திங்கள், 6 நவம்பர், 2017

நட்டி என்றொரு ரம்யமான கிராமம் - தரம்ஷாலா!


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 4

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 பகுதி-2 பகுதி-3


மலைப்பாதையும், மலைத்தொடரும்...


பனிபடர்ந்த தௌலாதார் மலைத்தொடர்.....

தங்குமிடம் கிடைத்ததும், ஒவ்வொருவராகத் தயாராவதற்குள் தங்குமிட உரிமையாளரிடம் பேசி அன்றைய தினத்தின் பயணத்திற்காக வண்டி தேவை என்றோம். அவர் தனது நண்பர் ஒருவரின் நிறுவனத்திற்கு அலைபேசியில் அழைத்தார். என்னதான் ஹிமாச்சலப் பிரதேசம் என்றாலும், இங்கேயும் நிறைய சர்தார்ஜிகள் உண்டு. ஹிமாச்சல பிரதேசத்தில் பேசும் மொழிகளில் பஞ்சாபியும் உண்டு! பகாடி என அழைக்கப்படும் மலைப்பகுதி மொழியும் உண்டு. அன்றைய தினம் வேண்டிய வாகனத்தினை அந்த நண்பர் அனுப்பி வைப்பதாகச் சொல்லி விட்டார். வாடகையும் சரியாகவே தோன்ற வண்டியை காலை ஒன்பது மணிக்குள் அனுப்பி வைக்கச் சொன்னோம். அதற்குள் அனைவரும் குளித்து தயாராகி விட எங்கள் சுற்றிப் பார்க்கும் படலம் ஆரம்பித்தது! நீங்களும் சுற்றிப் பார்க்க ரெடி தானே? 



நானும் சில நண்பர்களும்....


ஒரு கிட்டப்பார்வை!

தங்கியது தரம்ஷாலா என்றாலும், இப்போது நான் உங்களைப் பார்க்க அழைத்துச் செல்லப் போவது மெக்லாட்கஞ்ச் அருகே இருக்கும் ஒரு அழகிய கிராமத்திற்கு! அந்த கிராமத்தின் பெயர் நட்டி! என்ன ட் கொஞ்சம் அழுத்திச் சொல்லணும்! அதாவது அந்த கிராமத்தின் பெயர் Naddi! அங்கே இருந்து தான் பெரும்பாலான Trekking பாதைகள் துவங்குகின்றன. அங்கேயிருந்து மலைகளுக்கு இடையே சூரியன் உதிப்பதையும், அஸ்தமிப்பதையும் பார்க்கவென்றே நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் என்றாலும் நாங்கள் அங்கே சென்ற போது காலை ஒன்பதே கால் மணி. சூரிய உதயமோ, அஸ்தமனமோ பார்க்க இயலாது! இருந்தாலும் பார்க்க மிகவும் ரம்மியமான காட்சிகள் – மலைப்பகுதி, இயற்கைச் சூழல், மலைகளுக்கு அடிவாரத்தில் சலசலத்து ஓடும் தண்ணீர், சில்லென்று வீசும் காற்று என அமைதியான ஒரு இடம்!



நானும் ஒரு நண்பரும் - சற்றே இளைப்பாறிய போது!



மலைப்பகுதியில் சில வீடுகள்!

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்கே குடும்பத்துடன் வந்து ரம்யமான காட்சிகளை ரசிப்பதோடு, இங்கே கிடைக்கும் ஹிமாச்சலி உணவுகளையும் ருசிக்கிறார்கள். கூடவே பனிமூட்டம் இல்லாத சமயத்தில் மலைப்பிரதேசங்களில் தூரத்தில் உள்ள சில இடங்களை தொலைநோக்கிக் கருவிகள் மூலம் பார்க்கும் வசதிகளும் இங்கே உண்டு என்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உற்சாகம். அதுவும் பத்து ரூபாய் கொடுத்தால், தொலைநோக்கிக் கருவி வழியே, குணா மாதா கோவில், தௌலாதார் மலைத்தொடர், டிரையண்ட் என அழைக்கப்படும் மலைப்பகுதி, நீர்வீழ்ச்சி என பல இடங்களை அருகில் செல்லாமலேயே பார்க்க முடியும்! :) பத்து ரூபாய் மட்டும் கொடுத்து பார்ப்பதற்கு நிறையவே போட்டி – இக்கருவிகளோடு நிறைய பேர் சாலையோரங்களில் நின்று கொண்டிருக்கிறார்கள்! அவர்களுக்கும் வருமானம், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு சுகமான அனுபவம்!




இந்தப் பகுதியில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையும் செப்டம்பர் மாதத்திலும் சில கிராமியத் திருவிழாக்கள் நடைபெறும். அந்தச் சமயத்தில் சென்றால் திருவிழாவையும் ரசிக்க முடியும் என்றாலும் தௌலாதார் மலைத்தொடரினை பனி மூடியிருக்கும் காட்சியைப் பார்ப்பது கடினம்.  இந்த ஊரில் இருக்கும் இன்னுமொரு இடம் தால் ஏரி – காஷ்மீரில் இருக்கும் ஏரியின் பெயரையே கொண்டிருந்தாலும் மிகச் சிறிய ஏரி! குளம் என்று கூட சொல்லலாம்! குறுகிய மண் பாதை வழியே நடந்து செல்ல, சில கிராமிய மக்களையும் பள்ளி செல்லும் அவர்களது குழந்தைகளையும் பார்க்க முடிந்தது. பள்ளிக்குச் செல்லும்போது சுமக்க பெரிய புத்தகச் சுமை! அதுவும் இந்த மாதிரி மலைப்பகுதியில் சுமந்து செல்வது நிச்சயம் குழந்தைகளுக்கு கடினமான விஷயம் தான். சிரித்துக் கொண்டே செல்லும் குழந்தைகளைக் கண்டு நமக்குள்ளும் உற்சாகம்.




சவுக்கு வகைச் செடி ஒன்று...

இயற்கை எழிலை ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்றாலும் நடுவில் கொஞ்சம் உணவும் தேவை அல்லவா? முதல் நாள் இரவு புறப்பட்ட பிறகு வழியிலும் வாழைப்பழம் மட்டுமே உணவாக இருந்தது! அதனால் பசிக்கத் தொடங்க, அவ்விடத்தில் இருந்த சிறிய கடை ஒன்றில் என்ன இருக்கிறது எனக் கேட்க, Bread-Omelette, Stuffed Parantha எனச் சொல்ல, தேவைக்குத் தகுந்த மாதிரி சொன்னோம். கடை சிறியதாக இருந்தாலும், கடைக்கு பின்புறம் நல்ல வெட்டவெளி! சில இருக்கைகள். அங்கே அமர்ந்து கொண்டால் எதிரே தௌலாதார் மலைத்தொடர். சவுக்கு வகை மரங்கள், அவற்றில் அமர்ந்திருந்த பறவைகளின் குரல் மலைத்தொடரில் படர்ந்திருந்த பனி, சில்லென்ற காற்று என சுகமாக இருந்தது.  அங்கே அமர்ந்து இயற்கை ரசித்தபடி, சில பல கதைகளைக் கதைத்துச் சுகமாய் இருந்தோம். சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு வந்த உணவு – Simple and Sweet ரகத்தில்! இருந்த பசிக்கு அமிர்தமாய் இருந்த உணவினை உண்டு, குளிருக்கு இதமாக தேநீர் அருந்தி அங்கிருந்து புறப்பட மனதில்லாமல் புறப்பட்டோம். 











குரல் கொடுத்த பறவையொன்று!


தால் ஏரி!

அடுத்ததாக, நாம் செல்லப் போவது ஒரு பழமையான வழிபாட்டுத் தலத்திற்கு – எந்த வழிபாட்டுத் தலம் என்பதை அடுத்த பதிவில் சொல்லட்டா?

தொடர்ந்து பயணிப்போம்

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 


32 கருத்துகள்:

  1. அழகிய படங்கள். சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. அருமையான இடம். மனதிற்கு இதமளிக்கின்ற புகைப்படங்கள். தொடர்ந்து பயணிக்கிறோம், உங்களோடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடவே பயணிப்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. சுற்றுச் சூழலைக் காணும் போதே குளுகுளு என்றிருக்கின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான சூழல் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. தகவல்கள் அருமை. இந்த மாதிரி இடங்களைப் பற்றிப் படிக்கும்போது, அங்கேயே ஒரு வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்கிவிட்டால் என்ன என்றும் தோன்றுகிறது. பனிசூழ்ந்த மலைச்சிகரங்கள்.... வாவ். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /இந்த மாதிரி இடங்களைப் பற்றிப் படிக்கும்போது, அங்கேயே ஒரு வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்கிவிட்டால் என்ன என்றும் தோன்றுகிறது.//

      போர் அடித்து விடும் நெல்லை... இவை எல்லாம் பார்த்து ரசித்து வரத்தான் சரி... அங்கே இருக்க உடையாது! நமக்கெல்லாம் நம்ம ஊர்தான் சரி! "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே...கருடன் சொன்னது... அதில் அர்த்தம் உள்ளது...."

      நீக்கு
    2. உண்மைதான் ஸ்ரீராம். எப்போதும் தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. ஆனாலும், பதின்ம வயதில் ஊட்டியில் ஒரு வீட்டில், அந்தக் குளிரில் ஜீரக ரசம் சாதம் சாப்பிட்டபோது ஊட்டியிலேயே ஒரு வீடு வாங்கவேண்டும் என்ற ஆசை வந்தது. நிறைய இடங்களைப் பார்க்கும்போது அங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆகிவிடலாமே என்று தோன்றுகிறது. லேட்டஸ்டாக, மயிலாடுதுறையில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிடலாமே, ஏகப்பட்ட தரிசனம் செய்யாத கோவில்கள் இருக்கின்றனவே என்றும் தோன்றுகிறது. எங்கே.... தொடங்கும்... அது எங்கே எவ்விதம்.......

      நீக்கு
    3. பனி சூழ்ந்த மலைச்சிகரங்கள். பார்க்கும்போது அங்கேயே வீடு எடுத்த்த் தங்கத் தோன்றும். அதுவும் ஹிமாச்சலப் பிரதேசம் எனக்கு மிகவும் பிடித்த இடம். எனக்கும் அப்படி ஆசை வரும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    4. //யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்// - ம்ம்ம். எங்கே சென்றாலும் திரும்பவும் நம் ஊர் வந்து சேரத்தான் வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    5. மயிலாடுதுறையில் வீடு வாங்கி செட்டிலாகும் ஆசை! நல்ல ஊர். நம் ஊரில் எங்கே இருந்தாலும் சௌகரியம் தான். பேருந்து வசதிகள் நன்றாக இருப்பதால் தமிழகத்திற்குள் எங்கே சென்றுவருவதும் சுலபம் - மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக போக்குவரத்து நன்றாகவே உள்ளது.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. அழகிய படங்கள்.. அருமையான சுற்றுலா.. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி ஆதிரா.

      நீக்கு
  7. அருமையான விளக்கங்களோடு அழகிய படங்களைப் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  8. வெங்கட் ஜி என்ன ஓர் அருமையான இடம்! உங்கள் வழி பார்க்கிறேன். படங்களும் மிக அழகு!

    கீதா: பல வருடங்களுக்கு முன் சென்றதன் நினைவு வருகிறது. பனி மூடிய மலைகள் அப்படி அழகாக இருக்கும். அப்போது எங்களிடம் கேமராவும் இல்லை. குழுவில் இருந்தவர்களிடம்தான் கேமரா அதுவும் டிஜிட்டல் கிடையாது..எனவே படங்களும் ப்ரின்ட் போட்டு வாங்கவில்லை. உங்கள் படங்களின் மூலம் மீண்டும் சென்று வந்தேன். ஹிமாச்சலிலேயே நிறைய இடங்கள் இருக்கு இல்லையா ஜி! உங்கள் படங்கள் செமையா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமையில் நான் சென்ற இடங்களில் படம் எடுக்க காமிரா இருந்ததில்லை. பராக்கு பார்த்து வந்து விடுவேன்! மனதில் மட்டுமே படம் பிடிக்க முடிந்திருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. வால் குருவி? தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. எல்லா படங்களும் தெளிவாக அழகு அழகு முதலில் கவர்ந்தது அதுதான் மலை பகுதி வீடுகளை பார்த்த பொழுது ஒருநாள் அங்கெ போகவேண்டும் என்று தோன்றியது தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே போக வேண்டும் என்று ஆசை. முடிந்த போது சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  12. உங்களுடன்பயணித்து நானும் இப்பகுதிகளில் சஞ்சரிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....