சனி, 18 ஆகஸ்ட், 2018

காஃபி வித் கிட்டு – மயில் நடனம் – ஓவியம் – வடிவேல் டப்ஸ்மாஷ் – ஒற்றைத்துண்டுடன்…


காஃபி வித் கிட்டு – பகுதி - 2

“காஃபி வித் கிட்டு” – சுதந்திர தின ஓவியம்



என்ன நண்பர்களே, சென்ற வாரத்திலிருந்து ஆரம்பித்திருக்கும் இந்த பகுதி உங்களுக்குப் பிடித்திருந்ததா? உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.  இந்த வாரத்தினை ஒரு ஓவியத்துடன் ஆரம்பிக்கிறேன். மூன்று நாட்கள் முன்னர் இந்தியாவின் சுதந்திர தினம். அதற்காக மகள் வரைந்த ஒரு ஓவியம் தான் மேலே கொடுத்திருப்பது. கீழேயும் சில படங்கள் கொடுத்திருக்கிறேன் – சென்ற திங்களன்று ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது – அப்போது நண்பர் எடுத்த படங்கள் அவை. அது எந்த இடம் என்பதைச் சொன்னால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் – கடைசியில் சொல்கிறேன்.









இந்த வார காணொளி – போக்குவரத்து காவலதிகாரி

தான் செய்யும் பணியை மிகவும் ரசித்து, ஈடுபாடுடன் செய்பவர்கள் சிலர் மட்டுமே. இந்தியாவின் இந்தோர் பகுதியில் இருக்கும் ஒரு போக்குவரத்து ஊழியர் பற்றிய காணொளி முன்னரே பகிர்ந்த நினைவு. அப்படி ஈடுபாட்டுடன் செயல்புரியும் சில போக்குவரத்துக் காவலதிகாரிகள் பற்றிய தொகுப்பு – ஆனால் அவர்களுக்கு, மக்கள் கொடுக்கும் பட்டம் – முதல் அதிகாரி பற்றி காணொளி எடுத்த தமிழர் சொல்வதைக் கவனியுங்கள் – 20-வது நொடியில் வருகிறது!



ஒற்றைத் துண்டுடன் 18 கிலோமீட்டர் நடை:

நண்பர் பத்மநாபன் அவர்கள் என்னுடைய பதிவுகளில் ஈஸ்வரன் என்ற பெயரில் கருத்துகள் எழுதுவதுண்டு. தில்லி வந்த நாளிலிருந்து நான் அறிந்த நல்ல நண்பர்களில் அவரும் ஒருவர். தில்லி வருவதற்கு முன்னர் சில வருடங்கள் விவேகாநந்தா கேந்திராவில் பணி புரிந்தவர். அப்படி பணிபுரியும் கிடைத்த அனுபவங்கள் பற்றி அடிக்கடிச் சொல்வார். மிகவும் ஸ்வாரஸ்யமான அனுபவங்கள் அவருக்கு உண்டு. அவரின் ஒரு அனுபவம் ஏற்கனவே ”தொடர்ந்து வந்த பேய்” என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். அவரையே வலைப்பூவில் எழுதச் சொன்னால் பிடிகொடுக்க மாட்டேன் என்கிறார். இல்லை என்றால் என் பக்கத்திலாவது எழுதுங்கள் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.  ஒரு முறை குற்றால அருவியில் குளித்து விட்டு உடம்பில் வெறும் துண்டோடு நடக்க வேண்டிய நிலை வந்தது பற்றி சமீபத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் – அதுவும் கையில் காசே இல்லாமல், குற்றாலத்திலிருந்து கடையம் எனும் ஊர் வரை…. கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர்! யோசித்துப் பாருங்கள்! இந்த நிகழ்வு பற்றி விரைவில் அவரே எனது வலைப்பூவில் எழுதுவார்! இல்லை என்றால், அவர் சொன்னதை நானே எழுதுவேன்!

இந்த வாரத்தின் குறும்படம் - Unvoiced

தில்லியில் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் தோழி ஒருவரின் மகள் சமீபத்தில் வெளியான குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். படத்தின் பெயர் Unvoiced. 2016-ஆம் ஆண்டு மட்டுமே 38947 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக புகார் செய்யப்பட்டிருக்கிறது. அதில் 36859 பெண்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்களாலேயே – குடும்பத்தினர் [அ] உறவினர்கள், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள்! என்ன கொடுமை. பெண்களுக்கு இருக்கும் ஆபத்துகளைப் பற்றிய புரிதல் அனைவருக்கும் வேண்டும் – ஒவ்வொரு பெற்றோரும் தங்களது மகன்களையும் சரியான விதத்தில் வளர்க்க வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. குறும்படம் பாருங்களேன்.   


இந்த வார Character:

சென்ற வார கதைமாந்தர் போலவே இந்த வாரத்தின் கதை மாந்தரும் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சகமனிதரைப் பற்றியது தான். நாம் பார்க்கும் பலருக்கு Inferiority Complex இருப்பது வழக்கம். ஆனால் இந்த மனிதருக்கு இருப்பது – அதுவும் அதிகமாகவே இருப்பது Superiority Complex! எப்போது பார்த்தாலும் தன்னைப் பற்றி உயர்வாகவே பேசுவார் – இந்திய அரசாங்கத்தில் இருக்கும் அதிகாரிகளிலேயே நான் தான் தலைசிறந்தவன் – எனக்குத் தெரிந்தது வேறு யாருக்கும் தெரியாது – என் கண்பார்வையில் பட்டுச் செல்லும் எந்த கடிதத்திலும்/கோப்பிலும் ஒரு தவறு கூட இருக்காது – என்னுடைய திறமைக்கு நான் இருக்க வேண்டிய இடமே வேறு – நான் ஜமீந்தார் பரம்பரை – நிறைய சொத்து இருக்கிறது என்று அவர் விடும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது.

இது அத்தனையும் அவரைப் பற்றிய அவரது எண்ணம் – உண்மையில் அப்படியே உல்டா! போகட்டும் தன்னைப்பற்றிய மேலான அபிப்ராயம் கொள்வது அவர் உரிமை. ஆனால் எப்போது பார்த்தாலும் அவருடன் பணிபுரிபவர்களையும், அவருக்குக் கீழே பணிபுரிபவர்களையும் ரொம்பவே மட்டமாகப் பேசுவார் என்பதால் அவரைக் கண்டாலே யாருக்குமே பிடிப்பதில்லை. பல முறை வாக்குவாதங்கள் அனல் பறக்கும். என் கண்ணில் பட்டால் Scan செய்தது போன்று – தப்பே இருக்காது என்று சொல்லும் பல கோப்புகளில் தவறுகளைக் கண்டுபிடித்து – அதைச் சரி செய்வதற்குள் நான் படாத பாடு பட்டிருக்கிறேன்! எத்தனை முறை அடிபட்டாலும், தன்னைப் பற்றிய உயர்வான அபிப்ராயத்தினை மாற்றிக் கொள்ளவே இல்லை! தினம் தினம் அவர் இருக்கும் இடத்தில் பிரச்சனைகள் தொடர்கின்றன. அவருக்கு இருக்கும் இன்னுமொரு கெட்ட பழக்கம் – வாரம் முழுவதும் ஒரே பேண்ட் – ஒரே சட்டை – அதுவும் தலைநகர் வெய்யிலுக்கு! வியர்வைக்கு! நினைத்தாலே குமட்டல்!  

சிலரை மாற்றவே முடியாது என்பது போல இவரை மாற்ற முடியாது என அனைவருக்கும் தெரிந்து விட்டது – அதனால் அவர் பேசுவதை யாருமே கேட்பதில்லை – பொருட்படுத்துவதுமில்லை இப்போது!

இந்த வார வாட்ஸப் – ம்யூசிக்கலி - டப்ஸ்மாஷ்

டப்ஸ்மாஷ் – உங்களுக்கும் தெரிந்திருக்கும். நம் நண்பர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி கூட டப்ஸ்மாஷ் செய்து அவ்வப்போது வெளியிடுவார். இந்த டப்ஸ்மாஷ் செய்ய நிறைய App இருக்கிறது – அவற்றில் ஒன்று ம்யூசிக்கலி! இது போன்ற App பயன்படுத்தி நிறையவே செய்கிறார்கள் – நம்மை ”வைத்து” செய்கிறார்கள் – அவ்வப்போது இந்த மாதிரி டப்ஸ்மாஷ்களை வாட்ஸப்-பிலும் முகநூலிலும் பகிர்ந்து கொள்கிறார்கள். அபர்ணா சுந்தர்ராமன் என்ற பெண்ணின் டப்ஸ்மாஷ் நிறையவே இருக்கிறது – குறிப்பாக வடிவேல் காமெடி. நண்பர் ஒருவர் அடிக்கடி இவரின் வீடியோக்களை அனுப்பி வைப்பார். இன்னும் வேறொரு பெண்மணி – அவரது காணொளிகள் ஐய்யயோ ரகம்.  இது வரை அபர்ணாவின் டப்ஸ்மாஷ் பார்க்காதவர்களுக்காக, ஒரு சாம்பிள்!



கடைசியில் இங்கே தான் வரணும்….

பதிவின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் படங்கள் பார்த்தீர்களல்லவா? அந்தப் படங்கள் எடுக்கப்பட்ட இடம் – ஒரு சுடுகாடு. ஆமாம் மிகவும் அழகாக பராமரிக்கப்பட்ட சுடுகாடு – பூந்தோட்டம், மரங்கள், புல்வெளிகள், மிகப் பெரிய சிவன் சிலை [10 அடிக்கு மேல் இருக்கலாம்], அந்திமக் காரியங்கள் செய்ய கைலாயகிரி போன்ற அலங்கரிக்கப்பட்ட இடம், தோட்டத்தில் நடனமாடும்/நடமாடும் மயில்கள் என மிகவும் அழகான சுடுகாடு. எனக்குத் தெரிந்தவர் ஒருவர் – எனக்கு மேலதிகாரியாக இருந்தவர் – கடந்த ஞாயிறன்று இறைவனடி சேர்ந்தார். அவரது அந்திமக் காரியங்களில் கலந்து கொள்ள நோய்டா செக்டார் 94-ல் இருக்கும் சுடுகாட்டுக்குச் சென்றிருந்தோம். இறந்தவரின் குடும்பத்தினர் அங்கே வருவதற்கு தாமதமானதால், நாங்கள் அங்கேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

பொதுவாகவே இங்கே இருக்கும் சுடுகாடுகள் நன்கு பராமரிக்கிறார்கள். நமது ஊர் மாதிரி இல்லை – நம் ஊரில் சுடுகாடுதானே என்று ஒரு அலட்சியப் போக்கு உண்டு. இங்கே அப்படிக் கிடையாது. பராமரிப்பு சரியாக இருக்கும். அதுவும் இந்த இடத்தில் பூங்காவும், ரோஜாப் பூக்களும், மயில்களின் நடமாட்டமும், என சிறப்பாக வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே சமயத்தில் இருபது பேரை எரிக்க இங்கே வசதி இருக்கிறது – கூடவே ஒரு CNG Crematorium-உம்! நாங்கள் சென்றபோது கூட அங்கே சில உடல்கள் எரிந்து கொண்டிருந்தன. ஒரு பக்கம் உடல்கள் எரிந்து கொண்டிருக்க, மறு பக்கத்தில் மயில்கள் நடனம்! எரிந்து சாம்பலாகும் சிலரின் உறவினர்கள் தங்களை மறந்து மயில் நடனம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு தான் வாழ்க்கை! காத்திருந்த நேரத்தில் நண்பர் எடுத்த படங்கள் தான் மேலே தந்தவை.

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். ரோஷ்ணியின் ஓவியம் அழகு. பாராட்டுகளும் வாழ்த்துகளும் ரோஷ்ணிக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இது மாதிரி ஒரு போக்குவரத்துக்கு காவலரை நான் தஞ்சையில் என் பள்ளி நாட்களில் பார்த்திருக்கிறேன். வாழ்வைத் சுவாரஸ்யமாக்கும் மனிதர்கள். மேலும் தங்கள் பணியை ஒரே மாதிரி செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கே போர் அடித்து விடும், மனச் சலிப்பு ஏற்படும். இது அவர்கள் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளும் அற்புத முயற்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. அவர்களுக்கும் சலிப்பினை நீக்க வழி தேவை. ஆனால் அதற்குக் கிடைக்கும் பட்டம்... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. நண்பர் பத்மநாபன் அனுபவத்துக்கு ஆவலாகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் தனிப்பதிவாக.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. குறும்படம் பின்னர்தான் பார்க்கவேண்டும்.

    டிட்டோவாக இதே மாதிரி தன்னைப்பற்றி உயர்வான அபிப்ராயம் கொண்டிருக்கும் ஒரு சராசரிக்கும் குறைவான ஒரு நண்பி என் அலுவலகத்தில் இருக்கிறார். கர்மம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு பல அலுவலகங்களில் இப்படியானவர்கள் இருக்கிறார்கள்..... அவர்களுடன் பணிபுரிவது கொடுமையான விஷயம்.

      குறும்படம் முடிந்த போது பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் டப்மாஷ் எனக்குப் பிடிப்பதில்லை! மன்னிக்கவும்!

    எங்கள் பாஸிட்டிவ் பகுதியில் முன்பு ஒருமுறை சென்னை சுடுகாடு ஒன்றைப் பற்றி பகிர்ந்திருந்தேன். ஒரு பெண்மணியால் நிர்வகிக்கப்படும் அந்த இடமும் இதே போல பராமரிக்கப்படுகிறது. இடம் சரியாய் நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதற்கென்றே சிலர் இருக்கிறார்கள் - எவ்வளவு காணொளிகள் - தினம் தினம் ஒன்றாவது இப்படிச் செய்து அப்லோட் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

      சுடுகாடு - வெகு சில இடங்களில் மட்டுமே இப்படி. நம் ஊரில் பொதுவாக பராமரிப்பு இருப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. மகளுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    காவல் அதிகாரிகளின் நடனத்தை ரசித்தேன்...!

    டப்ஸ்மாஷ் அசத்தல்...

    சுடுகாடு என்பதை நம்பவே முடியவில்லை...

    நண்பர் பத்மநாபன் அவர்களின் தொடர்பு எண்ணை மட்டும் கொடுங்கள்... சில நாட்களில் ஒவ்வொரு பதிவையும் 18 கிலோமீட்டர் எழுதுமாறு செய்கிறேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் எண் - ஹாஹா.... நானும் பேசுகிறேன். அவருக்கு நேரம் இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார். பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. மேல் அதிகாரிகளுக்கு அதிகாரம் என்பது ஒரு போதை. அதை விட்டு பணிவுடன் நடக்க முடியாது, அவரகளுக்கு மேல் ஒருவர் வரும் வரை.

    அக்ரிமென்ட் இன்க்ரிமென்ட், ஹார்மோனியம் -------? இது வரை பதில் இல்லை.

    கோவையில் சரவணம்பட்டி electric crematorium இதே போன்ற பராமரிப்புடன் நன்றாக இருக்கும். மயில் இல்லை. ஆனால் அன்னம், சேவல், கோழி உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுக்கு மேல் ஒருவர் வரும் வரை - மேலே இருப்பவரும் இவரைப் போலவே! :)

      ஹார்மோனியம் - அந்தப் பதிவிலேயே இதற்கான பதிலை பின்னூட்டமாக தந்தேனே... Honorarium எனும் ஆங்கில வார்த்தையைத் தான் ஹார்மோனியம் என்று சொல்வார்கள்.

      அன்னம், சேவல், கோழி உடன் ஒரு சுடுகாடு - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜே.கே. ஜி!

      நீக்கு
  9. மகளின் ஓவியத்தை ரசித்தேன். 18 கிமீ நடந்தவரை எழுதவைத்துவிடுங்கள். அவரது அனுபவத்தைப் பார்த்தவுடன் புத்தர் சிலையைக் காண ஒரு முறை மிதிவண்டியில் 25 கிமீ பயணித்த அனுபவம் நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரை எழுத வைக்க நானும் முயல்கிறேன். பார்க்கலாம்....

      புத்தர் சிலை காண 25 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் - பிரமிக்க வைக்கிறது உங்கள் ஆர்வம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. ரோஷிணியின் சித்திரம் அழகு...

    அபர்ணா சுந்தரராமனின் டப்ஸ்மாஸ்கள் (குறிப்பாக மண்டை பத்திரம்) கலகலப்பூட்டுபவை...

    மற்ற அனைத்து தகவல்களும் அருமை..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபர்ணா டப்ஸ்மாஷ் ஒரு சிலது மட்டுமே பார்த்திருக்கிறேன் - முகநூலில் வந்தவை. நீங்கள் சொன்னது பார்த்த நினைவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  11. ரோஷிணிக்கு பாராட்டுகள்..

    நம்ம ஊர் சுடுகாட்டில் நரியும், நாயும் இருக்கும். அந்த ஊரில் மயிலா?! அதை சுடுகாடுன்னு சொன்னா பிணம்கூட நம்பாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நரியும் நாயும் - உண்மை. காவிரிக் கரையோர சுடுகாடுகள் பரிதாபமான நிலையில் இருப்பதைப் பார்த்ததுண்டு.

      பிணம் கூட நம்பாது - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  12. பெங்களூரில் ஒரு பெரிய மீசை வைத்த காவலர் இருந்தார் அவரும் இது மாதிரிதான் இம்மாதிரிகாவலராலேயே விபத்துகளும்நிகழலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. முதலிலேயே எனக்கு அது மயானம் என்ற எண்ணம் தான் தோன்றியது. ஆனால் நோய்டாவில் இருக்கிறது என்பது தெரியவில்லை. பொதுவாக வட மாநிலங்களிலேயே இவற்றின் பராமரிப்பு மிகச் சுத்தமாக இருக்கும். மனப்பூர்வமாகப் பாடுபடுவார்கள். ஏனோதானோ என்றிருப்பதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இங்கே பராமரிப்பு ரொம்பவே நன்றாகவே இருக்கும். பெரிய சிவன் சிலை எல்லா சுடுகாடுகளிலும் இருக்கும்.

      ஏனோதானோ என்று இருப்பதில்லை - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  14. ரோஷ்ணி அபாரமாக வரை ஆரம்பித்திருக்கிறாள். வாழ்த்துகள். காணொளி பின்னர் வந்து பார்க்கிறேன். இந்த டப்ஸ்மாஷ் பத்தி எனக்கு இன்னும் எதுவும் மண்டையில் ஏறலை. பார்த்தாலும் புரியணுமே என்பதாலேயே ஜாஸ்தி பார்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டப்ஸ்மாஷ் - இவற்றில் பெரும்பாலானவை மோசமாகவே இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  15. ரோஷ்ணியின் ஓவியத்தை முகநூலில் பார்த்தேன் அருமை, வாழ்த்துக்கள்.

    //ஒரு பக்கம் உடல்கள் எரிந்து கொண்டிருக்க, மறு பக்கத்தில் மயில்கள் நடனம்! எரிந்து சாம்பலாகும் சிலரின் உறவினர்கள் தங்களை மறந்து மயில் நடனம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.//

    கவலையை மறக்க வைக்க நல்லதொருவழி.
    சுடுகாடு மிக அழகிய தோட்டமாய் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    காணொளிகள் எல்லாம் பார்த்தேன்.

    குறும்படம் கவலை அளிக்கிறது.

    டப்ஸ்மாஷ் :- திறமைகள் நிறைய பேரிடம் இருக்கிறது.
    கதை மாந்தர் போல் சிலர் இருக்கிறார்கள் என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலையை மறக்க வைக்க நல்லதொரு வழி. ஆமாம்.

      குறும்படம் - ம்ம்ம்... என்ன சொல்ல. பல இடங்களில் இது தான் நடக்கிறது என்று பார்க்கும்போது மனதில் வலி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    தங்கள் மகளின் கைவண்ணம் மிகவும் அழகாய் உள்ளது. ஓவியங்களை திறம்பட வரைகிறார். அவருக்கு என் வாழ்த்துகளை கூறுங்கள்.

    போக்கும் வரத்து காவலரின் நடனத் தொகுப்பை ரசித்தேன். அந்த சங்கேத நடனம் கார் ஓட்டுபவர், மற்றும் பாத சாரிகளுக்கு புரியுமோ?

    மயானம் பூஞ்சோலைகளும், மயில்களின் அழகுடனும் மிக அழகாக உள்ளது. இறந்தவரை தவிர அங்கு உடன் செல்லும் உறவுகளுக்கு மரண பயமே வராது. ரசித்தலில், துக்கமும், பயமும் மறந்து போகும். அருமை.

    தங்கள் நண்பரின் கதைகளை படிக்க காத்திருக்கிறேன்.

    தாங்கள் கூறுவது போல் அலட்டல் பேர்வழிகள் கொஞ்சம் கடுப்புதான்...

    டிப்ஸ்மாஷ் பற்றி அறிந்து கொள்ள உதவியதற்காக நன்றி. இதையெல்லாம் நான் பார்த்ததில்லை. இன்று ரசித்தேன்.

    இன்றைய தொகுப்பு மிகவும் அழகாக, அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  17. கடையம் என் அம்மாவின் பிறந்த ஊர். நான் பிறந்த ஊரும் அதுவே....பாரதியின் துணைவியார் ஊரும் அதுவே..... துண்டோடு நடந்த கதையை கேட்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கடையம் தான் நீங்கள் பிறந்த ஊரா.... மகிழ்ச்சி.

      நண்பர் சொன்ன கதை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பொன்சந்தர் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....