புதன், 2 ஜூன், 2021

வாசிப்பனுபவம் - நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே - இரா. அரவிந்த்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சந்தித்ததும் சிந்தித்ததும் வலைப்பூ - நண்பர்களின் பார்வையில் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தன்னம்பிக்கை ஜெயிக்கும் வரை அவசியம். தன்னடக்கம் ஜெயித்த பின் அவசியம்.


*****




அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நாம் பார்க்கப் போகும் பதிவு ஒரு வாசிப்பனுபவம் பதிவு.  நண்பர் இரா. அரவிந்த் அவர்களின் பார்வையில் ஒரு மின்னூல் - அந்த மின்னூலும் வலையுலக நண்பர்கள் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களும் திருமதி கீதா ரெங்கன் அவர்களும் இணைந்து எழுதி வெளியிட்ட மின்னூல்!  வாருங்கள் மின்னூல் குறித்த நண்பர் இரா. அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவத்தினை படிக்கலாம் - வெங்கட் நாகராஜ்.  


*****


நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே: சுய திறமையை மதிக்கும் உறவின் பலம் - இரா. அரவிந்த். 





மாற்றமே மாறாதது என்றாலும், மாற்றம் அனைவராலும் எளிதில் ஏற்கப்படுவதில்லை என்பதே உண்மை. 


கை நிறைய சம்பாதிக்கும் வல்லமை இன்றைய பெரும்பாலான பெண்களுக்கு ஏற்பட்டபோதிலும், அதனால் பெருகும் உளவியல் சிக்கல்களை அனுதினமும் நம் குடும்பங்களில் காண்கிறோம். 


குறிப்பாக, சமூகத்தில் பிரபலம் ஆகிவிட்ட பெண்கள், தம் இல்லத்தில் எதிர்கொள்ளும் உளவியல் சார்ந்த இடர்கள் பெரும்பாலும் வெளியில் தெரியாததாகவும், வலி நிறைந்ததாகவும் இருப்பது வேதனையானது. 


அத்தகைய இடர்கள் குறித்தும், அவற்றைக் கையாளும் நடைமுறைகள் குறித்தும் உணர்த்துவதே, எழுத்தாளர்கள் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களும், திருமதி கீதா ரெங்கன் அவர்களும் இணைந்து படைத்துள்ள 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே' சிறுகதைத் தொகுப்பு. 


இசையுலகில் பிரபலமாக வளர்ந்து கொண்டிருக்கும் கதையின் நாயகி ஸ்ருதி, இசை விமர்சனக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் கதையின் நாயகனை மணந்த பின், மண வாழ்வில் எழுந்த சிக்கல்களைத் தீர்த்தார்களா என்பதே, நூலின் பெயரைத் தாங்கி வரும் முதல் கதையின் சுவாரசியம். 


'எங்கள் ப்ளாக்' வலைத்தளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இக்கதை, இரண்டு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சுவடே இன்றி ஒரே சீரான நடையில் செல்வது அனைவராலும் பாராட்டப்பட்டது. 


கதையின் கருவிற்கேற்ப, இசையின் உன்னத உணர்வுகளை எழுத்திலும் பிரதிபலித்திருப்பது, வாசகர்கள் தாமே வாசித்து அனுபவிக்க வேண்டியவை. 


தம் கணவன் பிரபலமாக இருப்பதை மனைவியர் எதார்த்தமாக ஏற்கும் அதே சமயம், மனைவி, தம்மை விட உலகக் கவனம் பெறுவதை ஏற்க பல ஆண்கள் காட்டும் தயக்கம் கதையில் எதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது. 


குறிப்பாக, நாயகன் ஷ்ரவண், தன்னை 'மிஸ்டர் ஸ்ருதி' என பத்திரிக்கை குறிப்பிட்டதையும், 'சுருதிப்பெட்டி' என நண்பர்கள் நகைச்சுவையாகப் பட்டப்பெயர் வைத்ததையும் தன் தன்மானத்தின் வீழ்ச்சியாக கருத அம்மனக்காயங்கள், அவள் மீதான குத்தலானச் சொற்களாக வெளிப்படுகின்றன. 


தனது லட்சிய தாகத்தையும், குடும்பத்தின் தேவைகளையும் ஒரே சமயத்தில் நிறைவேற்றுவதில் இன்றைய தலைமுறைப் பெண்கள் சந்திக்கும் சவால்களை எழுத்தாளர்கள் ஒருபுறம் பட்டவர்த்தனமாகக் காட்டியிருக்கிறார்கள். 


மறுபுறம், நாயகன் மன ஓட்டத்தை விவரிக்கும் பகுதிகளில், நாயகன் தன் மனைவி மீது வைத்துள்ள உயரிய மதிப்பும், தன் தன்மானம் பாதிக்கப்பட்டதாக உணரும் தருணங்களில் தன்னை மீறி எழும் சொற்களால் தானும் வேதனையுறுவதையும் எழுத்தாளர்கள் எதார்த்தமாகச் சித்தரித்துள்ளார்கள். 


நம்மை விமர்சிப்போரில், உண்மையான அக்கறை உள்ளோரையும், தத்தம் தாழ்வு மனப்பான்மையை நம் மீதான விமர்சனமாக வைப்போரையும், பொறாமையால் புழுங்குவோரையும் பிரித்துப் பார்க்கும் பக்குவம் அடைவதே, குடும்பம் சரியான ஸ்ருதியோடும், நாதத்தோடும் இயங்கும் வழியாக இக்கதை காட்டுகிறது. 


அத்தோடு, நம்மை சொற்களால் காயப்படுத்துவோரே நம்மைவிட உளரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டோர் என்ற எதார்த்தத்தை உணர்தலும்; அதனால் பழிவாங்கும்  உணர்வின்றி, நாயகி ஸ்ருதி மற்றும் விக்கியைப் போல உறவை உரமேற்ற கையாண்ட உக்திகளுமே, இக்கதை சமுதாயத்திற்குக் கூறும் செய்திகள் எனலாம். 


குடும்ப வாழ்வை வெற்றிகரமாக எடுத்துச் செல்ல சிறந்த உத்திகளை நூலின் முதல் கதை உணர்த்த, அக்குடும்பத்தின் அடித்தளமான சரியான துணையை தேர்வு செய்தல் குறித்து நூலின் ஏனைய இரு கதைகள் பேசுகின்றன. 


குடும்ப விருப்பத்தை விட தனி சுதந்திரத்தை வலியுறுத்தும் இத்தலைமுறை, தான் தேர்ந்தெடுக்கும் துணையின் பண்புநலன்கள், அவர் சார்ந்த குடும்பத்தாலேயே உருவாக்கப்பட்டவை என்பதை உணரும் அத்தியாவசியத்தை இவ்விரு கதைகள் உணர்த்துகின்றன. 


தாம் தேர்ந்தெடுக்கும் துணையின் முழு குடும்பத்தையும் உணர, ஒரு வித்யாசமான உத்தியைக் கதைக்கருவாக எங்கள் ப்ளாகின் மற்றொரு தளமான நம்ம ஏரியாவில் திரு கௌதம் அவர்கள் சொல்லிக் கதை எழுத வாசகர்களை அழைத்திட அதற்கு, திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் 'என்னோடு வா வீடு வரைக்கும்' சிறுகதை முன் மொழிகிறது. 


அந்த உத்தி நடைமுறையில் செயல்பட்ட விதம், திருமதி கீதா ரெங்கன் அவர்களின் 'சுந்தரி நீயும் குணபதி நானும்' சிறுகதையில் வெளிப்பட்டுள்ளது. 


'அயோக்கியன் வீட்டுக்கு வா னு கூப்பிட மாட்டான், வேற எங்கயோ கூப்பிடுவான்' போன்ற நறுக்குத் தெறித்தார் போன்ற வரிகள், சரியான துணையை அடையாளம் காண்கையில் இத்தலைமுறையினர் மனதில் கொள்ள வேண்டியவை. 


இரு வீட்டு அனுபவங்கள் குறித்து நாயகனும் நாயகியும் வெளிப்படுத்திய வார்த்தைகளில் உள்ள வேறுபாடே, நேர்மறை எண்ணத்தின் வலிமையையும், இன்ப துன்பங்களை பகிர்ந்து வாழ்வதன் அவசியத்தையும் வாசகர்களுக்குக் கடத்துகின்றன. 


அதற்கும் அப்பால், இன்றைய பெரும்பாலான மண முறிவுகளுக்குக் காரணமான, ஒருவரின் நிறைகளை முற்றிலும் மறந்து அவரின் குறைகளையே பெரிதாகக் கருதும் உளநிலை குறித்து கணபதி சுந்தரியிடம் கூறும் அறிவுரை, இத்தலைமுறைக்கு  நூல் விடுக்கும் செய்தி ஆகும். 


இவ்வாறு, சமூகத்தின் பல சிக்கல்களையும் அதற்கானத் தீர்வுகளையும் முன்வைக்கும் இக்கதைத் தொகுப்பை பின்வரும் சுட்டியில் வாங்கி வாசிக்கலாம். 


நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே



நட்புடன்,

இரா. அரவிந்த்


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


30 கருத்துகள்:

  1. ஆழ்ந்து படித்து, அதை உள்வாங்கி யோசித்து விமர்சித்திருக்கிறார் அர்விந்த்.  பாராட்டுகளும் வாழ்த்துகளும்.   பானு அக்காவுக்கும், கீதா ரெங்கனுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
      உள்வாங்கி யோசிக்கும்வகையில் கதைகள் என் வாழ்வின் பல சம்பவங்களை அருமையாக பிரதிபலித்துள்ளன.

      நீக்கு
  2. ஆழமான விமர்சனம் நூலை படிக்கத்தூண்டுகிறது.

    ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி KILLERGEE ஐய்யா.

      நீக்கு
  3. //நேர்மறை எண்ணத்தின் வலிமையையும், இன்ப துன்பங்களை பகிர்ந்து வாழ்வதன் அவசியத்தையும் வாசகர்களுக்குக் கடத்துகின்றன.//

    நன்றாக சொன்னீர்கள்.
    அருமையான விமர்சனம், வாழ்த்துக்கள்.
    கதை ஆசிரியர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு அம்மா.
      நேர்மறை எண்ணம் இன்றைய சவாலான சூழலில் மிகவும் தேவையானது.

      நீக்கு
  4. மிக்க நன்றி அரவிந்த் உங்கள் அருமையான விமர்சனத்திற்கு.

    மிக்க நன்றி ஸ்ரீராம் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல தறமான கதைகளை வழங்கிய தாங்களுக்கும் திருமதி பானுமதி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.
      கதையும் மிகவும் ஆழமானதே.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன் ஐய்யா.

      நீக்கு
  7. வெங்கட்...   தளத்தின் தோற்றம்/முகப்பு மாறி இருப்பதை இப்போதுதான் கவனிக்கிறேன்.  எப்போதிலிருந்து?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்களுக்கு முன்னர் தான் சில மாற்றங்கள் செய்யும்போது இப்படி ஆனது. படத்தினை மீண்டும் சேர்க்க வேண்டும் ஸ்ரீராம். கவனித்து கேட்டதற்கு நன்றி.

      நீக்கு
  8. கதையை சரியாக புரிந்து கொண்டு சிறப்பான விமர்சனத்தை தந்ததற்கு மிக்க நன்றி அரவிந்த்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு படைப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி மேடம்.

      நீக்கு
  9. விமர்சனம் அருமை அரவிந்த். கதை ஆசிரியைகளுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி koilpillai ஐய்யா.

      நீக்கு
  10. பெண்களின் மனோபலம், முன் சிந்தனை எல்லாம்
    வெளிப்படும் கதைகளாக வெளிவந்திருக்கும்
    பானு, கீதா இருவரின் படைப்பு அருமை.
    தீர ஆராய்ந்து திரு அரவிந்த்
    நல்ல விமரிசனத்தைப்
    பதிவு செய்திருக்கிறார்.
    அவரது எழுத்தில் படைப்பின் உட்சாரம்

    சிறப்பாக அமைந்திருக்கிறது.
    வாழ்த்துகள் அரவிந்தன்.
    அன்பு பானுகீதாவுக்கு மனம் நிறை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  11. நல்ல விமர்சனம்..நிச்சயம் இவ்வாரம் படித்துவிடுவேன்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நன்பரே.
      நூலை முடியும்போது வாசியுங்கள்.

      நீக்கு
  12. இன்றைய பெரும்பாலான மண முறிவுகளுக்குக் காரணமான, ஒருவரின் நிறைகளை முற்றிலும் மறந்து அவரின் குறைகளையே பெரிதாகக் கருதும் உளநிலை குறித்து கணபதி சுந்தரியிடம் கூறும் அறிவுரை, இத்தலைமுறைக்கு நூல் விடுக்கும் செய்தி ஆகும்.


    தனது லட்சிய தாகத்தையும், குடும்பத்தின் தேவைகளையும் ஒரே சமயத்தில் நிறைவேற்றுவதில் இன்றைய தலைமுறைப் பெண்கள் சந்திக்கும் சவால்களை எழுத்தாளர்கள் ஒருபுறம் பட்டவர்த்தனமாகக் காட்டியிருக்கிறார்கள்.
    இப்படிப் பல கோணங்களிலும் அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ரசித்த வரிகளை குறிப்பிட்டதற்கும் மிக்க நன்றி அபயாஅருணா மேடம்.
      நூலை முடியும்போது வாசியுங்கள்.

      நீக்கு
  13. நூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. இருவரின் திறமையும் குறைத்து மதிப்பிட முடியாது. சேர்ந்து எழுதுவதே சாதனை எனில் அதில் வெற்றி அடைவது இன்னொரு சாதனை, இருவருக்கும் அந்தத் திறமை கை வந்துள்ளது. வாழ்த்துகள். விமரிசனம் எழுதி இருக்கும் திரு அரவிந்த் அவர்களும் அருமையாக விமரிசித்திருக்கிறார். ஓர் புத்தக விமரிசனம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. எங்கள் ப்ளாக் தளத்தில் வாசித்து ரசித்தத் தொடர். அருமையான விமர்சனம். அமேசானில் கதை உருவாகிய விதத்தைப் பற்றிய பகிர்வையும் ரசித்தேன். நூலாசிரியர்கள் இருவருக்கும் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....