வெள்ளி, 10 நவம்பர், 2017

தண்ணீருக்கு சண்டை – பாக்சுநாக் - தரம்ஷாலா!


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 6

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4 5


Bபாக்சுநாக் கோவில் அருகே இருக்கும் குளம்

St. John’s Church in the Wilderness என அழைக்கப்படும் தேவாலயத்திற்குச் சென்று அங்கே இருந்த அமைதியை ரசித்தபிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. அடுத்ததாக நாங்கள் சென்றதும் ஒரு வழிபாட்டுத் தலம் என முந்தைய பகுதியை முடிக்கும் போது சொல்லி இருந்தேன். நாங்கள் அப்படிச் சென்ற வழிபாட்டுத் தலம் “பாக்சுநாக் கோவில்”! இங்கே என்ன கோவில் இருக்கிறது, எப்படி வந்தது, யார் கட்டினார்கள் என்ற விவரங்களையெல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம்! முதலில் கதை!


குளம் அருகே விநாயகர்!

இந்தப் பகுதியில் இருந்த மக்களின் தலைவர், ராஜாவாகிய Bபாக்சு அவர்களின் சபை கூடி இருக்கிறது. Bபாக்சு ராஜா பராக்கிரம சாலி, திறமை வாய்ந்தவர், வல்லவர், நல்லவர் என்று பலரும் புகழாரம் சூட்டிக் கொண்டிருக்க, “நீ இப்படி இவங்க எல்லாம் தட்டற ஜால்ராவுல மகிழ்ச்சி கொண்டிருந்தால் சரியா?, மக்களோட கஷ்டங்களைத் தெரிஞ்சுக்க மாட்டியா? தண்ணீர் இல்லாம காய்ஞ்சு போய் கிடக்கறாங்கப்பு!” என்று ஒரு மந்திரி மட்டும் குரல் கொடுக்க, “என்ன என் நாட்டு மக்களுக்கு தண்ணீர் பிரச்சனையா? அதை யாரும் ஏன் என்னிடம் இத்தனை நாள் சொல்லவில்லை? சொல்லாதவர்கள் அத்தனை பேருக்கும் தண்டனை தருகிறேன்!” என்று மகிழ்ச்சிக் கடலிலிருந்து வெளிவந்து பிரச்சனைகளைக் கேட்டறிந்தாராம்.


Bபாக்சுநாக் கோவில்....

அட என்னோட ஆட்சியில மக்களுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? பலவித திறமைகளைக் கொண்டிருக்கும் ராஜா, தனது ஆட்சியின் கீழ் இருக்கும் மக்களைத் தவிக்க விடலாமா? இதோ இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்கிறேன் – தண்ணீர் எங்கே இருக்கிறது என்பதை நானே தேடிச் சென்று மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வழி வகை செய்கிறேன் என புறப்பட்டார்.  தண்ணீருக்கான தேடலில் நீண்ட பயணம் செய்து, ஓரிடத்தில் பார்த்தால் அவர் கண்களுக்கு மிகப்பெரிய ஏரி தெரிகிறது. முழுவதும் தண்ணீர் – பல அடி ஆழம் கொண்ட இந்த ஏரித்தண்ணீர் மட்டும் நம் மக்களுக்குக் கொண்டு சென்றால் எவ்வளவு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார்.  அந்த ஏரி நாக்G தல்!  நாகராஜுக்குச் சொந்தமானது! அட வெங்கட் நாகராஜுக்கு இல்லைங்க! நாகர்களின் தலைவரான நாகராஜ்!


நம்ம ஆஞ்சி! - Bபாக்சுநாக் கோவில்

நாகர்களின் தலைவர் எங்கேயோ உலாத்தச் சென்றிருக்க, Bபாக்சு இது தான் நல்ல சமயம் என தனது மந்திர சக்தியை பயன்படுத்தி, அந்த ஏரியில் இருந்த தண்ணீர் அனைத்தையும் ஒரு கமண்டலத்தில் அடைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். தேடிச் சென்றபோது எவ்வளவு நேரம் ஆனதோ அதே மாதிரி தானே தனது ராஜாங்கத்திற்குத் திரும்பவும் ஆகும்! மாலை நேரம் ஆக, இப்போது கோவில் இருக்கும் மலைப்பகுதியில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார்.  அப்படி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் நாக்G தல் திரும்பிய நாகராஜாவுக்கு அதிர்ச்சி! என்னடா இது, காலைல போகும்போது தண்ணீர் இருந்ததே, அத்தனை தண்ணீரும் எங்கே போச்சு? என்று யோசிக்க, ஞான திருஷ்டியில் Bபாக்சு, தண்ணீர் முழுவதும் ஆட்டையைப் போட்ட விஷயம் தெரிகிறது! என்கிட்டயா மோதற, என்று அவர் Bபாக்சுவைத் தேடிக்கொண்டு விரைந்தார்.


புலிவாய் வழியே நீர் - ஒரு க்ளோஸ் அப்! - Bபாக்சுநாக் கோவில்...  

விரைந்து வரும்போது பார்த்தால் நம்ம Bபாக்சு, ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டிருக்க, பக்கத்தில் கமண்டலத்தில் நாக் தல் தண்ணீர்! இப்படித் திருட்டுத்தனமா தண்ணீரை எடுத்துக் கொண்டு போகிறாயே, உனக்கு வெக்கமா இல்லையா, என்னுடன் போர் புரிந்து, முடிந்தால் என்னை வென்று தண்ணீரை எடுத்துக்கொள் என சண்டைக்கு அழைக்கிறார் நாகராஜா! சண்டை ஆரம்பிக்கிறது! பலத்த போர்! [தண்ணீருக்காக நாமும் போர் புரியும் நாள் வெகு தொலைவில் இல்லை!] என்னதான் Bபாக்சு திறமைசாலியாக இருந்தாலும், நாகராஜா முன்னர் ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறார். சண்டையில் கமண்டலம் தட்டப்பட, தண்ணீர் அருவியாகக் கொட்டுகிறது. சரி சண்டை போடறத விட, சமாதானமா போகிறது தான் நமக்கும் நல்லது, நம்ம நாட்டு மக்களுக்கும் நல்லதுன்னு Bபாக்சு ராஜா முடிவு எடுக்கிறார்! நாகராஜாவோட ஒரு டீலிங்க்! பேச்சுவார்த்தை நடக்கிறது!


 குளத்தில் குளித்து ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்! 
Natural icecream!

நான் திருட்டுத்தனமா எடுத்துட்டு வந்தது தப்பு தான். என்னோட மக்கள் வறட்சியில, ரொம்பவே கஷ்டப்படறாங்க. அதனால் கமண்டலத்திலிருந்து ஓடும் அருவி நீரை தடுத்து விடாதே, வறண்டு கிடக்கும் எங்கள் பகுதி கொஞ்சம் குளிரட்டும், தண்ணீருக்கு கஷ்டப்படும் எங்கள் மக்களும் கொஞ்சம் தண்ணீர் கிடைக்கும்படி உதவி செய் என்று சொன்னதோடு, இந்தப் பகுதி, இனிமேல் நம் இருவர் பெயராலும் “Bபாக்சுநாக்” என அழைக்கப்படட்டும், உனக்கு இங்கே நான் ஒரு கோவில் கட்டி, நானும், என் மக்களும் உன்னை வழிபடுகிறோம் என்பது தான் அந்த டீலிங்க்.  அப்படியாக டீலிங்க் போட்ட Bபாக்சு ராஜா கட்டிய கோவில் தான் இந்த Bபாக்சுநாக் கோவில்!


Bபாக்சுநாக் கோவில் அருகே கடை வீதி!

கோவில் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து சற்றே நடந்தால் இப்போதும் Bபாக்சுநாக் அருவி இருக்கிறது. கோவில் பகுதியில் ஒரு குளம். அந்தக் குளத்திலும் மலையிலிருந்து வரும் அருவி நீர் மூன்று புலிவாய் வழியே கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நீர் மூலிகைகள் வழி வருவதால் நோய் தீர்க்கும் சக்தி வாய்ந்தது என்று நம்பிக்கை! பலரும் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் குளிக்கவில்லை. தலையில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொண்டு, கோவிலுக்கும் சென்று வந்தோம். நாகராஜாவிற்கு கோவில். கூடவே சிவபெருமானுக்கும்! பிள்ளையார், ஹனுமார் என அனைவருக்கும் ஆங்காங்கே சிலைகள் உண்டு! மக்கள் தங்கள் இஷ்டப்படி மாலைகளைப் போட்டு வைத்திருந்தார்கள். அனைத்தையும் பார்த்துக் கொண்டு கடை வீதிக்கு வந்தோம். இங்கே நிறைய கடைகள் உண்டு. பொருட்களை வேடிக்கை பார்த்தபடியே நடந்து எங்கள் வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.


என்னையா ஃபோட்டோ புடிக்கறீங்க?


Bபாக்சுநாக் கோவில் அருகே கடைவீதி!

Bபாக்சுவாலா என அழைக்கப்படும் கூர்க்கா இன மக்கள் அதிகம் வருகிறார்கள். செப்டம்பர் மாதத்தில் இங்கே நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலமான ஒன்று.  சில பல புகைப்படங்கள் எடுத்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாய் சென்ற இடம் எங்கே, அங்கே என்ன ஸ்பெஷல்… சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

22 கருத்துகள்:

  1. எத்தனை கதைகள்! எத்தனை ஸ்வாரஸ்யமான தகவல்கள் ஜி! தென்னாட்டு புராணக் கதைகளும் வடநாட்டுப் புராணக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே போல்தான் இருக்கிறதோ!!? உங்கள் வழி பல இடங்களைப் பற்றி அறிய முடிகிறது. மிக்க நன்றி! தொடர்கிறோம்..

    கீதா: ஹை! முதலில் பாகுபலி நினைவுக்கு வந்தது. அடுத்து கதையைப் பார்த்ததும்...அட வடநாட்டு அகத்தியர் என்று அகத்தியரும் நினைவுக்கு வந்தார். அடுத்து தண்ணீர்ச் சண்டை...அப்போவே ஆரம்பிச்சுருச்சே! அப்படினு....அப்புறம் புலி வாய் வழி வரும் தண்ணீர்....அப்படி இங்கு தமிழ்நாட்டு ஆந்திரா பார்டரில் வேதபுரீஸ்வரர் கோயில் அருகில் இருக்கும் பைரவர் கோயிலில் குளத்தில் நந்தி வாய் வழியாக நீர் வருகிறது. அந்த நீர் மலையிலிருந்து - நகரி மலைத்தொடர் - வருவதாகவும் மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது மட்டுமல்ல, அப்படி அந்தக் குளத்தில் விழும் தண்ணீய்ர் வற்றவே வற்றாதாம், சுத்துப்பட்டு 25, 30 கிராமங்களுக்கு அந்தத் தண்ணீர்தான் உதவுகிறதாம்....இக்கோயிலைப் பற்றியும் எழுத நினைத்து இன்னும் எழுதவில்லை...

    தரம்ஷாலா பற்றி உங்கள் பதிவின் மூலம் நிறைய நினைவுப்படுத்திக் கொண்டேன்...மறந்து விட்டிருந்தது..நிறைய மாற்றங்களும் தெரிகிறது...படங்களில்.தொடர்கிறோம் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு இடத்திலும் ஏதோ ஒரு ஸ்வாரஸ்யம் உண்டு. தேடத்தான் நமக்குப் பொறுமை இல்லை!

      வேதபுரீஸ்வரர் பற்றியும் எழுதுங்கள். படிக்க ஆவலாய் நானும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  2. சுவாரஸ்யமான தகவல்கள். அந்த அருவி நீரை ஒரு கமண்டலத்தில் எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் கொண்டு சென்று கீதாக்கா வீட்டுக்குப் பக்கத்தில் கவிழ்த்திருக்கக் கூடாதோ....!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கமண்டலத்தில் எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் கொண்டு சென்று கீதாக்கா வீட்டுக்குப் பக்கத்தில் கவிழ்த்திருக்கக் கூடாதோ....// ஹாஹா... திருவரங்கத்தில் மழை அரிதாகவே பெய்கிறது.. என்ன செய்வது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. உங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயராமன் நாராயணஸவாமி ஜி!

      நீக்கு
  5. எழுதுங்கள்! படிக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  6. அழகான படங்கள்..
    புதிய விஷயங்கள்... தெரிந்து கொண்டாயிற்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. நானும் பாக்சு அகத்தியர் என நினைத்தேன். அப்புறம் பாக்சு உச்சரிப்புக்காக B போட்டிருப்பது. அட இந்த நாகராஜுக்குச் சொந்தமானதில்லீங்க, ஆட்டையப் போடுறது ஆகியவற்றோடு ரசமான இருந்த கட்டுரையை மிக ரசித்தேன் சகோ. :)

    அப்புறம் அதென்ன நேச்சுரல் ஐஸ்க்ரீம். அத பத்தி சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிமாச்சலப் பகுதிகள் பலவற்றில் இப்படி ஐஸ்க்ரீம் கிடைக்கிறது. மரக் குழாய்களில் கலவை தயாரித்து, பனிக்குள் புதைத்து வைத்து தருவார்கள். நல்ல சுவையாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  8. தண்ணீருக்காக Bபாக்சு நாகராஜாவோட சண்டை போட்டாலும் நல்லதே நடந்திருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி. அதுபோல இங்கும் சண்டை போடாமலே தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்கும்

    கதை சுவாரஸ்யமாக இருந்தது பகிர்ந்தமைக்கு நன்றி! .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சண்டை போடாலம் தண்ணீர்! ம்ம்ம். நடந்தால் நன்றாகத் தான் இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  9. காவிரி கமண்டலம் கதையை ஞாபகப்படுத்துகிறதே..... அருவி பக்கத்துல பஜ்ஜி கடைனா அர்த்தம் இருக்கு... ஐஸ்கிரீம் கடையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிமாச்சலப் பிரதேசத்தில் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் இந்த ஐஸ்க்ரீம் கிடைக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. அது எதுக்கு நச்சுரல் ஐஸ்கிரீம் எப்படி இருந்தது சாப்பிட்டு பார்த்தீர்களா ஏன் கொடுக்கிறார்கள் என்று சொல்லவில்லையே ஒரு கோவில் வரலாறையே சொல்லியிருக்காரு அதில் எவ்வ்ளவு பெரிய பிரச்னையை வேற நடுவுல சொல்லியிருக்காரு அதைவிட்டு ஐஸ்கிரீமை பற்றி ரொம்ம்ப முக்கியம்
    படங்கள் அருமை அதுவும் முதல் படம் எலி தொங்கிட்டுஇல்லை ஏறிக்கொண்டோ இருப்பதுபோல் கணேஷ் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி ஜி!

      நீக்கு
  11. எனக்குப் புள்ளையாரை விட அந்த எலிதான் ரொம்பவே பிடிச்சது :-)

    கதை சொன்ன விதம் அருமை!

    இடம் நல்லா சுத்தமா இருக்கு போல!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....