர்களால் குற்ற உணர்வு இல்லாமல் இருக்க முடிகின்றது. அரசும்தான். தனது மக்கள் இவ்வாறு இறப்பதை நினைத்து கொஞ்சமேனும் ஒரு வருத்தம் இருக்காது? என்ன ஆட்சியாளர்களோ அரசு அதிகாரிகளோ? மனம் நொந்துவிட்டது வெங்கட்ஜி இதை வாசித்ததும்.

    நம் ஊரில் இன்னும் பொது சுகாதாரம் மேம்பட வில்லை. அரசும் மக்களும் இருவருமே அதை மேம்படுத்த முனைவதில்லை. மருத்துவமனைகள் கேட்கவே வேண்டாம். இந்தியாவில், மருத்துவ சேவை, கல்வி, பொதுசுகாதாரம் என்று எதுவுமே நல்ல முறையில் நேர்மையாகச் செய்யப்படுவதில்லை.

    அந்த உயிர்களுக்கு யார் பதில் சொல்லுவார்கள்? மனம் வேதனிக்கின்றது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  15. மதுரைத் தமிழன் சொல்லியது போல் அவர்களைப் போட்டுத் தள்ளிவிட்டு செத்திருக்கலாம்...சே மனிதர்களா இவர்கள்...

    இங்குஇருக்கும் ஒரு அரசு மருத்துவ மனையில் நடக்கும் ஊழல்கள் சொல்லி மாளாது. பெண் குழந்தைகளள் பிறந்தவுடன் கடத்த என்று பெண் தாதாக்கள், அல்லக்கைகள் ஆண்கள் தாதாக்கள், பெண் குழந்தைகளை விற்கும் பெற்றோர்கள் என்று ஒரு வியாபாரமே நடக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....