திங்கள், 21 ஜூன், 2021

வாசிப்பனுபவம் - பேசும் மொழியிலெல்லாம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


LIFE IS AS SIMPLE AS WE ALLOW IT TO BE!


******




சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் ஹமீதா அவர்கள் எழுதிய “பேசும் மொழியிலெல்லாம்” எனும் நாவல்!  அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 





நூல்:  பேசும் மொழியிலெல்லாம்

வகை:  நாவல்

ஆசிரியர்: ஹமீதா

பக்கங்கள்:  305

வெளியீடு:  அமேசான்

விலை:  ரூபாய் 150/- மட்டும். 

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே!


பேசும் மொழியிலெல்லாம்...: Pesum Mozhiyilellam... (Tamil Edition) eBook: Hameeda, ஹமீதா


பிரதான கதாபாத்திரங்கள்: வெற்றிமாறன், நயனிகா, ப்ரமோத்


வெற்றிமாறன்: தஞ்சையில் இருக்கும் வெற்றிமாறன், பாரதியார் பாடல்களையும் இயற்கையையும் ரசித்தபடி இருக்கும் இளைஞன்.  தஞ்சையில் அவன் எடுத்த முயற்சிகள் அத்தனை கைகூடிவரவில்லை.  அவனை எல்லா நேரமும் திட்டிக் கொண்டே இருக்கும் தந்தையும், சில சமயங்களில் தாயும் சேர்ந்து கொள்ள ஒரு வித வேதனையான உலகில் இருக்கிறான்.  சென்னையில் இருக்கும் தனது நண்பரிடம் அனுப்பினால் அங்கே சென்று முன்னேறி விடுவான் என்று சொல்லும் தந்தை - ஒரு சுபயோக சுப தினத்தில் தஞ்சையிலிருந்து சென்னை நோக்கி புறப்படுகிறான்.  சென்னையில் இரவு வந்து இறங்கிய நாள் - 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு வந்த நாள்!  தங்குமிடங்கள் அனைத்திலும் கிடைத்த வரவேற்பு அதிர்ச்சி அளிக்கிறது.  சென்னை வரும்போது தான் இருக்க முடியாது என்று சொன்ன தந்தையின் நண்பர் பத்மநாபன், மூன்று எண்களைத் தந்து அவர்களிடம் பேசினால் எல்லாம் சரியாக நடந்து விடும் என்று சொல்கிறார். முதல் நபர் உடல் சரியில்லாமல் மருத்துவமனையில்! இரண்டாவது நபர் வெற்றிமாறனின் அழைப்பை எடுக்கவே இல்லை! வேறு வழியில்லாமல் மூன்றாவது எண்ணை அழைக்கிறான்.  அப்படி அவன் அழைத்தது இரவு ஒன்பதரை மணிக்கு ….


நயனிகா:  மூன்றாவது எண் நயனிகாவின் எண்!  முதலாளி பத்மநாபன் ஏற்கனவே சொல்லி இப்படி ஒருவர் வருவார் என்று சொல்லி இருக்க, இந்த நேரத்தில்  அழைப்பாரோ? என்று எண்ணியபடி அழைப்பை இணைக்க, வெற்றிமாறனின் பிரச்சனை புரிகிறது.  தனது அப்பா மோகனிடம் அலைபேசியைக் கொடுக்க, தங்குவதற்கு, அவர்கள் வீடு இருக்கு கட்டிடத்திலேயே ஒரு ஏற்பாடு செய்து தருகிறார்.  ஒன்றிரண்டு நாள் தங்கலாக இருக்கும் என்ற நினைவுடன் வந்தால் - நயனிகாவை பார்த்ததுமே அங்கேயே தங்கி விடப் போகிறோம் என்று தோன்றுகிறது வெற்றிமாறனுக்கு. நயனிகாவை பார்த்ததுமே அவள் மீது ஒரு ஈர்ப்பு வந்து விடுகிறது - அடுத்த நாள் முதல் இருவரும் ஒன்றாகவே வேலைக்குச் செல்கிறார்கள் - நயனிகாவும் பத்மநாபன் அவர்கள் நடத்தும் பெரிய கடையில் உழைப்பாளி - அதுவும் Floor Manager!  ஒரு விதத்தில் வெற்றிமாறனே அவளுடைய கண்காணிப்பில்!  


ப்ரமோத்: பத்மநாபன் அவர்களின் மகன் - சிறுவயதிலேயே வெற்றிமாறனுக்கும் நண்பன்.  பத்மநாபனின் மனைவி உடல் நிலை சரியில்லாமல் வெளிநாட்டில் அனுமதிக்கப்பட்டு இருக்க, மனைவியுடம் தான் இருக்கும்போது மகன் ப்ரமோத் நிறுவனத்தினை கவனித்துக் கொண்டால் சரியாக இருக்கும் என நினைக்கிறார் - ப்ரமோத் தான் கவனித்துக் கொள்ளவேண்டும் என்றால் தன்னிஷ்டப்படியே நடப்பேன் - அதற்கு ஒப்புக் கொண்டால் நிறுவனத்தினை வழிநடத்துவேன் என்று சொல்கிறான். அதற்கு பத்ம்பநாபன் ஒப்புக்கொள்ள நிறுவனத்தினை நிர்வகிக்க ஆரம்பிக்கிறான்.  அங்கே நயனிகாவைச் சந்திக்கிறான்.  நயனிகாவை வேலைக்குச் சேர்க்கும்போதே ஒரு திட்டத்துடன் தான் பத்மநாபன் வேலைக்குச் சேர்த்திருக்கிறார் என்பது பின்னர் தெரியவருகிறது.  பல நாடுகளுக்குச் சென்று பல பெண்களைப் பார்த்திருந்தாலும் நயனிகாவைப் பார்த்தபோது, இவளையே திருமணம் புரிந்து கொண்டால்…. என்ற எண்ணம் தோன்றுகிறது.


நயனிகாவின் அப்பா மோகனும் பத்மநாபனின் நிறுவனத்திலேயெ பணிபுரிபவர் - தனது மூத்த மகளின் அளவில்லா ஆசைகள் காரணமாக நிறுவனத்திலிருந்து கடன் வாங்கி அவளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.  போதாக்குறைக்கு, படித்துக் கொண்டிருந்த இளைய மகள் நயனிகாவையும் தனது நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டு அவள் பெயரிலும் கடன் தருகிறார் பத்மநாபன் - அதுவும் அவரது திட்டத்தின் ஒரு பகுதி!  ஏன் எனில் தனது மகன் பிரமோத் மீது அவர் வைத்திருந்த அனுமானம் அப்படி!   வெற்றிமாறன் - நயனிகா காதல் ஒரு புறம் வளர, ப்ரமோத் தனது ஆசையை அப்பா பத்மநாபனிடம் சொல்வதற்கு முன்னர் அவரே நயனிகாவை தனது மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கும்பொடி நயனிகாவின் தந்தை மோகனிடம் கேட்கிறார்.  


நயனிகா தனது விருப்பப்படி வெற்றிமாறனைக் கைப்பிடித்தாரா இல்லை தனது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு அப்பாவின் கடன் தொல்லை, பிரச்சனைகள் நீங்க முதலாளி பத்மநாபன் மகன் ப்ரமோதை திருமணம் செய்து கொண்டாரா என்பதை மின்னூலை வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன். மின்னூல் வழி காதலை, இந்த விஷயங்களைச் சொல்லிக் கொண்டே வரும் நூலாசிரியர் அந்த நேரத்தில் நடந்த பண மதிப்பிழப்பு, அதனால் விளைந்த பிரச்சனைகள், இந்த தேசத்தில் பரவிக்கொண்டு இருக்கும் பிரச்சனைகள் என மற்ற விஷயங்களையும் சரியான இடத்தில் சரியாகச் சேர்த்து விறுவிறுப்பினைக் கூட்டி இருக்கிறார்.  கதை மாந்தர்களின் பேச்சிலேயே ஆசிரியர் தனது பெயரும், கதைக்கான அவரது விருப்பங்களும் வந்து விடும்படி எழுதி இருப்பது சுவை!  


கதையை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றிருக்கிறார் நூல் ஆசிரியர்.  நல்லதொரு குடும்ப நாவலை வாசிக்க விருப்பம் இருப்பவர்கள் நிச்சயம் இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.  ஆசிரியருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள் - மேலும் பல நூல்களை எழுதி வெளியிட வாழ்த்துகள்!


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, வாசிப்பனுபவம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. விமர்சனம் புதுமையாக இருக்கிறது அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நல்லதொரு குடும்ப நூலை அறிமுகம் செய்ததற்கு நன்றி சார்.
    நூலை விரைவில் வாசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. வெங்கட்ஜி உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது. இக்கதை அறிந்தது போலவே இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  6. விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறீற்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. //படித்துக் கொண்டிருந்த பத்மநாபனின் இளைய மகள் நயனிகாவையும் தனது நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டு அவள் பெயரிலும் கடன் தருகிறார்// "பத்மநாபன் என்பதை "மோகன்" எனத் திருத்துங்கள் வெங்கட். நன்றி. விமரிசனம் அருமை. மிக அழகான கதைச் சுருக்கம். இந்தக் கருத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. புரிதலுக்கு நன்றி. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறைச் சுட்டிக் காண்பித்ததற்கு நன்றி கீதாம்மா. மாற்றி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....