வியாழன், 31 ஆகஸ்ட், 2017

கோனார்க் – சூரியனார் கோவில் – அற்புதச் சிற்பங்கள் - அழிவின் விளிம்பில்….



அரக்கு பள்ளத்தாக்குபகுதி 24

பகுதி 23 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!




கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

Bபிரஜா தேவி கோவில் தரிசனம் முடித்த பிறகு, கோவில் அமைந்திருக்கும் ஜாஜ்பூரிலிருந்து நாங்கள் தங்கியிருந்த புவனேஷ்வர் நகருக்கு வந்து சேர்ந்தோம். இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு நல்ல ஓய்வு. நாள் முழுவதும் பயணமும், அலைச்சலும் இருக்கும் போது, இரவு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்வது மிக முக்கியம். அப்போது தான் அடுத்த நாள் பயணிக்கவும், இன்னும் சில இடங்கள் பார்க்கவும் நமக்கு உடல் ஒத்துழைக்கும்.  பெரும்பால பயணிகள் இரவு வெகு நேரம் உறங்காமல் இருந்து அடுத்த நாள் திண்டாடுவார்கள் – பல குழுக்களில் பயணித்திருப்பதால் அப்படி அவதிப்படும் சிலரைப் பார்த்த அனுபவம் உண்டு! நல்ல உறக்கத்திற்குப் பிறகு நாங்கள் அடுத்த நாள் தங்க முக்கோணம் என அழைக்கப்படும் மூன்று நகரங்களில் [புவனேஷ்வர், கோனார்க், பூரி] இரண்டாம் நகரமான கோனார்க் நோக்கி பயணித்தோம்.



கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

புவனேஷ்வர் நகரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் நகரம் கோனார்க்.  இந்தப் பெயரைக் கேட்டவுடன் உங்களுக்கு இங்கே அமைக்கப்பட்ட சூரியனார் கோவில் நிச்சயம் நினைவுக்கு வரும். வரலாற்றுப் புத்தகத்தில் நிச்சயம் இக்கோவில் பற்றி படித்திருக்க முடியும். மிகவும் பழமையான கோவில்.  இப்போது அழிவின் விளிம்பில் இருந்தாலும், இன்னமும் பல சிற்பங்கள் கண்களைக் கவரும் வண்ணம் இருக்கின்றன. புகைப்படக் கருவிகள் வைத்துக் கொண்டு அலையும் என்னைப் போன்றவர்களுக்கு திகட்டத் திகட்ட புகைப்படங்கள் எடுக்கும் வாய்ப்பு.  நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய ஒவ்வொரு சிலையாகப் படம் எடுத்து வர, இக்கோவிலுக்கு மட்டுமே ஒன்றிரண்டு நாள் இங்கே தங்கும் சிலர் உண்டு. 


கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

நான் எடுத்த புகைப்படங்கள் நிறையவே இருக்கின்றன. அனைத்தையும் இங்கே தருவது முடியாத விஷயம்.  சில படங்கள் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.  மற்றும் சில படங்கள் என்னுடைய முகநூல் தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.  இப்போது கோனார்க் பற்றிய சில செய்திகளுக்கும், தகவல்களுக்கும் வருகிறேன். மற்ற படங்களைப் பார்க்க இங்கே செல்லலாமே.....


கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

கோனார்க் – சூரியக் கடவுளுக்காக அமைக்கப்பட்ட மிகப்பெரிய கோவில். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருகிறார் என்பது நம்பிக்கை. சூரிய பகவானுக்கு அமைக்கப்பட்ட இந்தச் சிறப்பு கோவிலும் ஒரு ரதத்தின் வடிவிலேயே அமைக்கப்பட்டது. மொத்தம் 24 சக்கரங்கள், ஏழு குதிரைகள் – ஒவ்வொரு சக்கரத்தின் விட்டமும் 10 அடி அளவு கொண்டவை. ஏழு குதிரைகளும் பிரம்மாண்டமான வடிவில் அமைந்திருக்கிறது. அமைக்கப்பட்டது 13-ஆம் நூற்றாண்டில்!


கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

கோனார்க் – இரண்டு ஒடியா வார்த்தைகளால் ஆனது இந்தப் பெயர்.  ஒடிய மொழியில் கோனா என்றால் மூலை என்ற அர்த்தம்; அர்கா என்றால் சூரியன்.  சூரிய மூலை என்றும் அழைக்கலாம்! பூரி நகரின் வடகிழக்கு மூலையில் கடற்கரை ஓரமாக அமைக்கப்பட்டது இந்த சூரிய வழிபாட்டுத் தலம். தற்போது கடல் உள்வாங்கி விட்டாலும், அமைக்கப்பட்ட போது கடற்கரை ஓரத்தில் தான் அமைக்கப்பட்டது!


கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

சூரியனை ஆராதிப்பவராக இருந்த முதலாம் நரசிம்மதேவர் காலத்தில், பதிமூன்றாம் நூற்றாண்டில், பன்னிரெண்டு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது இந்தப் பிரம்மாண்டமான ஆலயம். மொத்தம் வேலை செய்தவர்கள் 1200 பேர்! ஆனால் இவ்வளவு பிரம்மாண்டமான ஆலயத்தினை, ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சிற்பங்களும், கலை வடிவங்களும் கொட்டிக்கிடக்கும் அபூர்வக் கலையை கட்டி முடிக்க 12 ஆண்டுகள் [1243 – 1245] மட்டுமே ஆனது என்பது ஆச்சரியமூட்டும் விஷயம்! அந்த 1200 பேரும் இரவு பகலாக உழைத்திருக்க வேண்டும் என்பது திண்ணம்.


கல்லிலே கலைவண்ணம்...
கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

ரபீந்த்ரநாத் தாகூர் அவர்கள் இக்கோவிலைப் பற்றிச் சொல்லும் போது, “Here the language of Stone surpasses the language of man” என்று சொன்னாராம் – கற்கள் பேசும் மொழி! என்ன ஒரு கற்பனை! ஒவ்வொரு சிற்பமும் நம்மோடு பேசுவது போலவே இருக்கின்றன! நுணுக்கமான வேலைப்பாடுகள், விலங்குகள், போர்வீரர்கள், கடவுளர்கள், என பல சிற்பங்கள் இங்கே அமைத்திருக்கிறார்கள்.  கல்லிலே கலை வண்ணம். அதுவும் பிரமிக்க வைக்கும் கலைவண்ணம். எத்தனை உழைப்பு, எத்தனை வியர்வை சிந்தியிருப்பார்கள் அந்த சிற்பிகள். நினைக்கும்போதே மனதில் அவர்கள் மீது மதிப்பு உயர்கிறது!


கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட சூரியனார் கோவிலில் தற்போது மீதி இருப்பது நுழைவாயில் பகுதியும், கோவிலின் சில பகுதிகள் மட்டுமே! இருக்கும் கொஞ்சமும் உப்பு கலந்த காற்றினால் அரிக்கப்பட்டும், பல்வேறு தாக்குதல்கள்/சிலை உடைப்புகளுக்கும் தப்பித்தவை! சிலைகள் பலவற்றிலும் சேதாரங்கள் நிறையவே.  கை ஒடிந்தும், கால் ஒடிந்தும், இருக்கும் சிற்பங்கள், மார்பகங்கள் அறுக்கப்பட்ட பெண்களின் சிலைகள் என நிறையவே அழிவுகள். அவற்றைப் பார்க்கும்போது மனதில் சொல்ல முடியாத வலி!


மாலை நேரச் சூரியன் - விஷ்ணுவின் வடிவம்...
கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா


கோவிலின் மூன்று பக்கங்களில் பிரம்மாண்டமான சூரியனார் சிலைகளும் உண்டு! அவை முறையே காலைச் சூரியன், மதியச் சூரியன், மாலைச் சூரியனின் கிரணங்கள் படும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.  சூரிய தேவனை, மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோரின் ஒட்டுமொத்த உருவமாகவும் சொல்வதுண்டு! ஆகவே காலை நேரத்து சூரியனின் ரேகைகள் படும்படி அமைக்கப்பட்ட காலைச் சூரியன் – படைக்கும் கடவுளான பிரம்மாவாகவும், மதிய நேரச் சூரியனின் ரேகைகள் படும்படி அமைக்கப்பட்ட மதியநேரச் சூரியன் அழிக்கும் கடவுளான சிவபெருமானாகவும், மாலை நேரச் சூரியனின் ரேகைகள் படும்படி அமைக்கப்பட்ட மாலைநேரச் சூரியன் காக்கும் கடவுளான விஷ்ணுவாகவும் உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.  மூன்று சிலைகள் வெவ்வேறு வடிவங்களில் அமைந்திருக்கின்றன. ஒவ்வொன்றுமே நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை.


நுணுக்கமான வேலைப்பாடுகள்....
கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

இப்படி கோவில் பற்றிய தகவல்கள் நிறையவே உண்டு.  வார்த்தைகளால் வடித்துவிட முடியாத பல நுணுக்கமான சிற்பங்கள் இங்கே உண்டு. வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம். நின்று நிதானமாக பார்த்து, அனுபவிக்க வேண்டிய சிற்பங்கள். மேற்புறங்களில் இருக்கும் சிற்பங்கள் EROTIC வகையைச் சேர்ந்தவை என்பதையும் சொல்லி விடுகிறேன்.  சிலைகளில் வடிக்கப்பட்டிருக்கும் வடிவங்கள் – கடவுள்கள், நாட்டியமாடுபவர்கள், இசை விற்பன்னர்கள், யானைகள், குதிரைகள் மற்ற விலங்குகள், புராணத்தில் வரும் கதாபாத்திரங்கள் என பலவும் இங்கே காணக் கிடைக்கும். 


நுழைவாயில் - சிங்கம், யானை மற்றும் மனிதன்...
கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மானடமான சிங்கங்களின் இரண்டு சிற்பங்கள் மனித வாழ்வின் தத்துவத்தினை உணர்த்தும் வடிவமாக அமைக்கப்பட்டதாம்! இரண்டு பிரம்மாண்டமான சிங்கங்களின் உருவங்கள் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் கீழே இரண்டு போர் யானைகள், அந்த யானைகளுக்குக் கீழே மனிதன்! சிங்கம் – மனிதனின் பெருமை[தற்பெருமை!]யையும், யானை செல்வத்தையும் குறிக்கிறது! இவை இரண்டையும் அடைய, மனிதன் எதையும் செய்யத் துணிகிறான். அவற்றாலேயே அழிகிறான் என்பதை, இச்சிலைகள் குறிப்பதாகச் சொல்வதுண்டு!


ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்....
கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

World Heritage Site என UNESCO-வால் அறிவிக்கப்பட்ட இந்த சூரியனார் கோவிலுக்கு நாங்கள் சென்றிருந்த போது, பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.  பராமரிப்பு என்ற பெயரில் சிலைகளின் அழகுக்கு பங்கம் விளைவிக்காமல் இருந்தால் சரி! வேறு ஒரு சிற்பக் கூடத்திற்குச் சென்ற போது ஒரு கருங்கல் சிற்பத்தின் சிதைந்த பகுதிகளை சிமெண்ட் வைத்து பூசிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது! சிலையின் அழகைக் கெடுப்பதாகத் தான் எனக்குத் தோன்றியது. சரி செய்கிறேன் என்ற பெயரில் சிலைகளின் அழகைக் கெடுக்காமல் இருந்தால் சரி.


வாசலில் கடை வீதி!
கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

சூரியனார் கோவில் செல்லும் வழியில் நிறைய கடைகள் உண்டு. கடைகளைப் பார்த்து நின்று விடாமல், உள்ளே சென்று சிற்பங்களின் நுணுக்கமான அழகை ரசித்து திரும்பும்போது நேரமிருந்தால் கடைகளைப் பார்ப்பது நல்லது. கடைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் சிலருக்கு நேரம் போவதே தெரியாது! திரும்பும் போது தேவையான பொருட்களைப் பார்த்து வாங்கலாம்! சுற்றுலாத் தலம் என்பதால் நிறையவே ஏமாற்ற வாய்ப்பு உண்டு! பேரம் பேசத் தெரிந்திருப்பது நல்லது! ஹிந்தியில் பேசினால் புரிந்து கொள்வார்கள் – ஒடிய மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை! தமிழில் தான் பேசுவேன் என்று அடம்பிடித்தால் ஒன்றும் செய்வதற்கில்லை! பொருட்களைப் பார்த்து விட்டு வந்து கொண்டே இருங்கள்! கோவில் வாசலில் சுவையான இளநீர், அதுவும் அன்றைக்கு மரத்திலிருந்து வெட்டப்பட்ட இளநீர் கிடைக்கிறது.  இளநீர் சுவைத்த பிறகு கோனார்க்கிலிருந்து அடுத்த இலக்கு நோக்கி நாங்கள் புறப்பட்டோம்.  நீங்களும் வாருங்கள் போகலாம்!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

38 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  2. சிற்பங்களின் புகைப்படம் நல்லா இருக்கு. கோனார்க் கோவில் பார்க்கவேண்டிய இடம்தான். தொடர்கிறேன். த ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க வேண்டிய இடம் தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. படங்களும் விரிவான தகவல்களுமாகப் பகிர்ந்த விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  4. சிற்பங்கள் பிரமிப்பூட்டுகின்றன ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. அழகான படங்கள் . கணவர் கல்லூரி காலத்தில் கோனார்க் கோவில் பார்த்ததை சொல்வார்கள்.
    பொருட்களை பேரம் பேச முடியவில்லை என்றால் கஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  6. கல்லில் வடிக்கப்பட்டவை என்றாலும் மரச் சிற்பங்கள் போல் காட்சி தருகின்றன :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  7. சிறப்பான விவரங்கள், படங்கள். 'மகாராஜன் உலகை ஆளுவான்..' என்று சிவாஜியும் தேவிகாவும் நடப்பது போலத் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  9. சுவாரஷ்யம்.. மிக நன்றாகப் போகிறது இத்தொடர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  10. அற்புதம்!! அழகு புகைப்படங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  11. என்ன அழகு சிற்பங்கள். பிரமிப்பாக இருக்கிறது. படங்கள் அழகு தகவல்களும் விரிவாகத் தந்தமைக்கு மிக்க நன்றி. மிகவும் ரசித்தோம்!.

    கீதா: வெங்கட்ஜி!! ஹையோ! ஸ்டன்ட்! பிரமித்து வாய் பிளந்தேன்!! என்ன அற்புதமான கலை நுணுக்கம்! இதை வடிவமைத்த சிற்பிகள் அனைவருக்கும் நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! தாகூர் சொல்வது போல் சிற்பங்கள் பேசுங்கின்றனதான்...தத்துவமும் உணர்த்துகின்றனதான்....இங்கு சென்றால் கடைகளாவது...அதெல்லாம் வேண்டாம் இதை மட்டுமே பார்க்க ஒரு நாள் போதாது போல் உள்ளதே...உங்கள் கட்சியாச்சே எனக்கும் வேலை இருக்கும் னெடுநாள் ஆசை இங்கு செல்ல வேண்டும் என்று. சிற்பங்கள் அழிந்து வருவது தெரிகிறது...சிமென்ட் வேறு பூசி அதைச் சரி செய்வதா அது அழகைக் கெடுக்காதோ...

    பொதுவாகவே நான் எந்த இடம் சென்றாலும் அங்கிருக்கும் கடைகளுக்கு கடைசி முக்கியத்துவம் தான். அங்கு ஒரு வேளை இங்கு கிடைக்காதது அல்லது கலைநயம் மிக்க ஏதேனும் இருந்தால் மட்டுமே விசிட் அல்லது கடந்து செல்லுதல்தான் நடக்கும். ஷாப்பிங்க் என்பது மிகவும் குறைவு.
    இடங்கள் பார்க்கக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை வெகுவாகப் ப்யனப்டுத்தி கேமராவிலும் க்ளிக்கிக் கொண்டெ இருப்பேன் ஜி!!

    பெரிய கோயில் போல் இருக்கிறதே!! அருமை அருமை! மிக்க நன்றி வெங்கட்ஜி! மீண்டும் படங்களைப் பார்க்கிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  12. கர்நாடகாவில் உள்ள ஹளேபீடு, பேளூர் கோவில் சிற்பங்கள் போல் கலை நுணுக்கத்தோடு கோனார்க்கில் உள்ள சிற்பங்களும் இருக்கின்றன என நினைக்கிறேன். படங்கள் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  13. அற்புதச் சிற்பங்கள் ஐயா
    போற்றிக் காப்பாற்றப்பட வேண்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. புகைப்படங்களின் அழகு அசர வைக்கின்றது! நான் ரொம்ப நாட்களாக பார்க்க ஆசைப்படுகின்ற இடமிது. நுணுக்கமாக ரசிக்க நேரம் நிறைய ஒதுக்கிச் செல்ல வேண்டும். தகவல்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்... முடிந்த போது சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  15. கோனார்க் கோயில் பற்றி அறிந்திருந்தாலும் இவ்வளவு தகவல்கள் அறிந்ததில்லை.. பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.. சிறப்பான பயணத்தொடர். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீத மஞ்சரி.

      நீக்கு
  16. பார்க்க விரும்புகின்ற இடங்களுள் இதுவும் ஒன்று. நேரம் எப்போது கூடி வருகின்றதோ.. படங்கள் அத்தனையும் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று சிற்பங்களின் அழகினை ரசித்து வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  17. கும்பகோணம் சூரியனார் கோவில் இதை ஒப்பிடும்போது ஏதாவதுஒற்றுமை தெரிகிறதா இரு கோவில்களுமே சூரியனுக்கு என்பது தவிர

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரியனுக்கென்று இன்னும் சில கோவில்கள் உண்டு. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலும் நான் பார்த்ததுண்டு. கும்பகோணம் சூரியனார் கோவில் சென்றதில்லை - நினைவு தெரிந்து.

      குவாலியர் அருகே பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் விவஸ்வான் மந்திர் என்ற பெயரில் அழைக்கப்படும் சூரியனார் கோவில் உண்டு. அங்கே சென்றது பற்றி எழுதிய பதிவின் சுட்டி கீழே....

      https://venkatnagaraj.blogspot.com/2011/10/blog-post.html

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  18. கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா (குறுக்கு வெட்டுத் தோற்றம்) சூப்பர் ஜி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

      நீக்கு
  19. ஒரிசாவில் செல்லும் இடமெல்லாம் இளநீர் வாங்கிக் குடிக்கலாம். சுவை மட்டுமில்லாமல் விலையும் குறைவு. அதே போல் காய்கறிகள், பழங்களும், புத்தம்புதியனவாக வழியெங்கும் கிராமங்களின் எல்லைகளில் காணக் கிடைக்கும். நாங்க அங்கிருந்து கல்கத்தா செல்ல வேண்டி இருந்ததால் வாங்க முடியவில்லை. அந்தக் குறை இன்னமும் உண்டு. ஆனால் நிறைய இளநீர் குடித்தோம். கோனார்க்கில் எங்களால் மேலே ஏற முடியவில்லை. அங்குள்ளவர்களும் தடுத்தார்கள். ஆகவே வழிகாட்டிகள் எங்களைச் சுற்றி உள்ளவற்றை மட்டுமே காட்டி அழைத்து வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லும் இடமெல்லாம் இளநீர்! உண்மை. நிறைய இடங்களில் நாங்களும் இளநீர் அருந்தினோம்.

      நாங்கள் உள்ளேயும் சென்று வந்தோம். உட்புறமும் சிற்பங்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....