திங்கள், 20 செப்டம்பர், 2021

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - ஷேர் மார்க்கெட் ABC


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


‘கல்வி ஒரு மனிதனை தொடங்கி வைக்கிறது. ஆனால் வாசிப்பும் யோசிப்பும் நல்ல நட்பும்தாம் அவனைப் பூர்த்தி செய்கிறது.’ - John Locke


******


அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நண்பர் அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவம் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  வாருங்கள் அவரது வாசிப்பனுபவத்தினை வாசிக்கலாம்! - வெங்கட் நாகராஜ், புது தில்லி.


******


ஷேர் மார்க்கெட் ABC: சாதாரண முதலீட்டில் அசாதாரண லாபம் - இரா. அரவிந்த்





இந்தியாவை காலம்காலமாகச் சேமிப்பிற்காகப் பெயர் பெற்ற ஒரு தேசம் எனலாம். 


அப்பழக்கமே, பல பொருளாதாரச் சீர்குலைவுக் காலங்களில் நம்மைக் காப்பாற்றியும் இருக்கிறது. 


இருப்பினும், பலர் தற்போது நுகர்வு கலாச்சாரத்தால், சேமிப்பை மறந்து, எளிதில் கிடைக்கும் கடன்களில் சிக்குண்டு ஊரடங்குக் காலங்களில் வேலை இழந்து தவிப்பது கொஞ்சம் வருத்தமான சூழல் தான்.


பொருளாதாரத்தை ஊக்குவிக்க, வங்கிகள் வட்டியைக் குறைக்க, வங்கி வைப்புகளின் வட்டியை மட்டுமே நம்பி வாழும் எளியோர், பண வீக்கத்தால் தங்கள் சேமிப்பின் மதிப்பு அரிக்கப்படுவதையும் உணர்ந்து வருந்த நேரிடுகிறது. 


பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யலாம் என்றால், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வரும் பங்குப் பரிந்துரைகளும், இழப்பு நடந்த பிறகே காரணம் துப்பறியப்படும் அபாயமும் மக்களை பீதியடையச் செய்கின்றன. 


இச்சூழலில், சேமிப்பின் இன்றியமையாமையையும், முதலீட்டின் மகத்துவத்தையும் எளிய தமிழில் விளக்குவதே, 2017 இல் நாணயம் விகடனில் கட்டுரைகளாக வெளிவந்து, கிண்டிலிலும் வெளியிடப்பட்டுள்ள திரு செல்லமுத்து குப்புசாமி அவர்களின் 'ஷேர் மார்க்கெட் ABC' நூல். 


வங்கிகளில் சேமித்து தன் முதலைப் பாதுகாக்க அறிந்த நமக்கு, நாம் சம்பாதித்த பணத்தையும் உழைக்க வைத்து முதலீட்டை பன் மடங்காகப் பெருக்க உதவும் பங்குச்சந்தை குறித்த பல நுணுக்கமான தகவல்கள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. 


சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும், வர்த்தகத்திற்கும் இடையிலான வேறுபாடுகளையும், அவற்றில் எதை, எவர், எப்போது எந்த அளவு உபயோகிக்கலாம் என்பதையும் எளிதில் அறியச்செய்வதே நூலின் சிறப்பான அம்சம் ஆகும். 


வங்கி சேமிப்பிற்கான காப்பீட்டை உயர்த்திய சமீபத்திய சட்டத்தாலேயே அக்காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட இக்காலத்தில், 1979 முதல் பங்குச்சந்தையின் மதிப்பு வளர்ந்த விகிதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இந்நூல் தொடங்குகிறது.

 

நொடிக்கு நொடி தொலைக்காட்சிகளிலும், தரகர் செயலிகளிலும் வரும் பங்குப் பரிந்துரைகளின் பின்னால் உள்ள காரண காரியங்கள் அலசப்பட்டிருப்பதோடு, நல்ல தரகரை அடையாளம் காணும் வழிகள் விளக்கப்பட்டுள்ளன. 


'பங்குச்சந்தை என்றால் சூதாட்டமா' என்ற கேள்வியில் தொடங்கி, தெருவோர காப்பி கடைகள், காய்கறி மார்க்கெட், மேட்ரிமோனி இணையதளம் போன்றவற்றோடு ஒப்புமை செய்து, பங்குகளை வாங்குதல், விற்றல் குறித்த  அடிப்படைத் தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன. 


பங்குச்சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட  உலகியல் நடப்புகள், வியாபார சுழற்சி, காலத்திற்கேற்ப பங்கு மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றை முன் உணர்ந்து நம் முதலைப் பாதுகாப்பாக பெருக்கும் வழிகள் என நூலில் பல சூக்ஷமங்கள் விளக்கப்பட்டுள்ளன. 


பங்குகளின் உள்ளார்ந்த மதிப்பையும் லாபத்தையும் கணிக்க உதவும் (EPS), பிஇ விகிதம், புத்தக மதிப்பு, ஈவுத்தொகை உள்ளிட்ட அனைத்து துறை சொற்களும், அவற்றை உபயோகிப்பதன் சாதக பாதகங்களும் விளக்கப்பட்டுள்ளன. 


மதிப்புப் பங்குகள், வளர்ச்சிப் பங்குகள், திருப்புமுனை பங்குகள், உத்வேகப் பங்குகள் போன்ற பலவகைப் பங்குகளை அடையாளம் காணும் வழிவகைகளும், அவற்றில் எப்போது நுழைந்து வெளியேறலாம் போன்ற உக்திகளும் விளக்கப்பட்டுள்ளன. 


கடந்த காலத்தைக் கொண்டு எதிர்காலத்தைக் கணிப்பதில் உள்ள சிக்கலைக் கையாள, முதலீட்டைப் பல துறை பங்குகளில் பரவலாக்கும் உக்திகளும், நல்ல முதலீட்டாளரை அடையாளம் காணும் அமில சோதனையான கரடிச் சந்தையை நேர்மறையாகப் பயன்படுத்தும் உக்திகளும் விளக்கப்பட்டுள்ளன. 


இவை எவற்றையும் செய்ய நேரமில்லாதவர்களுக்கும், பாதுகாப்பை வழங்கவல்ல சந்தைக் குறியீட்டிலேயே நேரடியாக முதலீடு செய்யும் "ETF" வழிமுறைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. 


இவ்வாறு நம் வாழ்வின் ஆதாரமான நிதியை பாதுகாப்பாக முதலீடு செய்து, செல்வத்தை வளர்க்கும் வழிவகைகளை தெளிவாக்கும் இந்நூலை பின்வரும் சுட்டியில் வாசித்து பயனடையலாம். 


ஷேர் மார்க்கெட் ABC (Share Market ABC): 'நாணயம் விகடன்' இதழில் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் (Tamil Edition)


இதன் அடுத்த படியாக, நல்ல நிறுவனத்தை அடையாளம் காணும் ஃபிஷரின் சோதனை, பெஞ்சமின் கிரஹாமின் அடிப்படைப் பகுப்பாய்வு "Fundamental analyses" கோட்பாடுகள், முதலீட்டாளரை மெருகேற்றும் ஜெஸ்ஸி திரு லிவர்மோரின் 'IGHF சூத்திரம்' உள்ளிட்டவற்றை அறிதல் அவசியம். 


"காளைச் சந்தைகள் அவநம்பிக்கையில் பிறக்கின்றன, சந்தேகத்தில் வளர்கின்றன, நம்பிக்கையில் முதிர்ச்சியடைகின்றன, பரவசத்தில் இறக்கின்றன" என்ற சர்.ஜான் டெம்பிள்டனின் வார்த்தைகள் அனைவரும் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டியவை. 


"மற்றவர்கள் பேராசை கொள்ளும்போது ஒருவர் பயப்பட வேண்டும், மற்றவர்கள் பயப்படும்போது ஒருவர் பேராசை கொள்ளவேண்டும்" என்பது வெற்றியாளர்களின் அடிப்படை இயல்பு. 


மேற்கூறியவற்றைப் பின்பற்றி இன்றும் பெரும் செல்வந்தர்களாக வலம் வரும் வாரன் பஃபெட் போன்றோர், சந்தைச் சரிவுகளை கையாண்ட எண்ணற்ற உதாரணங்கள் நமக்குப் பெரும் படிப்பினைகளை வழங்குபவை. 


இவை அனைத்தையும் அறிந்துகொள்ள, திரு ஆனந்த்ஸ்‌ரீநிவாசன் அவர்களின் 'சாதாரண பங்கு அசாதாரண லாபம்' என்ற அற்புத நூலை பின்வரும் சுட்டியில் வாங்கி வாசிக்கலாம். 


சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) eBook : SRINIVASAN, ANAND



நூல்களைப் படிக்கச் சிரமப்படுவோர், "Tamil Pangu Sandhai" என்ற யூட்டியூப் சேனலில் பின்வரும் சுட்டி மூலம் இணைந்து, நிதி நிர்வாகம் குறித்தும் ஊக வர்த்தகம் குறித்தும் பல உக்திகளை அறிந்துகொள்ளலாம். 


Tamil Pangu Sandhai


நிதி மேலாண்மையின் அவசியத்தையும், அதன் உக்திகளையும் அறிவதோடு நம் குழந்தைகளுக்கும் எளிதில் கற்பிக்கத் தொடங்குவோம். 


பணத்தின் மதிப்பையும், சமூகத்தை வடிவமைக்கும் அதன் வலிமையையும் உணர்ந்த ஒரு உன்னத தலைமுறையை உருவாக்குவோம். 


நட்புடன்,

இரா. அரவிந்த்


******


இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


16 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு.  நான் ஷேர் மார்க்கட் பக்கம் போனதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம். சார்.
      ஷேர் மார்க்கெட் ார்வலர்களுக்கு இந்நூல் பயனுள்ளதாக இருக்கும்.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி.

    நல்ல வாசகம்!

    புத்தக அறிமுகம் நன்றாக இருக்கிறது அரவிந்த். வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல் களஞ்சியம் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி KILLERGEE சார்.

      நீக்கு
  4. பயனுள்ள பதிவு...யூ டியூப்பை இணைத்துக் கொண்டேன்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சார்.
      அந்த யூட்டியூப் சேனல் மிகவும் பயனளிக்கும்.
      உபயோகித்து மகிழுங்கள்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  6. கனமான புத்தகம் என்பதால் மிக ஆழ்ந்து வாசிக்க வேண்டும்! புத்தாக அறிமுகத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
      கனமான புத்தகம் தான். பணம் உருவாக்கமும் அதன் பெருக்கமும் புரிந்துகொள்வது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும்.
      நான் இந்நூல்களை படித்துக்கொண்டே, பங்குச்சந்தையில் முதலீடும் செய்து, நூலில் சொல்லப்பட்டவற்றின் உன்மைகளை நடைமுறையில் புரிந்துகொண்டபின்நர் இங்கு அரிமுகம் செய்தேன் மேடம்.
      முடியும்போது தாங்களும் இந்நூல்களை வாசித்துப் பாருங்கள்.

      நீக்கு
  7. //பணத்தின் மதிப்பையும், சமூகத்தை வடிவமைக்கும் அதன் வலிமையையும் உணர்ந்த ஒரு உன்னத தலைமுறையை உருவாக்குவோம். //
    நீங்கள் சொன்னது சரிதான். பணத்தின் மதிப்பு குழந்தைகளுக்கு தெரியவேண்டியது அவசியம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக மேடம்.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஆம் ஐய்யா பயனுள்ல நூல் தான்.
      தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐய்யா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....