அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பயணக்கட்டுரை பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட VERDANT சத்சங்கம் - 21 ஆகஸ்ட் 2025 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
ஃபிப்ரவரி 2025-இல் பயணித்த இடங்கள் குறித்த பயணத் தொடரான மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் வரிசையில் இது வரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே.
மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி ஒன்று
சென்ற பகுதியில் தேவரியா தால் பகுதியில் மாலை நேரத்தில் எங்களுக்குக் கிடைத்த சுவையான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். அங்கிருந்து திரும்பி இரவு உணவிற்குப் பிறகு நல்ல குளிரில் உறக்கத்தினை தழுவினோம். காலை ஆறு மணிக்குள் எழுந்து புறப்பட்ட நாங்கள் மீண்டும் தேவர்களின் குளம் நோக்கி நடக்கத் துவங்கினோம். காலை நேரத்தில் அந்தப் பகுதிகளில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்னென்ன என்பதை இந்தப் பகுதியில் பார்க்கலாம். மெதுவாக எழுந்து தேநீர் அருந்தி, காலைக்கடன்களை முடித்துக் கொண்டு நாங்கள் தங்குமிடத்திலிருந்து தேவரியா தால் நோக்கிய நடையைத் துவங்கியபோது காலை மணி 06.20. அங்கிருந்து நண்பர்களுடன் அளவளாவியபடி தேவரியா தால் பகுதியைச் சென்றடைந்தபோது மணி 06.35. காலை நேரத்தில் குளிர் சற்றே அதிகமாகத் தெரிந்தாலும், அந்தக் குளிர் எங்களுக்கு பிடித்தமானதாகவே இருந்தது. பல வருடங்கள் வடக்கில் இருப்பதால் குளிர் பழகிப் போன விஷயம் தானே. ஆனாலும் காலை நேரத்தில் சரியான உடைகள் இல்லாமல் இந்தப் பகுதிகளில் உலா வருவது ஆபத்தானது என்பதையும் இங்கே உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்.
எங்களுக்கே எங்களுக்காக குளமும் இயற்கை எழிலும் காத்திருந்தது. இயற்கையின் பேரெழிலில் திளைத்து அங்கேயே நிறைய படங்கள் எடுத்துக் கொண்டும் குளத்தின் அருகே அமர்ந்து இயற்கையை ரசித்தபடியும் எத்தனை நேரம் அங்கே இருந்திருப்போம் என்பதற்கு கணக்கில்லை. அந்தச் சூழலிலிருந்து விடுபட எங்களில் யாருக்குமே மனதில்லை. முதல் நாள் சூரியாஸ்தமனத்தின் சமயம் தகதகவென தங்கமாக மின்னிய பனிபடர்ந்த மலைச்சிகரங்களைப் பார்த்தோம் என்றால் காலை நேரத்திலும் நாங்கள் கண்ட காட்சிகள் மனதை விட்டு அகலாத வண்ணம் நிறைந்திருந்தது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று உரக்கச் சொல்லலாம் என்றால் இயற்கையின் அமைதியைக் குலைப்பது போல இருக்கும் என்பதால் மனதுக்குள் இறைவனைத் துதித்துக் கொண்டோம். இயற்கையின் கொடை தான் எவ்வளவு என்று எண்ணும்போது மனதில் மகிழ்ச்சி பொங்கி எழுகிறது. சுற்றிலும் பனிபடர்ந்த மலைகள், நடுவே வனம், வனத்திற்குள் தேவரியா தால் எனும் தேவர்களின் குளம், குளக்கரையில் படர்ந்திருக்கும் பனி, ஒரு இலை விழுந்தால் கூட அதன் ஒலி நமக்குக் கேட்கும் அளவிற்கு ஒரு பேரமைதி, என திகட்டத் திகட்ட இயற்கையின் பேரெழிலை நாங்கள் ரசித்துக் கொண்டிருந்தோம்.
தானாகவே வீழ்ந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் மரக்கிளை கூட அங்கே பார்க்கும்போது ஏதோ ஒரு எழிலுடன் தோன்றியது. பார்க்கும் ஒவ்வொரு காட்சிகளையும் அலைபேசி வழி நிழற்படமாகவும் காணொளியாகவும் சேமிக்கத் தோன்றியது என்றாலும் நண்பர்கள் எடுத்துக் கொண்டிருக்க, நானும் சில படங்களை எடுத்தாலும் அதிக நேரம் இயற்கையின் பேரெழிலை, அந்த ஆனந்தம் தரும் சுகானுபவத்தினை நேரடியாக உணர்ந்தபடியும், பார்த்தபடியும் குளக்கரையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தேன். சின்னச் சின்ன விஷயங்களையும் கூட இந்த இடங்களில் ரசிக்க முடியும் என்பது எனக்குக் கிடைத்த அனுபவம். நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து அமைதியாக இருந்தோம். எந்த வித சிந்தனைகளும் அற்று இயற்கையோடு இணைந்து ஒன்றி விடுவதில் கிடைக்கும் அனுபவம் ஒரு சுகானுபவம். உணர்ந்து பார்த்தால் தான் இந்த சுகானுபவம் நமக்கு புரியும். அவ்வப்போது நிழற்படங்கள் எடுப்பதும், காட்சிகளைக் கண்களாலேயே பருகி ஆனந்தித்து இருப்பதும் - ஆஹா… என்னவொரு பேரானந்தம். இது போன்ற இடங்களில் சில மாதங்களாவது தங்கிவிட வேண்டும். அப்படி தங்குவது சாத்தியமில்லை என்றால் ஒரு சில தினங்களேனும் எந்த வித சிந்தனைகளும், வேலைகளும் இன்றி உண்பதும், இயற்கையோடு உறவாடி, சுத்தமான காற்றை சுவாசித்து திரும்புவதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைத்து விடாது என்பது நான் உணர்ந்த விஷயம்.
நண்பர்கள் நால்வர் இருந்தாலும் அங்கே எங்களுக்குள் பேசிக்கொள்ளாது அவரவர்களும் இயற்கையோடு ஒன்றி இருந்தோம். பொதுவாக நண்பர்கள் சேர்ந்தால் ஆரவாரமும், பேச்சும் என சத்தமாகத்தானே இருக்கும். ஆனால் இந்த இடத்தில் நாங்கள் ஒன்றுமே பேசாது இயற்கையுடன் இயைந்து இருந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அந்தச் சூழலில் இருந்திருப்போம். ஆனாலும் எங்களது மனதில் எந்தவித அயற்சியோ, “அட என்னடா இது!, பொழுதே போகவில்லை” என்றோ தோன்றவில்லை. மாறாக விட்டு விலகி வராமல் அங்கேயே அப்படியே இருந்துவிடலாம் என்று தான் தோன்றியது. எங்களது இந்தப் பயணத்தில் மிகவும் பிடித்ததான இடமாகவும் இந்த இடமும் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மனதில் அந்த இடத்தின் எழிலும் அழகும் தங்கத் தொடங்கியது. இயற்கையின் அழகு தான் என்ன ஒரு அழகு. இந்த இயற்கையினை அழித்து நாம் எதை சாதித்துவிடப் போகிறோம் என்ற எண்ணம் எனக்குள்! ஆனாலும் அழிவினை நோக்கி தானே பெரும்பாலானவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற வேதனையான நிஜமும் மனதை உறுத்தியது. சமீப வருடங்களில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் மனிதர்களின் பேராசையால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களும் அழிவுகளும் பார்க்கும்போது மனதில் வலி.
பொதுவாகவே வடக்கில் கால நேர உணவு என்றால் Stuffed Paratta தான். உருளை, வெங்காயம், பனீர், முள்ளங்கி என ஏதோ ஒன்றோ அல்லது கலந்தோ உருண்டைகள் தயார் செய்து ஸ்டஃப் செய்து பராட்டாவாக இட்டு தயாரிப்பதே வழக்கம். இல்லையெனில் Toasted Bread Slices with Butter, சுடச் சுட தேநீர் என்றே இருக்கும். எங்களிடம் கேட்டதில் உருளை மற்றும் வெங்காயம் கலந்து தயாரித்த பராட்டாக்களைச் சொல்லி இருந்தோம். அவர்கள் வீட்டில் தயாரித்த Vegetable ஊறுகாய், தயிர், வெண்ணெய் என தொட்டுக்கையாக தந்தார் அந்த சிப்பந்தி. பாசத்துடன் தயாரித்து இன்னும் சாப்பிடுங்கள் என்று கேட்டுக் கேட்டு காலை உணவை சுடச் சுடத் தயாரித்துக் கொடுத்தார் அவர். காலை நேரத்தில் சுடச் சுட பராட்டாவுடன் தயிர் தொட்டுக் கொண்டு சாப்பிட்டாலும் கூட, குளிருக்கு இதமாக தேநீரும் எங்களுக்குத் தேவையாக இருந்தது. அதையும் அவர் எங்களுக்குத் தயாரித்து தந்தார். திருப்தியாக உணவை உண்ட பிறகு கீழே இருந்த அறைக்குச் சென்று உடமைகளை எடுத்துக் கொண்டு எங்கள் நடைப்பயணத்தினைத் தொடங்க தயாரானோம். மேலே ஏறி வந்ததைப் போலவே சாரி கிராமம் வரை நடக்க வேண்டும்.
கீழே செல்லும் வழியிலும் ஆங்காங்கே நின்று நிதானித்து வனத்தின் அழகையும் இயற்கையின் எழிலையும் பார்த்து, அனுபவித்து இறங்கிக் கொண்டிருந்தோம். ஆங்காங்கே கால்கள் கொஞ்சம் கவனியேன் என்று சொல்லும் போது வழியில் தென்படும் கடைகளில் நின்று பழச்சாறு அருந்தி, அந்த மக்களுடன் அளவளாவி அதன் பிறகு நடையைத் தொடர்ந்தோம். இப்படியான உள்ளூர் மக்களுடன் பேசுவதில் எனக்கு எப்போதுமே ஈடுபாடு அதிகம். இந்தப் பயணமும் அதற்கு விதிவிலக்கல்ல. நிறைய விஷயங்களை அவர்களுடன் பேசி, உள்ளூர் வழக்கங்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும் தெரிந்து கொள்ள முடிந்தது. நாம் எப்போதாவது செல்வதால் இயற்கையின் பேரழகு என்று சொல்கிறோம் என்றாலும் அந்த ஊரிலேயே தங்குவது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம். அதிக எதிர்பார்ப்புகள் இல்லாது இருக்க வேண்டும். அதே போல கிடைத்த பொருட்களை வைத்து வாழ வேண்டும். பல வித சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நமக்குச் சொல்வார்கள். உதாரணத்திற்கு இந்த வனப்பகுதிகளில் இரவு நேரங்களில் எங்கேயும் வெளியே வர முடியாது. விலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதும் அந்த விலங்குகள் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளை உணவுக்காக தாக்கும் என்பதையும் அவர்கள் ஒரு பிரச்சனையாகச் சொல்கிறார்கள். அதற்காகவே Bhபூத்தியா எனும் வகை நாய்களையும் வளர்க்கிறார்கள்.
நகரத்தில் ஒரு வித பிரச்சனை என்றால் இப்படியான பகுதிகளில் வேறு வித பிரச்சனைகள். பிரச்சனை இல்லாத வாழ்க்கை எங்கே தான் இருக்கிறது. எல்லாம் நல்லதற்கே என்று இருந்தால் மட்டுமே இங்கே வாழ முடியும் என்று தோன்றியது எனக்கு. தொடர்ந்து எங்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்கள், அந்த நாளின் இலக்காக இருந்த மலையேற்றம் ஆகியவை குறித்து வரும் பகுதிகளில் பார்க்கலாம். அது வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
3 செப்டம்பர் 2025
Serene இடத்தில் இருப்பதே சுகம். இலை விழும் சப்தம். ஆஹா
பதிலளிநீக்குபார்க்கப் பார்க்க அலுக்காத, திகட்டாத அந்த இடத்தின் பேரெழிலை உங்கள் கண்கள் கண்ட அளவில் கால் வாசி எங்களுக்கும் கொடுத்ததில் மகிழ்ச்சி. மிக அழகு அந்த இடம். அந்தத்தனிமை. நாமே மரத்தடியில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்து விடுவோமோ என்னவோ...குளத்தின் அருகே வினோத மரம் ஒன்று கண்ணில் பட்டது. இன்னொரு படத்தில் இன்னொரு மரம் கைநீட்டி ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி இருப்பது போல தோற்றம் கொடுத்தது.
பதிலளிநீக்குOh My God! என்று பிரமித்துப் போனேன் படங்கள் பார்த்து. இயற்கையின் அற்புதங்கள், பார்க்கப் பார்க்கத் திகட்டாத காட்சிகள், அங்கு சென்றால் பேசவே தோன்றாது, ஜி. ஒவ்வொருவரும் அவரவருக்குக் கிடைக்கும் ஆனந்தத்தில் அந்த ஆழ்ந்த அமைதியில் - //ஒரு இலை விழுந்தால் கூட அதன் ஒலி நமக்குக் கேட்கும் அளவிற்கு ஒரு பேரமைதி,// திளைப்போம். குறிப்பாக இப்படியான இடங்களை அதன் ஆழ்ந்த அமைதியினால் அங்கு பெருகும் சக்தியையும், புனிதத்தையும் ரசித்து அனுபவிப்பவர்களுக்கு.
பதிலளிநீக்குஅழகான இடங்கள். பனி படர்ந்த மலைகளும், அக்குளமும், சுற்றிலும் மலைகள் வனம் என்று அங்கிருந்து வர மனம் இல்லாமல் ஒரு வேளை அங்கேயே நாம் அமர்ந்து நம்முள் மூழ்கி ஞானியாகிடுவோம் அட்லீஸ்ட் ஒரு சில மணித் துளிகளாவது!
கீதா
காணொளிகளும் சூப்பர். ரசித்துப் பார்த்தேன். நீங்கள் மூவரும் துள்ளி எடுத்த காணொளி உங்கள் உற்சாகத்தைக் காட்டியது.
பதிலளிநீக்குபடங்கள் பற்றி என்ன சொல்ல? வார்த்தைகளே இல்லை.
நீங்கள் நால்வரும் இருக்கும் படங்கள் எல்லாமே அருமையான ஷாட்ஸ்.
அதில் நீங்கள் ஒருவர் தோள் மேல் கைகள் வைத்திருக்கும் படத்தின் கீழ் இருக்கும் படம் அட்டகாசமான ஷாட்!
மாடுகள் வரிசையாக முகத்தை மட்டும் நீட்டி பள்ளத்தாக்கைப் பார்ப்பது போன்று ....அசாத்தியமான ஷாட்.
கீதா
பராத்தா படத்தின் கீழ் இருக்கும் படத்தில் அந்த மரங்கள் ரொம்ப அழகு அதில் வலப்புறம் உள்ள மரத்தில் கொண்டை கிரீடம் எல்லாம் இருக்கும் ராஜா போன்ற ஒருவர் கையை நீட்டி அதோ பார் அங்கு அற்புதம் என்று சொல்வது போல எனக்குத் தோன்றியது.
பதிலளிநீக்குகீதா