எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, July 4, 2017

போவோமா ஒரு பயணம் - Arakku Valley….


அடுத்த பயணம் போகலமா?
அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி ஒரு பயணம்....

ஹனிமூன் தேசம் பயணத் தொடர் முடித்து இரண்டு மாதம் ஆகிறது! அந்தப் பயணத் தொடர் எழுதி முடித்த இரண்டாம் நாளே இனிமேலும் பயணம் பற்றிய கட்டுரைகள் எழுத வேண்டுமா என்ற கேள்வி கேட்டு, ஒரு பதிவும் எழுதினேன். பெரும்பாலான நண்பர்கள் விரைவில் அடுத்த பயணத் தொடரை ஆரம்பிக்கச் சொல்லி ஆதரவு தந்தாலும், பயணத் தொடரை ஆரம்பிக்கவே இல்லை! நடுவே ஒரு மாதம் எந்தப் பதிவுகளும் எழுதாமல், மற்ற நண்பர்களின் பதிவுகளை படிக்காமல் நீண்ட இடைவெளி! இடைவெளிக்குப் பிறகு மூன்று பதிவுகள் எழுதிய போதும், அடுத்த பயணத் தொடர் எப்போது என்ற கேள்வி தான் நண்பர்களிடமிருந்து. இதோ அடுத்த பயணம் இனிதே துவங்குகிறது!இரயில் பாதையிலிருந்து சாலை.....வாழ்க்கைப் பாதையில் உயர்வும் தாழ்வும் சகஜமானது என்பதைச் சொல்கிறதோ இந்த மலைப்பாதை!சாலையிலிருந்து இருப்புப் பாதை - ஒரு பார்வை....

பொதுவாகவே பயணக் கட்டுரைகள் எழுதும்போது முடிந்த அளவு விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைப்பதால் ஒவ்வொரு பயணத் தொடரும் நிறைய பதிவுகள் எழுதும்படி ஆகிறது! இரண்டு நாள் பயணம் செய்து வந்தால் அந்தப் பயணம் பற்றி குறைந்தது பத்து பதிவுகளாவது எழுதினால் தான் திருப்தியாக இருக்கிறது! பத்து பதிவுகளையும் பத்து நாட்களில் தொடர்ந்து எழுதினால் சரியாக இருக்காது என்று தோன்றுவதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவிடுவது வழக்கம். இப்படி இரண்டு நாட்கள் பயணத்தினையே பத்து பதிவாக எழுதும்போது பதினைந்து நாட்கள் பயணம் செய்து வந்த ஏழு சகோதரிகள் தொடரை எத்தனை நாட்கள் எழுத வேண்டியிருக்கும்! படிப்பவர்களுக்கு Continuity விட்டுப் போகும் என்ற நிலை இருந்தாலும் வேறு வழியில்லை! பயணக் கட்டுரைகள் இப்படி நிறைய பாகங்களாகவே எழுத வேண்டியிருக்கிறது…..


குகைக்குள் நுழையும் எங்கள் இரயில்.....


கண்ணுங்களா.... எழுந்து ஓடுங்க! வண்டி வருது!


அடுத்த குகைக்குள் செல்லலாமா?

சரி அடுத்த பயணத்தினைத் துவங்குவோமா? சென்ற பயணத்தில் வடக்கே ஹிமாச்சலப் பிரதேசம் என்றால் இந்தப் பயணம் தெற்கே ஆந்திரப் பிரதேசத்திற்கும் பக்கத்து மாநிலமான ஒடிசாவுக்கும்.  தில்லி நண்பர் விசாகப்பட்டினம் அருகே இருக்கும் Arakku Valley பற்றிய ஒரு செய்தி படித்ததிலிருந்தே அங்கே செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் – அந்த செய்தி – விசாகப்பட்டிணத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் ரயிலில் நான்கு பக்கங்களிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, இயற்கையை ரசிக்கும்படியாக அமைக்கப்படுகிறது என்பது தான்! அந்த செய்தி வந்து ஒரு வருடத்திற்குப் பிறகே அப்படி ஒரு ரயில் விடப்பட்டது என்றாலும், நாங்கள் முன்னரே திட்டமிட்டு விசாகப்பட்டிணம் பயணித்தோம்.


இரயில் பாதையிலிருந்து சில காட்சிகள்....


பள்ளத்தாக்கில் பச்சைப் பாவாடை உடுத்திய நிலமடந்தை.....


தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பூத்துக் குலுங்கும் மரம்...

திட்டமிட்டது அரக்கு பள்ளத்தாக்கு செல்வதற்கு என்றாலும், கூடவே வேறு சில இடங்களும் சேர்த்துக் கொண்டோம் – அதே மாநிலத்திலும், பக்கத்து மாநிலமான ஒடிசாவிலும் இருந்தன அந்த இடங்கள். எங்கெங்கே சென்றோம் என்ற விவரங்களுக்கு பின்னர் வருகிறேன். முதலில் அரக்கு பள்ளத்தாக்கு எங்கே இருக்கிறது – அங்கே அப்படி என்ன ஸ்பெஷல் என்று ஒரு முன்னோட்டத்தோடு இந்தப் பயணத்தொடரை ஆரம்பிக்கலாமா!


அரக்கு இரயில் நிலையம்....

அரக்குப் பள்ளத்தாக்கு – வைசாக் என அழைக்கப்படும் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில், கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கும் மலைத்தொடரில் இருக்கிறது அரக்குப் பள்ளத்தாக்கு! இங்கே செல்வதற்கு சாலை வழியும் ரயில் பாதையும் இருக்கிறது என்றாலும், போகும்போது ரயிலிலும் திரும்பும்போது சாலைப் பயணமும் செய்வது நல்லது! ரயில் பாதை மிகவும் பழைமையானது – பல அழகிய காட்சிகளைப் பார்த்துக் கொண்டே செல்ல, மிகவும் உகந்ததும் கூட!


எங்களைத் தாண்டி போக முடியாது மாமு....
தற்காலிக சாலைத் தடை! காசு கொடுத்தால் கேட்டு திறக்கும்!
அதிகமில்லை... ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் போதும்....


அரக்கு பள்ளத்தாக்கு - பழங்குடிப் பெண்களின் நடனம்...

இங்கே ரயில் பாதை அமைக்கப்பட்டதும் ஸ்வாரஸ்யமானது தான்.  இந்தப் பாதை சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு இரும்புத் தாதுப் பொருள்களை எடுத்து வருவதற்காகவே அமைக்கப்பட்ட பாதை! முதன் முதலில் இப்படி தாதுப் பொருளை எடுத்து வருவதற்காகவே அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையின் பெயர் K K Line! அதாவது கொத்தவலசா – கிரண்டுல் பாதை! பெரும்பாலும் மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்ட ரயில் பாதைகள் Meter Gauge தான் ஆனால் இங்கே அமைந்திருப்பது Broad Gauge! விசாகப்பட்டினத்தில் அமைந்திருக்கும் Vizag Steel நிறுவனத்திற்குத் தேவையான தாதுப் பொருட்கள் கொண்டு வரவும், விசாகப்பட்டினம் துறைமுகம் வழியே தாதுப் பொருட்களை மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்லவும் அமைக்கப்பட்ட இந்தப் பாதை ஆந்திர மாநிலத்திலிருந்து ஒடிசா வழியாக சத்தீஸ்கர் வரை இருக்கிறது!


குடிசையிலும் அடுக்குகள்...


பெரியதாய் ஒரு புத்து! உள்ளே யார் இருக்காங்கன்னு பார்க்கலாமா?

அப்படி இந்தப் பாதையில் என்ன Special Attaraction? கிட்டத்தட்ட 84 பாலங்களும், 58 Tunnel [குகைகளும்], குளிர்ச்சி தரும் நீர்வீழ்ச்சிகளும் நிறைந்த பாதை என்பதால், ரயில் வளைந்து நெளிந்து பயணிக்கும் போது பார்க்கக் கிடைக்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானவை. இந்தப் பாதையில் பயணிக்கும் ஒரு Passenger Train மூலம் தான், ரயில் பாதையில் செல்லும்போது செல்ல வேண்டியிருக்கும்.  இந்தியாவின் இருப்புப் பாதைகளில் [Broad Gauge] மிக அதிக உயரத்தில் அமைந்திருக்கும் ரயில் நிலையம் இந்தப் பாதையில் தான் இருக்கிறது! விசாகப்பட்டினத்திலிருந்து அரக்குப் பள்ளத்தாக்கு செல்லும் பாதையில் இடப்புறம் மலைப்பகுதியிலிருந்து நீர்வீழ்ச்சிகளையும் வலப் புறத்தில் பள்ளத்தாக்கு, நீர் நிலைகள், பச்சைப் பசேலென நிலங்கள் எனப் பார்த்தபடி பயணிப்பது ஒரு சுகானுபவம்.  இங்கே செல்வதற்கு ஏற்ற காலம் ஏது, பயண ஏற்பாடுகள் எப்படி என்பதையெல்லாம் இத் தொடரின் வரும் பகுதிகளில் சொல்லப் போகிறேன்!


அரக்கு பள்ளத்தாக்கு - அருங்காட்சியகம்.... 


அரக்கு பள்ளத்தாக்கு - பழங்குடிப் பெண்மணி.... 


அரக்கு பள்ளத்தாக்கு - பழங்குடிப் பெண்களுடன் நண்பர்....
படத்தில் நண்பர் மட்டுமே ஒரிஜினல் - மற்ற அனைவரும் சிலைகள்!

அரக்குப் பள்ளத்தாக்கு செல்ல முடிவு செய்த பிறகு தலைநகரிலிருந்து புறப்பட்டோம்! புறப்பட்ட இடத்திலிருந்தே விவரமாகச் சொல்வது தானே உங்களுக்கும் பிடிக்கும்? அதனால் முதலிலிருந்தே வருகிறேன்! அடுத்த பகுதியில் அரக்குப் பள்ளத்தாக்கு நோக்கிய பயணம் துவங்கலாமா?.  காத்திருங்கள்!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

48 comments:

 1. Replies
  1. தொடர்வதற்கு மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 2. அரக்கு பள்ளத்தாக்கினைப் பற்றி எப்போதோ படித்த நினைவு..

  இனிவரும் நாட்களில் தங்களுடன் பயணிக்கும் வாய்ப்பு..

  அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றேன்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் என்னுடன் பயணிக்க இருப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   Delete
 3. படங்களும் முன்னுரையும் அழகான ஆரம்பம். இந்த பயணத்தை மிகமிக ஆர்வத்துடன் தொடர்கிறேன்.

  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 4. வாவ்..... அரக்கு போய் பராக்கு பார்க்கணும் போல இருக்கே! ஆஹா.....

  ReplyDelete
  Replies
  1. நல்ல இடம். சீசனில் [செப்டம்பர் - நவம்பர்] செல்வது நல்லது. அருவிகளும் பார்க்க முடியும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. அரக்குப் பள்ளத்தாக்கு பயணம். ஆரம்மபமே நல்லா இருக்கு. தொடர்கிறேன்.

  டக்கென்று பார்க்க, "விஜய் மால்யா" பழங்குடிப் பெண்களோடு டான்ஸ் ஆடுகிறாரே.. அவர் பொதுவா போஸ் கொடுப்பது இளம் பெண்களோடல்லவா என்று தோன்றியது.

  த ம +1

  ReplyDelete
  Replies
  1. விஜய் மல்லையா.... :) ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் ஜி.

   Delete
 6. அரக்கு பள்ளத்தாக்குன்னு படிச்சதும் மகாபாரதத்தில் பாண்டவர்கள் இருந்த அரக்கு மாளிகை இருந்த இடம்ன்னு நினைச்சேன்...

  ReplyDelete
  Replies
  1. அரக்கு மாளிகை - அது வேறு இது வேறு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 7. படங்களின் அழகு பிரமிப்பூட்டுகின்றது ஜி தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. குகைக்குள் நுழையும் ரயில் காட்சிகளுடன்..அரக்கு பள்ளத்தாக்கு ஆரம்பம் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 9. ஒவ்வொரு படமும் என்னே அழகு...

  உடன் பயணிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜய்.

   Delete
 11. சூப்பர் வெங்கட்ஜி! மீண்டும் பயணம் ஆரம்பம்!!! தொடர்கிறோம்...

  கீதா: ஜி நானும் போய் வந்தேன் விசாகப்பட்டினம், பீச், கைலாசகிடி, அரக்கு என்று....படங்கள் எடுத்தும் உள்ளேன். நானும் ரயில் பயணத்தை மிகவும் ரசித்தேன். ஆனால் கட்டுரை எழுதவில்லை..ட்ரைபல் ம்யூசியம் இதே படம் அந்த நடனம் ஆடும் சிலைகளுடன் பலரும் அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்...அந்தச் சிலைகளும் உள்ளன. ஆனால் ம்யூசியத்தில் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் பல எடுக்கவில்லை...வெளியிலிருந்து தான் எடுத்தென். பொட்டானிக்கல் கார்டன்...எல்லாம்...ஆனால் கொஞ்சம் அவசரகதியான பயணம் அது கூட வந்தவர்கள் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ் ஆகும் நபர்கள்....

  நான் எழுத நினைத்திருந்த பல தகவல்கள் நீங்கள் மிக அழகாக சொல்லிச் தொடங்கியிருக்கிறீர்கள் ஜி!!! நான் அரக்கு ரெயில்வே ஸ்டேஷனை மிகவும் ரசித்தேன். இன்னும் சற்று தூரம் பயணித்தால் ஒரிசா வந்துவிடுமே...ரயில்நிலையம் மிக அழகாக இருந்தது...சுற்றிலும் மலை இல்லையா ஜி... தொடர்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. அரக்கு இரயில் நிலையம் அழகு.... இக்கட்டுரை உங்கள் பயணத்தினை நினைவு கொள்ள வைத்திருப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 12. படங்கள் மிக அழகாக இருக்கிறது ஜி!

  கீதா: ரயிலிலிருந்து எடுத்தவை கொஞ்சம் தான் அத்தனை அழகாக எடுக்க முடியைல்லை. ஏனென்றால் எங்களுக்கு இடது பக்கம் தான் இருக்கை கிடைத்தது உட்கார. வலது பக்கம் தானே பள்ளத்தாக்கு. கூட்டம் அதிகமாக இருந்தது. சென்று எடுக்க இயலவில்லை. கதவருகிலும் மக்கள் நின்று கொண்டே இருந்ததால் எடுக்க இயலவில்லை. கூட வந்தவர்களும் கொஞ்சம் ரெஸ்ட்ரிக்ட் செய்பவர்கள், பயம், ரூல்ஸ் என்று ஹஹஹஹ்...உங்கள் படங்களைப் பார்த்ததும் அந்த ரயில் பாதை, பள்ளத்தாக்கு, எல்லாம் நினைவில் வந்தது. இன்னும் மனதில் அப்படியே உள்ளது. பார்த்தவை எல்லாம்...ஆனால் நாங்கள் சென்ற சீசன் சம்மர் சீசன் இல்லாததால் நீர் வீழ்ச்சியில் நீர் இல்லை...தொடர்கிறோம் உங்கள் பயணக் குறிப்புகளை...இன்னும் அழகான படங்கள் உங்களிடமிருந்து வருமே!!!!!

  ReplyDelete
  Replies
  1. நான் பெரும்பாலான நேரம் கதவருகில் தான் இருந்தேன். இருக்கையில் இருந்த நேரம் மிகக் குறைவு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. Aarvathudan waiting... Photos& comments are very nice!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில் கிளாஸ் மாதவி.

   Delete
 14. படங்கள் அனைத்தும் அருமை. அதிலும் திரு. ஸ்ரீபதி மல்லையாவுடன் 2017 காலண்டர் கேர்ள்ஸ் நிற்கும் படம் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீபதி மல்லையா! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணச்சி.....

   Delete
 15. ஒரு முறை சுநாபேடாவுக்குச் சென்றிருக்கிறோம் எச் ஏ எல் தொழிற்சால இருக்கும் இடம் அப்போது அரக்கு வாலி சென்ற் நினைவு ஆயிற்று முப்பது வருடங்களுக்கும் மேலெதுவுமே நினைவில் இல்லை ஆனால் விஜயநகரத்திலிருந்துபேரூந்து செல்லும் போது ஆடுகளுடன் பயணமிருந்தது மட்டும் நினைவுக்கு வருகிறது

  ReplyDelete
  Replies
  1. பழங்குடி மக்கள் அதிகம் இருப்பதால் இருக்கும் வாகனப் போக்குவரத்தில் தான் எல்லாம் பயணம் - ஆடுகள், கோழிகள் உட்பட! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 16. அதெப்படி நண்பருக்கு சிலைகள் நடுவே இடம்

  ReplyDelete
  Replies
  1. நடுவே கொஞ்சம் இடம் விட்டுதான் இருக்கிறது அந்த சிலைகள் - சிலைகள் ஒரு பாரம்பரிய நாட்டியத்தினைக் குறிப்பது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 17. கோராப்புட் இருக்கும் இடத்துக்கு அருகில்தானே சரக்கு வாலி

  ReplyDelete
  Replies
  1. கோராபுட், ஒடிசாவிலிருந்து அரக்குப் பள்ளத்தாக்கு சுமார் 80 கிலோமீட்டர் தொலைவு G.M.B. ஐயா

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 18. எனக்கும் அரக்கு பள்ளத்தாக்கை பார்க்க ஆசை. ஒரு தடவை விசாகப்பட்டினம் சென்றபோது பார்க்க எண்ணினேன். பார்க்க இயலவில்லை. தங்கள் பதிவு மூலம் பார்க்க உதவுவதற்கு நன்றி! படங்கள் அருமை!

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று பாருங்கள் - முடிந்தால் சீசனில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 19. அழகான படங்களுடன் அரக்கு பள்ளத்தாக்கு தொடர் அருமை.
  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 20. படங்கள் சுவாரஸ்யம். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 21. அசத்தல் படங்களுடன் ஆரம்பமே அருமை
  தொடருங்கள் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 22. அரக்குப் பள்ளத்தாக்குனு கேட்டதில்லை. இப்போத் தான் முதல் முறையாக் கேள்விப் படறேன். சுவாரசியமான பயணம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 23. அருமை . நன்றி

  ReplyDelete
 24. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா.

  ReplyDelete
 25. அருமை படங்களுடன் தங்கள் எழுத்தும் அற்புதம். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....