வியாழன், 16 நவம்பர், 2017

திருவையாறு கோவிலும் நயன்தாராவும்!


ஐயாரப்பர் கோவில் பிரதான கோபுரம், திருவையாறு

சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது விஜயவாடாவிலிருந்து வந்திருந்த குடும்ப நண்பர்களை அழைத்துக் கொண்டு, தஞ்சாவூர் காவிரி கரையோர கோவில்கள் சிலவற்றிற்குச் செல்ல வேண்டியிருந்தது. நாங்கள் நான்கு பேர் மட்டுமே என்பதால் ஒரு சிறிய வாகனத்தினை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு, நண்பருடைய குலதெய்வ கோவிலான வரகூர் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சென்று அவரது வழிபாடுகளை முடித்துக் கொண்ட பிறகு நாங்கள் சென்ற இடம் திருவையாறு. திருவையாறு கோவிலுக்குச் சென்று வர வேண்டும் என்பது எனது பெரியம்மாவின் ஆசை. மதியம் பன்னிரெண்டு மணிக்குள் நடை சாற்றிவிடுவார்கள் என்பதால் வேகவேகமாக அங்கே சென்று சேர்ந்தோம்.




கோபுர வாயிலில் நாங்கள் சென்று சேர்ந்த போது அங்கே நிறைய வாகனங்கள் நின்று கொண்டிருக்க, பரபரப்பாக இருந்தது. எங்கள் வண்டியை நிறுத்துவதற்கே இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்க, எங்களை ஓரிடத்தில் இறக்கி விட்டு, நீங்கள் கோவிலுக்குச் சென்று வாருங்கள், நான் இடம் பார்த்து நிறுத்திக் கொள்கிறேன் என்று சொன்ன ஓட்டுனர் மதி, அங்கே நின்றிருந்த வாகனங்களில் பேருந்து போல இருந்த ஒரு வாகனத்தினைப் பார்த்து, ”சினிமா ஷூட்டிங் நடக்குது போல, Caravan வந்துஇருக்கு!” என்று சொல்ல, பரபரப்பிற்குக் காரணம் தெரிந்தது. ராஜகோபுரம் வழியே உள்ளே செல்ல எங்கெங்கும் ஒயர்கள் மயம்! சினிமா எடுப்பவர்கள் குழுவில் உள்ளவர்கள் அங்கும் இங்கும் எங்கும் நிறைந்திருந்தார்கள். கோவிலுக்கு வந்திருந்த பலருக்கும் யார் படம் என்று தெரிந்து கொள்வதில் தான் விருப்பம் இருந்தது! சினிமா காரர்களின் கும்பலில் உள்ளே புகுந்து சென்று கோவிலுக்குள் செல்ல வேண்டியிருந்தது.

சன்னதி ஒன்றின் வாசலில் பெரிய கேமராவை வைத்து படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கையில் மைக் வைத்துக் கொண்டு டைரக்டர் காட்சியை விளக்கி, “ஸ்டார் கேமரா, ஆக்‌ஷன்!” சொல்லிக் கொண்டிருந்தார். எங்கும் கும்பல், எல்லா இடங்களிலும் சினிமாவா இல்லை உண்மையான பக்தர்களா என்று தெரியாத அளவுக்கு இருந்தது! எல்லோரையும் தாண்டி உள்ளே செல்ல, ஸ்வாமி சன்னதியில் வெறிச்சோடிக் கிடக்க, நிம்மதியான தரிசனம். நின்று நிதானமாக தரிசனம் செய்து, சுற்றுப் புறங்களில் இருந்த ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றை கேமராவில் சிறைபடுத்தினேன். பொதுவாக கோவில்களில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. அன்று யாருமே எதுவுமே சொல்லவில்லை! அவ்வளவு பெரிய கேமரா வைத்து சினிமாவே எடுக்கும்போது, புகைப்படம் எடுக்க யாரும் தடை சொல்லவில்லை!




ஐயாரப்பர் கோவில் பிரதான கோபுரம், திருவையாறு
மற்றுமொரு கோணத்தில்...

ஐயாரப்பரை தரிசனம் செய்து, தர்சம்வர்த்தினி என்ற பெயரில் குடிகொண்டிருக்கும் அம்மனையும் தள்ளு முள்ளு இல்லாமல் நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது. கோவிலுக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் சினிமா ஷூட்டிங் வேடிக்கை பார்ப்பதில் மும்மரமாக இருந்ததால் திவ்யமான தரிசனம் எங்களுக்கு! நின்று நிதானமாக ஒவ்வொரு இடமாகப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள முடிந்தது என்பதில் எனக்கும் திருப்தி. அங்கே இருந்த ஓவியங்களின் புகைப்படங்களை ஏற்கனவே ஒரு ஞாயிறில் புகைப்பட உலாவாக பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். சிற்பங்களும் விரைவில் புகைப்பட உலாவில் பகிர்ந்து கொள்கிறேன். சூர்ய புஷ்கரணி பக்கம் சென்று தண்ணீர் இருக்கிறதா எனப் பார்க்க “கட்டாந்தரை!”. காவிரி ஆற்றில் தண்ணீர் வர ஆரம்பித்திருப்பதால் புஷ்கரணியிலும் தண்ணீர் வரலாம் என பேசிக் கொண்டிருந்தோம். 

ஒரு பெரியவர் கேமராவுடன் இருந்த என்னைப் பார்த்து, “சினிமா எடுக்கறீங்களா? சினிமா பேர் என்ன, நடிகை யாரு?” என்று கேட்டார்! நடிகர் யார் என்று தெரிந்து கொள்வதில் பெரியவருக்கு அத்தனை ஸ்வாரஸ்யம் இல்லை! டக்கென்று சரோஜாதேவி என்று சொல்லத் தோன்றியது! தெரியாதுங்க என்று சொல்ல, “அட நீ சினிமாகாரன் இல்லையா, அப்புறம் என்னத்துக்கு பெரிசா ஃபோடோ புடிக்கிற!” என்று கேட்டு, வேறு ஒரு ஆளிடம் “நடிகை யாருங்க?” என்று விசாரிக்கத் துவங்கிவிட்டார். ”அய்யோ, யாராவது சொல்லுங்களேன், நடிகை யாருன்னு, நாம் அவங்களப் பார்த்தே ஆகணும், தெரிஞ்சுக்காம மண்டை வெடிச்சுடும் போல இருக்கு” என்று சொல்லுவார் போலிருந்தது!

எல்லா சன்னதிகளுக்கும் சென்று திரும்பும் போது சினிமா எடுப்பவர்களின் கேமரா, ஸ்வாமி கருவறைக்கு சற்றே வெளியே வைத்து பக்தர்களைப் படம் எடுக்க வசதியாக வைத்திருந்தது.  இப்போது டைரக்டர் மைக்கில் காட்சியை சொல்லிக் கொண்டிருந்தார் – “கோவிலுக்குள் வர என எனக்கு உரிமை இல்லையா?” என்பது போல ஏதோ வசனம். “டேய், அவங்களை அங்க நிக்கச் சொல்லாதே, ஃப்ரேம்ல இருந்து தள்ளிப் போகச் சொல்லு!” என்று தன் உதவியாளரைப் பார்த்துக் கத்தினார். இத்தனை பேர் பக்தர்களாகப் போதும்…. யாருப்பா டைரக்டர் என்று பார்த்தால் கே.எஸ். ரவிக்குமார்! சரி தமிழ்ப்படம் எடுத்துட்டு இருக்கார் போல, என்று நினைத்தால் இருப்பவர்கள் பலரும் தெலுங்கு முகம்! விஜயவாடாவிலிருந்து வந்திருந்த நண்பருக்கு தெலுங்கு என்றவுடன் கொஞ்சம் பரவசம்!

தெலுங்கில் மாட்லாட ஆரம்பித்தார்! அதற்குள் அங்கே ஹீரோ வர, “அட நம்ம NTR Balakrishna [NT Rama Rao-வின் மகன்] பெரிய ஹீரோ படம் தான்!” என்று சொல்லி, அவர் அருகே சென்று தெலுங்கில் மாட்லாட ஆரம்பித்தார்! என்ன கேட்டார் எனக் கேட்டால், “உங்க கூட ஒர் ஃபோட்டோ எடுத்துக்கலாமா?” மறுத்து விட்டாராம்! நடிகர் கூடவே கொஞ்சம் தூரம் நடந்து சென்று கோவில் வளாகத்தில் இருந்த கோஷாலாவில் பசுக்களுக்கு புல் கொடுத்து வந்தார். நண்பரின் மனைவி – “இவருக்கு வேற வேலையில்லை, அவன் பின்னாடி எதுக்குப் போகணும்!” என்று கணவரைத் திட்டிக்கொண்டிருந்தார். நல்ல வேளை அவரோடு செல்ஃபி எடுத்துக் கொள்ளவில்லை – ஏற்கனவே அந்த நடிகர், “படப்பிடிப்பில் நடிகரோடு, அவர் அனுமதி இல்லாமல், செல்ஃபி எடுத்துக் கொண்ட ரசிகருக்கு” அடிகொடுத்திருக்கிறாராம்! 

நண்பர் திரும்பி வந்து எங்களுக்கு விவரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார் – “பாலகிருஷ்ணாவோட தெலுங்கு படம்! இன்னும் படத்துக்கு பேர் வைக்கலையாம். இன்னும் மூணு நாள் இங்கே தான் ஷூட்டிங்!” என்று சொல்லிக் கொண்டிருக்க அவரது மனைவி “ஏன் அப்படியே முழுசா ஷூட்டிங் முடியர வரைக்கும் அங்கேயே இருக்கலாமே” என்று கிண்டலாகச் சொல்ல, முன்னால் பார்த்த பெரியவர், “யோவ் என்னய்யா இது, யாருமே என் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேங்கறீங்க, நடிகையை கண்ணுலயே காட்ட மாட்டேங்கறீங்களே!, தெரிஞ்சுக்காம எனக்கு தூக்கம் வராது போல இருக்கே!” என்று புலம்ப, நம்ம நண்பர் அவருக்கு சொன்ன பதில் – “நயன்தாரா!”

நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 


34 கருத்துகள்:

  1. கே எஸ் ஆர் புண்ணியத்தில் உங்களுக்கு சுக தரிசனம்! குறுக்கே குறுக்கே வரும் அந்தப் பெரியவர் கேரக்டர், ஆஹா படத்தின் பெரியவரையும், நான் பாடும் பாடல் படத்தின் கவுண்டரையும் நினைவு படுத்தியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிம்மதியான தரிசனம்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நயன் தாரான்னு போட்டதும் ஆர்வமா வந்து படிச்சேன் :p

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... நயன்தாரா கொக்கி போட்டு இழுத்துட்டாங்களா உங்களை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  3. ஆகா நயன்தாரா என்றவுடன் சாமியை மறந்துவிட்டார்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. Of late the publicity for cinema is more in temple. People forget to visit deity and worship. The culture of temple sanctity is fading due to the entry of movie shooting in temple. Temple is now a commercial place.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயராமன் நாராயணஸ்வாமி ஜி!

      நீக்கு
  5. நான் அடிக்கடிச் செல்லும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. பெரிய, அழகான கோயில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. அதானே அவ்வளவு பெரிய கேமராவுல சினிமா எடுக்கும்போது நாம சின்ன கேமராவுல போட்டோ எடுத்தால் என்ன ?

    சரியான கேள்விதான் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான கேள்வி தான்! ஆனால் பதில் தான் கிடைப்பதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. கோயில்களின் நிலை பளிச்.. என விளங்கிற்று..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில்களின் நிலை - உண்மை! பல கோவில்கள் இப்படித்தான் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. அட ராமா.... இடுகையைப் படித்துமுடித்தபின்பு, திருவையாறு கோவில் போட்டோ எங்கே என்று மனது கேட்பதற்குப்பதில், இவர் நயனதாராவைப் பார்த்தாரா இல்லையா என்று யோசிக்க வைத்துவிட்டீர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ராமா! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. எல்லாமே ரசிக்கத்தானே எல்லோரும் ரசிக்கத்தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம். பி. ஐயா.

      நீக்கு
  10. சுவாரஸ்யமான பதிவு! சாதாரணமாகவே விசேஷக்காலங்களைத்தவிர பகல் நேரத்தில் திருவையாறு ஐயாரப்பர் கோவிலில் ச‌ன்னிதிகளயும் தரிசித்து எல்லா ப்ரகாரங்களையும் நிதானமாக ரசித்து சுற்றி வரலாம். கூட்டமில்லாமல் அமைதியாகவே இருக்கும். ஷூட்டிங் நடந்த போது கூட நீங்கள் கோவிலில் அமைதியாக வலம் வர முடிந்தது தான் ஆச்சரியம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் அதைக் கண்டுகொள்ளாது வந்ததால் நிம்மதியான தரிசனம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  11. சுவாமி தரிசனம் நிம்மதியாக கிடைத்தது உற்று பார்த்து மனதில் பாதிக்கும் அளவுக்கு இருந்ததா நல்ல படியா முடிந்தது சின்ன காமிராவை கவனிக்கும் அளவுக்கு ஆர்வம் இருந்திருக்காது இல்லை நீங்களும் அதறகுதான் எடுக்கிறீர்கள் என்று நினைத்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிம்மதியாக தரிசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  12. நயன்தாரவைப் பார்க்கலையா! அப்பாடா! இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... நிம்மதி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  13. ஐயாரப்பன் கோவில் வெகு அழகான கோவில். தர்மசம்வர்தனியின் தோற்றமும் சரி, அந்த சன்னதியும் சரி அப்படியே திருச்சி, திருவானைக்கோவிலையும், அகிலாண்டேஸ்வரியையும் பிரதி எடுத்தது போல இருக்கும். முதலில் அங்கு அம்பாள் சன்னதி கிடையாதாம், இருநூறு வருஷங்களுக்கு முன்னர்தான் ஒருவர் கட்டியிருக்கிறார். அதனால்தானோ என்னவோ, அம்பாள் சந்நிதி கோவிலுக்கு வெளியே இருப்பது போல இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி! தனியாக இருப்பதால் முதலில் எனக்கும் தனிக்கோவில் உணர்வு உண்டானது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  14. நயன் தாரா தரிசனம் கிடத்ததா சாதாரண நாட்களில் நம்மை படம் எடுக்க அனுமதிக்காதவர்கள் திரைப்பட ஷூட்டிங் என்றால் அனுமதிக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். மற்ற நாட்களில் கெடுபிடிகள் இருக்கும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. கடவுள் தரிசனமாண்ணே முக்கியம்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே.... பலருக்கும் நடிகை தரிசனம் தானே முக்கியம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  16. கோபுர தரிசனம் கிடைத்தது, நன்றி.
    உங்களுக்கு கூட்டம் இல்லாமல் தரிசனம் கிடைத்ததே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  17. முன்பு இப்படித்தான் தில்லையில் ‘காதலன்’ படப்பிடிப்பு நடத்தி கோவிலுக்கு வருபவர்களை திரைப்பட நடிகர்களை தரிசிக்க வைத்தார்கள். இங்கும் அதே கதை தானா? இருப்பினும் உங்களால் இறைவனை எளிதாக தரிசிக்க முடிந்ததே. அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவனை நிம்மதியாக, எளிதாக சந்திக்க முடிந்தது. உண்மை தான் அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....