திங்கள், 23 மார்ச், 2020

அந்தமானின் அழகு – படகுப் பயணம் – ஸ்கூபா, ஸ்னார்க்லிங் – கட்டணம் எவ்வளவு

அந்தமானின் அழகு – பகுதி 10



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

கண்களில் தென்படும் அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை. இதயத்தில் இடம் பெற்ற அனைத்தும் அருகில் இருப்பதில்லை…



 

படகு வழி பயணித்து பயணத்தின் இரண்டாம் நாள் இரண்டு தீவுகளுக்கு பயணிக்கப் போகிறோம்.  படகுப் பயணத்திற்கான கட்டணம் பெரியவர்களுக்கு 100 ரூபாய் சிறியவர்களாக இருந்தால் ஐம்பது ரூபாய். இந்தப் பயணத்திற்கான கட்டணத்தினைச் செலுத்தி பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்வது அவசியம் – எங்கள் பயணத்தில் இவை அனைத்துமே எங்கள் பயண ஏற்பாட்டாளர் பார்த்துக் கொள்வார் என்பதால் எங்களுக்குக் கவலையில்லை – எல்லா இடங்களிலும் முன்பதிவு செய்வதற்கும், பயணச் சீட்டுகளை வாங்குவதற்கும் அடையாள அட்டை அவசியம் – நாங்கள் பயணம் திட்டமிட்ட போதே எங்கள் குழுவில் உள்ள அனைவருடைய அடையாள அட்டையின் நகலையும் மின்னஞ்சல் வழி பயண ஏற்பாடு செய்த திரு சுமந்த் அவர்களுக்கு அனுப்பி விட்டோம் என்பதால் எல்லாவற்றையும் அவரது நிறுவனமே பார்த்துக் கொள்ளும். நீங்களே தனியாக எல்லாவற்றையும் செய்து கொள்வது என்றால் பயணிக்கும்போது தான் இதனை செய்ய முடியும்.  படகுப் பயணம் தினம் தினம் (புதன் கிழமை தவிர) காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கும் மாலை நேரத்தில் சீக்கிரமாகவே முடித்து விடுவார்கள் – கடைசி படகு 04.00 மணிக்கு!



இரண்டு தீவுகளில் ஒன்றில் நிறைய Water Sports Activities உண்டு – Scuba Diving, Snorkeling, Glass Boat Ride என நிறைய விஷயங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித கட்டணம், சில நிபந்தனைகள் – குறிப்பாக ஸ்கூபா டைவிங் செல்ல விரும்பும் நபர்களுக்கு இரத்தக் கொதிப்பு, இதய நோய் போன்றவை இருந்தால் கண்டிப்பாக அனுமதி இல்லை – போலவே சிறு வயதினர் மற்றும் ஐம்பது வயதிற்கும் அதிகமானவர்கள் ஆகியோருக்கும் அனுமதி இல்லை.  நீங்கள் எனக்கு உடல் நிலை நன்றாக இருக்கிறது என கட்டணம் கட்டி சீட்டு வாங்கிக் கொண்டாலும் தீவில் உங்கள் வயது, உடல் நிலை காரணமாக உங்களால் ஸ்கூபா டைவிங் செய்ய முடியவில்லை என்றால் உங்கள் பணம் திரும்பிக் கொடுத்து விடுவார்கள். அதனால் கவலை இல்லை.  இந்த இடங்களில் உள்ள Activities-ல் நீங்கள் ஈடுபட என்ன கட்டணம்,  என்பதைப் பார்க்கலாம்.  ஸ்கூபா டைவிங் தான் இருப்பதில் அதிகமான கட்டணம் – 45 முதல் 60 நிமிடங்கள் வரை கொண்ட இந்த ஸ்கூபா டைவிங் செய்ய ரூபாய் 3000 முதல் ரூபாய் 5000 வரை கட்டணம் உண்டு. நீங்கள் எடுக்கும் நேரத்தினையும், செய்யப் போகும் தீவினைப் பொறுத்தும் இந்த கட்டணம் மாறும்.



முழு நேரமும் கடலுக்குள் இருப்போமா என்ற கேள்வி வரலாம்? இல்லை – பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் முதல் முறையாக ஸ்கூபா டைவிங் செய்பவர்களாக இருப்பார்கள் என்பதால், பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை தண்ணீருக்கு அடியில் அழைத்துச் செல்ல மாட்டார்கள் – அதற்கான உடைகளை (அவர்களே தருவார்கள்) அணிந்து கொண்டு கடல் தண்ணீரில் நின்று கொண்டு, தண்ணீருக்குள் டைவிங் செய்யும்போது என்ன என்ன செய்ய வேண்டும், உடன் வரும் பயிற்சியாளருக்கு எதையாவது சொல்ல விரும்பினால் எப்படி சைகைகள் காண்பிக்க வேண்டும், என எல்லா விஷயங்களையும் உங்களுக்குச் சொல்லித் தருவார்கள்.  அனைத்தையும் கேட்டுக் கொண்டு, கடலின் உள்ளே தண்ணீருக்குள் செல்வதற்கு முன்னர் உங்கள் விருப்பத்தினையும், பிரச்சனைகள் இல்லை என்பதை உறுதி செய்த கொண்ட பிறகு உங்களை அழைத்துச் செல்வார்கள் – அருகிலேயே ஒரு பயிற்சியாளரும் இருப்பார் என்பதால் பயம் தேவையில்லை. அவர் சொல்லித் தரும் சைகைகளை நினைவில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.  கடலுக்குள் இருக்கும் நேரம் சுமார் 15 முதல் 25 நிமிடங்கள் வரை மட்டுமே.



சரி, என்னால் ஸ்கூபா டைவிங் செய்ய முடியாது, கட்டணம் அதிகம் என நினைப்பவர்கள், மற்றொரு Activity ஆன Snorkeling செய்யலாம்.  அதில் உங்களை கடலுக்கு அடியில் அழைத்துச் செல்ல மாட்டார்கள் – உடையும் தனியாக தேவையில்லை – நீங்கள் அணிந்திருக்கும் உடையே போதுமானது – முகத்தினை மட்டும் மூடிக் கொள்ளும் விதமாக ஒரு கவசத்தினை – Magnifying Glass கொண்டது – மாட்டி விட்டு, தலைகுப்புற படுத்துக் கொண்டு நீங்கள் மிதக்க, உங்கள் கைகளை பிடித்து அழைத்துச் செல்வார் ஒரு வழிகாட்டி! கடலுக்குள் சென்று பார்க்க முடியாவிட்டாலும் இந்த வழியிலும் நிறைய விஷயங்களை நீங்கள் பார்த்து ரசிக்க முடியும். இதற்கான கட்டணம் ஸ்கூபா டைவிங் கட்டணத்தினை விட குறைவு தான் – ஆயிரம் ரூபாய் வரை வாங்குகிறார்கள் – இதுவும் நேரத்தினை பொறுத்து தான். ஐந்து நிமிடங்கள் என்றால் ஐநூறு ரூபாய் கூட வாங்குவார்கள். நின்று நிதானித்து எல்லா விஷயங்களையும் காண்பிக்க வேண்டுமெனில் ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். 



சரி, இது இரண்டுமே செய்ய முடியாது, ஆனால் எனக்கு கடலுக்குள் இருக்கும் விஷயங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் – அதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு – வழி உண்டு – அதற்கும் வழி உண்டு – அந்த வழி – கண்ணாடிப் படகுகள். ஒரு படகில் ஐந்து முதல் பத்து பேர் வரை பயணிக்கலாம் – படகின் நடுவே பெரிய Magnifying glass பொருத்தப் பட்டிருக்க, பயணிகள் பக்கவாட்டில் அமர்ந்து கொண்டு அந்த கண்ணாடிகள் வழியே கடலுக்கு அடியில் இருக்கும் பவளப் பாறைகள், விதம் விதமான மீன்கள், கடலுக்குள் இருக்கும் அனைத்து அழகோவியங்களையும் பார்த்து ரசிக்க முடியும். இதற்கான கட்டணம் ரூபாய் 600/- முதல் ஆயிரம் வரை!  இந்த மூன்று Activity-யில் எது உங்களுக்கு வசதியானதோ அதற்கான நுழைவுச் சீட்டினை நீங்கள் படகுத்துறையிலேயே வாங்கிக் கொள்ளலாம். சீட்டு வாங்கிய பின்னர் உங்களால் அந்த Activity-யில் பங்கு பெற முடியாவிட்டால் படகுப் பயணம் முடிந்து படகுத் துறைக்கு திரும்பி வரும்போது கட்டணத்தினை திரும்பப் பெறலாம் என்பதும் ஒரு வித வசதி.



கட்டண விவரங்கள் அனைத்தையும் பார்த்து விட்டோம். படகுப் பயணத்திற்கான சீட்டுகளும் வாங்கிக் கொண்டாயிற்று – இனி அடுத்து என்ன? படகுப் பயணம் தான் – எங்கள் குழுவினரை இரண்டு பிரிவுகளாக பிரித்து விட்டார்கள் – ஒரே படகில் அனைவரும் பயணிக்க முடியாது என்பதால். ஒரு குழுவில் பத்து பேர் மற்றதில் மற்றவர்கள்.  எங்கள் படகின் பெயர் Marina2. சீட்டு வாங்கும் இடத்திலிருந்து படகு நிற்கும் இடம் வரை சற்றே நடக்க வேண்டும்.  ஆங்காங்கே நிழற்படங்களையும் எடுத்துக் கொண்டு படகு நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அவரவர் படகில் அவரவர் அமர்ந்து கொள்ள படகுகள் புறப்பட்டன – படகுகளில் பயணிக்கும்போது கண்டிப்பாக Safety Jacket அணிந்து கொள்ள வேண்டும் – அதை அணியாமல் படகுப் பயணம் தொடங்காது! முன்னரே ஒரு பதிவில் சொன்னது போல, படகு பயணிப்பதை வாக்கி டாக்கி மூலம் இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லி பதில் வாங்க வேண்டும் – எத்தனை பயணிகள் – அதில் ஆண்கள் எத்தனை பேர், பெண்கள் எத்தனை பேர் – எங்கே பயணிக்கிறது படகு என அனைத்தையும் சொல்ல வேண்டும்.



படகில் ஏறுவதற்கு முன்னரே படகில் பயணம் செய்பவர்கள் அனைவருடைய பேரையும் ஒரு படிவத்தில் எழுதி வாங்கிக் கொள்வார்கள் – கூடவே அவர்களது அடையாள அட்டையில் உள்ள எண்களும், அலைபேசி எண்ணும் எழுதிட வேண்டும் – ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் இந்த விவரங்கள் கடற்படைக்கும், அரசுக்கும் உதவியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடுகள்.  இத்தனை விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செய்யும் அந்த ஊர் மக்களுக்கு நிச்சயம் பாராட்டுகளைச் சொல்ல வேண்டும்.  எங்கள் படகினை செலுத்தியவர்கள் – ஆமாம் தமிழர்கள் தான் – பல வருடங்களாக இங்கேயே இருந்து விட்டவர்கள் – அவர்களது மூதாதையர்கள் இங்கே இருந்ததால் – இவர்கள் பிறந்ததிலிருந்தே இங்கேயே இருப்பவர்கள் – தமிழ் தெரியும் என்றாலும் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் குறைவே – ஹிந்தி தான் பொதுவாக பேசுகிறார்கள்.  படகில் பயணித்தபடியே படகோட்டியிடம் பேசிக் கொண்டு அவர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை பற்றியும் தெரிந்து கொண்டோம். கூடவே படம் எடுப்பதும், படகுப் பயணத்தினை ரசிப்பதும் தொடர்ந்தது.  இந்தப் படகுப் பயணத்தில் பார்த்த/சென்ற முதல் தீவு என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

  1. திட்டமிட்டு, கச்சிதமாக படகுப்பயணத்தையும் ஸ்கூபா டைவிங் போட்ன்றவற்றையும் செய்கிறார்கள் என்று தெரிகிறது.   இன்றைய வாசகமும் சிறப்பு.  நீங்கள் சொல்லி இருக்கும் ஆப்ஷன்களில் என் ஆப்ஷன் கண்ணாடிப் படகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஆப்ஷன் கண்ணாடிப் படகு - மகிழ்ச்சி. நீரில் நனையாமல் பார்க்க முடிந்தாலும் மற்ற இரண்டில் இருக்கும் த்ரில் இதில் இல்லை ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பயண விளக்கங்கள் அருமை ஜி பலருக்கும் பயனாகும் முறையில் சொல்லி வருவது ஸூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயண விளக்கங்கள் சிலருக்காவது பயன்படும் என்பதால் தான் பகிர்ந்து கொள்கிறேன் கில்லர்ஜி.

      நீக்கு
  3. படகுப் படங்களைப் பார்த்தாலே பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் இங்கே பயணம் செய்யுங்கள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. மூன்று முறைகளும் அருமை...

    இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்வதும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்வது நல்ல விஷயம் தான் - விபத்துகளைத் தவிர்க்கவும், அப்படி ஏற்பட்டால் உடனடியாக நிவாரண உதவிகளைச் செய்யவும் இந்த விஷயம் உதவும் தனபாலன்.

      பதிவு பற்றிய உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  5. //கண்களில் தென்படும் அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை. இதயத்தில் இடம் பெற்ற அனைத்தும் அருகில் இருப்பதில்லை…//

    உண்மை. நல்ல வாசகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  6. படகு பயணம் விவரங்கள் அருமை.
    படகில் பார்த்த முதல் தீவு என்ன என்பதை படிக்க தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படகு பயணம் விவரங்கள் சிலருக்காவது பலன் அளிக்கும் என்பதால் பகிர்ந்தேன் கோமதிம்மா... அடுத்த பதிவில் என்ன தீவு என்று சொல்கிறேன் மா...

      நீக்கு
  7. எனக்கு பயணம் செய்வதுபிடிக்கும் ஆனால் இப்போதெல்லாம்படித்துப்பார்த்து திருப்தி அடையவேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் செய்ய முடிந்த போதே சென்று விடுவது நல்லது ஜி.எம்.பி. ஐயா. முடியாத போது படித்தும், பார்த்தும் திருப்தி அடைய வேண்டியது தான்.

      நீக்கு
  8. மெக்சிகோவில் ஸ்நோர்க்கிலிங் 50 டாலர்.. கொடுக்க நான் ரெடி, ஆனால் எனக்கு நீச்சல் தெரியாது என்றேன். அவர்கள் அழைத்துச் செல்லவில்லை. அதற்கு அப்புறம்தான் கொஞ்சம் நீச்சல் கற்றுக்கொண்டேன்.

    வாட்டர் ஸ்போர்ட்ஸ் - ரொம்ப நல்லா இருக்கும், ஆனால் ஜாக்கிரதையாவும் நமக்கு இது முடியுமா என்ற தெளிவோடும் இருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்டர் ஸ்போர்ட்ஸ் நல்ல விஷயம். ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியது அவசியம் தான் நெல்லைத் தமிழன். நிறைய பாதுகாப்பு விஷயங்களைக் கவனித்து தான் அனுமதி தருகிறார்கள். எனக்கும் நீச்சல் கொஞ்சம் தான் தெரியும். முழுவதாகக் கற்றுக் கொள்ளவில்லை.

      நீக்கு
  9. அன்பு வெங்கட்,

    வாசகம் இனிமை..
    பயண்ம் வெகு சுவாரஸ்யமாகிறது. அந்தமான் இத்தனை அழகு என்று தெரியாது.
    பலவேறு இடங்களில் கிடைக்கும் அனுபவங்களை
    இங்கேயே அனுபவிக்கலாம் போல.
    அருமையான படங்கள்.
    நீங்கள் அனுபவிப்பதே எங்களுக்கு சுகமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      அந்தமான் ரொம்பவே அழகு தான் மா. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  11. /கண்களில் தென்படும் அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை. இதயத்தில் இடம் பெற்ற அனைத்தும் அருகில் இருப்பதில்லை//


    பாஸ் மனைவியையும் மகளையும் மிஸ் பண்ணுறீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை மதுரைத் தமிழன். இதுவும் கடந்து போகும் என்பதை உணர்ந்திருக்கிறேன். வாசகத்தினை வைத்து ஒருவரின் எண்ணங்களை எடைபோட்டு விட முடியாது! :))))

      நீக்கு
  12. வெங்கட்ஜி வாசகம் மிக மிக அருமை. உண்மையும் கூட. மகன் கூட இல்லையே ..அந்த தருணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

    மூன்று முறைகள் விளக்கம் பயனுள்ளவை. விரிவா அழகா சொல்றீங்க ஜி.

    எனக்கு ஸ்கூபா, ஸ்னார்க்ளிங்க் பண்ண மிக மிக ஆசை. நீச்சல் மிக நன்றாகத் தெரியும். ஆனால் நகர வாழ்க்கை என்று ஆன பிறகு அதற்கு வழி இல்லாமல் போய்விட்டது. எங்கேனும் போக நேர்ந்து ஆறு அருவி குளங்கள் இடங்களுக்குச் சென்ற போது கண்டிப்பாக நீந்திப் பார்ப்பதுண்டு அப்போதுதான் தெரிந்தது தொடர்ந்து நீந்தாததால் கொஞ்ச தூரம் போகும் போதே கொஞ்சம் மூச்சு வாங்குவது. அதுவும் 40 அடி ஆழம் எனும் போது தண்ணீரின் அழுத்தம் கூடுதலாக இருக்கும்..

    முதல் இரண்டும் செய்ய ஆசை இருந்தாலும் இனி அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. எனவே கண்ணாடிப் படகுதான்..கடலடி அக்வேரியம், காட்சியகம் சென்றதுண்டு.

    அந்தமான் பற்றி நீங்கள் எழுதுவது மிகவும் ஆவலைத் தூண்டுகிறது.

    //இத்தனை விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செய்யும் அந்த ஊர் மக்களுக்கு நிச்சயம் பாராட்டுகளைச் சொல்ல வேண்டும். //

    ஆமா மிக மிகச் சிறப்பாகச் செய்வது தெரிகிறது ஜி உங்கள் விவரணங்கள்.

    தொடர்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

      ஸ்கூபா - என்னையும் அனுமதிக்கவில்லை. ஆனால் ஸ்னார்க்ளிங் செய்து மகிழ்ந்தேன். ஸ்பீட் பைக் ஓட்டியும் மகிழ்ச்சி அடைந்தேன்.

      நீக்கு
  13. பயணிகள் பாதுகாப்பு முக்கியம். இதை உணர்ந்து செயல்படுகிறார்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பாதுகாப்பு அத்தியாவசியமானது. உணர்ந்து செயல்படுவது நல்ல விஷயம் தான் டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....