திங்கள், 26 ஆகஸ்ட், 2019

எங்கே போகலாம் – உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப் பிரதேசம்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, கவிஞர் கண்ணதாசனின் இனிமையான வரிகளுடன் ஆரம்பிக்கலாம்.

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்…





கேரள நண்பர் பிரமோத் ஆகஸ்ட் மாதம் தனக்கு தில்லியில் ஒரு வாரப் பயிற்சி இருக்கிறது [பயணத்திற்காகவே இப்படி பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பது அவருக்கு வழக்கமாகி விட்டது! ஹாஹா] அதன் உடன் சில நாட்கள் விடுமுறை எடுத்து வருகிறேன் – வட இந்தியாவில் எங்காவது பயணம் போகலாம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். சென்ற வருடம் நவம்பரில் நானும் அவரும் சேர்ந்து பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்குப் பயணம் செய்தது தான் சற்றே நீண்ட பயணம். அதன் பிறகு பயணங்கள் இல்லை என்றே சொல்லலாம் [ஒரு நாள் பயணமாக குருக்ஷேத்திரம் சென்று வந்தது என்னைப் பொறுத்த வரை பயணம் அல்ல!] எங்கே போகலாம் என்று தொடர்ந்து எங்களுக்குள் வாட்ஸப் வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் பேசிக் கொண்டிருந்தோம்.





எங்களுக்கு சில இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற திட்டங்கள் உண்டு – அதில் உத்திராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள பூக்கள் சமவெளியும் [Valley of Flowers] ஒன்று. இந்தப் பகுதிக்குச் சென்று வரச் சரியான மாதங்கள் – ஜூலை முதல் செப்டம்பர் வரை. ஆனால் இந்த மாதங்களில் தான் உத்திராகண்ட் மாநிலத்தில் அதீத மழை இருக்கும் என்பதால் நிலச்சரிவுகள் மற்றும் மேக வெடிப்புகள் [Cloud Burst] எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் எனும் அபாயம் உண்டு. இப்போது கூட நிலச்சரிவுகள், மேக வெடிப்பு, கடும் மழை என உத்திராகண்ட் மாநிலத்தில் அதிக அளவில் சேதங்கள். கூடவே கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் வரை மலைப்பாதையில், ஆற்றங்கரை ஓரமாக நடக்க வேண்டியிருக்கும் – அதுவும் இந்த மழை நேரத்தில். கொஞ்சம் ஆபத்தான பயணம் தான். அதனால் அதைத் தவிர்த்து விடலாம் என முடிவு செய்தோம். முடிந்தால் அடுத்த வருடம் முன்னரே திட்டமிட்டுச் சென்று வரலாம் என்று எங்களை நாங்களே சமாதானம் செய்து கொண்டோம்.





சரி அப்படியென்றால் ராஜஸ்தானின் உதய்பூர்/ஜோத்பூர் சென்றுவரலாமா என்று நண்பர் கேட்க, நான் ஏற்கனவே பார்த்த இடம், வேண்டுமென்றால் ஜெய்சல்மேர் செல்லலாம் என்று சொன்னேன். அந்த இடம் அவர் ஏற்கனவே பார்த்தது. இப்படி மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டே இருந்ததில் சில நாட்கள் கழிந்தன. எங்கே செல்வது என்று ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. இப்படியே சில நாட்கள் கழிந்த பிறகு ஹிமாச்சலப் பிரதேசத்தின் சில இடங்களுக்குச் செல்லலாமா என்று கேட்டு தகவல் அனுப்பி இருந்தார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் அவர் சொன்ன இடங்கள் நானும் இது வரை சென்றிராத இடங்கள்! சரி அப்படியே ஆகட்டும் என்று சொல்லி விட்டேன். அது பற்றி மறந்தும் விட்டேன். ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்ந்தெடுத்த அந்த இடங்கள் அதிக சுற்றுலாப் பயணிகள் செல்லாத இடங்கள் – நீண்ட தூரச் சாலைப் பயணம் – அதுவும் சற்றே ஆபத்தான சாலைப் பயணங்கள் – மழைக்காலம் என்பதால் கொஞ்சம் விபரீத முடிவு என்றே சொல்ல வேண்டும்! வட இந்திய, ஹிமாச்சல நண்பர்களிடம் நாங்கள் செல்லப் போகும் இடத்தைச் சொல்ல, மழை அதிகமாக இருக்குமே என்று சொல்ல, பார்த்துக் கொள்ளலாம் என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.





ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி மதியம் திருவனந்தபுரம் தில்லி விமானப் பயணத்திற்கு முன்பதிவு செய்திருக்கிறேன் என தகவல் வந்தது. அவர் வருவதைப் பொறுத்து தில்லியிலிருந்து புறப்படுவதாகத் திட்டம். 13-ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு தலைநகர் தில்லியில் விமானம் சற்றே தாமதமாக தரையிரங்கியது! அங்கேயிருந்து மெட்ரோ வழி என் வீட்டிற்கு அவர் வந்து சேர்ந்தபோது மாலை மணி 06.00! ஏழரை மணிக்கு தில்லியின் ISBT Kashmere Gate பேருந்து நிலையத்திலிருந்து ஹிமாச்சலப் பிரதேசத்தின் ராம்பூர் என்ற இடம் வரை பேருந்து இருக்கிறது. அதைப் பிடித்தால், நாங்கள் சென்று சேர வேண்டிய சிற்றூருக்கு பாதிக்கும் மேலான தொலைவைக் கடந்து விட முடியும்! பத்து-பதினைந்து நிமிடத்தில் அவரைத் தயாராகச் சொல்லி நானும் தயார் ஆனேன். வீட்டை விட்டுப் புறப்படும் போது 06.25 மணி. தலைநகரில் நல்ல மழை. சாதாரணமாகவே இந்த நேரத்தில் தில்லியின் சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும்!




மழை வேறு சேர்ந்து கொள்ள ஒரு மணி நேரத்திற்குள் பேருந்து நிலையம் சென்று சேர்ந்து விட முடியுமா என மனதுக்குள் ஒரு சந்தேகம். ஆட்டோ ஓட்டுனர் ஒருவரைப் பிடித்து வேகமாக எங்களைக் கொண்டு சேர்க்கச் சொல்ல அவர் 150/- ரூபாய் கேட்டார். மீட்டர் போட்டுச் சென்றால் 85 முதல் 90 ரூபாய் தான் ஆகும். ஆனால் இருக்கும் குறைவான நேரத்தினைக் கருத்தில் கொண்டு அவருடன் அதிகம் பேசவில்லை. போக்குவரத்து நெரிசலும் அதிகமாகத் தான் இருந்தது. மழைவேறு விடாமல் பெய்து கொண்டிருந்தது. சாலையெங்கும் வெள்ளக்காடு.  தலைநகர் தில்லியில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தால் பல சாலைகள் வெள்ளக்காடாக மாறிவிடும். சரியான நேரத்தில் சாலையோர சாக்கடைகளை அடைப்பு எடுப்பது எங்களுக்கு வழக்கமே இல்லை. மழை பெய்து தேங்கிய பிறகு தான் முழித்துக் கொண்டு அடைப்புகளைச் சரி செய்வோம்.




பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்களையும் மழைநீர் தேக்கங்களையும் கடந்து பேருந்து நிலையம் வாயிலைச் சென்றடைந்த போது மணி 07.20! வேகவேகமாக எங்கள் முதுகுச் சுமையை மாட்டிக் கொண்டு பேருந்து நிலையத்திற்குள் நடந்தோம் – வாசலில் எங்கள் பைகளைச் சோதனை செய்த பிறகு தான் அனுமதி கிடைக்கும். தில்லியில் இரயில் நிலையம், பேருந்து நிலையம் எல்லா இடங்களிலும் பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை X-Ray Machine-களில் சோதித்த பிறகே - உள்ளே அனுமதிப்பது வழக்கம். சாதாரணமாகவே சோதனைகள் உண்டு எனும்போது இரண்டு நாட்களில் சுதந்திர தினம் என்பதால் நிறையவே சோதனைகள்! ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு எங்களுக்கான பேருந்து நிற்கும் நடைமேடைக்குச் சென்று சேர்ந்து, எங்கள் பேருந்தினை அடையாளம் கண்டு கொண்டோம்.  நாங்கள் சென்று உள்ளே அமர்வதற்கும், ஓட்டுனர் வந்து தனது இருக்கையில் அமர்வதற்கும் சரியாக இருந்தது.  




சற்றே நீண்ட பயணம் தான். இருக்கைகளைச் சாய்வாக வைத்து ஓய்வு எடுக்க வசதியாக வைத்துக் கொண்டோம்.  தலைநகரின் முதன்மை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்டது. சாலை நெரிசல்களைக் கடந்து தலைநகரின் எல்லையைக் கடப்பதற்கே ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகவே ஆகும். திருவனந்தபுரத்திலிருந்து வந்த நண்பரிடம் அப்போது தான் பேச முடிந்தது! ஓட்டத்தில் விட்டுப்போன தகவல் பரிமாற்றங்கள், சொந்த விஷயங்களைப் பேசிக் கொண்டோம்.  இன்னும் நீண்ட பயணம் பாக்கி இருக்கிறதே. பயணத்தில் கிடைத்த அனுபவங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை வரும் பகுதியில் சொல்கிறேன். இப்போதைக்குக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்!

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

  1. பயணத்துக்குப்பொருத்தமான வரிகள்.

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய மாலை வணக்கம் ஸ்ரீராம்.

      பயணத்துக்குப் பொருத்தமான வரிகள் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இடங்களின் படங்கள் மிகவும் கவர்கின்றன. ஆபத்தானப்பயணமும் கூட என்னும் வரி புருவத்தை உயர்த்தி வைத்திருக்கிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே ஆபத்தான பயணம் தான். அடுத்த பகுதிகளில் தெரியலாம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சோர்வு தெரியாத வகையில் நீங்கள் எங்களை அழைத்துச்செல்லும் விதம் சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. படங்கள் மிக அருமை வெங்கட். பயணம் நன்றாக
    அமைய வேண்டும். அப்பாடி, இத்தனை தொல்லைகளா கிளம்பும் முன்.
    ஆவலோடு தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பித்த போது தான் கொஞ்சம் கஷ்டங்கள். பிறகு இனிய பயணம் தான் வல்லிம்மா... பாதைகள் கொஞ்சம் கடினமானவை என்பதைத் தவிர வேறு பிரச்சனைகள் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பயணம் குறித்த பாடல் அருமை.
    படங்கள் அழகு.
    அழகிய வெண்மேகமும், பசுமை பள்ளத்தாகும், வளைந்து நெளிந்து செல்லும் ஆறும் பார்க்க பார்க்க பரவசம்.
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசுமை பள்ளத்தாக்கு, வளைந்து செல்லும் ஆறு என அனைத்துமே அங்கே அழகு தான் கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. படங்கள் அழகு ஜி
    பயணவிபரங்களை சுவையுடன் சொல்லப் போகின்றீர்கள் ஆவலுடன் நானும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நாங்களும் உங்கள் பயணத்தில் இணைகிறோம். இண்டெரெஸ்டிங் ஆக தொடங்கியிருக்கு. சென்ற இடங்களும் அட்டஹாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் நீங்களும் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி. மேலும் மேலும் சொல்லப் போகும் விஷயங்கள் உங்களுக்கும் பிடிக்கலாம் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. உங்க எல்லாப் பயணக் கட்டுரைகளும் (வட இந்திய) எனக்குப் பிடிக்கும். தெரியாத இடங்களல்லவா? சும்மா, இட்லி/தோசை, தயிர்சாதம், வெறும் ப்ரெட், பழங்கள் இவைதான் சாப்பிடுவேன் என்று இருந்தால் தமிழகத்துக்குள்ளேதான் சுத்த முடியும்.

      நீக்கு
    3. ஹாஹா... உணவில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தால் இந்தியாவின் பல பகுதிகளில் கொஞ்சம் கஷ்டம் தான் நெல்லைத் தமிழன். ஹிமாச்சலப் பிரதேசத்தில் கூட இப்போது சென்ற சில கிராமங்களில் திபெத்திய உணவு - துப்கா, மோமோஸ் போன்றவை தான் அதிகம். நல்ல வேளையாக ராஜ்மா சாவல், தால் சாவல் போன்றவை கிடைத்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. முதல் படம் கிராப் செய்யப்பட்டது போல் உள்ளது. பத்தாவது படம் அருமை. பத்தில் சாலை என்றால் 11 முதல் ஆறு. எப்படித்தான் ஒரே போல தீம் எடுத்து சாலையையும் ஓடையையும் ஒன்றாக உருவகப் படுத்துனீர்களோ?

    frame செட்டப்பில் முன்னேறிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. சாகச பயணம் அறிய ஆவலுடன்...

    படங்கள் : இப்பவே கண்ணை கட்டுதே - ஜி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணைக் கட்டும் படங்கள்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. மீண்டும் ஒரு பயணம்... வாசிக்க , பார்க்க , தெரிந்துக் கொள்ள ஆவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி!

      நீக்கு
  11. அழகான படங்கள் மேலும் சிறப்பான வர்ணனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  12. ஆபத்து என்றால் அழகும் சேர்ந்து விடுகிறதே;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபத்தும் அழகும் இரட்டைப் பிறவிகள் போலும்! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....