சனி, 24 அக்டோபர், 2020

காஃபி வித் கிட்டு – கள(ன)வு - கடுப்பேற்றும் விளம்பரம் - கறை - பீஹார் டைரி



காஃபி வித் கிட்டு – 89

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


பிழைச்சா வைரம் பாய்ஞ்ச கட்டை!

பிழைக்கலைன்னா வைரஸ் பாய்ஞ்ச கட்டை! 

இவ்வளவு தான் வாழ்க்கை!

*****
இந்த வாரத்தின் எண்ணங்கள் – அதிகாலைக் கனவுகள்


இந்த வாரத்தின் வியாழன் அன்று அதிகாலை ஒரு கனவு! கனவில் ஏதோ ஒரு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். நான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் இறங்கி இரண்டு பெரிய கட்டிடங்களுக்கு நடுவே இருக்கும் குறுகிய படிக்கட்டுகள் வழியே வெளியே வருகிறேன். படிகளில் ஒரே இருட்டு! நடுநடுவே சிறு ஜன்னல்கள்! அந்த ஜன்னல்களுக்கு அருகே சிறு வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் நான் படிகளில் இறங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு ஜன்னலிலிருந்து கை ஒன்று நீள்கிறது! ஒரு சிறுவனின்/சிறுமியின் கை! கையை ஆட்டி ஏதாவது கொடுங்கள் என்று யாசகம் கேட்பது தெரிகிறது! ஆனால் உள்ளே இருப்பது யாரென்று தெரியவில்லை! 

சரி பர்சிலிருந்து காசு எடுத்துக் கொடுக்கலாம் என பர்சை எடுக்க, வெளியே நீட்டியிருந்த கை, டபக்கென்று என் பர்சை பிடுங்கிக் கொண்டு உள்ளே எடுக்கப்பட, குனிந்து ஜன்னல் வழி பார்த்தால் யாரும் இல்லை! அட என்னடா இது! நல்லதுக்குக் காலமில்லை போலவே என நினைத்துக் கொண்டே, குரல் கொடுக்கிறேன்! என் பர்சை திருப்பித் தரும்படிக் கேட்கிறேன் - உள்ளே ஆளரவமே இல்லை! கைகளை உள்ளே விட்டுத் துழாவி, யாராவது இருக்கீங்களா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேன்! எனது கைகளை யாரோ பிடிப்பது போல இருக்க, குனிந்து பார்ப்பதற்குள் கைவிரலில் இருந்த மோதிரத்தினை யாரோ உருவிக் கொண்டு விட்டார்கள்! 

என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க, பெரிய தொந்தியுடனும், முரட்டு மீசையுடனும், கையில் இருந்த லாட்டியைத் தட்டிக் கொண்டே ஒரு காவலர் படிகள் வழியே இறங்கி வந்து, என்னவென்று என்னிடம் கேட்கிறார்! நடந்ததைச் சொல்ல, இந்த மாதிரி இந்தப் படிக்கட்டுகளில் அடிக்கடி நடக்கிறது! இன்னும் நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருந்தால் இன்னும் என்னென்ன இருக்கிறதோ அத்தனையும் களவு போகும்! பத்து படி இறங்கி பாருங்க, உங்க பர்ஸ் கிடைக்கும் - பணத்தினை மட்டும் எடுத்துக் கொண்டு உங்கள் மற்ற ஆவணங்கள் அதிலே விட்டுவிடுவார்கள்! சீக்கிரமா அதை எடுத்துக் கொண்டு விடுங்கள்! இல்லை எனில் அதுவும் கிடைக்காது என்று சொல்லியபடியே தலையைச் சொரிகிறார்! 

வேகமாக கீழே இறங்கிக் கொண்டிருக்கிறேன்! சட்டெனக் கனவு கலைந்தது! மணி பார்த்தால் காலை 04.45! அட இப்படி ஒரு கனவு! கனவுகள் - பல சமயங்களில் அர்த்தமற்றவையாகவே இருக்கிறது அல்லவா! 

கடுப்பேற்றிய விளம்பரம் எது?



இது தான். சரி வாங்க கதைக்கு போகலாம்! ஒரு லாரி ஒரு பள்ளத்தில் மாட்டி இருக்கிறது. அதை மீட்டெடுக்க பலபேர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் எவராலும் இயலவில்லை. ஒரு பெண் இதைப் பார்க்கிறார். பின்பு உதவி செய்ய வருகிறார். தன் கூந்தலினால் லாரியின் நுனியை கட்டுகிறாள். இது தான் கிளைமாக்ஸ், அவ்வளவு பேர் கஷ்ட பட்டு இழுத்தும் முன்வராத லாரி இவள் ஒரே கையால் இழுத்தவுடன் வந்து விடுகிறது. லாரியும் பள்ளத்தில் இருந்து தரைமேல் வந்துவிட்டது. இதுக்கு ஆடியன்ஸ் ல இருந்து ரியாக்சன் என்ற பெயரில் ஓவர் ஆக்ஷன் வேறு. இழுத்த பின்பு என் கூந்தலுக்கு காரணம் இந்த கர்மம் புடிச்ச ஷாம்பு தான் என்று வசனம் வேறு! 

அவன் அவன் இருக்கிற முடியை தக்க விச்சிக்க படாத பாடு படுகிறோன் இவர்களாவது விளம்பரம் என்ற பெயரில் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? உண்மையில் இது நடக்காது என்று நடிக்கும் அவர்களுக்கும் தெரியும் பார்க்கும் நமக்கும் தெரியும் ஆனாலும் ஏன் இந்த பில்டப்! பெரும்பாலான விளம்பர கம்பெனிகள் இவ்வாறு தான் நம்மை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள்!

இந்தக் கேள்வியும் பதிலும் தமிழ் கோராவில் படித்தது! உங்களுக்கு பிடிக்காத விளம்பரம் எது என்று கேட்டால் உங்கள் பதில் என்ன? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

இதே நாளில்…:

எனது வலைப்பூவில் இதே நாளில் 2012-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – கறை நல்லது! அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.

எந்த தொந்தரவும் இல்லாது புத்தகங்கள் படிக்க நினைத்திருந்த எனக்கு விதி வங்காளி – அவரது பெயரை சௌகரியத்துக்காக சக்ரபோர்த்தி [Chakraborty] என வைத்துக் கொள்ளலாமா? – ரூபத்தில் வந்து சிரித்தது எனக்கு அப்போது தெரியவில்லை.

தில்லியில் ஆரம்பித்தது அவர் தொல்லை. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு லேட்டா வந்த கணவனிடம் வாசலிலேயே நிறுத்தி வைத்து கேள்விகளால் துளைக்கும் மனைவி மாதிரி, கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டே வந்தார். ’வண்டி எப்ப சென்னை போய் சேரும்?, சென்னையிலிருந்து கட்படி [காட்பாடி-யைத் தான் இப்படிச் சொல்கிறார் என்பது புரிய இந்த மரமண்டைக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது தனிக் கதை!] போக என்ன வண்டி கிடைக்கும், ராத்திரி முழுக்க இருக்கும் வண்டிகள் என்னென்ன?, உங்க ஊர் ஏன் இப்படி குப்பையா இருக்கு? [என்னவோ அவர்களுடைய கொல்கத்தா ரொம்ப சுத்தம் மாதிரி!], இந்த ரயில்வே டைம்டேபிள்-ல வண்டி போகும் விவரங்கள் எப்படிப் பார்க்கிறது? என பல கேள்விகள்.

நானும் பொறுமையா அவரது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன். என்னிடம் கேள்வி கேட்ட நேரம் போக, மீதி நேரமெல்லாம், அவரது அலைபேசியில், எல்லா வங்காளிகளின் வழமை போல, சக்ரபோர்த்தியும் சத்தமாக வங்காள மொழியில் பேசியபடி வந்தார். சிலச் சில வார்த்தைகள் புரிவதால் அவரது மனைவியிடம் திட்டு வாங்கி சமாளிக்கிறார் என்பது மட்டும் புரிந்தது!
முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே.


இந்த வாரத்தின் இலவச மின்னூல் தகவல் – Bihar Diary:




இந்திய நேரப்படி, வரும் புதன் கிழமை மதியம் 12.29 வரை எனது “Bihar Diary” மின்னூல் அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை முன்னரே ஒரு முறை தந்திருக்கிறேன் – இது இரண்டாம் முறை! விருப்பம் இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மின்னூலை படிப்பவர்கள் நூல் பற்றிய உங்கள் கருத்துகளையும் மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தால் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்வேன்! தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை...

நட்புடன்


வெங்கட் நாகராஜ்
புது தில்லி 

14 கருத்துகள்:

  1. வாசகம் வாட்ஸாப் பாணி.  விளம்பரங்களே தொல்லைதான்!  அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - :)

      விளம்பரங்கள் - பெரும்பாலான சமயங்களில் தொல்லையே!

      பதிவின் பகுதிகளை ரசித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கனவில் வந்த காவலர் தந்த ஆலோசனை அருமை:). பீஹார் டைரி வெளியீட்டுக்கு வாழ்த்துகள்! நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவலர் தந்த ஆலோசனை - :)

      பீஹார் டைரி - முன்னரே வெளியிட்ட நூல் தான். இப்போது மீண்டும் ஒரு முறை இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதி மட்டுமே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  3. வைரம்-வைரஸ் ஹா.. ஹா.. ஸூப்பர்
    விளம்பரம் பலவும் நம்மை முட்டாளாக்குகின்றனர் ஜி.

    கனவில் கண்டது நிகழாவண்ணம் கவனம் தேவை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைரம் - வைரஸ் - :)))

      விளம்பரம் - முட்டாளாக நம்மில் பலரும் தயாராகவே இருப்பதும் வேதனை தான் கில்லர்ஜி.

      கனவில் கண்டது நிகழா வண்ணம் இருந்தால் போதும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கனவு எச்சரிக்கை தருகிறதோ...?
    ஏமாற்ற தானே (சில) விளம்பரம்...!
    மின்னூலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எச்சரிக்கை தருகிறதோ - இருக்கலாம்!

      சில விளம்பரங்கள் ஏமாற்றவே!

      மின்னூல் - நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. நிறைய விளம்பரங்கள் பிடிக்காது தான்! ஆனால் பார்த்தாக வேண்டி இருக்கு! என்ன செய்வது? கனவு பயங்கரமா இருக்கு. உங்களுக்கு அது நினைவிலும் வந்திருக்கு! எனக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் காஃபி போடுகிற கனவு தான் வரும். எழுந்துப்பேன். அப்புறமாத்தான் உள்ளுணர்வு எழுப்பி விடுதுனு அது கனவில்லைனு புரியும்! ஒரு தரமாவது என்ன கனவு கண்டு நான் கத்தறேன்னு கண்டு பிடிக்கணும்! ம்ஹூம்! முடியலை. கத்திட்டுத் தொடர்ந்து தூங்கிடறேன் என்கிறார்! :)))) அவரைத் தான் எழுப்பி விட்டுடறேன்! அதுக்குத் தான் கனவு வருதோ> :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விளம்பரங்கள் இப்படி இருக்க, நிறைய விளம்பரங்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன.

      அவரை எழுப்ப வரும் கனவு! - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. அணைவருக்கும் வணக்கம்.

    வாசகம் வாட்ஸ்ஸாப் தத்துவம் போல் இருந்தாலும் அணைவரும் ஜாக்கிரதையா இருக்கனும் என்பதை சுருக்கமா சொல்லுது.
    உங்க கணவு போல ஒருத்தன் என் ஃபோனை திருடிக்கொண்டு, எனக்கு கண் தெரியாது என்பதை உணர்ந்து குறல் கொடுத்துக்கொண்டே ஓடும் கணவை ஆறு வருடங்கள் முன், ஐஃபோன் வாங்கியவுடன் விடிகாலையில் கண்டேன்.
    விழித்தபின் யோசிக்க யோசிக்க செம காமடி தான் என்றாலும் அது என் ஆழ் மன பயத்தின் வெளிப்பாடு தான் என உணர்ந்தேன்.
    ரியா சக்ரபோர்டி வந்து கொக்கோகோலாவை சட்டையில் கொட்டியிருந்தா ஒருவேளை, அவர் தொந்தரவுகளை பொருட்படுத்தியிருக்க மாட்டீர்களா சார்?

    பீஹார் டைரி படித்த ஞாபகம் வருகிறது.
    வங்காளிகள், பீஹாரிகள் இருவரும் பயங்கற சௌண்டு பார்ட்டிகள்.
    என் அலுவலகத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் ஒரு பெண் இருந்தாள்.
    யாரையும் கண்டு பயப்பட மாட்டாள், அவள் வேலையில் குறை கூறினால் கொதித்தெழுந்துவிடுவாள்.
    தங்கள் நூலில் இருந்த சம்பவங்களைச் சொல்லி அது உண்மையா என கேட்டிருக்கிறேன்.
    நீங்கள் குறிப்பிட்ட பீஹார் உணவு வகைகளைச் செய்து தர சொல்லி தொந்தறவு செய்தேன், ஆனால் தப்பித்துவிட்டாள்.
    நல்ல பயனுள்ள பயனப் புத்தகம்.
    அவள்தான் அவள் மானிலம் குறித்து புட்டுப்புட்டு வைத்த தங்களைத் தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறாள்.
    விரைவில் சந்திக்க வைக்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த்.

      ஆழ்மன வெளிப்பாடு - கனவுகள் இப்படியும் வரலாம்!

      ரியா சக்ரபோர்த்தி வந்து கொக்கோகோலா கொட்ட வேண்டுமா! ஹாஹா....

      பீஹார் டைரி - நூல் பற்றிய தங்கள் கருத்துகளுக்கு நன்றி. உங்கள் அலுவலக சக ஊழியரை சந்திக்க வைக்கப்போகிறீர்களா! ஹாஹா. முதலில் நாம் சந்திப்போம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. ஒன்றுக்கொன்று பொருத்தமான வரிகளை ரசித்தேன்.

    கனவுகள் இப்படித்தான் சம்பந்தமில்லாமல் வந்து தொந்தரவு தருகிறது. ஆனால் படிக்க கதை மாதிரி உள்ளது.

    அந்த கடுப்பேற்றிய விளம்பரம் நானும் அடிக்கடி பார்த்துள்ளேன். சில விளம்பரங்கள் பார்த்துக் கொண்டேயிருந்ததால் சில சமயம் சலிப்பூட்டுகிறது.

    "கறை நல்லது" பதிவுக்கு சென்று ரசித்து கருத்துரை தந்துள்ளேன்.

    மின்னூல் தகவலுக்கு வாழ்த்துக்கள். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      கனவுகள் - சில சமயங்களில் சம்பந்தம் இல்லாமல் வரத்தான் செய்கிறது.

      விளம்பரம் - கொடுமை! எத்தனையோ நல்ல விளம்பரங்களுக்கு இடையே இப்படியும் சில!

      கறை நல்லது பதிவுக்குச் சென்று உங்கள் கருத்துகளை பகிர்ந்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....