சனி, 14 மார்ச், 2020

காஃபி வித் கிட்டு – ஐன்ஸ்டீன் – செத்த பாம்பு – மண்ணின் குரல் – நரை - ஹோலி


காஃபி வித் கிட்டு – பகுதி 58

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம் மற்றும் பிறந்த நாள்:

நான் மாதக் கணக்கில், ஏன் சில வருடங்கள் கூட யோசிப்பேன்… தொண்ணூற்று ஒன்பது முறை நான் விடையைக் கண்டுபிடிக்க மாட்டேன். ஆனால் நூறாவது முறை நான் கண்டறிவேன் – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.


ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879 – 1955) அவர்களின் பிறந்த நாள் இன்று! ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு வந்தவர் ஒரு ஆசிரியர் வேலைக்கு இரண்டு வருடங்கள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லையாம்! நாசிக்களின் அழிக்கப்பட வேண்டியர்கள் பட்டியலில் இவரும் உண்டு – இவரது தலைக்கு வைக்கப்பட்ட விலை 5000 டாலர்கள்!

படித்ததில் பிடித்தது –  செத்த பாம்பு:

சூஃபி ஞானி தங்கியிருந்த ஓர் ஊரில் அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவன், தன் வீட்டுக்குப் பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றான். உடனே தன் வீட்டிற்குள் வந்து தன் மனைவி, மகனிடம், ”நான்  மூன்றடி நீளமுள்ள பாம்பைக் கொன்றேன்” என்று சொன்னான்.

அதைக் கேட்டு அதிசயித்த மனைவி, பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம், ‘‘என் கணவர் ஐந்தடி நீள பாம்பை தனியொருவராகவே அடித்துக் கொன்றார், தெரியுமா?’’ என்று பெருமையுடன் சொன்னாள். அந்தப் பெண்மணியோ, பக்கத்து தெருவிலுள்ள தன் தோழியிடம், ‘‘எங்கள் தெருவில் ஒருவர் பத்தடி நீள பாம்பைக் கொன்றிருக்கிறார்என்று தெரிவித்தாள். அதைக் கேட்ட தோழி, பக்கத்து ஊரிலிருந்து வந்த தன் உறவினரிடம், ‘‘எங்கள் ஊர்க்காரர் ஒருவர் முப்பதடி பாம்பை  சாகடித்திருக்கிறார்!’’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாள்.



இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி ‘‘மிகைப்படுத்துவதால் கற்பனை திறன் வேண்டுமானால் வளருமே தவிர, உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்’’ என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைக் கேட்ட விவசாயி, தான் இரண்டை மூன்றாக்கியது, இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான். ஆனாலும்முப்பதடி பாம்பைக் கொன்றபெருமையையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனசில்லை. அதனால், தன் வீரம் பற்றி புதிதாக வந்திருக்கும் ஞானிக்கு என்ன தெரியும் என்று அலட்சியமாகக் கேட்டான்.

உடனே ஞானி, விவசாயியின் ஐந்து வயது மகனை அழைத்தார். “உன் அப்பா முப்பதடி பாம்பைக் கொன்றாராமேஎன்று கேட்டார். ஆனால், அவனோ அவரை அதிசயமாக பார்த்துவிட்டு, “செத்த பாம்பு வளருமா ஐயா?” என்று கேட்டான்.

அதைக் கேட்டுப் பெரிதாக சிரித்தார் ஞானி. தந்தையார் பாம்பைக் கொன்ற தாக சொன்னவுடனேயே அவன் ஓடிப்போய் பார்த்திருக்கிறான். அது வெறும் இரண்டடி பாம்புதான் என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது. ‘அந்தப் பையனை போல எல்லோரும் உண்மையை ஆராய்ந்திருந்தால் வீண் வதந்தியை பரப்ப நேர்ந்திருக்காது இல்லையா?’ என்று அவர் ஊர் மக்களை பார்த்துக் கேட்டார். மக்கள் அனைவரும் தலை குனிந்து கொண்டனர்.

இந்த வாரத்தின் இசை – ராஜஸ்தானிலிருந்து:

மண்ணின் குரல் கேட்டதுண்டா?  இதோ கேளுங்கள் – ராஜஸ்தானிலிருந்து.  நம் உடல் களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம் – அப்பாத்திரம் உடையும் போது எந்த வித சப்தமும் வருவதில்லை. ஆண்டவனே அந்த நாளை நினைத்தாலே மனதில் ஒரு பயம்! ஏதோ ஒர் நாளின், ஒரு நொடியில், கண்ணிமைக்கும் நேரத்தில்… அது எந்த நாள், எந்த நொடி என்பதறியேன்… ஆனாலும் பாத்திரம் உடையத்தான் போகிறது – அந்த நாளை நினைத்தாலே பயம் தான்!  எனும் அர்த்தம் தரும் பாடல். கேட்டுப் பாருங்களேன் – மண்ணின் குரலாக இருந்தாலும், சில புதிய வகை கருவிகளும் பயன்படுத்துகிறார்கள் – அதைத் தவிர்த்திருக்கலாம்! கேட்க இனிமை – கேட்டுப் பாருங்களேன்.




ராஜா காது கழுதைக் காது…

சமீபத்தில் சனிக்கிழமை அன்று பேருந்து ஒன்றில் பயணித்து நண்பர் பத்மநாபன் அவர்களை சந்தித்து ஒரு இடத்திற்குப் பயணித்தோம் – அந்த இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதை பிறிதொரு நாளில் சொல்கிறேன். இன்றைக்கு அந்தப் பேருந்துப் பயணத்தில் கேட்ட விஷயம் – ராஜா காது பகுதியாக…

பார்க் ஹோட்டல் எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்திலிருந்து 10 பெண்மணிகள் பேருந்தில் ஏறிக் கொண்டார்கள் – அனைவரும் தமிழர்கள் – கனாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கும் ஏதோ பெரிய உணவகத்தில் வேலை செய்கிறார்கள் போலும். வேலை நேரத்தில் நடந்த விஷயங்களைப் பேசிக் கொண்டே வந்தார்கள் – “வடை போட்டு கீழே வச்சுட்டான் அவன். திட்டு வாங்கிட்டு இருந்தான், தோசை மாவு அரைச்சுட்டே இருக்க வேண்டியிருக்கு, சாம்பார் லிட்டர் லிட்டரா குடிக்கிறாங்க இந்த ஊர்க்காரவுங்க” என பேசிக் கொண்டிருந்ததில் தெரிந்தது அவர்கள் உணவகம் ஒன்றில் வேலை செய்வது.  இதெல்லாம் ராஜா காது பகுதிக்கானது இல்லை – அடுத்து வருவது தான் அந்தப் பகுதிக்கானது! பேருந்தில் பத்து பேருக்குமே இலவசம் தான் – தில்லியில் பெண்களுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்! இரண்டு தமிழ் பெண்மணிகளின் முன் இருக்கையில் இரு வட இந்தியப் பெண்கள் – இருபதுகளில் இருக்கலாம்.  தலைவிரிகோலமாக இருப்பது தானே இப்போது ஃபேஷன்! அப்பெண்களும் அப்படியே… அப்பெண்களின் தலைமுடி பார்த்து தமிழ்ப் பெண்மணிகள் சொன்னது…

பாரு இந்தப் பொண்ணுங்கள… இதுங்க தலைக்கு எண்ணையே வைக்கறதுல்ல! அதுக்குள்ள அங்கங்கே நரை முடி! இப்படி விரிச்சு போட்டு அலையுதுங்க! நல்லா எண்ணை வச்சு, ஒரு பேண்டை போட்டு கட்டிடலாம்னு கை பரபரக்குது”

இந்த வாரத்தின் ரசித்த நகைச்சுவை – மதன் ஜோக்ஸ்

சமீபத்தில் பார்(படி)த்து ரசித்த நகைச்சுவை ஒன்று.  மதன் ஜோக்ஸ் – என்றைக்கும் ரசிக்கக் கூடிய விஷயம். நீங்களும் பாருங்களேன்!




கொரானோ பயம் – கலரில்லா ஹோலி:



தலைநகர் முழுவதிலுமே கொரானோ வைரஸ் பயம் வந்திருக்க, இந்த முறை ஹோலி கொண்டாட்டத்தில் அத்தனை ஈடுபாடு இல்லை பலருக்கும். எங்கள் பகுதியில் நிறைய கொண்டாட்டங்கள் இருக்கும் – பலவித வண்ணங்களில் குளித்தெழுந்த மாதிரி இருப்பவர்களை இம்முறை காண முடியவில்லை. ஹோலிப் பண்டிகை (10 மார்ச்) மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்றபோது ரொம்பவே குறைவான கொண்டாட்டங்கள் தான்.  வைரஸ் பயம் அனைவரையும் தொற்றிக் கொண்டிருப்பதும் ஒரு விதத்தில் நல்லது தான்! கலர் தண்ணீரை பலூன்களில் ஊற்றி அதனை வீட்டுக்குள்ளிருந்து சாலையில் செல்பவர்கள் மீது விட்டு எறிவார்கள் குழந்தைகள். நான் வெளியே சென்ற போது ஒரு வீட்டின் ஜன்னலில் இரு சிறுமிகளின் முகங்கள் – கைகளில் பலூன்! மேலே சரியான நேரத்தில் பார்த்து விட அவர்களிடம் அன்பாக மறுத்தேன்! சரியாக டார்கெட் செய்து பலூன் எறிவதில் இங்கே உள்ள குழந்தைகள் சாம்பியன்கள்!  அவர்களுக்குக் கொண்டாட்டம் என்றாலும் பல சமயங்களில் விபத்துகளை உண்டாக்கக் கூடும் என்பதை குழந்தைகளும் உணர்வதில்லை, அவர்கள் பெற்றோர்களும் சொல்லித் தருவதில்லை!

எதாவது கேட்டால் – “Bபுரா நா மானோ… ஹோலி ஹே!” என்று சொல்லி விடுவார்கள்! – அதாவது ”தப்பா எடுக்காதீங்க, ஹோலி!” என்று. கொரானோ வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவில் விடுபட எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்!

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

தில்லி வாழ் தமிழர்களின் ரிசப்ஷன் பற்றி 2011-ஆம் ஆண்டு இதே நாளில் எழுதிய பதிவு – படிக்காதவர்கள் வசதிக்காக… இங்கே அதன் சுட்டி கீழே.  நிறைய மாற்றங்கள் வந்து கொண்டே இருந்தாலும், அன்றைக்கு எழுதிய விஷயங்கள் இன்றைக்கும் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன.  படித்துப் பாருங்களேன்!


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. பாம்பு கதை நல்ல பாடத்தை கொடுத்தது

    தலையை விரித்து போடுவதுதானே இன்றைய ஃபேஷன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாம்பு கதை பாடம் தந்தது - உண்மை தான் கில்லர்ஜி. இங்கே பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

      ஃபேஷன் - என்ன சொல்ல! :(

      நீக்கு
  2. இயலும் இசையும் கலந்து அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  3. படத்தை எடுத்துக் கொண்டேன். பயன்படுத்திக் கொள்கிறேன். பாடல் எனக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக பெண் குரலில் நளினம் இல்லை. நானும் பெண்கள் தலைமுடியை தலைவிரிகோலமாக வரும் போது இப்படித்தான் மகள் மனைவியிடம் கேட்பேன். அவர்கள் என்னை அடக்க முயல்வார்கள். திட்டுவார்கள். நாம் பழமைவாதியோ என்ற சந்தேகம் வந்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் - :) பெண் குரலில் நளினம் - மண்ணின் குரல் அல்ல! எனக்கு பாடலும் அதைப் பாடிய ஆணின் குரலும் பிடித்திருந்தது ஜோதிஜி.

      படம் - எந்தப் படம்?

      தலைமுடி - ஹாஹா... பழமைவாதி என்று தான் சட்டென சொல்லி விடுவார்கள்.

      நீக்கு
  4. சிறப்பான பதிவு.
    எங்கள் காலனியில் ஏற்பாடு செய்திருந்த ஹோலி கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டார்கள்.
    இரண்டடி பாம்பு இருபதடியானது கதையை நம் ஊரில் "கடுகு விழுந்ததை காக்கா விழுந்தது என்று சொல்வதைப் போல" என்று கூறுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி பானும்மா...

      ரத்தான ஹோலி கொண்டாட்டம் - நல்லதே.

      கடுகு விழுந்ததை காக்கா விழுந்தது என்று சொல்வதைப் போல - புதியதாகக் கேட்கிறேன்! நன்றிம்மா...

      நீக்கு
  5. இந்த தலையயை விரித்துப் போட்டுக் கொள்ளும் கலாசாரம் நம் ஊரிலும் வந்து விட்டது. கோவில்களுக்கும் அப்படியே வருகிறார்கள். வரிசையில் நிற்கும் நாம் ஸ்வாமிக்காக அர்ச்சனைத்தட்டோ, மாலையோ வைத்துக் கொண்டிருந்தால் அதன் மீது முன்னால் நிற்பவரின் தலைமுடி படும். அதன் பிறகு அதை எப்படி ஸ்வாமிக்கு அர்ப்பணிப்பது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பானும்மா... எல்லா இடங்களிலும் இப்படி தலைவிரி கோலம் தான்! அது அவர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது!

      என் அலுவலகத்தில் இருக்கும் பெண்மணிகள் தலைவிரி கோலமாக வந்து அதனை கோதிக் கொண்டே இருப்பதில் நிறைய நேரம் செலவிடுகிறார்கள்! சொன்னால் கோபம் வந்து விடும் என்பதால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது!

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஹோலி படம் - இணையத்திலிருந்து தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வதந்தி எப்படியெல்லாம் வேறுவிதமாக பரவுகிறது என்பதற்கு, "படித்ததில் பிடித்தது" அருமை...

    தலைவிரிகோலமாக ஏன் இருந்தோம் என்பது, சிறிது வருடங்களுக்கு பின் அவர்கள் உணர்வார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வதந்தி - எப்படியெல்லாம் பரப்புகிறார்கள்! கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      உணர்ந்து கொண்டால் நல்லதே!

      நீக்கு
  8. பல்சுவை விருந்து மிகவும் ருசியாக இருந்தது.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது காஃபி வித் கிட்டு – ஐன்ஸ்டீன் – செத்த பாம்பு – மண்ணின் குரல் – நரை – ஹோலி பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்சுவை விருந்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.

      வலை ஓலை - சில விஷயங்கள் - தொடர்ந்து பதிவுகளை இங்கே இணைப்பதில் மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  9. டில்லி வாழ் தமிழர்களின் ரிசெப்ஷன் வாசித்தபோது எனது மூத்த மகன் டில்லியில் உள்ள அலுவலக நண்பர்களுக்கு (மகன் அப்போது டில்லியில் வேலை பார்த்தான்) 2005 இல் கல்யாண ரிசெப்ஷன் கொடுத்தது நினைவில் வந்தது.கல்யாணம் திருவனந்தபுரத்தில். இங்கேயும் ஒரு ரிசெப்ஷன் இருந்தது. டில்லியில் மயூர் விஹாரில் குருவாயூரப்பன் கோயிலில் உள்ள ஹாலில் ரிசெப்ஷன் நடைபெற்றது. பரிசு என்று எல்லோரும் கொடுத்தது பூங்கொத்துகள் தான். வந்த ஆண்கள்  கோட் சூட்டில் தான். பெண் மல்லிகை பூ தலையில் வைத்தது அவர்களுக்கு வினோதம். டில்லி ரிசெப்ஷன் களில் ஒரு வித்யாசம். வந்தவர்கள் பல மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். ஒரு மினி இந்தியா தான். 

    நமது மக்கள் சாஹி பனீரையும் நாணையும் சாப்பிட, வட  இந்தியர்கள் மசாலா தோசை, வடை சாம்பார் என்று வெளுத்து கட்டினர்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல மாநில மக்கள் இங்கே இருப்பதால் தில்லி மினி இந்தியா தான். உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  10. பேஷன் என்று கருதப்படுகிற தலைவிரிகோலத்தை ஏனோ நான் முற்றிலும் வெறுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. //“செத்த பாம்பு வளருமா ஐயா?” என்று கேட்டான்.//
    நாளைய தலைமுறை உண்மையை ஆராய்ந்து பேசும் விழிப்பு நிலையில் மகிழ்ச்சிதான்.

    பாடல் கேட்டேன். புதுமையும், பழமையும் இணைந்து.

    ராஜா காது கேட்ட விஷயங்கள் நன்றாக இருக்கிறது.

    மார்கழி மாதம் தலௌஐ விரித்துப் போட்டு கோவிலுக்கு வரும் குழந்தைகளை , பெண்களை பார்த்து கோவிலில் வயது முதிர்ந்த பாட்டிகள் கூந்தலை அள்ளி முடி என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  12. செத்தபாம்பு:))
    ஹோலி சிறிய அளவில் கொண்டாட்டம் நன்மையே கொரானோ இங்கும் பயமுறுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹோலி கொண்டாட்டம் பயமுறுத்துகிறது... உண்மை தான். ஆனாலும் சில இடங்களில் நிறையவே கொண்டாடி இருக்கிறார்கள் மாதேவி.

      நீக்கு
  13. ஐன்ஸ்டீன் மொழி அருமை அண்ணா அவரே நூறுமுறை யோசித்து தான் பதில் கண்டுபிடித்தார் என்றால் நாம் அனைவரும் யோசிக்க வேண்டும் என்று புரிகிறதே.

    செத்த பாம்பு கதை சொல்லும் கருத்து இன்றைக்கு மிகத் தேவையானது. சமூக தளங்களில் இன்றைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது. செத்தப் பாம்பின் நீளம் மட்டுமல்ல கண் காது மூக்கு கைகள் கால்கள் என்று கூட வைத்து விடுகிறார்கள்.

    கரோனா வாழ்வின் அத்தனை பகுதிகளையும் அச்சுறுத்தி விட்டது.

    எப்பொழுதும்போல் அருமையான பதிவு அண்ணா. பாடலின் கருத்து நன்று, இனி தான் கேட்க வேண்டும்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும் கிரேஸ்!

      செத்த பாம்பு - இன்றைய சமூக வலைத்தளங்கள் இப்படித்தான் பலதையும் பரப்பிக் கொண்டிருக்கிறது - கொண்டிருக்கிறார்கள்!

      கரோனா உலகம் முழுவதுமே அச்சம் பரவிக் கிடக்கிறது.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பாடல் முடிந்த போது கேளுங்கள்.

      நீக்கு

  14. ராஜா காது கழுதைக்காது.. உண்மைதான்.
    செத்த பாம்பு பொய்யாக வளர்ந்த கதை
    நல்ல பாடம்.
    தலைவிரிகோலம் எங்கும் பரவிக்கிடக்கிறது.

    சொல்லும் வரை சொல்வோம். ரிசப்ஷனில் ஒரு இருபது வருடங்களுக்கு முன்
    இது போலப் பார்த்துப் பெண்ணின் அம்மாவிடம் கேட்டேன்.

    மமியார் வீட்டில என்ன அனுபவிக்கப் போகீறாளோ
    இங்கயாவது சந்தோஷமாக இருக்கட்டும்
    என்றார்.
    ஆரம்பமே சரியில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.

    ஹோலி வண்ணத்தில் நீங்கள் மாட்டாதது மகிழ்ச்சி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜா காது - இப்படித்தான் இன்று பலரும் இருக்கிறார்கள்.

      மாமியார் வீட்டில் என்ன அனுபவிக்கப் போகிறாளோ - நல்ல அம்மா!

      ஹோலி வண்ணத்தில் மாட்ட வில்லை! முன்பு கொண்டாடியிருக்கிறேன் - இப்போது அத்தனை பிடிப்பதில்லை வல்லிம்மா...

      நீக்கு
  15. காஃபி வித் கிட்டு வெகு சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      நீக்கு
  16. பாம்புக்கதை படித்த ஞாபகம் இருக்கிறது.   மதன் ஜோக் சுவாரஸ்யம்.  கொரானா ஹோலியையும் விட்டு வைக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - கொரானா எதையும் விட்டு வைக்கவில்லை. பல அலுவலகங்கள் விடுமுறை தந்து கொண்டிருக்கிறார்கள் - Work from Home! அரசு அலுவலகங்களில் அதற்கான வசதி இல்லை! :(

      தில்லியில் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா கொட்டகைகள் அனைத்தும் 31-ஆம் தேதி வரை மூடி விட்டார்கள் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. அதென்ன கணக்கோ மார்ச் 31?!! மற்ற நகரங்களிலும் அப்படியேதான்.
      கொரானாவின் விசா அத்தோடு முடிந்து விடுகிறதாமா?!!

      நீக்கு
    3. கொரானாவின் விசா அத்தோடு முடிந்து விடுகிறதாமா? ஹாஹா. அந்த சமயத்தில் மீண்டும் ஒரு முறை முடிவு எடுப்பார்கள் ஸ்ரீராம். நல்லதே நடக்கட்டும்

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    காஃபி வித் கிட்டு தொகுப்பு அருமை. வாசகம் அருமை. 99 தடவை நன்கு யோசிக்கும் போது நூறாவது தடவை பதில் சுலபமாக இருக்கும் என்பதில் எதையும் ஆழ்ந்து யோசித்து தான் செய்ய வேண்டும் என்ற உண்மை மறைந்துள்ளதை உணர்த்துகிறார் போலும்.

    செத்த பாம்பு கதை அருமை. எதையும் மிகைப்படுத்தி கூறும் போது கூடவே வதந்தி தீ போன்று பரவும் என்பதை உணர்த்தும் கதை.

    ராஜா காதில் கேட்ட மாதிரி, எனக்கும் தலை விரித்து செல்லும் பெண்களை கண்டால் இழுத்து வைத்து பின்னல் போட்டு விடத் தோன்றும். அது இயல்பில் முடிவது இல்லையாததால், மானசீகமாக அப்படி போட்டிருக்கிறேன். இப்போது தலைவிரி கோலந்தான் எங்கும். கூடவே மருந்தில்லா வைரஸும் உலகமெங்கும் தலைவிரித்து ஆடுகிறது. எங்கள் வீட்டு வளாகத்திலும், வைரஸுக்கு பயந்து ஹோலிக்கு தடை. இல்லையென்றால் வருடந்தோறும் பாட்டும், ஆட்டமுமாக கொண்டாடுவார்கள்.

    மதன் ஜோக்கை ரசித்தேன். பேன்கள் வழுக்கை தலையில் குடி வரவே தயக்கம் கொள்ளும் என்பது உண்மைதானே..! அத்தனையும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      செத்த பாம்பு - இன்றைக்கு பலரும் இப்படித்தான் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

      ராஜா காது - இழுத்து வைத்து பின்னல் போட்டு விடத் தோன்றும் - ஹாஹா...

      மதன் ஜோக் - எப்போதும் ரசிக்கக் கூடியவை.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....