வியாழன், 17 ஜூன், 2021

அம்பா பெரியம்மா - நன்னாரியும் மாகாளியும் - நல்வழி - நீதி வெண்பா - ஔவை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


விலை மதிப்பற்ற செல்வம் அறிவு; பலமான ஆயுதம் பொறுமை; மிகச் சிறந்த பாதுகாப்பு உண்மை; அற்புதமான மருந்து சிரிப்பு.


******



நண்பர்களே, அம்பா பெரியம்மா குறித்து அவ்வப்போது எழுதுவது நீங்கள் அறிந்ததே.  அவ்வப்போது ஏதாவது அவரது நினைவிலிருந்து சொல்வது அவர் வழக்கம்.  அட்ட வீரட்டத் தலங்களுக்கான ஒரே பாடலை ஒரு காஃபி வித் கிட்டு பதிவில் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  இப்படி ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விஷயத்தினைச் சொல்லிக் கொண்டிருப்பார்.  அந்த நேரத்தில் முடிந்த வரை உடனேயே அதை பதிவு செய்து கொண்டிருக்கிறேன் - ஒலியாக இல்லாவிட்டாலும் குறிப்பாகவேனும்!  அப்படி பதிவு செய்திருக்கும் சில விஷயங்கள் இந்தப் பதிவில் ஒரு தொகுப்பாக! பதிவுக்குச் செல்வதற்கு முன்னர் இன்னும் ஒரு விஷயம் - பெரியம்மா எட்டாவது வரை தான் படித்தார் - 14 வயதிலேயே அதற்கு மேல் பெண்கள் படிக்கக் கூடாது என்று அவரது அப்பா பள்ளி செல்வதற்கு தடா போட்டு விட்டாராம்! (1956-ஆம் வருடம்) நான் பார்க்காத அந்தத் தாத்தா மீது இப்போது கோபம் வருகிறது! என் அம்மாவையும் அப்படியே படிக்க விட வில்லை.


நன்னாரியும் மாகாளியும்:





‘மலையில விளைஞ்சா மாகாளி, நாட்டுல விளைஞ்சா நன்னாரி’ என்ற பழமொழியை பெரியம்மா பேச்சு வாக்கில் கூறினார்.  மாகாளிக் கிழங்கு (அதன் ஊறுகாய் சாப்பிடவென்றே சிலர் தவமிருப்பதுண்டு! திருச்சியிலிருந்து தில்லிக்கு எடுத்துச் சென்று கொடுத்திருக்கிறேன்!) குறித்து நீங்களும் அறிந்திருக்கலாம்!  அதைப் போலவே நன்னாரி சர்பத் இன்றைக்கும் தமிழகத்தில் பல இடங்களில் விற்பனை செய்யப் படுகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் இதை விரும்புவது இல்லை என்றாலும், நான் அவ்வப்போது சுவைப்பதுண்டு! இந்த இரண்டுமே ஒரே குணம் கொண்டவை என்று பெரியம்மா சொன்னதோடு நம்மூரில் நன்னாரி சர்பத் எப்படி பெட்டிக் கடைகளில் விற்கப்படுகிறதோ அதுபோலவே ஆந்திராவில் மாகாளி கிழங்கு சர்பத் விற்கப்படுகிறது என்ற தகவலையும் சொன்னார்! மாகாளிக் கிழங்கு சர்பத் இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை - நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?


வருவாயும் செலவும் - ஔவையின் பாடல்:


ஆன முதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் _ போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.


ஔவையார் எழுதிய நல்வழி என்ற நாற்பது பாடல்களில் இருபத்தி ஐந்தாவது பாடல் மேலே பகிர்ந்து இருக்கும் பாடல்.  இந்தப் பாடலை அவர் படித்த போது மனப்பாடமாக இருந்தது என்று சொல்லி, இப்போதும் அதை நினைவோடு சொல்ல, அதனை அவர் குரலிலேயே சேமித்துக் கொண்டேன்.  கூடவே பொருளையும் சொன்னார். அது - 


ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்க நேரிடுவதோடு, தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டியிருக்கும்! அவன் போகும் திசை எல்லாம் அவனை எல்லோரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேசுவதையே தவிர்ப்பார்கள். ஏழு பிறப்புக்கும் தீயவனாக, நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். அதனால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக் கூடாது என்பதையே இந்தப் பாடல் சொல்கிறது. நேரிசை வெண்பாவில் அமைந்த இந்தப் பாடல் எவ்வளவு சிறப்பான கருத்தைச் சொல்கிறது!  அதுவும் Credit Card மோகம் கொண்டு அலையும் இந்தக் காலத்திற்குப் பொருத்தமான பாடல் தான் இல்லையா? 


விஷம் - நீதி வெண்பா:


ஈக்கு விடந்தலையி லெய்தும்: இருந் தேளுக்கு 

வாய்த்த விடங்கொடுக்கில் வாழுமே; - நோக்கரிய 

பைங்கணரவுக்குவிடம் பல்லளவே; துர்ச்சனருக்

கங்கமுழு தும்விடமே யாம். 


எது எதற்கு எங்கே விஷம் என்பதைச் சொல்லும் நீதி வெண்பா இந்தப் பாடல்.  இதுவும் பெரியம்மாவிற்கு மனப்பாடப் பகுதியில் ஒன்றாக இருந்தது என்று சொல்லி அதன் விளக்கம் சொன்னார்.  இந்தப் பாடலையும் அவர் குரலில் பதிவு செய்து வைத்தேன். தள்ளாமை, வயது காரணமாக அவர் குரலில் சில தடுமாற்றங்கள் உண்டு என்றாலும் புரிந்து கொள்ள முடியும்! மேலே சொன்ன பாடலின் பொருளையும் கீழே தந்திருக்கிறேன். 


பொருள்:  ஈக்கு விஷம் தலையிலிருக்கும்; பெரிய தேளுக்குப் பொருந்திய விஷம் அதன் கொடுக்கில் இருக்கும்; பார்த்தற்கும் அரிய பசுமையான கண்களையுடைய பாம்பிற்கு விஷம் அதன் பல்களிலிருக்கும்; துஷ்டர்களுக்கு உடம்பு முழுவதும் விஷம் தான் இருக்கும்! 


விருந்து - ஔவையார் பாடல்:


அம்மா/பெரியம்மாவின் அத்தை ஒருவர் இருந்தார் - ருக்கு அத்தை - அவர் குறித்தும் ஒரு பதிவு எழுதியதுண்டு! அந்த ருக்கு அத்தை அடிக்கடி சொல்லும் ஔவையார் பாடிய பாடல் ஒன்றையும் பெரியம்மா சொன்ன போது எனக்கு நண்பர் மதுரைத் தமிழன் நினைவுக்கு வந்தார்! ஹாஹா… பாடல் அப்படி!  வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கிறார் என்று ஒருவர் சொன்னவுடன் அந்த நபரது மனைவி செய்த செயல் அப்படி! முதலில் பாடலைப் பார்க்கலாம்! 


இருந்து முகம் திருத்தி, ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்தது என்று விளம்ப – வருந்திமிக

ஆடினாள், பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத்தான்.


ஒரு கொடுமைக்காரியை மனைவியாகப் பெற்ற ஒரு சாது, ஔவையாரை தன் வீட்டுக்கு அழைக்க, அவரின் வீட்டுக்கு ஔவையார் போனாராம். ஔவையாரை வாசல் திண்ணையில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று மனைவியின் முகத்தை நன்கு துடைத்து, பொட்டு வைத்து அலங்கரித்து, தலையில் உள்ள ஈரும் பேனும் எடுத்துவிட்டு, தலைவாரிவிட்டு, மெதுவாக ஔவைக்கு அமுது இடும்படி  கொஞ்சும் மொழியில் கெஞ்சினார். அவளோ எடுத்தாளாம் அருகிலிருந்த பழைய முறத்தை! புடைத்தாள் நைய அவனை. பேயாட்டம் ஆடினாள்; வசை மொழிகளை வாரி இரைத்தாள். அவன் வெளியே ஓடிவந்தான்; அப்பொழுதும் அந்த நீலாம்பரி முறத்தைக் கையில் ஓங்கியவாறு ஓடி வந்தாள்: ஔவையாருக்கு ஒரு புறம் சிரிப்பு; மறுபுறம் அனுதாபம். அவனுக்கோ ஒரே பதைபதைப்பு. அப்போது ஔவை பாடிய பாட்டு தான் மேலே இருப்பது! 


******


நண்பர்களே, பெரியம்மாவின் நினைவிலிருந்து சொன்னவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன். இன்னும் அவர் அனுபவங்களைச் சொல்லச் சொல்ல, இங்கே பதிவிடுகிறேன். இந்த நாளில் வெளியிட்ட, பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


30 கருத்துகள்:

  1. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் பதிவு.   நானும் கேள்விப்பட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பாடலும் விளக்கமும் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  3. கடன் குறித்த பெரியம்மா நினைவில் வைத்திருக்கும் பாடல் சிறப்பானது.
    அணைவரும் கடைபிடிக்க வேண்டியது.
    அத்யாவசியத்திற்கு கடன் வாங்கலாம், ஆடம்பரத்திற்கு கடன் வாங்குவது ஆபத்துதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடன் குறித்த பாடல் அனைவரும் கடைபிடிக்க வேண்டியது என்பது உண்மை தான் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஔவைப் பாடல்களும் விளக்கமும் அருமை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாசகம் நன்றாக உள்ளது. ஔவையாரின் பாடல்களும் அதன் விளக்கங்களும் படிக்க நன்றாக இருந்தன. தங்கள் பெரியம்மா அவர்களின் நினைவுகள் பிரமிக்க வைக்கிறது.தான் சிறுவயதில் படித்த அத்தனை பாடல்களையும் விளக்கங்களுடன் நினைவு வைத்திருப்பது சாமானியமான விஷயமில்லை.அவர்களுக்கு பாராட்டுகளுடன் என் நமஸ்காரங்களும். மேலும் அவர்களின் நினைவு பாடல்களை மற்றும் அனுபவங்களை இங்கு பகிர்கிறேன் என தாங்கள் சொன்னதற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  6. நீதி வெண்பாக்கள் எனக்கும் நினைவில் இருக்கிறது. இப்போல்லாம் அது சப்ஜெக்டிலேயே இருக்காது.

    மாகாளி ஊறுகாய் ஒரு முறை சுவைத்து அவஸ்தைப்பட்டதுண்டு. அது எல்லாருக்கும் பிடிக்காது என்று நினைக்கிறேன். நான் நன்னாரியின் விசிறி. பாண்டிச்சேரி போகும்போதெல்லாம் நன்னாரி சர்பத் எஸென்ஸ் நிறைய பாட்டில்கள் வாங்கிவருவேன். மாகாளி சர்பத் கேள்விப்பட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீதி வெண்பா - தற்போது பாடத்தில் இருக்கிறதா எனத் தெரியவில்லை நெல்லைத் தமிழன்.

      மாகாளி ஊறுகாய் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. எங்கள் வீட்டில் கூட அப்பா மற்றும் சகோதரி ஆகியோர் மட்டுமே சுவைப்பார்கள். அதன் வாசனையே மற்றவர்களுக்குப் பிடிக்காது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மாகாளி ஊறுகாய் முன்பெல்லாம் நாரோயிலில் கிடைக்காது நான் சுவைத்தது இல்லை ஆனால் சென்னைக்கு அத்தை வீட்டிற்கு வந்தப்ப சுவைத்திருக்கிறேன் என் மாமியாரும் போடுவாங்க . எனக்கும் பிடித்தது எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்தது. மாகாளியும் நன்னாரியும் மணம் கொஞ்சம் ஒரு போலத் தோன்றும் ஆனால் இரண்டும் வேறு வேறு ஆனால் இரண்டையும் குழப்பிக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் வருவதுண்டு. அந்த தண்டுகள்..மணம்

    எனக்கு நன்னாரி மிகவும் பிடிக்கும் மாகாளி சர்பத்தும் சுவைத்திருக்கிறேன். மகனின் ஆந்திர நண்பர் எங்களுடன் இருந்த போது அப்புறம் குண்டூர் வட்லமுடியில். அதுவும் பிடித்திருந்தது.

    தமிழ்ல மாகாளியை பெருநன்னாரி ந்னும் சொல்லுவாங்க. தெலுங்கில் மரிடு கொம்லுமு, நன்னாரி கொம்முலு, மதின கொம்முலு (என் உச்சரிப்பு சரியா என்று தெரியலை. பெரியம்மா கிட்ட கேளுங்க!)

    கன்னடத்தில் வகாணி பெரு/மாகாளி பெரு ந்னு சொல்றாங்க.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாகாளி - உங்களுக்குப் பிடிக்கும் - சரி சரி! :) பலருக்குப் பிடிப்பதில்லை - அதன் சுவையை விடுங்கள், வாசனையே சிலருக்கு ஆகாது! ஹாஹா.

      நன்னாரி சர்பத் - நேற்று கூட வீட்டில் மகள் கலந்து கொடுத்தாள். சுவைத்தேன்.

      நன்னாரி/மாகாளி குறித்த மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பெரியம்மாவுக்கு இப்பவும் நினைவிருப்பது வாவ்!!!

    அவங்க அப்பா இருவரையும் படிக்க வைக்காதது வேதனைதான்.

    முதல் இரு பாடல்களும் படித்து மனனம் செய்தது என்பதால் நினைவிருக்கிறது.

    மூன்றாவது பாடல் இப்போதுதான் அறிகிறேன்.

    மிகவும் ரசித்தேன் ஜி. பெரியம்மாவின் குரலை பதிவு செய்ததை இங்கு பகிர்ந்திர்ந்திருக்காலாமே ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய விஷயங்கள் நினைவில் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் மறந்து போனாலும் நினைவில் கொண்டு வந்து சொல்வார்கள். இன்றைக்குக் கூட ஏதோ பழைய விஷயங்களை - அவருக்கு 10 வயது இருக்கும்போது நடந்த விஷயங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தார்.

      பெரியம்மாவின் குரல் - விரைவில் பதிவு செய்கிறேன் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதிவில் அனைத்தும் அருமை.
    அந்தக்காலத்தில் குறைவாக படித்தாலும் படிப்பின் அருமை தெரிந்து படித்தவர்கள். நினைவாற்றல் அதிகம்.
    எல்லாவற்றுக்கும் பாடலை மேற்கோள் காட்டித்தான் பேசுவார்கள், பழமொழிகள் அடிக்கடி கேட்கலாம், அவை வாழ்க்கைக்கு தேவையான பழமொழிகள்.

    ஔவையார் (வாசன் எடுத்த படம்) படத்தில் இந்த பாடலுக்கு சுந்தராம்பாள் அவர்கள் பாட்டு பாடுவார்கள் அது மிகவும் நன்றாக இருக்கும் "பொருமை எனும் நகை அணிந்து என்ற பாடல்."

    கணவரை அடிக்கும் மனைவியாக சுந்தரிப்பாய் நடித்து இருப்பார் மிக அருமையாக.
    கணவர் சிவதாணு என்ற நடிகர் அவரும் தன் மனைவிக்கு தலை சீவிவிட்டு பேன் பார்த்து என்று குழைவாக பேசுவார்.
    பெரியம்மாவின் குரலையும் பதிவு செய்யுங்கள் ஒரு முறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஔவையார் படம் பார்த்த நினைவு. ஆனால் மேலே நீங்கள் சொல்லி இருக்கும் காட்சிகள் நினைவில்லை கோமதிம்மா.

      பெரியம்மாவின் குரலை அலைபேசியில் பதிவு செய்திருக்கிறேன் மா. முடிந்த போது வேறொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவ்வையார் பாடல்கள் அந்தக் கால பெரியவர்கள் பலருக்கு மனப்பாடம். ஆன முதலில் அதிகம் செலவானால்..., நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்..., ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமென்றே.. போன்ற போன்ற பாடல்களை எலிமெண்டரி ஸ்கூலில் படிக்கும் பொழுது படித்தது. இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அப்போது நாங்கள் படிக்கும் பொழுது எங்கள் அம்மா,மாமா முதலானோர் கூடவே சொல்லும் பொழுது ஆச்சர்யமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலப் பெரியவர்கள் பலருக்கு மனப்பாடம் - உண்மை தான் பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. மாகாளிக் கிழங்கு, நன்னாரி சர்பத் இரண்டுமே மிகவும் பிடிக்கும்.இரண்டுமே திருச்சியில்தான் கிடைக்கும்.  மாகாளி, டிசம்பர் முதல் பிப்ரவரி வரை கிடைக்கும். அந்த சமயத்தில் திருச்சி சென்றால் வாங்கி வருவேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, இரண்டுமே உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா - எனக்கு நன்னாரி மட்டுமே பிடிக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அன்பின் இனிய காலை வணக்கம்.
    மிக அருமையான பதிவு.
    பெரியம்மா வாழ்க.
    இந்த ஔவையார் பாடல்களை எல்லாம்
    மனப்பாடமாக நாங்கள் சொல்ல வேண்டும்.
    தாத்தா ஆர்டர்.
    ஆன முதலில்,
    விஷம்,.எல்லோர்க்கும் பெய்யும் மழை,
    பொறுமை என்னும் நகை அணிந்து
    பெருமை கொள்ள வேண்டும் எல்லாப்பாடல்களும்,
    கொன்றை வேந்தன் பாடல்கள்.,மூதுரை,நீதி வெண்பா

    இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பாடல்,

    எல்லாம் படித்தால் தான் தமிழ் கற்றதாகச் சொல்வார்கள்.
    பெரியம்மாவுக்கு சதாபிஷேகத்துக்கான வாழ்த்துகள்.

    நன்னாரி, மாகாளி இரண்டும் எனக்கு ஆகவே ஆகாது.
    சிங்கத்துக்கும் பிடிக்காது.
    பசங்க மூன்று பேருக்கும் அல்வா சாப்பிடுவது போலப் பிடிக்கும்.
    இந்த அதிசயத்தை என்னவென்று சொல்வது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்களுக்கும் பிடிக்காதா? மாகாளி எனக்கும் பிடிக்காது வல்லிம்மா! நன்னாரி சர்பத் ஓகே! பானையில் போட்டு வைத்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      நீக்கு
  14. ஒரு காலத்தில் மாகாளி(ணி)க் கிழங்கு ஊறுகாய் இல்லைனா சாப்பிடவே தெரியாது. ஆனால் எண்பதுகளில் மூல நோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் பின்னர் சாப்பிடக் கூடாது எனச் சொல்லிவிட்டார்கள். சாப்பிடுவதே இல்லை. இந்த ஊறுகாய் போடவும் பலருக்கும் இப்போது தெரியவில்லை. போகட்டும். நானோ சாப்பிடறதில்லை. யாரோ எப்படியோ போட்டுச் சாப்பிடட்டுமே! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாகாளி ஊறுகாய் இப்போது பலருக்கும் போடத் தெரிவதில்லை - ஹாஹா... கீதாம்மா, அது பிடித்தவர்களே குறைவானவர்கள் தான் இப்போது! இன்றைய இளைஞர்கள் பலருக்குத் தெரியவே தெரியாது!

      நீக்கு
  15. இந்த நீதி வெண்பா, நன்னெறி, நாலடியார், திரிகடுகம், ஏலாதி, பழமொழி போன்றவற்றின் பாடல்கள் எங்களுக்கும் ஆரம்பப்பள்ளியில் இருந்து ஆரம்பித்து எட்டாம் வகுப்பு வரை வந்திருக்கு. ஔவை பாடல்கள் பள்ளிநாட்கள் முழுவதும் வந்திருக்கின்றன. திருக்குறள்களும் ஐந்து/ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வரை படிச்சிருக்கோம். இவற்றோடு கம்பராமாயணம், வில்லி பாரதம், சீறாப்புராணம், பெத்லஹேம் குறவஞ்சி என அனைத்தும் படிச்சிருக்கோமே! பெரியம்மாவின் நினைவாற்றல் அதி அற்புதம். எல்லாவற்றையும் சேகரம் செய்து கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கலாம். அருமையான நினைவாற்றல். பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த கேடுகெட்ட மானிடரே கேளுங்கள், என்னும் பாடலையும் ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் பாடலையும் நான் அடிக்கடி பயன்படுத்துவேன். ஆனால் ரசிக்கத் தான் ஆளில்லை! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் பகிர்ந்தது நன்று கீதாம்மா.

      ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் - ரசிக்கத் தான் ஆளில்லை - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....