அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட யானை டாக்டர் - ஜெயமோகன் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. சென்ற பகுதியில் நார்க்கண்டாவிலிருந்து சராஹன் என்ற சிற்றூர் வரை சென்று சேர்ந்தது குறித்து எழுதி இருந்தேன். நாங்கள் தேடிய தங்குமிடம் கிடைக்காமல் Google Map செய்த சொதப்பலில், கிடைத்த தங்குமிடத்தில் தங்க முடிவு செய்தோம் என்று எழுதி இருந்தேன். நினைத்தது கிடைக்கவில்லை என்று வருத்தப்படாமல் கிடைத்ததை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்ல வைத்தது அந்தத் தங்குமிடத்தில் கிடைத்த சுவையான அனுபவங்கள். சூரியன் மறையத் தொடங்கி சில மணித்துளிகள் ஆகியிருந்தது. நாங்கள் தங்கலாமே என்று யோசித்து விசாரித்தது The Heritage எனும் தங்குமிடம். வெளியிலிருந்து பார்த்தபோது பிடித்திருந்தது. ஆனாலும் தங்குவதை முடிவு செய்வதற்கு முன்னர் அறைகள் மட்டுமல்லாது அதனுடன் இணைந்திருக்கும் Bathroom வசதிகளையும் எப்போதுமே பார்த்து விடுவது எங்கள் வழக்கம்.
அழகான சிற்றூரின் காட்சிகளைப் பார்த்தபடி தங்குமிடத்தின் உள்ளே செல்ல அங்கே இருந்தவர் எங்களிடம் தங்குமிட அறைகளைக் காண்பித்தார். டீலக்ஸ் ரூம் எனில் ஒரு இரவுக்கு 2200 ரூபாய் கட்டணம் என்றும் மற்ற அறைக்கு 1400/- கட்டணம் என்றும் சொல்லி, அறையைக் காண்பித்தார். டீலக்ஸ் அறை நன்றாகவே இருந்தது - தரை முழுவதும் மரத்தால் இழைத்திருந்தார்கள் - குளிர் தெரியாமல் இருக்க! உள்ளே நுழையும்போதே காலணிகளைக் கழற்றி வைத்து விட்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார். சரி, ரொம்பவே ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் ஆக இருக்கிறாரே என்று யோசித்தபடி மற்ற அறையையும் காண்பிக்கச் சொன்னோம். அனைத்து இடங்களிலும் ஒரு ஒழுங்கு, நேர்த்தி இருந்தது. தங்குமிடத்தின் Visiting Card வைப்பதற்குக் கூட, சரியான இடத்தில் ஒரு Visiting Card Holder - வைத்து, அதன் உள்ளே அட்டைகளை வைத்திருக்கிறார். தேவை என்று கேட்டால் அதனைக் காண்பித்து எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். எல்லாவற்றிலும் இப்படி ஒரு ஏற்பாடுகளை பார்த்துப் பார்த்து செய்திருந்தது அங்கே தங்கியிருந்த நேரத்தில் தெரிந்து கொண்டோம்.
ஒரு தளம் கீழே இறங்கிச் சென்றால் இரண்டு பேர் படுக்கும்படி ஒரு அறையும் அதனைத் தாண்டி அதே அறையில் ஒருவர் மட்டும் படுத்துக் கொள்ளும்படியான அறையும் இருந்தது. Bath/Washroom வசதிகளும் நன்றாகவே இருந்தது. ஏற்கனவே ஏழு மணிக்கு மேல் ஆகியிருக்க, ஒரு இரவு மட்டுமே தங்க வேண்டும் என்பதோடு, சாதாரண அறையே நன்றாகவே இருந்தது என்பதால் 1400 ரூபாய் கட்டணம் சொன்ன அறையையே தேர்ந்தெடுத்தோம். முன்பணம் கட்டி தேவையான Identity Documents காண்பித்து தங்குபவர்கள் விவரங்கள் கொண்ட புத்தகத்தில் அனைத்தையும் எழுதினோம். இது எல்லா தங்குமிடங்களிலும் இருக்கும் பொது விதிகள் தானே. அதனைப் பற்றி என்ன சொல்ல? இரவு உணவு வேண்டுமெனில் இப்போதே சொல்லி விடுங்கள் என்று சமையல் செய்யும் நபரை அழைத்து அறிமுகம் செய்தார். அவர் என்ன தர முடியும் என்பதைச் சொல்ல - வேறென்ன சப்பாத்தி, சப்ஜி, சாதம் - எங்களுக்குத் தேவையானவற்றை சொல்ல, ஒன்பதிலிருந்து ஒன்பதரைக்குள் சாப்பிட்டு முடித்து விடுங்கள் - அதற்குப் பிறகு உணவு கிடைக்காது என்றும் Cut and Right ஆகச் சொன்னார் தங்குமிட உரிமையாளர்.
எங்கள் உடமைகளை வாகனத்திலிருந்து எடுத்து அறைக்குள் கொண்டு வந்து வைத்தார் ஒரு சிப்பந்தி. ஓட்டுநர் ஷிம்புவிற்கும் இரவு தங்குவதற்கான இடத்தினையும் கேட்டுப் பெற்றோம். அவருக்கும் நல்ல ஓய்வு தேவையாயிற்றே. எங்கள் அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்து, எட்டரை மணிக்கு மேல் இரவு உணவு உண்பதற்காக வந்தோம். மே மாதம் 14-ஆம் தேதி - பகல் நேரத்தில் வெப்பம் அதிகம் இருந்தாலும் இரவு வர வர, குளிரும் இருந்தது. பார்க்கும் அனைவரும் குளிர்கால உடைகளையே அணிந்திருந்தார்கள். நாங்களும் குளிருக்குத் தகுந்த உடைகளை அணிந்து கொண்டிருந்தோம். தங்குமிட உரிமையாளர் ஒரு இடத்தில் அமர்ந்து கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த அறை மட்டுமல்லாது நாங்கள் தங்கியிருந்த அறையிலும் கூட நிறைய படங்கள் மாட்டி வைத்திருந்தார். அவர் நமது நாட்டின் பாதுகாப்புப் படைகளில் ஒன்றான SSB - அதாவது - Sashastra Seema Bal - இல் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் பணி ஓய்வு பெற்ற பிறகு இந்த ஊரில் தங்குமிடம் ஏற்படுத்தி அதனை நிர்வகிக்கிறார் என்பதும் தெரிந்து கொண்டோம்.
பாதுகாப்புப் படைகள், ஆர்மி போன்றவற்றில் பணிபுரியும், பணிபுரிந்த நபர்களிடம் ஒரு வித ஒழுங்கு, செய்யும் பணியில் சுத்தம் போன்றவற்றை கவனிக்க முடியும். இந்த தங்கிமிட நிர்வாகியும் அப்படியே. தங்குமிடத்தினை பார்த்துப் பார்த்து பராமரித்து வருகிறார் என்பதை அங்கே இருந்த நேரத்தில் பார்க்க முடிந்தது. அவருடைய பணி குறித்தும், எங்களுடைய பணி குறித்தும், அனுபவங்கள் குறித்தும் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். பல ஊர்களில் பணிபுரிந்ததோடு, பல நண்பர்களையும் நான் பெற்றிருக்கிறேன் என்று என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். சில நிமிடங்கள் கழித்து, சமையல் சிப்பந்தியை அழைத்து, சரியான நேரத்தில் உணவு தர வேண்டும் - வேலைகள் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கேட்டு, சமையலறைக்குள்ளும் சென்று பார்த்து வந்து, எங்களிடம் நீங்கள் உள்ளே அமர்ந்து கொள்ளுங்கள் - இதோ உணவு பரிமாறுவார் - எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது - காலையில் என்ன தேவை என்பதையும் இப்போதே சமையல் சிப்பந்தியிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லி, உணவுக்கான தொகையை நாளை காலை சேர்த்துக் கொடுத்து விடுங்கள் என்றும் நினைவூட்டிச் சென்றார்.
சிறிது நேரத்தில் குளிருக்கு இதமாக கண்ணாடிக் கதவுகள் கொண்ட அறை ஒன்றில் அமர்ந்து கொண்டு காத்திருக்க, எங்களுக்கான இரவு உணவு வருவதற்கு முன்னர் தட்டுகள், கிண்ணங்கள், ஸ்பூன்கள் என ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து எடுத்து, துடைத்து வைத்தார். பிறகு உணவும் வந்து சேர, அவரவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தோம். நாங்கள் அங்கே வந்ததும் ஓட்டுநரையும் அலைபேசியில் அழைத்து, சாப்பிட வரச் சொன்னோம். ஃபுல்கா ரொட்டி, தால், சாதம், மிக்ஸ் வெஜிடபிள் என்று தான் நாங்கள் எங்கள் தேவையைச் சொல்லி இருந்தோம். Simple and Delicious உணவாக இருந்தது அந்த தங்குமிடச் சிப்பந்தி சமைத்த உணவு. வடக்கில் சாதம் என்றாலே கொஞ்சமேனும் ஜீரா தாளிதம் செய்து விடுவதுண்டு. நாங்கள் ஜீரா ரைஸ் சொல்லி இருந்தோம் என்பதால் ஜீரா சற்று அதிகமாகவே தாளித்து இருந்தார் அவர். இரண்டு/மூன்று ரொட்டி, கொஞ்சம் சாதம், தொட்டுக்கொள்ள சப்ஜி, தால், ஊறுகாய் என்று அந்த நேரத்தில் - அதுவும் அந்த நாளின் பெரும்பாலான நேரம் பயணத்திலிருந்த பிறகு - கிடைத்த உணவு அம்ருதமாக இருந்தது.
இரவு உணவிற்குப் பிறகு சமையல் செய்த நபருக்கு நன்றி சொல்லி, ஓட்டுநர் ஷிம்புவிடம் நன்கு உறங்கி காலையில் விரைவில் எழுந்திருந்து பயணிப்போம் என்று சொல்லி அனுப்பி வைத்தோம். ஓட்டுநர் ஷிம்பு எங்களிடம் சொன்னது - காலை நேரம் எனக்கு விழிப்பே ஒன்பது மணிக்கு மேல் தான் வரும் - அதை விட விரைவாக எழுந்திருக்கச் சொன்னால் முடியாது - தூங்காமலேயே இருக்க வேண்டும் என்றார். இந்தப் பயணம் முழுவதும் இப்படி சில விஷயங்களை அவர் சொல்லும்போதெல்லாம் சற்றே கோபம் கூட வந்தது. முதல் நாளே எதுவும் சொல்ல வேண்டாம் என்று, சரி பரவாயில்லை காலை உணவை முடித்துக் கொண்டு தான் இங்கேயிருந்து புறப்படப் போகிறோம் - அதனால் எட்டு மணிக்காவது எழுந்து தயாராகிவிடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தோம். அதன் பிறகு நாங்களும் எங்கள் அறைக்குச் சென்று சற்றே அளவளாவி, அன்றைய கணக்குகளைச் சரிபார்த்து, அன்றைய தினத்திற்கான பயணக் குறிப்புகளை அலைபேசியில் சேமித்து வைத்துக் கொண்டு உறங்கத் தயாரோனோம். அதற்கு முன்னர் அவரவர் வீட்டினருடன் கொஞ்சம் பேச்சு! தினமும் எங்கே இருக்கிறோம், என்ன செய்தோம் என்பதை அவரவர் வீட்டில் சொல்லி விடுவது எப்போதும் வழக்கம். அதுவே அன்றைக்கும் தொடர்ந்தது.
அடுத்த நாள் காலையில் என்ன செய்தோம், கிடைத்த அனுபவங்கள் என்ன, பார்த்த இடங்கள் என்ன போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
19 ஜூன் 2026


.jpeg)











இரவு உணவு ஏஐ படம் இல்லை என்பதே மிக மகிழ்ச்சி. காலையிலேயே படம் பசியைத் தூண்டுகிறது
பதிலளிநீக்குஆப்பிளுடன் ஆப்பிள் மரங்களைக் காணாசை. புதிதாகப்்பறித்துச் சாப்பிடவும்.
பதிலளிநீக்குஆனால் வாய்ப்பு கிடைக்கும் பலர் வீணாக்குவார்கள்.
தங்கும் இடங்களில் நான் முதலில் பார்ப்பது பாத் ரூம். பிறகு ஏசி ரிமோட். அடுத்தது டிவி ரிமோட். இவைகள் சரியாக இருந்தால் ஓகே
பதிலளிநீக்குஇன்றைய வாசகத்துக்கான என் விடை : நம் மனம், தூக்கம்!
பதிலளிநீக்குஆ.. நீங்கள் தங்கிய இடம் சாலையை மிக ஒட்டியும், மலைச்சரிவையும் ஒட்டியும் இருக்கிறதே.... பால்கனியிலிருந்து விழுந்தாலே பள்ளத்தாக்குதான் போல!!!
பதிலளிநீக்குதங்குமிடத்திலிருந்து எடுத்த காட்சிகள் நன்றாய் இருக்கின்றன. பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல.
பதிலளிநீக்குபரவாயில்லையே... மூன்று பேர் ஒரே அறையில் தங்க அவர்களே அனுமதிக்கிறார்கள், 1400 ரூபாயில். இப்போது இங்கு சேலத்தில் கூட இரண்டுபேர் தங்க சாதாரண அறை 1400 ரூபாய், இன்னொருவர் தங்க வேண்டுமென்றால் கூட ஒரு 450 ரூபாய்.
பதிலளிநீக்குசப்ஜி பார்க்கக் கவர்ச்சியாக இருக்கிறது. ருசி அப்படி இருக்காது என்றாலும் பார்ப்பதற்கு நம்மூர் தக்காளி வெங்காய கார குருமா போல இருக்கிறது.
பதிலளிநீக்குகாலை நேரத்தில் தாமதமாக எழும் பழக்கம் எனக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும் ஒன்று. அந்த ஓட்டுநர் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குவாசகம் பொருத்தம்
பதிலளிநீக்குதங்கிய இடம் பின்னணி செமையா இருக்கு.
ஆனாலும் தங்குவதை முடிவு செய்வதற்கு முன்னர் அறைகள் மட்டுமல்லாது அதனுடன் இணைந்திருக்கும் Bathroom வசதிகளையும் எப்போதுமே பார்த்து விடுவது எங்கள் வழக்கம். //
நல்ல விஷயம் ஜி. இங்கும் அப்படியே
தங்குமிடத்திலிருந்து படங்கள் அத்தனையும் கவர்கின்றன பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல பனி மலை....ஆப்பிள் பூவிலிருந்து காய்த்திருக்கும் ஆப்பிள். எல்லாம் செமை
கீதா
அவரின் நேர்த்திதான், காலணிகளைக் கழட்டிவிட்டு வரச் சொல்லியிருப்பது. அதிலேயே தெரிந்துவிடுகிறது.
பதிலளிநீக்குஅவர் நமது நாட்டின் பாதுகாப்புப் படைகளில் ஒன்றான SSB - அதாவது - Sashastra Seema Bal - இல் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் //
ஓ அதான் இந்த அளவு நேர்த்தி!!
அவரது ஒவ்வொரு செயலும் பேச்சும் அவர் பணியாற்றிய பின்னணியைச் சொல்கிறது.
இரவு உணவுப்படம் ஆஹா! நிர்வாகி சரியாக இருந்தால் சமையலுக்கும் சரியாக அதற்கேற்றவரை வைத்து...ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வதால் சுவையாக இருக்கும்
மறுநாள் ஷிம்பு சொன்ன நேரத்திற்குத் தயாரானாரா? இவரை அந்த தங்குமிடத்தின் நிர்வாகியிடம் விட்டிருக்க வேண்டும்!!!! நல்ல பயிற்சி கிடைத்திருந்திருக்கும் ஆனால் ஷிம்பு சில நிமிடங்களிலேயே ஓடியிருப்பாரோ!!!
கீதா