புதன், 9 ஜூன், 2021

கதை மாந்தர்கள் - திடம் கொண்டு போராடு



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மேலும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


STRENGTH GROWS WHEN WE DARE! UNITY GROWS WHEN WE PAIR! LOVE GROWS WHEN WE SHARE! AND RELATION GROWS WHEN WE CARE! LIVE IN PEACE AND NOT IN PIECES... (வாசகம் பகிர்ந்த ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி!)


******






நண்பர் ப்ரேம்… என்னைப் போலவே பயணக் காதலன். அதிலும் மலைப்பகுதி பயணங்கள் என்றால், குறிப்பாக, அவரது ஊர் இருக்கும் உத்திராகண்ட் மாநிலப் பயணம் என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல! பல முறை நண்பர்களுடன் மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் பயணம் புறப்பட்டு விடுவார்.   பல கடினமான மலைப்பகுதிகளில் முதுகுச் சுமையோடு பயணம் செய்வதற்கு மனதிடமும், எந்தச் சூழலையும் சந்திக்கும் தைரியமும் வேண்டும்.  அது அவரிடம் நிறையவே இருக்கிறது. 


ப்ரேம் - தற்போதைய சூழலில் ஊரடங்கு என்று ஒன்றை அரசாங்கம் சொல்லி இருந்தாலும், பணிச்சூழல் காரணமாக தினமும் அலுவலகத்திற்குச் சென்று வர வேண்டிய கட்டாயம்.  அவரது மனைவியும் அரசு அலுவலகம் ஒன்றில் தான் பணிபுரிகிறார். அவருக்கும் அப்படியே இடையிடையே அலுவலகம் சென்று வர வேண்டியிருந்தது.  ஏப்ரல் கடைசி/மே மாத துவக்கத்தில், நண்பருக்கு சின்னச் சின்னதாய் பிரச்சனைகள் - தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் பரிசோதனை செய்து கொண்டார்.  அவரது பரிசோதனை முடிவு வருவதற்குள்ளாகவே, மனைவி, தாயார் என மூவருக்கும் உடல் உபாதைகள் வந்து விட்டன.  மூவருக்கும் பரிசோதனைகள் செய்து கொண்டு தெரியவந்தது - மூவருக்கும் தொற்று உறுதி.  நண்பர், அவரது தாயார் ஆகிய இருவருக்குமே வேறு உடல் உபாதைகள் உண்டு - சர்க்கரை நோய் முதல் உபாதை.  தாயாருக்கு வயது காரணமாக நிறைய பிரச்சனைகள்.  ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தது.  


மூவருக்கும் உடல் உபாதைகள் இருந்தாலும், தில்லியில் அதிதீவிரமாக பரவியிருந்த தொற்று காரணமாக எந்த மருத்துவமனையிலும் இடம் கிடைக்காது போயிற்று.  அம்மாவுக்கு மட்டுமாவது இடம் கிடைக்குமா என்றால் அவருக்கும் இடம் கிடைக்கவில்லை.  மூவருமே வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார்கள்.  அப்படி இருந்தாலும், அதிலும் மிகப் பெரிய பிரச்சனை அவர்களுக்கு இருந்தது - நண்பர்கள் உணவு போன்றவற்றைக் கொடுத்து விட்டாலும், வீட்டிலே இருக்கும்போது மூவரும் தனிமை படுத்திக் கொண்டாலும் தவிர்க்க முடியாத பிரச்சனை அந்தப் பிரச்சனை.  


நண்பரின் மகள் - பன்னிரெண்டு வயதுக்கு மேல்! ஆனால் மனதளவில் குழந்தை.  மாற்றுத் திறனாளி! அதனால் எவ்வளவு தான் சொன்னாலும், அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை - தினம் தினம் அப்பா/அம்மா மீது தான் படுத்துக் கொண்டு உறங்குவாள் அந்தக் குழந்தை.  தனிமைப் படுத்திக் கொண்டு இருக்கும்போது அவளை என்ன செய்வது. அவளை நண்பர்கள் வீட்டில் விடலாம் என்றால் அவர்களால் மகளைக் கட்டுப்படுத்த முடியாது!  தாய் தந்தையரிடமிருந்து பிரிந்து மகளால் இருக்க முடியாது.  தொற்று அவருக்கும் வந்து விடுமே என்ற பயம் நண்பருக்கும், அவரது மனைவிக்கும்.  மகளை அவ்வப்போது கவனித்துக் கொள்ளும் மருத்துவரிடம் கேட்க, அவளைத் தனிமைப் படுத்துவதில் பிரச்சனைகள் உருவாகலாம்.  அவளை எப்போதும் போல இருக்க விடுங்கள்.  தற்காப்புக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளைக் கொடுத்து விடுங்கள்.  அதன் பிறகு என்ன நடக்கிறதோ பார்த்துக் கொள்ளலாம், ஆண்டவன் விட்ட வழி என்று சொல்லி விட்டாராம். 


நண்பர், மனைவி மற்றும் தாயார் மூவரும் வீட்டிலேயே இருந்து கொண்டு, தொற்றின் தீவிரம் அவர்களை கஷ்டப்படுத்தினாலும், மகளையும் கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  பதினைந்து நாட்கள் - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித போராட்டம்.  மருந்து மாத்திரைகள், தொற்றின் தொல்லைகள் என இருந்தாலும், தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார்கள்.  பதினைந்து நாளும், ஒவ்வொரு மணித் துளியும் ஒவ்வொரு வித அனுபவம், ஒவ்வொரு வித போராட்டம்.  நண்பரிடம் இயல்பாக இருந்த, பயணத்தினால் கிடைத்த மனோதைரியமும், திடமும் அவருக்கு இந்த தீநுண்மி காலத்தில் பயன்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.  இந்தப் பதினைந்து நாட்கள் - அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டம் என்று சொல்ல வேண்டும் என்று சொன்னார்.  அவ்வப்போது விசாரித்துக் கொண்டிருந்தோம் - தில்லியில் இருந்த நண்பர்கள் சில உதவிகளைச் செய்தாலும், தொற்றிலிருந்து வெளி வரவும், மகளுக்கு தொற்று ஏற்படாமல் இருக்கவும் நண்பரது மனோ திடம் தான் உதவியிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.   


நான்கு பேருமே மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள, தொற்றில்லை என்று பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் மன நிம்மதி - நண்பரின் குடும்பத்தினருக்கும், என்னைப் போன்ற நண்பர்களுக்கும்.  தற்போது அவர்கள் அனைவரும் நலம்!  நண்பர் மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டார்.  தொற்றிலிருந்து விடுபட்ட அவருக்கும், குடும்பத்திற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.  எல்லாம் வல்ல இறைவனுக்கும் மனம் நிறைந்த நன்றி. 


பின் குறிப்பு:  தொடர்ந்து இழப்புகளையே சொல்ல வேண்டாம் என்ற எண்ணத்தினால், தொற்றின் பாதிப்பிலிருந்து விடுபட்டு, வெற்றி அடைந்த நண்பர் குறித்து இந்தப் பதிவின் வழி எழுதி இருக்கிறேன்.  


******


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் வேறு ஒரு வாசிப்பனுபவத்துடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்




வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


24 கருத்துகள்:

  1. தொடர்ந்து திக்திக்கென்றுதான் படித்துக் கொண்டு வந்தேன்.  இந்த மாதிரி மகள்/மகன்களை வைத்துக் கொண்டிருபப்வர் பாடு இக்கால கட்டத்தில் வெகு கடினம்.  மிக மிகக்கடினம் என்பது புரிகிறது.  கடவுள் காப்பாற்றினார்.  பின்குறிப்பு வரிகள் ஆறுதலைத் தந்தன. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் காப்பாற்றினார் - உண்மை தான் ஸ்ரீராம்.

      பின்குறிப்பு வரிகள் - நன்றி. தொடர்ந்து இழப்புகளையே எழுத வேண்டாம் என மாற்றி தொற்றிலிருந்து மீண்டவர்கள் குறித்து எழுதினேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மனக் கவலையுடனேயே முழுவதும் படிக்க நேர்ந்தது. படிப்பவருக்கே டென்ஷன் என்றால் நண்பர் குடும்பத்திற்கு எப்படி இருந்திருக்கும்?

    மீண்டு வந்தது மகிழ்ச்சி.

    அரசு வேலை செய்பவர்களுக்கான ரிஸ்க் இன்ஷ்யூரன்ஸ், (கொரோனாவுக்கு, முழு குடும்பத்துக்கும்), அரசு செலுத்துவதுதான் சரி. தொற்றுக் காலத்தில் வேலைக்கு அழைக்க வேண்டியிருக்கிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஸ்க் இன்சூரன்ஸ் - அரசுப் பணியாளர்களுக்கு CGHS வசதி உண்டு என்றாலும் அதில் நிறைய பிரச்சனைகள் - பணியாளர்கள் அதிகம், மருத்துவமனைகள் குறைவு. நிறைய பிரச்சனைகள் உண்டு. இன்சூரன்ஸ் இருக்கிறது - Group இன்சூரன்ஸ் - ஆனாலும் அது மிகக் குறைவான மதிப்பு கொண்டது!

      நண்பர் குடும்பம் மீண்டு வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சியே நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. Be positive but keeping COVID negative needs positive mind

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகை/கருத்துப் பகிர்வோ தெய்வா... மகிழ்ச்சி.

      நேர்மறை எண்ணங்கள் தான் இப்போதைய முக்கியத் தேவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. தங்களது நண்பர் குடும்பத்தோடு நலம் பெற்றதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. பயத்துடன் ஆரம்பித்து நிம்மதியாக முடிந்து மகிழ்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயத்துடன் ஆரம்பித்து நிம்மதியாக முடிந்தது - மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. நன்பரின் மனோதிடத்தை பாராட்டுகிறோம்.
    பதிவிற்கேற்ற வாசகமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இறுதிப் பகுதியைப் படித்ததும்தான் மனதில் நிம்மதி பிறந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறுதிப் பகுதியைப் படித்ததும் தான் மனதில் நிம்மதி - போராடி வெற்றி பெற்றது நல்லது தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வெங்கட்ஜி ஹையோ பாவம் அந்தப் பெண் குழந்தை. என்ன ஒரு இக்கட்டான சூழல்!...மனம் பதை பதைக்கிறது. முழுவதும் படிக்கவில்லை அதற்குள் மனம் கஷ்டப்படுகிறது. என் தங்கையின் மகனும் சிவியர் ஆட்டிசம் குழந்தை. நான் சொல்லிக் கொண்டே இருப்பது இதுதான் கவனமாக இருங்கள் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டிசம் பிரச்சனை - இப்போதெல்லாம் நிறையவே இப்படி. நண்பர் ஒருவரின் மகனும் இப்படியே. அவர் வாழ்க்கை இன்னும் அதிகப் பிரச்சனைகள்! கேட்கும்போதே மனம் பதறும் கீதா ஜி.

      அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் - குறிப்பாக முதியவர்களும் இப்படியான குழந்தைகளும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கடைசியில் சொன்னது போல இழப்போ என்று தோன்ற ஆனால் ஹப்பா இல்லை என்று தோன்றிட கடைசியில் மனம் நிம்மதி...எல்லோருக்கும் இறைவன் சக்தி கொடுக்கட்டும். நண்பரின் இயற்கையான மனோதைரியம் தான் மீட்டுருக்கிறது

    தொற்று வந்தாலும் பலரும் பயந்துவிடுவதால்தான் எதிர்கொள்ளக் கஷ்டப்படுவதாகத் தெரிகிறது இச்சம்யத்தில் தைரியம் தான் மிக மிக முக்கியம்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல படியாக அனைவரும் மீண்டு வந்தது எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி தந்தது. தொடர்ந்த இழப்புகளுக்கு இடையே இப்படியான ஒரு நிகழ்வு நல்லது.

      தைரியம் தான் தேவையான ஒன்று என்பது உண்மை கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஒரு நம்பிக்கையுடனே படித்து வந்தேன் . நினைத்தது போல் தங்கள் நண்பருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் தொற்று இல்லை என்பது நிம்மதியை தந்தது நண்பரே.
    அப்புறம் கிட்டத் தட்ட அன்றாடம் வலைப்பூவில் பதிவிடும் உங்களின் ஊக்கத்தை , ஆற்றலை பாராட்டாமல் இருக்க இயலவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை - அது தானே வாழ்க்கை. நண்பர் நலம் அடைந்தது அனைவருக்கும் நிம்மதி தந்த விஷயம் குமார் ராஜசேகர் ஜி.

      தினம் ஒரு பதிவு - முடிந்த வரை எழுதுவோம்! தங்களது பாராட்டிற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. நண்பரின் நம்பிக்கை குடும்பத்தினர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு இவற்றால் மீண்டு வந்து விட்டது மகிழ்ச்சி.
    இறைவனுக்கு நன்றி.

    அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளவேண்டுமே!இறைவன் கருணைபுரிந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவனின் கருணை தான் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. கடைசி வரை பயமாகவே இருந்தது. நல்லபடியாக எல்லோரும் பிழைத்துக் கொண்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....