சனி, 17 அக்டோபர், 2020

காஃபி வித் கிட்டு – தடுமாற்றம் – அம்மா – ஜாடி – இலவச மின்னூல் – வானர வைபவம் - பணம்

காஃபி வித் கிட்டு – 88 


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

பாதையில் ஆயிரம் தடுமாற்றம் வரலாம்! ஆனால் பயணம் என்றும் தடம் மாறக் கூடாது! 


இந்த வாரத்தின் எண்ணங்கள் – சின்னச் சின்ன தடுமாற்றங்கள்: 

கடந்த சில நாட்களாகவே ஏதோ சில தடுமாற்றங்கள். மனது ஒரு நிலையில் இல்லை. சின்னச் சின்னதாக ஏதோ தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறேன்! சென்ற வாரம் ஒரு நாள் மாலையில் மிளகு-ஜீரகப் பொடி அரைத்து வைக்கலாம் என மிக்ஸி ஜாரில் மிளகைப் போட்டுவிட்டேன் – பிறகு ஜீரகம் தான் போடுகிறேன் என நினைத்து போட்டது ஓமம்! ஜீரகம் இவ்வளவு சின்னதாகவா இருக்கும் என்று நினைத்தபடியே சில ஸ்பூன்கள் போட்ட பிறகே, அட ஓமம் வாசனை வருகிறதே எனப் பார்த்தால் போட்டது ஓமமே! நல்ல வேளை மிளகு ஓமம் பொடி செய்யவில்லை! எப்படி பயன்படுத்துவது என்று குழப்பம் வந்திருக்கும்! பிறகென்ன ஓமத்திலிருந்து மிளகைப் பிரித்து மீண்டும் மிளகுடன் ஜீரகம் சேர்த்து பொடித்து வைத்தேன்! ஏன் இப்படி என்று என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டதோடு தனியாக சிரித்துக் கொண்டே வேலையை முடித்தேன்! இது கூட பரவாயில்லை என்று நினைக்க வைத்தது கடந்த வியாழன் அன்று மாலை செய்த வேலை! 

மாலை சில நாட்களாக மீண்டும் நடக்கத் துவங்கி இருக்கிறேன் – நண்பரும் நானும். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி இரவு சமையல் முடித்து, ஒரு முப்பது நிமிட நடைப்பயணம்! வரும் வழியில் அடுத்த நாளைக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்புவது வழக்கமாகி இருக்கிறது. நீண்ட நாட்களாக விட்டிருந்த நடைப்பயணம் துவங்கியதில் கொஞ்சம் சுறுசுறுப்பு வந்திருக்கிறது. அப்படி வியாழன் அன்று மாலை நண்பரை அலைபேசியில் அழைத்து நடைப்பயணத்திற்குத் தயார் என்று சொல்ல, அவரும் கீழே வந்தார் – அடுத்தடுத்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கிறோம் என்பதால் இருவரும் சொல்லி வைத்து இறங்குவோம்! நானும் இறங்கி நடை முடித்து, வழியே காய்கறி, பால் தயிர் என வாங்கிக் கொண்டு திரும்பினேன். வீடு திரும்பி சாவியை எடுத்து கதவருகே கொண்டு போனால் அங்கே பூட்டே இல்லை! வெளியில் இரும்புக் கதவு, உள்ளே மரக் கதவு என இரண்டுமே சும்மா தாழ் மட்டும் போட்டு, பூட்டே போடாமல் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே சென்று திரும்பி இருக்கிறேன். ஏன் இந்த தடுமாற்றம்! பொதுவாக இப்படி நடப்பது அரிது! தொடர்ந்து இரண்டு மூன்று நிகழ்வுகள் இப்படி நடக்கவே “என்னடா ஆச்சு உனக்கு!” என்று என்னையே கேட்டுக் கொண்டிருக்கிறேன்! 

இந்த வாரத்தின் விளம்பரம்: 

அம்மா தனது குழந்தையைக் கடிந்து கொள்ளும்போது அவளுக்கு தன் குழந்தை மீது அன்பு இல்லை என்று அர்த்தமல்ல! அதீத அன்பு இருக்கிறது என்று அர்த்தம் – தனது குழந்தை நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதற்காக அம்மா கடிந்து கொள்ளவும் தவறுவதில்லை என்பதைச் சொல்லும் விளம்பரம் – இந்த வாரம் ஒரு இந்திய விளம்பரம் – ஹிந்தியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்ஸ் உண்டு! புரிந்து கொள்ளலாம்! அதிக வசனங்கள் இல்லாமல் காட்சிகளாலேயே விளக்குவதும் நல்ல விஷயம் தான்!

 


இந்த வாரத்தின் வித்தியாச சமையல்: 

இந்த வாரம் நாம் பார்க்கப் போவது ஒரு வித்தியாசமான சமையல் வகை – கோதுமை ரொட்டியிலேயே எத்தனை எத்தனை வகைகள் உண்டு என்று தமிழகத்திலுள்ளவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! இன்று அப்படி உங்களுக்குத் தெரியாத ஒரு ரொட்டி வகையை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் – வடக்கே குறிப்பாக ராஜஸ்தான் பயணித்தவர்களுக்கு இந்த ரொட்டி தெரிந்திருக்கலாம்! ஜாடி ரொட்டி, பிஸ்கூட் ரொட்டி, கூபா ரொட்டி என்று சில பெயர்களால் அழைக்கப்படும் ரொட்டியை எப்படிச் செய்வார்கள் என்று கீழே உள்ள காணொளி வழி பாருங்களேன்! நிறைய நெய் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவார்கள்! தடிமனாகவும் இருக்கும் என்பதால் ஒரு ரொட்டி சாப்பிடுவதே பெரிய விஷயம்! செய்வது அதை விட பெரிய விஷயம்! நானும் செய்வேன் என்று களத்தில் இறங்கி, கையைச் சுட்டுக் கொண்டால் கம்பெனி பொறுப்பேற்காது என்பதையும் முதலிலேயே சொல்லி விடுகிறேன்!

 


பின்னோக்கிப் பார்க்கலாம்: 

எனது வலைப்பூவில் இதே நாளில் 2012-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – வானர வைபவம் – கோபுலு ஓவியங்கள்! அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. 

வானரமும் நாமும் அப்பனும் பிள்ளையுமா? – அத்தான் அம்மாஞ்சிதானா? வால் குறுகிக் கூன் நிமிர்ந்து வானரன் நரனாகி விட்டதாக ஒப்புக்கொள்கிறோம். இதில் இருவகை நஷ்டம் நமக்கு – கூனும் போச்சு, வாலும் போச்சே! இந்த இரண்டு நஷ்டங்களுக்கு எதிராக ஒரு லாபமாவது கணக்கில் காட்ட வேணுமே என்று, ’வால் குறுகிக் கூன் நிமிர்ந்து மூளை பெருகி’ நரனாகி விட்டோம் என்று நமது வைபவம் பேசுகிறோம். ஆனால், ‘வானரன் = வால் + நரன்’ என்று தமிழிலக்கணுமுங் காட்டி, நரன் மூடத்தனமாக இழந்து விட்ட அந்த மூல அங்கத்தின் அருமை பெருமைகளை வானரம் தன்னுடைய ‘குர் குர்’ பாஷையில் வெளியிட்டு நம்மை நோக்கிச் சிரிக்கவில்லை என்றா நினைக்கிறீர்கள்? அதே சமயம் அதே பாஷையில் நம்மையே அது ‘அட அம்மாஞ்சி!’ என்று அழைப்பது போலவும் தோன்றுகிறது. 

இந்த அத்தான்மார்களில் நம்மைப் போல் வாலில்லாத மனிதக் குரங்குகளும் உண்டு. ஹிந்துஸ்தானி, பாக்கிஸ்தானி, ஐரோப்பியன், அமெரிக்கன் என்ற பிரிவுகளைக் காட்டிலும் நிஜமான ஜாதிகளான உராங் ஊடாங், சிம்பன்ஸி, கொரில்லா முதலியவை உண்டு. இந்த வானரங்கள் மகாநாடு கூடிப் பேசினால், ‘மனிதன் நம்முடைய அசல் பரம்பரையிலிருந்து தோன்றியிருக்க முடியாது. எந்தக் குரங்கு விவாகரத்து வழக்காடுகிறது? தாயே தெரியாமல் போகும்படி சேயை எந்தக் குரங்கு பிறரிடம் வளர்க்க விட்டிருக்கிறது? வெட்கம், வெட்கம்!’ என்றெல்லாம் ஒரு வானர வாசாலகன் குர் குர் பாஷையில் பேசியிருக்கக் கூடுமல்லவா? 

முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே. 


இந்த வாரத்தின் இலவச மின்னூல் தகவல் – இரண்டாம் தலைநகரம்: 


இந்திய நேரப்படி, வரும் புதன் கிழமை மதியம் 12.29 வரை எனது “இரண்டாம் தலைநகரம்” மின்னூல் அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை முன்னரே ஒரு முறை தந்திருக்கிறேன் – இது இரண்டாம் முறை! விருப்பம் இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மின்னூலை படிப்பவர்கள் நூல் பற்றிய உங்கள் கருத்துகளையும் மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தால் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்வேன்! தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே. 


இந்த வாரத்தின் தமிழ் கோரா கேள்வி-பதில்: 

கேள்வி:  பணம் இருந்தும் நீங்கள் ஏழையாய் உணர்ந்த தருணம் எது? 

பதில்: ஒருமுறை நண்பர்கள் அனைவரும் வெளியில் சென்றிருந்தோம். அப்போது என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அனைவருக்கும் ட்ரீட் வைத்திருந்தார். அவனிடத்தில் பணம் போதுமானதாக இல்லை என என்னிடத்தில் கூறும்போது நான், "ஒன்றும் பிரச்சினை இல்லை. நீ இதற்காக யாரையும் அளவாக எடுத்து கொள்ளும் படி கூற வேண்டாம். என்னிடம் டெபிட் கார்டு இருக்கு. அதில் கொஞ்சம் பணம் இருக்கு பார்த்துக்கலாம்" என்றேன்.அப்போது பணம் செலுத்தும் போது நான் கார்டை கொடுக்கிறேன். கார்டு அக்செஃப்ட் ஆகவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சமயம் மற்ற நண்பர்கள் எல்லாரும் இணைந்து சம அளவில் பணம் செலுத்திவிட்டு வெளியில் வந்தோம். மறுநாள் அவர்களுக்கு பணத்தை கொடுத்து விட்டோம். இருப்பினும் அந்நேரத்தில் அந்த ஒரு உணர்வு என்னை பணமிருந்தும் இல்லாதவனைப் போல் சித்தரித்து விட்டது. 

இதே கேள்வியை உங்களிடம் கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! 

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! 

வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை... 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

42 கருத்துகள்:

  1. மிளகு ஓம்ம்.... ஹாஹா.. அதுவும் உபயோகப்படுமே...

    நான் எதையோ தயார் செய்ய (அசோகா அல்வா? நினைவில்லை). பாசிப்பருப்பு என நினைத்து உடைத்த உளுத்தம்பருப்பை நிறைய ஊற வைத்துத் திண்டாடயது நினைவுக்கு வருது.

    இரவு உணவுக்குப் பின்னான நடைப்பயிற்சி மிக ஆரோக்கியமானது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசிப்பருப்புக்கு பதிலாக உளுத்தம் பருப்பு! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. பணம் இருந்தும் ஏழையாக உணர்ந்த தருணம் பல உண்டு, அப்போ மனம் ஏழையாக உணர்ந்ததினால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் ஏழையாக உணர்ந்ததினால் - எவ்வளவு பணம் இருந்தும் மனம் ஏழை என நினைத்து விட்டால் கடினம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    இந்த வார காஃபி வித் கிட்டு எப்போதும் போல் அருமை. வாசகமும் நன்றாக உள்ளது.

    எண்ணங்கள் பகுதியில், சின்னச்சின்ன தடுமாற்றங்கள் பொதுவாக அனைவருக்கும் வருவதுதான். ஆனால், உங்களுக்கு சதா வேலைபளு, அதனால் மனவுளைச்சல், என்று இருப்பதில் கவனக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மிளகு, ஓமத்தை சேர்த்துப் பிரித்ததை நகைச்சுவையாக ரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள். (கடுகு, கேப்பையை சேர்த்தால்தான் பிரிப்பது மிக கஸ்டம்.:) இரண்டாவது வீட்டைப் பூட்டாமல் சென்றதுதான் கொஞ்சம் ஆபத்தானது. நல்லவேளை.. கடவுள் துணையாக (காவலாக) இருந்திருக்கிறார்.கடவுளுக்கு நானும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விளம்பரம் நன்றாக உள்ளது தாய்ப் பாசத்திற்கு நிகரேது.

    வித்தியாச ரொட்டி செய்முறையை கண்டேன். ஒவ்வொன்றாக செய்வது கடினந்தான். ஆனால் ஒன்றே வயிறு நிரம்பி விடும் என நினைக்கிறேன்.

    பின்னோக்கிச்.... நீங்கள் தந்த வாசகங்கள் படிக்க நன்றாகவிருந்தன. பிறகு முழுப்பதிவையும் படிக்கிறேன்.

    மின்னூல் தகவலுக்கு நன்றி.

    கேள்வி பதில் பகுதியும் நன்றாக உள்ளது. எவ்வளவு பணமிருந்தும் நமக்கு தேவையான போது அது சமயத்தில் நமக்கு உதவ மறுத்து விடும் என்பது உண்மைதான். நமக்குள் தோன்றும் சிறு ஆணவத்தை அது சட்டென உணர்ந்து விடும் வல்லமை பெற்றது.

    பதிவில் அனைத்தும் சிறப்பாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அணைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    கம்பெணியோட பார்ட்ணர் டெல்லிக்கு திரும்பிவிட்டால் கம்பெணி மீண்டும் கவணக்குறைவுகள் இல்லாமல் சீராக ஓட ஆரம்பிச்சிடும்.
    என் தந்தை, இப்படித்தான் திருப்பூரில் தனியாக அவதியுற்றார் பணியிடை மாற்றத்தால்.
    மின் நூல் தரவிறக்கம் செய்துவிட்டேன்.
    அந்த ராஜஸ்தான் ரொட்டியை என் வீட்டில் செய்யச் சொன்னால் என்னை ரொட்டியாக்கிவிடுவார்கள்.
    ஒரு ராஜஸ்தான் பாலிய நன்பன் இருக்கிறான்.
    அவனிடம் செய்யச் சொல்லி சுவைத்து பார்க்கிறேன் சார்.
    நான், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பெரிதும் நம்பி வாழ்க்கையை ஓட்டுபவன்.
    எனவே, தொழில்நுட்பக் கோளாறுகள் வரும்போதெல்லாம் பணம் இருந்தும் ஏழை ஆகிவிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் அரவிந்த்.

      மின்னூல் - தரவிறக்கம் செய்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      ராஜஸ்தான் நண்பரிடம் சொல்லி சுவையுங்கள் - அது தான் நல்லது! வீட்டில் உங்களை ரொட்டியாக்கிவிடுவார்களா? :))))

      தொழில் நுட்பக் கோளாறுகள் - கடினம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஏடிஎம்மில் கார்டை எடுத்துக் கொண்டு பணத்தை விட்டு விடாதீர்கள் ஜி.

    டெபிட் கார்டு சமயத்தில் வேலை செய்யாமல் போவது இயல்புதானே...

    இதனால் செல்வந்தன் ஏழையாகி விடுவதில்லையே... பணம் இல்லாமல் இருப்பதுபோல் பந்தா காட்டுபவர்களுக்கு மத்தியில் இதொன்றும் பெருங்குற்றமல்ல!

    டேக் இட் ஈஸி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்டை எடுத்துக் கொண்டு பணத்தை விட்டு விடாதீர்கள் - ஹாஹா... இது மாதிரி விட்ட ஒரு நபரை நான் அறிவேன்! இங்கே எழுதியும் இருக்கிறேன்.

      டேக் இட் ஈஸி - அதே தான் எனது எண்ணமும் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கதவைத்திருந்தே வைத்து விட்டுச் சென்ற வந்த அனுபவம் திகில்!  மனதில் செய்ய வேண்டிய வேலைகளோ வேறு கவலைகளோ மனதை ஆக்ரமித்திருக்கிறதோ...

    பணமிருந்தும் ஏழையாக உணர்ந்த தருணம்...   ஊ ஹூம்...   எதுவும் நினைவுக்கு வரவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலைகளும் அலுவலகச் சூழலும் மனதில் எப்போதுமே இருக்கிறது ஸ்ரீராம். சில குழப்பங்கள் அலுவலகத்தில் இருந்த படியே இருக்கின்றன! பக்கத்து இருக்கை சக ஊழியருக்கு பாசிட்டிவ்! அடுத்த பக்கத்தில் இருக்கும் இளைஞருக்கும் இந்த வாரம் உடல் நிலை சரியில்லை! நல்லதே நடக்கட்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கவனச் சிதறல்
    ஒரு பணியினைச் செய்யும் பொழுது, வேறொறு பணியினை மனதில் நினைப்பதனால் ஏற்படும் தடுமாற்றம் என்றே எண்ணுகிறேன்
    கவனமாக இருங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே சமயத்தில் பல எண்ண ஓட்டங்கள் இருப்பது உண்மை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வித்தியாச சமையல் வியக்கவும் வைத்தது...

    மின்னூல் தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமையல் - வித்தியாசம் தான். வேலையும் அதிகம் தனபாலன்.

      மின்னூல் - தரவிறக்கம் செய்து கொள்வதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ஏழையாய் இருந்து பணக்காரனாய் உணர்ந்து கொண்ட தருணங்களால், தடுமாற்றங்கள் வருவதில்லை ஜி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணர்ந்து கொண்டால் தடுமாற்றம் வருவதில்லை என்பது உண்மை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஆஹா ந்ீண்ட நாட்களின் பின்பு எட்டிப் பார்க்கிறேன் கதம்பமும் ரொட்டியும் அருமை.. ரொட்டி குழைக்கும் முறை புதிதல்ல, நாமும் இப்படித்தான் செய்வோம்... இதனுள் ப.மி, வெங்காயமும் சேர்ப்போம்.. ஆனா இது சுட்டெடுக்கும் முறைதான் புதுமை.

    தடுமாற்றம் மறதி.. அப்பப்ப எட்டிப்பார்ப்பதுண்டுதான், மனதில் பல சோலிகள், யோசனைகள், வேலைகள் அடுக்காக இருக்கும்போது இப்படித் தடுமாற்றம் நிகழ்வது சகஜம். நான் பல தடவைகள் வீட்டு டோரின் முன்னால் நின்று, கதவுத் திறப்பைப் போடுவதற்குப் பதில், கார்க் கீயை அமத்தியிருக்கிறேன் ஹா ஹா ஹா.. இதனால கார்க் கதவு திறபட்டிருக்குது...

    கேள்வி பதில்.. இதுவரை அப்படி எந்த நிகழ்வும் நடந்ததாக நினைவிலில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... அல்லி ராணியாக மீண்டும் வந்து விட்டீர்களா அதிரா! வாங்க.... வாங்க! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவுலகப் பிரவேசம்! நல்லது!

      சுட்டெடுக்கும் முறை - புதியது தான்! நன்றி அதிரா.

      தடுமாற்றம் - சில சமயங்களில் வருவது தான். ஆனால் தொடர்ந்து தடுமாற்றம் இரண்டு மூன்று நாட்களாக என்பதாலேயே இங்கே பகிர்ந்தேன். கதவுத் திறப்பிற்கு பதில் கார் கதவு! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. அல்லி ராணிக்கு நல்வரவு! அர்ஜுனன் எங்கே?

      நீக்கு
    3. ஹையோ, ரொட்டி பண்ணுவதைப் பார்த்தாலே பயம்மா இருக்கே/ இதெல்லாம் முயற்சிக்கக் கஷ்டமானவை. கையைச் சுட்டுண்டா என்ன பண்ணறது?
      அந்த அம்மா செய்தது சரி என்னும் தீர்ப்பு மனதை மகிழ்வித்தது. நன்றாக இருந்தது காணொளி. பின்னாட்களுக்குப் போய்விட்டேன்.

      நீக்கு
    4. இந்த வகை ரொட்டி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன் - ராஜஸ்தானிய வகையாயிற்றே!

      செய்வது கொஞ்சம் கடினம் தான் - கை சுட்டுவிடுமோ என்ற எண்ணமும் வந்தது - முயற்சிக்க நினைத்தபோது! நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. அர்ஜூனன் எங்கே! :) நல்ல கேள்வி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    6. இல்லை, வெங்கட், கூபா ரொட்டி எனக் கேள்விப் பட்டிருப்பேன் ஒரு வேளை, ஆனால் சாப்பிட்டதெல்லாம் இல்லை. பார்த்தது கூட இல்லை.

      நீக்கு
    7. அட! நான் இரண்டு மூன்று ராஜஸ்தானிய திருமணங்களில் இப்படி ருசித்திருக்கிறேன் கீதாம்மா. செய்வதைப் பார்த்ததும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. காணொளி பார்க்கிறேன். மின்னூலுக்கு வாழ்த்துகள். பணமிருந்தும் ஏழை! எப்போவுமே தான்! :))))) வானரங்கள் நிஜம்மாகவே பேச ஆரம்பித்தால்? என்னென்ன கேட்குமோ? கூபா ரொட்டி எல்லாம் சாப்பிட்டதில்லை. செய்யவும் முயற்சிப்பதில்லை. உங்கள் தடுமாற்றம் இப்போதைய கால கட்டத்தில் சகஜமே! ஆனால் உடனே கண்டு பிடித்துவிட்டதால் கவனம் வேறே எங்கேயோ இருந்திருக்கிறது. நான் ஓமத்தைப் பொடித்துக் கொண்டு ஒரு டப்பாவில் போட்டு மொத்த ஓமம் இருக்கும் பாட்டில் மேலேயே வைப்பேன். அதே போல் வெந்தயப் பொடியும் வெந்தய பாட்டில் மேலேயே இருக்கும். ஜீரகப்பொடியும் அப்படியே! அதனால் ஓரளவு தடுமாற்றம் இருக்காதுனாலும் எடுத்து விட்டுப் பின்னர் நினைவாக அதே இடத்தில் வைக்கணும். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி - முடிந்த போது பாருங்கள்.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.

      கீழே ஜீரகம், மேலே ஜீரகப் பொடி - நல்ல ஐடியா தான். எடுத்தா, எடுத்த இடத்தில வைக்கணுமே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அமுக்குப் பூட்டு எனில் சில சமயம் சரியாக விழுந்திருக்காது. அப்போது தவறிப் போய் நாம் சென்று விட வாய்ப்புண்டு. சாவி போட்டுப் பூட்டு எனில்! எப்படி மறந்தோம்னே புரியாது. மறந்திருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமுக்கு பூட்டு தான். ஏதோ நினைவில் சென்றிருக்கிறேன் கீதாம்மா. நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. ரொட்டிக்குத் தான் முதலிடம். ஆஹா
    சாப்பிட்டால் இப்படி அல்லவா சாப்பிடணும். இதுக்குமெல் டயபெடிஸுக்கு நல்லது
    எங்கிரார்களே. ஹாஹாஹ்ஹா.

    மன உளைச்சலால் மறதியா.
    வெங்கட் எல்லாம் சரியாகிடும் மா.
    உங்களை பகவான் நல்ல படியாகக் காப்பாத்தட்டும்.
    டெபிட் கார்ட் சிலசமயம் காலை வாரிவிடும்.
    சங்கடம் தான் .என்ன செய்ய.

    காணொளி முன்ன எங்கயோ பார்த்திருக்கேன்.
    எனக்கு உறுத்தினது எல்லாரும் சம்பிரமமா உட்கார்ந்த்ருக்க
    பஹு மட்டும்
    உணவு பரிமாறுவது.
    கண்டிக்கும் தாயே நல்லவள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெய் இல்லாமல் ரொட்டி ஓகே! ராஜஸ்தானில் இப்படி நெய்யில் முக்கி முக்கி எடுத்து ரொட்டி தருவார்கள்! அப்படி சில சமயங்கள் நானும் சாப்பிட்டதுண்டு வல்லிம்மா! நமக்கு திகட்டிடும்!

      மன உளைச்சல் - சில சமயங்களில் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லையே! நல்லதே நடக்கும்!

      காணொளி - உங்கள் கருத்து சரிதான். பஹூராணி என்று சொல்லியே வேலை வாங்கிவிடுகிறார்கள் இங்கே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. @வல்லி, எங்க வீட்டில் இந்த மாதிரி பஹூ மட்டும் உணவு பரிமாறுவது சர்வ சகஜம். பஹூவுக்குப் பசிக்காது! :))))))) எங்க பஹூவை நாங்க முன்னாடி சாப்பிடச் சொல்லிடுவோம். பையர் தான் வரவே மாட்டார். அதனால் அவளுக்கும் நேரம் ஆகும்!:(

      நீக்கு
    3. நிறைய வீடுகளில் இப்படி தான் நடக்கிறது கீதாம்மா.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  14. நீண்ட காலமாக என்னால் பின்னுட்டங்கள் யார் பதிவிலும் பகிர முடியவில்லை. என் போஸ்ட் ல் கூட பதில் தர முடியவில்லை

    இது சோதனை முயற்சி .. மீண்டும்

    பாதையில் ஆயிரம் தடுமாற்றம் வரலாம்! ஆனால் பயணம் என்றும் தடம் மாறக் கூடாது! /// சரியான கருத்து



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் - மகிழ்ச்சி. சோதனை முயற்சியில் உங்களுக்கு வெற்றி!

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நிஷா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. எல்லோருக்கும் குழப்பம் தான்.

    கொரோனா வின் பரிசு இது 🖤

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா தந்த பரிசு குழப்பம் - உண்மை தான் நிஷா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. கதவைத்திறந்தே வைத்து விட்டுச் சென்று வந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது. திருமணம் ஆன பின் பள்ளியில் படித்தது சொல்லி இருக்கிறேன். அப்போது ஆசிரியர்கள் "நீ எப்படி சமைக்கிறாய் என்று சாப்பிட்டுப்பார்க்க ஆசை" என்றார்கள் காலையில் சீக்கீரமாய் எழுந்து வெண்பொங்கல், சாம்பார், சட்னி, அம்மணி கொழுகட்டை சட்னி போட்டு தாளித்து செய்வது, காய்கறிகள் கலந்து அவல் உப்புமா என்று செய்து ஆசிரியர்களுக்கு கொடுக்கும் ஆவலில் பக்கத்து வீட்டு சிறுவனை துணைக்கு அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டியதாக நினைத்து போய் விட்டேன். பூட்டு சாவி கீழே இருக்கிறது வாசல்படியில்.

    பக்கத்து வீட்டில் ஒரு ஆசிரியர் இருந்தார், அவர் கிளம்பி வரும் போது வீடு திறந்து கிடக்கிறது பூட்டு சாவி கீழே கிடக்கிறது என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள்ப் போய் பார்த்து
    இருக்கிறார்கள். சமையல் அறையில் நான் போட்டது போட்டபடியே பள்ளி சென்று விட்டேன். அங்கு பாத்திரங்கள் கீழே கிடக்கிறது, யாரோ வந்து போய் இருக்கிறார்கள் என்று பள்ளிக்கு பக்கத்து வீட்டு சிறுவனை அனுப்பி என்னை வரச்சொல்லி விட்டார்கள். "நீ போய் பார் நாங்கள் இடைவேளையில் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்கள் ஆசிரியர்கள். மதியம் என் சமையலை புகழ்ந்தும் என் மறதியைச் சொல்லியும் எல்லோரும் சிரித்தார்கள். அது மறக்கவே முடியாது.

    பக்கத்து வீட்டு சிநேகதிகளுடன் கும்பகோணத்திற்கு பிறந்த குழந்தையைப்பார்க்க போனேன், அந்த வீட்டில் அவர்கள் வீட்டை சுற்றி காட்ட அழைத்து சென்றார்கள், உட்கார்ந்து இருந்த ஷோபாவில் சின்ன கைபையை வைத்து விட்டு போய் விட்டேன். திரும்பி வந்துப்பார்த்தால் இல்லை. அவர்களுக்கும் நம் வீட்டுக்கு வந்து பர்ஸ் தொலைந்து விட்டதே என்று வருத்தம், எனக்கு மாயவரம் போக வேண்டுமே திரும்பி என்று வருத்தம் பக்கத்து வீட்டு சிநேகிதி பணம் கொடுத்து விட்டார் பஸ் பயணத்தில் டிக்கட் எடுக்க, அப்போது அவ்வளவு பணம் கொண்டு வந்தும் ஒன்றும் இல்லாமல் பிறரிடம் வாங்க வேண்டியதாக போய் விட்டதே என்று வருத்தப்பட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....