வியாழன், 5 மார்ச், 2020

கர்ண பரம்பரை – காலச்சக்கரம் நரசிம்மா - வாசிப்பனுபவம்



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

என் வயது 85 – எனக்கு எல்லாம் தெரியுமென்று நினைத்திருந்தேன். ஆனால் அதிகம் படிக்க, படிக்க எனக்குத் தெரிந்தது கொஞ்சமே என்பதை உணர்ந்து கொண்டேன் – சாக்ரடீஸ்…





கர்ண பரம்பரை – காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் உருவாக்கத்தில் வெளிவந்த மற்றுமொரு நாவல். இந்த முறை தமிழகத்திற்குச் சென்றபோது வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தேன். ஊரிலிருந்து வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. ஆனாலும் கண் எதிரே இருந்தாலும் ஏனோ சென்ற வாரம் வரை படிக்கவில்லை – அலுவலக வேலைகள், வீட்டு வேலைகள், வலையில் எழுத வேண்டியவை, படிக்க வேண்டியவை என அதிலேயே நேரம் போக, கர்ண பரம்பரை புத்தகத்தினை கையில் எடுக்கவே இல்லை. எடுத்தால் கீழே வைக்காமல் படித்து விடுவேன் என்று நன்றாகவே தெரியும்.  இப்புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் சொல்லி இருப்பதை இங்கே நினைவு கூர்கிறேன்…

”’என்ன சார்…! வழக்கமான… உங்கள் நாவல் போல இது இல்லையே… ஜவ்வா இழுக்குதே…’ என்கிற ஒரு சொல்லை என்றாவது கேட்டுவிடப் போகிறோமே என்று, ஒவ்வொரு நாவல் வெளிவரும்பொழுதும், மனதினில் சிறு அச்சம்.  ஒரு நாவலில் ஏற்படும் டெம்போவை எல்லா நாவல்களிலும் ஏற்படுத்த முயல்வது என்பது மிகவும் கஷ்டம். இது வரை எனது ஐந்து நாவல்களைப் படித்து முடித்த அனைவரும், கோரஸ் ஆகச் சொல்லும் ஒரே கருத்து, ‘கையில் எடுத்தா… கீழே வைக்க முடியவில்லை…’ என்பதுதான்.”

கோரஸ் குரல்களில் எனது குரலும் நிச்சயம் இருக்கும் என்பதைச் சொல்லிக் கொண்டு – ஆமாம் அவரது முந்தைய புத்தகங்களைப் படித்தபோதும், இந்தப் புத்தகத்தினைப் படிக்கும்போதும் கையில் எடுத்த பிறகு முடிக்கும் வரை கீழே வைக்கவில்லை! – இப்புத்தகத்தை சென்ற வாரத்தின் ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து இரவு உணவுக்குப் பிறகு எடுத்தேன் – எடுத்த போது நேரம் இரவு ஒன்பது மணி! படித்து முடித்த போது இரவு 01.30 மணி! 482 பக்க நாவலை நான்கரை மணி நேரத்தில் படித்து முடிதேன் – கையில் எடுத்த புத்தகத்தினை வைக்க முடிந்தால் தானே! அதன் பிறகு உறங்கி காலையில் நேரம் கழித்து எழுந்ததும், அலுவலகத்தில் நடந்த முக்கியமான Meeting சமயத்தில் வந்த தூக்கத்தினை தடுக்க விழித்ததும் தனிக்கதை!

கர்ண பரம்பரை – கதை என்ன? “கரணம் தப்பினால் மரணம்” என்றொரு வாசகத்தினைக் கேட்டு இருக்கக் கூடும் – அதன் அர்த்தம் எல்லா பழமொழிகளைப் போலவே அர்த்தம் மாற்றியே நாம் அறிந்திருக்கிறோம். கர்ணம் என்றால் காது! நம் காதுக்கு மட்டுமே எனக் கிடைத்த ஒரு ரகசியத்தினை வெளியே தப்ப விட்டால் மரணம் நிகழும் என்ற அர்த்தத்தில் இந்த வாக்கியத்தினை முதலில் பயன்படுத்தியது அகத்திய மாமுனி! அகத்தியர் 12000 எனும் ரணசிகிச்சை நூல் உருவான காலத்தில் தனது சீடரனா புலஸ்தியரிடம் சொன்ன வாக்கியம்.  ”அகத்தியரின் ரண சிகிச்சை நூலான அகத்தியர் 12000 உருவாகிக் கொண்டிருந்த சமயம் அது! கண்களை மூடி தனது அகக்கண்ணை நாசியின் முனையில் நிறுத்தி, மூலிகை மருத்துவத்தின் மகத்துவத்தைப் பாடல்கள் வடிவில் புலஸ்தியருக்கு உபதேசித்துக் கொண்டிருக்க, அவரும் பயபக்தியுடன் அப்பாடல்களைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். இன்ன உபாதைகளுக்கு இன்ன மூலிகைகளை உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பாடிய அகத்தியர், தொடர்ந்து பஞ்சகரணி என்கிற ஐந்து மூலிகைகளைப் பற்றி விவரிக்கத் துவங்குகிறார்.”

ம்ருத சஞ்சீவ கரணி, சந்தான கரணி, விசல்ய கரணி, சாவர்ண கரணி என்கிற நான்கு கரணிகளைத் தொடர்ந்து ஐந்தாவது அபூர்வ கரணி – அபூர்வ ஆற்றலைக் கொண்ட இந்த ஐந்தாம் கரணியான அபூர்வ கரணி, செவி மூலமாகவே வைத்தியர்களிடையே சென்று சேர வேண்டும். இந்த கரணியை, கர்ணத்தின் (காதுகள்) மூலமாக, ஓராண் வழியாகப் பாதுகாக்கும் கர்ணபரம்பை ஒன்றை உருவாக்கு!” என்று உத்தரவிட்ட பின், அகத்தியர் தொடர்ந்து அபூர்வகரணி இரகசியத்தை புலஸ்தியருக்கு உபதேசித்தார். ஆசான் கூறிய இரகசியத்தைக் கேட்ட புலஸ்தியரின் முகம் வியப்பால் விரிந்தது! அபூர்வகரணி மூலிகையால் மனித சமூதாயத்திற்கு எத்தகைய ஆபத்துகள் எல்லாம் விளையக் கூடும் என்று அகஸ்தியர் குறிப்பிட்டவுடன், பதைபதைத்துப் போன புலஸ்தியர், தன் இரு காதுகளையும் கைகளால் பொத்திக் கொண்டார். அகத்தியர் 12000 – நூலைத் தொகுத்தவர் அபூர்வகரணி இரகசியத்தை மட்டும் மனதுள் தேக்கி வைத்துக் கொண்டார்!

அபூர்வகரணி, புலஸ்தியரிடமிருந்து வழி வழியாக இரகசியமாக ஓராண் வழியாக பாதுகாப்புடன் சப்தமாதா பிள்ளான், ஜபமாலை சித்தர், உரகபூஷண சித்தர் போன்றவர்கள் வழி வந்து கடைசியாக தொன்னைக்காது சித்தர், துளசி ஐயா என்று தொடர்ந்து கர்ணம் வழி மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது. துளசி ஐயா அடுத்ததாக ஒருவரிடம் இந்த இரகசியத்தினை கர்ணம் வழி சேர்க்க வேண்டும். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தவர் நல்லம்ம செட்டியார்.  அப்போதிலிருந்து நடப்பவற்றை தான் கர்ண பரம்பரையில் விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் நரசிம்மா அவர்கள்.  நல்லம்ம செட்டியார் அபூர்வ கரணி இரகசியத்தினை பெறும் நாளன்று அவரைப் பார்க்க நான்கு சித்த வைத்தியர்கள் வருகிறார்கள் – அப்படி வருபவர்களுக்கு உணவு அளிக்கிறார் நல்லம்மரின் மனைவி வனதாயி – இரண்டு கண்களிலும் பார்வை இல்லாத அவர் பிரண்டைத் துவையல் சமைத்து பரிமாற சாப்பிட்டவர்களில் ஒருவரே நல்லம்மரிடம் இரகசியத்தினை திருடிக்கொண்டு செல்ல, அதனால் ஏற்படும் கெட்ட விளைவுகள் – நல்லம்மரின் மரணத்தில் ஆரம்பித்து வரிசையாக பல மரணங்கள்…

அப்படி மரணித்தவர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நபர்களாக இருக்கிறார்கள் – நளபவன் எனும் பிரபல உணவகத்தினை நடத்தும் குடும்பத்தவர்கள் – அங்கே கிடைக்கும் சாம்பாரின் சுவைக்காகவே வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது – காரணம் சாம்பாரில் கலக்கப்படும் ஒரு பொருள் – அது என்ன பொருள்? அந்த இரகசியம் எப்படி நளபவன் உரிமையாளருக்குக் கிடைக்கிறது? அவர்கள் யாரிடமிருந்து எப்படி பெற்றார்கள்? என்று நடுநடுவே நிறைய ஸ்வாரஸ்யங்கள்.  ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ந்து ஸ்வாரஸ்யத்திற்கும் எதிர்பாரா திருப்பங்களுக்கும் குறைவே இல்லை.  நளபவன் குடும்பத்தில் இரண்டாவது மாப்பிள்ளையாக இருப்பவர் நல்லம்மர்-வனதாயி தம்பதியினரின் ஒரே மகன் நம்பிராஜன். கணவனை இழந்த வனதாயி – இரண்டு கண்களும் தெரியாத வனதாயி எப்படியாவது தனது மகனையும், அவனது குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டும், என்ற எண்ணத்துடன் துப்பறியும் வேலைகள் செய்கிறார். தனது மகன், மருமகள் மற்றும் அவர்களது குடும்பத்தில் எஞ்சியவர்களை காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் கர்ண பரம்பரை கதை.

நூலாசிரியர் திரு காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் இந்தக் கதையை ரொம்பவே ஸ்வாரஸ்யமாக எடுத்துச் சென்றிருக்கிறார்.  ஸ்வாரஸ்யங்களுக்குக் குறைவில்லாத இந்தப் புதினத்தில் நிறைய விஷயங்களும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.  ஏற்கனவே சொன்னபடி மொத்தம் 484 பக்கங்கள் – வானதி பதிப்பகத்தின் வெளியீடு – விலை ரூபாய் 235.  திரு நரசிம்மா அவர்களின் மற்ற சில புத்தகங்களைப் பற்றி ஏற்கனவே என் வலைப்பூவில் எழுதி இருக்கிறேன் – அந்தப் பதிவுகளின் சுட்டியும் - படிக்காதவர்கள் வசதிக்காக, கீழே தந்திருக்கிறேன்.




சென்னையில் இருக்கும் நண்பர்கள் நேரடியாக வானதி பதிப்பகத்திலேயே வாங்கிக் கொள்ளலாம். இணைய வழி வாங்க விரும்புவர்கள் Marina Books தளத்திலும் மற்ற தளங்களிலும் வாங்கலாம்.

நண்பர்களே, நல்லதொரு புத்தக வாசிப்பனுபவம் சொல்லும் இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

20 கருத்துகள்:

  1. அபூர்வகரணி பயணம் சுவாரஸ்யம்...

    உங்களின் விமர்சனமே நாவலின் அருமையை புரிந்து கொள்ள முடிகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபூர்வகரணி - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நாவலில் சொல்லப்பட்ட விடயங்கள் அரிதாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி. சிறப்பான விஷயங்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நாவலை விமர்சித்துப் போனவிதம் வெகு சுவாரஸ்யம்..நிச்சயம் வாங்கிப் படித்துவிடுவேன்...வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாங்கிப் படியுங்கள் ரமணி ஜி. உங்களுக்கும் பிடிக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கையில் எடுத்தால் கீழே வைக்கமுடியவில்லை. சிலருடைய எழுத்து அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துவிடுகிறது. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை ரசித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  6. நானும் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான நாவல் - வழக்கம் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. //கர்ண பரம்பரை –//

    ஆவ்வ்வ் இதை நான் எப்பவோ பட்டமாக வைத்திருந்தேனே.. பார்த்ததும் அதிர்ச்சி.. என் பெயரிலேயே ஒரு புத்தகமோ என:)) ஹா ஹா ஹா.. நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன், முடிஞ்சால் படிக்க முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... உங்கள் பட்டங்கள் தான் எத்தனை எத்தனை!

      முடிந்த போது வாசியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. வாசிப்பனுபவம் பற்றிய இப்பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....