திங்கள், 13 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – பஞ்ச துவாரகா கோவில் – காசு கொடுத்து தரிசனம்




ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 17

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஸ்ரீநாத்ஜி கோவில், நாத்துவார்
படம்: இணையத்திலிருந்து....



ஏக்லிங்க்ஜி பிரபு கோவிலிலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் அடுத்ததாக நின்ற இடம் பஞ்ச துவாரகா கோவில்களில் ஒன்றான [ராஜஸ்தானில் இருக்கும் ஒரே பஞ்சதுவாரகா கோவில், மற்ற நான்குமே குஜராத் மாநிலத்தில் இருக்கிறது] ஸ்ரீநாத்ஜி என அழைக்கப்பெறும் நாத்thdhதுவார். இந்தக் கோவிலுக்கு நானும் எனது நண்பர் குடும்பமும் ஏற்கனவே சென்றிருக்கிறோம். இந்தக் கோவிலில் தினமும் ஆறு நேரங்களில் மட்டுமே தரிசனம் – மற்ற நேரங்களில் கோவில் அடைத்து விடுவார்கள். ஏக்லிங்க்ஜி கோவிலிலேயே தரிசனம் செய்ய முடியாமல் போனது, இங்கேயும் அப்படி ஆகக் கூடாது. கோவில் மூடி இருந்தால், அடுத்தது கோவில் திறக்கும் வரை காத்திருக்க வேண்டுமே என வேக வேகமாகச் செல்லத் தயாராக இருங்கள் என்று வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே பேசிக் கொண்டிருந்தோம். 


மங்கள் தரிசனம், ஸ்ரீநாத்ஜி கோவில், நாத்துவார்

படம்: இணையத்திலிருந்து....

காலையில் 05.45/06.00 மணிக்கு முதல் தரிசனம். மங்கள தரிசனம், ஷ்ரிங்கார் தரிசனம், ராஜ் bபோக், உத்தாபன், ஆரத்தி, ஷயன் – என ஆறு காலங்களில் ஆறு வித தரிசனங்கள் – பெரும்பாலான தரிசன நேரம் ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருக்கும். அது முடிந்தவுடன் கோவிலை அடைத்து விடுவார்கள் என்பதால் திறந்திருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் எண்ணிலடங்காத பக்தர்கள் கூட்டம் இருக்கும். உள்ளே சென்று வெளியே வருவதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். சென்ற முறை சென்றபோதும் பயங்கர கூட்டத்தில் மாட்டிக் கொண்டு - ஐம்பது பேர் நிற்கக்கூடிய இடத்தில் 150 பேர் இருந்திருப்பார்கள் – மூச்சுத் திணறத் திணறத்தான் தரிசனம் கிடைத்தது.  சென்ற முறை கிடைத்த அனுபவங்கள் பற்றிய பதிவுகள் கீழே….





ஷ்ரிங்கார் தரிசனம், ஸ்ரீநாத்ஜி கோவில், நாத்துவார்

படம்: இணையத்திலிருந்து....
சென்ற முறை பயணித்த போது மங்கள தரிசனம் எனப்படும் நாளின் முதல் தரிசனம் கிடைத்தது. இந்த முறை இரண்டாம் தரிசனமான ஷ்ரிங்கார் தரிசனம். அதுவும் கோவில் மூடுவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது தான் நாங்கள் கோவில் அருகே சென்றோம். இப்போதெல்லாம் இந்த மாதிரி கோவில்களுக்கு உள்ளே, மாற்று வழியில் அழைத்துச் செல்ல நிறைய பேர் இருக்கிறார்கள். சாதாரண வழியில் சென்றால் நேரமாகும் என்பதால் குறுக்கு வழியில் அழைத்துச் சென்று விடுவார்கள். எல்லாம் காசு தான்! எனக்கு இப்படி காசு கொடுத்து இறை தரிசனம் பிடிப்பதில்லை என்றாலும் குழுவினருடன் செல்லும்போது சில கொள்கைகளை விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லை எனில் பயணம் ருசிக்காது. கோவில் வாயிலை அடைந்தபோது இருந்த கும்பல் பார்த்தால், நேர் வழியில் சென்றால் தரிசனம் கிடைக்க, சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும்.


சுதர்சன ரூபம், ஸ்ரீநாத்ஜி கோவில், நாத்துவார்

படம்: இணையத்திலிருந்து....

சரியான நேரத்தில் ஒரு ஆசாமி வந்தார் – ஆளுக்கு இரு நூறு ரூபாய் கொடுத்தால் கோவிலுக்குள் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைப்பதாகச் சொல்ல, கொஞ்சம் பேசியதில் – ஷ்ரிங்கார ரூபத்தில் கிருஷ்ணனை தரிசனக்க பேரம் பேசியதில் - கொஞ்சம் குறைத்துக் கொண்டார்! கோவிலுக்கு அருகே எங்களை நிறுத்தி வைத்து, கோவில் உள்ளே யாரிடமோ பேசி வரச் சென்றார். கோவிலின் பக்கவாட்டில் ஒரு இடத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும், பால், தயிர், வெண்ணை, காய்கறிகள், பொருட்கள் என அனைத்தையும் வாங்கிக் கொண்டு ரசீது தருவார்கள். இந்தக் கோவிலிலுக்கு வரும் பக்தர்கள் தினம் தினம் கொண்டு வரும்/வாங்கித் தரும் காய்கறிகளுக்கும், பாலுக்கும் அளவே இல்லை.


ஸ்ரீநாத்ஜி, ஸ்ரீநாத்ஜி கோவில், நாத்துவார்

படம்: இணையத்திலிருந்து....

பொருட்கள் அந்த இடத்தில் குவித்து வைத்திருப்பார்கள். காய்கறி பால் என அனைத்துமே அன்றைக்கு அன்றே பயன்படுத்தப்படும். எல்லா பொருட்களும் வைத்து அன்றைய சமையல் நடக்கும் – இறைவனுக்குப் படைத்த பிறகு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்குமே அன்னதானம் உண்டு. கழிவுகள் கோவிலுக்குச் சொந்தமான Gகோஷாலாவின் மாடுகளுக்குச் சென்று விடும். நாங்கள் நின்றிருந்த இடத்தில், நிறைய பூக்களும், காய்கறிகளும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். எங்கள் குழுவினர் அனைவருக்குமாக ஒரு பெரிய தட்டில் பூக்கள் – விதம் விதமான பூக்களையும் பூஜை பொருட்களையும் காசு கொடுத்து வாங்கிக் கொண்டோம். நாங்கள் காத்திருந்த இடம் வரை ஓட்டமாக ஓடி வந்திருந்தோம் – கோவில் மூடி விடுமே என. அப்படி காத்திருந்ததில் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது.

சில நிமிடங்களில் அந்த மனிதர் உள்ளிருந்து கையசைக்க, நாங்கள் முன்னேற, இல்லை வராதே – கொஞ்சம் காத்திருங்கள் என்று மீண்டும் கையசைத்து உள்ளே சென்றார். சில நிமிடங்களில் மீண்டும் வந்து அவர் கையசைக்க, கையசைப்பைத் தொடர்ந்து ஓடினோம். இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் – கோவிலுக்குள் கேமரா, அலைபேசி என எதுவும் அனுமதிப்பதில்லை – நாங்கள் அனைவருமே எங்கள் வாகனத்திலேயே வைத்து விட்டோம். என்னிடம் மட்டும் அலைபேசி இருந்தது – உள்ளே அலைபேசியுடன் சென்றால் பிடுங்கிக் கொள்வார்கள் என அந்த மனிதர், அலைபேசியை Switch Off செய்து தன்னிடம் வைத்துக் கொண்டார். அவர் எங்கே ஓடுகிறார் எனப் பார்த்து பின்னாலேயே குழுவினர் அனைவரும் ஓடினோம். ஓடினோம், ஓடினோம் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினோம் என்பது போல ஒரு ஓட்டம்.

ஓடிய ஓட்டத்தில் எங்கே எப்படி ஓடினோம் என கேட்டால் நிச்சயம் தெரியாது – ஆனால் 100 மீட்டர் ரேஸ் மாதிரி ஓட்டம் – குழுவினர் அனைவரும் ஓடியதை நினைத்தால் இப்போதும் சிரித்துக் கொள்வோம். ஒரு வழியாக ஓட்டம் ஸ்ரீநாத்ஜி முன்னர் நின்றது. பெண்களுக்கான இடத்தில் பெண்களும், ஆண்களுக்கான இடத்தில் ஆண்களும் சென்று நிம்மதியாக நின்று தரிசனம் செய்து கொண்டோம். கும்பல் இருந்தாலும், கொஞ்சம் நின்று நிதானமாக தரிசனம் செய்து வைத்தார் எங்களை அழைத்துச் சென்றவர். ஸ்ரீநாத்ஜியிடம் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் என வேண்டிக்கொண்டு கோவிலின் உள்ளேயே படிக்கட்டுகள் வழியே மேலே ஏறிச் சென்று கோபுரத்தினையும், மேலே இருக்கும் சுதர்சனரையும் தரிசனம் செய்து கொண்டோம்.

கோவில் உள்ளே தரிசனம் முடிந்த பிறகு அங்கேயே கிடைக்கும் லட்டு பிரசாதமும் ஒரு பூஜாரியிடமிருந்து வாங்கிக் கொண்டோம். நல்ல பெரிய லட்டு என்றாலும் அதற்குக் கொடுத்த காசு அதிகம்! என்னைக் கேட்டால் நானே வாங்கித் தந்திருப்பேனே என எங்களை அழைத்துச் சென்றவர் புலம்பினார். அவரைப் பின்தொடர்ந்து சென்றால் வெளியே போகலாம். அவர் எங்கே கூட்டத்தில் காணாமல் போய்விடுவாரோ என மனதில் பதைபதைப்பு. 12000 ரூபாய் அலைபேசி அவரிடம் இருக்கிறதே! அவருக்குக் கொடுக்க வேண்டிய பணம் தரவில்லை என்றாலும், அதை விட இது நிறையவாயிற்றே! சில நொடிகள் அவர் கண் பார்வையிலிருந்து தப்பினாலும் ரத்த அழுத்தம் எகிறியது. குழுவினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு, அவரைத் தொடர்ந்து வெளியே வந்து சேர்ந்தோம்.

அவரிடம் அலைபேசியை வாங்கிக் கொண்ட பிறகு தான் எனக்கு மூச்சு வந்தது! இப்படி ஓட்டமும், நடையுமாக, அலைபேசி போய்விடுமோ என்ற பயத்துடனும் ஒரு வழியாக ஸ்ரீநாத்ஜியின் திவ்யமான தரிசனம் கிடைக்கப் பெற்றோம். பாவம் எங்கள் குழுவிலிருந்த ஒருவர் – ஆஸ்துமா தொல்லை உள்ளவர் – அவர் தான் ஓடிய ஓட்டத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டார். ஆனாலும் மனோ தைர்யத்துடன் – ஒண்ணும் இல்ல, நான் சரியா இருக்கேன் – என்று எங்களிடம் சொன்னபடியே ஓடினார். தரிசனம் கிடைத்த பிறகு வெளியே வந்து காலணிகளை விட்ட இடத்திலிருந்து வாங்கிக் கொண்டு, எங்களை வழி நடத்தி – rather – ஓட வைத்தவருக்கும் பேசியபடி காசு கொடுத்து தரிசனம் பற்றிய விஷயங்களைப் பேசியபடியே வெளியே வந்தோம். கோவில் தரிசனத்திற்குப் பிறகு என்ன செய்தோம், அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

28 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். மிகவும் சுவாரஸ்யமான அனுபவங்கள். செய்வது தப்பு என்கிற சிறு குற்ற உணர்வுடனேயே அவர் பின்னால் ஓடும் அவஸ்தை.. எல்லோரும் சேர்ந்து வரவேண்டுமே என்கிற கவலை... நம்முடைய விலை உயர்ந்த பொருள் ஒன்று அவரிடம் மாட்டிக்கொண்டிருக்கிறதே.. என்கிற கவலை... நிஜமாக பின்னால் நினைத்துப் பார்க்கும்போது பெரிய புன்னகையை வரவழைக்கும் அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் ஸ்ரீராம். சில அனுபவங்கள் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பை வரவழைக்க வல்லவை..... ஓடிய பெண்மணியை இப்போதும் கலாய்ப்பதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அவசரம் அவசரமான தரிசனம். இந்தக் கோயில் நான் போனதில்லை. மாமா இரண்டு மூணு தரம் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) போயிட்டு வந்திருக்கார். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - கொஞ்சம் ஓட்டம் ஓடித்தான் தரிசனம். என்றாலும் நல்ல தரிசனம்.

      ஆஹா மாமா மட்டும் இரண்டு மூணு தரம் பார்த்துட்டாரா.... :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. அலைபேசி மனதில் அலைய தரிசனம் செய்து இருக்கின்றீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. நல்ல தரிசனம் தான்...நினைவில் நீங்காது இருக்கச் செய்து விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஹாஹா... சில அனுபவங்கள் இப்படியும் தேவைதானே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக இல்லாமல் சுற்றுலாத் தலங்களாகி வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  8. பரவாயில்லை, அலைபேசி கிடைத்ததே. நாங்கள் காசிக்குச் சென்றபோது கோயிலில் பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினர் என்னுடைய ரூ.500 மதிப்புள்ள பேனாவை வாங்கிவைத்துக் கொண்டனர். (பேனாவை உள்ளே எடுத்துச்செல்லக்கூடாதாம்) திரும்பி வரும்போது அங்கு இருந்தது. கேட்டேன். திரும்பத் தர மறுத்துவிட்டனர். வாதாடியும் பலனில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசி கோவில், மதுரா கோவில் போன்ற கோவில்களில் பாதுகாப்பு சோதனைகளும், கெடுபிடிகளும் ரொம்பவே அதிகம். பொருட்கள் பாதுகாப்பு அறைகள் உண்டு. அங்கே வைத்தால் பத்திரமாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  9. எங்களையும் உங்கள் பின்னால் ஓடிவர செய்து விட்டீர்களே..! எப்படியோ தரிசனம் கிடைத்ததே..!
    இதே போல எங்களுக்கு ஒரு முறை திருச்சி சமயபரத்தில் நேர்ந்தது. முதலில் எங்களிடம் ரூ150/- என்று சொன்னவர், தரிசனம் முடிந்ததும் தலைக்கு நூற்றியம்பது என்று தகராறு செய்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் ஏமாற்றுபவர்கள் நிறையவே உண்டு. கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  10. அதுக்குள் பகுதி 17 ஐத் தொட்டு விட்டதோ.. நல்ல தகவல்கள்.. இந்தியாச் சுற்றுலா போக நினைச்சால்.. உங்கட புளொக்கைத்தூக்கிக் கொண்டு போகோணும்:))[கள்ளமாத்தான்:)]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானி அதிரா.

      நீக்கு
  11. //ஒரு வழியாக ஸ்ரீநாத்ஜியின் திவ்யமான தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.//

    எவ்வளவு மன உளைச்சல்! பயணத்தில் அனுபம் பலவிதம்.
    நீங்கள் உங்கள் அலைபேசியை வண்டியில் வைக்க மறந்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்கவில்லை. திரும்பும்போது ஓட்டுனர் ஜோதியை அழைக்க வேண்டுமே என எடுத்துக் கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. இந்த அலைப்பேசியால் அலைச்சல் அதிகம்தான். இதுமாதிரி தெரியாத கோவில் இடங்களுக்கு போகும்போது அலைப்பேசியை ரூமிலேயே வச்சுட்டு போறது என் அம்மா அப்பா வழக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் வாகனத்தில் வைத்துவிட்டார்கள். நான் மட்டும் ஓட்டுனரை அழைக்க வேண்டியிருக்கும் என வைத்திருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  13. வேலை காரணமாக பதிவுகளை தொடர்ந்து படிக்க முடியவில்லை...
    முந்தைய பதிவுகளை படித்து விட்டு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படியுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  14. இதைப் படிக்க விட்டுப்போய்விட்டது. இன்றைய இடுகையில் ஶ்ரீநாத்ஜி தரிசனத்துக்குப் பிறகு என்று படித்தவுடன், இல்லையே இவர் 5 நிமிடம் தாமதமாகப் போனாரே என்று செக் செய்தேன்.

    காசு கொடுத்து தரிசனம், மனசுக்கு ஒருமாதரி இருந்தாலும், இப்போல்லாம் வேறு வழியில்லாமல் போய்விடுகிறது. லட்டு படம், எவ்வளவு என்பதை எழுதலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 5 நிமிடம் தாமதமாகப் போனது ஏக்லிங்க்ஜி கோவில்! பார்த்தது நாத்துவாரில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவில்.

      சில சமயங்களில் இப்படி காசு கொடுத்து தரிசனம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது - அதுவும் குழுவினரோடு இருக்கும் சமயத்தில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....