புதன், 29 செப்டம்பர், 2021

Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி - தமிழகப் பயணம் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மௌனமாக இரு….

உனக்கு ஒன்று பிடிக்காத போது;

உன்னை யாருக்குமே புரியாத போது;

உன்னை விட்டு பிறர் விலகும் போது;

உன்னோடு யாரும் பேசாத போது;

உன்னை குறை கூறும் போது;

உனக்கு கோபம் வரும்போது;

உன்னை வெறுக்கும் போது;

உனக்கு பிரச்சனை வரும்போது;

மௌனம் ஒன்றே சிறந்தது!


******





சென்ற வாரத்தில் ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ என்ற தலைப்பில் தமிழகப் பயணம் குறித்து எழுத ஆரம்பித்தது நினைவில் இருக்கலாம்.  அதன் தொடர்ச்சியாக இதோ, இரண்டாம் பகுதி இன்றைக்கு! ஹைதை விமானத்திற்கான அழைப்பு வந்ததும் நுழைவாயில் நோக்கி நகர்ந்தேன்.  விமானத்திற்குள் பார்த்தால் பெரும்பாலும் சுந்தரத் தெலுங்கில் அளவளாவிக் கொண்டிருந்த மக்கள்.  ஆங்காங்கே சில தமிழ் குரல்களும் - முதல் பகுதியில் பார்த்த ”அடிடா…  சாத்துடா” இளைஞரும் தமிழ் குரல்களில் ஒன்றாக! 11.30 மணி ஆன பிறகும், “Boarding Complete” என்று சொல்லவில்லை விமானப் பணிப்பெண்களின் தலைவி!  இன்னும் யாருக்காகக் காத்திருக்கிறார்களோ எனப் பார்தால், வேக வேகமாக சில திருநங்கைகள் அவர்களது மூத்த திருநங்கை ஒருவருடன் வந்தார்கள்.  அவர்கள் மொழியில் சொன்னால் தங்களது Gகுரு Bபாயுடன் வந்து சேர்ந்தார்கள்.  மொத்தமான, பெரியதான தங்கச் சங்கிலிகள், அலங்காரங்களுடன் Gகுரு Bபாய் வர, அவருக்கான இருக்கை வரை அழைத்து வந்து அமர வைத்தார்கள் அவருடன் வந்த மற்ற திருநங்கைகள்.  ஒரு வழியாக, அனைவரும் வந்து சேர்ந்த பிறகு, விமானம் புறப்படத் தயாரானது.  


விமானத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் அந்த திருநங்கைகளை கவனித்தபடியே இருந்தார்கள். பெரும்பாலும் விமானப் பயணத்தில் இவர்களைப் பார்த்ததில்லை என்பதாக பேசிக் கொண்டிருந்தார்கள்.  என்னதான் அவர்களைக் குறித்து ஒரு தவறான எண்ணம் இருந்தாலும், அதனை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருந்த சிலரையும் கவனிக்க முடிந்தது.  எனக்கு அருகே இருந்த ஒரு இளைஞர் ஏதோ வேண்டாதவர்களைப் பார்ப்பது போல பார்த்து, “இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் விமானத்தில் பயணிக்கலாம் போலிருக்கிறது!”  என்று சக பயணியிடம் சொன்னதைக் கேட்டு, அவரை கொஞ்சம் முறைத்துப் பார்த்தேன்.  அவர்களும் மனிதர்கள் தானே, அவர்கள் விமானத்தில் பயணிக்கக் கூடாது என்று சட்டமா இருக்கிறது இந்தியாவில்! அவர்களும் பயணித்தால் இவருக்கு என்ன குறைந்து விடப் போகிறது என்று தெரியவில்லை! தங்களுக்குள் இருக்கும் குறைகளைப் பற்றி கொஞ்சம் கூட தெரிந்து கொள்ளாமல் அடுத்தவர்களைக் குறை சொல்வதே இது போன்றவர்களின் வாடிக்கையாக இருக்கிறது! 

 

 

என்னுடையது Emergency Exit அருகே இருந்த இருக்கை என்பதால் ஒரு பணிப்பெண் வந்து அவசரச் சூழல் வந்தால் அந்த வழியை எப்படித் திறக்க வேண்டும், எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என அனைத்தும் “கடமையே!” என்று விவரித்தார்.  பாவம் அவரும் - அவரது அனைத்து விமானப் பயணங்களிலும் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு!  பெரும்பாலான பயணிகள் அவர்கள் சொல்வதைக் கவனிப்பது கூட இல்லை! எங்கேயோ பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.  ஏனோ தெரியவில்லை, அவர்கள் சொல்லும் ஒரு விஷயத்தினையும் பயணிகள் கவனிப்பதே இல்லை - முகக் கவசம் கட்டாய அணிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு உட்பட!  தீநுண்மி காலத்தில் விமான நிர்வாகம் தந்து கொண்டிருந்த Sanitizer, Face Shield, Mask, நடு இருக்கையில் அமர்ந்து கொள்ளப் போகும் பயணிகளுக்கான Complete Gown (PPT Kit) என எதுவுமே இப்போது தருவதில்லை! தீநுண்மி விட்டு விலகி விட்டது என்று நினைக்கிறார்கள் போலும்!  



விமானப் பணிப்பெண்கள் எத்தனை முறை சொன்னாலும் நம் மக்கள் கேட்காமல் காதில் மாட்டிய முகக் கவசம் தாவாங்கட்டையில் தான் கிடக்கும்படி வைத்திருந்தார்கள்.  ஒவ்வொரு முறை பணிப்பெண் வந்து சொன்னதும் போட்டுக் கொண்டு, அவர் நகன்ற அடுத்த நொடி கீழே இறக்கி விட்டு விடுகிறார்கள்.  இதில் நன்கு வாயையும், மூக்கையும் மூடிக் கொண்டிருந்த ஒரு பிரஹஸ்பதி, அதனை விலக்கி விட்டு இருமல்! ”அடேய்! ஏண்டா இப்படி?” என்று கத்தலாம் போல இருந்தது! ஒரு வழியாக விமானப் பணிப்பெண்கள், பயணிகள் Pre-book செய்திருந்த உணவு வகைகளைத் தந்து விட்டு, மற்றவர்களுக்கும் கேட்டதைக் கொடுத்து உரிய விலையைச் சொல்லி பணத்தினை வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.  எனக்கென்னவோ, சின்னச் சின்னதான, அதிக அளவு நேரம் எடுக்காத இந்த மாதிரி விமானப் பயணங்களில் எதையும் சாப்பிடப் பிடிப்பதில்லை.  அதுவும் விலை கொடுத்து வாங்கி விட்டு, கொடுத்த விலைக்கு பத்தில் ஒரு பங்கு கூட மதிப்பில்லாத உணவைச் சாப்பிட நிச்சயம் பிடிக்கவில்லை!  மொத்தம் பத்தே பத்து சிப்ஸ் வைத்த டப்பாவினை கூசாமல் 150 ரூபாய்க்கு விற்கிறார்கள் - அதையும் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்! 


ஒரு வழியாக ஹைதையில் பதினைந்து நிமிட தாமதமாக விமானம் தரையிறங்கியது.  வெளியே வந்து பேருந்தில் ஏறிக் கொண்டு விமான நிலையத்திற்குள் வந்து, Arrival Lounge-லிருந்து, Transfers என்று போட்ட இடம் அருகே வந்து மின் தூக்கி வழி Departure Lounge வந்து சேர்ந்தேன்.  மீண்டும் Security Check Up முடித்து ஒரு வழியாக திருச்சி செல்லும் விமானத்திற்கான நுழைவாயில் அருகே வந்து அமர்ந்து கொண்டு வந்திருந்த மதிய உணவினை சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தேன்.  தில்லியிலிருந்து வீட்டிற்கு எதுவுமே வாங்கவில்லையே என நினைவுக்கு வர, சரி ஹைதையிலிருந்து எதாவது வாங்கிக் கொண்டு போகலாம் என விமான நிலையத்தில் சுற்றிவர, ஆந்திராவின் ஸ்பெஷல் இனிப்பான பூத்ரேக் போன்ற ஏதாவது கிடைக்கிறதா எனப் பார்க்க ஒன்றும் இல்லை! ஹல்திராம் மற்றும் மற்ற வட இந்திய நிறுவனங்களின் இனிப்பு, குக்கீஸ் போன்றவையும் சாக்லேட் போன்றவையும் மட்டுமே இருந்தது. ஒன்றிரண்டு அவற்றில் வாங்கிக் கொண்டு அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தேன்.  கூடவே அடிடா, சாத்துடா இளைஞரும் காத்திருந்தார் - அவர் சத்தமாக Mobile Game விளையாடுவதும் தொடர்ந்தது!  அவரும் நான் செல்லும் அதே திருச்சி விமானத்தில் தான் வருகிறார் என்று தெரிந்தது - ”எஞ்சாய் மாடி!” என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்! 


ஒரு வழியாக திருச்சி செல்லும் விமானத்தில் ஏறிக் கொள்ள விமானம் புறப்பட்டது! மீண்டும் ஜன்னல் ஓர இருக்கை - ஆனாலும், வழமை போலவே அதற்கு வேட்டு வைக்க என் அருகில் வந்த ஒரு பெண்ணின் குரல்! ”நாங்க இரண்டு பேர் சேர்ந்து வந்திருக்கோம்! உங்க சீட்டைக் கொஞ்சம் மாத்திக்கிறீங்களா?” அவர்கள் எனக்குக் காண்பித்த இருக்கை Aisle இருக்கை! நான் முன்பதிவு செய்திருந்ததோ ஜன்னலோர இருக்கை - நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்ற எனது எண்ணத்திற்கு வேட்டு வைக்கவே எப்போதும் இப்படி யாராவது வந்து விடுகிறார்கள்!  ஒண்ணே முக்கால் மணி நேர விமானப் பயணத்தில் கூட பிரிந்து இருக்க முடியாதா என்ன?  என்னவோ போடா… உனக்கு எப்போதும் அதெல்லாம் மாத்திக்க முடியாதுன்னு ஏண்டா சொல்ல வாய் வர மாட்டேங்குது? என்று என்னை நானே திட்டிக் கொண்டு, மாறி அமர்ந்து கொண்டேன்.  சில நிமிடங்கள் பேசிய பிறகு இருவரும் தூங்க ஆரம்பித்து விட்டார்கள்! இதற்கு, அவர்களுக்குக் கிடைத்த இருக்கையிலேயே தூங்கியிருக்கலாம்! என்னால் Aisle இருக்கையில் தூங்க முடியவே இல்லை!  சிறிய அளவு விமானம் என்பதால் கால்களை குறுக்கி வைத்துக் கொண்டு, வருவோர் போவோர் எல்லாம் இடித்துக் கொண்டு போக எப்படித் தூங்குவது! 


ஒரு வழியாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது விமானம்.  வெளியே வந்து Checked-In Luggage-ஐ பெற்றுக் கொண்டு வெளியே வந்து சேர்ந்தேன் - தமிழகத்தின் காற்றை ஸ்வாசிக்க மனதில் ஒரு மகிழ்ச்சி!  என்னதான் தில்லி பிடித்த ஊர் என்றாலும், அங்கே ஸ்வாசிக்கும் காற்றை விட, தமிழகத்தில் ஸ்வாசிக்கும் காற்று தான் பிடித்திருக்கிறது.  இறங்கிய உடனேயே ஏதோ ஒரு மாற்றம் மனதுக்குள் வந்து விடுகிறது.  காலை எட்டு மணிக்கு தில்லியில் புறப்பட்டது, இதோ மாலை ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தாயிற்று!  ஒரு குளியல் போட்டு, மனைவி செய்து தந்த உணவை உண்டு, பெரியம்மா, மனைவி மற்றும் மகளுடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு உறக்கம்!  நிம்மதியான உறக்கம்! இந்தப் பயணத்தில் சந்தித்த மனிதர்கள், பார்த்த விஷயங்கள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவை தொடர்ந்து வரும்!  இந்தப் பயணத்தின் மேலும் சில விஷயங்களைத் தொடர்ந்து வரும் பகுதிகளில் பார்க்கலாம்!  


பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்




வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


28 கருத்துகள்:

  1. பலதரப்பட்ட சுவையான அனுபவங்கள்.  விமானத்திலும் முகக்கவசம் அலட்சியம்...  கஷ்டம்!  ஜன்னலோர இருக்கைக்கு சற்று அதிக காசு கொடுத்துதானே முன்பதிவு செய்ததாகக் கூறினீர்கள்?  அதை ஏன் விட்டுக் கொடுக்கிறீர்கள்?  சதிலீலாவதியில் கமல் இடம் மாறி ரமேஷ் அருகே உட்கார்ந்து பேசி, தூங்கி செய்யும் அட்டகாசம் நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசு கொடுத்து முன்பதிவு - ஆமாம். பல சமயங்களில் நம்மால் முடியாது என்று சொல்ல முடிவதில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சுவையான அனுபவம்தான். எனக்கு என்னவோ இருக்கையை மாற்றப் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபங்கள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. இருக்கை மாற்றம் எனக்கும் பிடிக்காது - ஆனாலும், கேட்கும்போது முடியாது என்று முகத்தில் அடித்தாற்போல் கூற முடிவதில்லை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பயண அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயண அனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. மௌனம் பற்றிய பொன்மொழி உண்மை, ஆனாலும் சில சமயங்களில் மவுனம் தன்மானத்தை இழக்க வைக்கிறது. 

    அந்தமான் பயணத்திற்குப் பிறகு வேறு எங்கும் பயணம் செல்லாததால் சொந்த ஊருக்கு பயணம் செய்வதையும் சுஜாதாவின் லாண்டரி கணக்கு போல ஒரு பதிவு நிறைவு செய்து விட்டீர்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      லாண்டரிக் கணக்கு - :) மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கோபமே வராததால், சகிப்புத் தன்மை உங்களுக்கு அதிகம் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. இந்த மாதிரியான ஜாலியான பதிவுகளில் பின்னூட்டங்களில் யார் என்ன சொல்கிறார்கள் என்று வாசித்து அதன் மூலம் அவர்களின் மனப்போக்கைத் தெரிந்து கொள்வதில் இருக்கும் சுவாரஸ்யமே அலாதி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி ஜீவி ஐயா.

      நீக்கு
  7. “இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் விமானத்தில் பயணிக்கலாம் போலிருக்கிறது!”//

    ச்சே மட்டமான மனிதர்கள். இவர்களுக்கு வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் அல்லது இவர்கள் கூடப் பிறந்ததுங்க அல்லது இவர்களின் குழந்தைகள்....விலக்கி இருப்பார்கள்!!

    திருநங்கைகள் குடும்பத்திலும், சமூகத்திலும் விலக்கப்படுவதால்தான் அவர்கள் தவறான வழிகளில் செல்கிறார்கள். இதைக் குறித்து நான் முன்பு திருநங்கைகளை பேட்டி எடுத்து எங்கள் தளத்தில் போட்டிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மட்டமான மனிதர்கள் இங்கே நிறையவே இருக்கிறார்கள் கீதாஜி. அவர்களுக்கிடையே நாமும் இருந்து கொண்டிருக்கிறோம். வேறு வழியில்லை. உங்களுடைய முந்தைய பதிவு எனக்கும் நினைவில் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. உனக்கு எப்போதும் அதெல்லாம் மாத்திக்க முடியாதுன்னு ஏண்டா சொல்ல வாய் வர மாட்டேங்குது? என்று என்னை நானே திட்டிக் கொண்டு, மாறி அமர்ந்து கொண்டேன். சில நிமிடங்கள் பேசிய பிறகு இருவரும் தூங்க ஆரம்பித்து விட்டார்கள்! இதற்கு, அவர்களுக்குக் கிடைத்த இருக்கையிலேயே தூங்கியிருக்கலாம்! //

    ஆமா நீங்க முன்னாடியும் எழுதியிருக்கீங்க....ஹையோ ஜி!!!! இது எனக்கும் நடக்கும் நானும் மனதிற்குள் திட்டிக் கொண்டே மாற்றிக் கொடுபப்துண்டு. அதுவும் அவர்கள் தூங்கிக் கொண்டே...கடுப்பா இருக்கும்...ரயிலிலும் எனக்கு இதே அனுபவம் நிறைய உண்டு.

    ரயிலில் கூட ...இல்லைங்க எனக்கு வாமிட்டிங்க் வரும் என்று என் எதிரில் ஜன்னல் இருக்கையில் இருந்த்வர் சொல்லி விட்டுக் கொடுக்கவில்லை கடைசியில் நான் எழ வேண்டியதானது நமக்கு அப்படி எல்லாம் சொல்ல வருவதில்லையெ. ப்ளேனில் வாமிட்டிங்க் என்றும் சொல்ல முடியாதே ஹாஹாஹ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மை மாற்றிக் கொள்வது முடியாத விஷயமாக இருக்கிறது - அதிலும் குறிப்பாக அடுத்தவர்கள் ஏதேனும் இப்படிக் கேட்கும்போது முகத்தில் அடித்தது போல சொல்ல முடிவதில்லை கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இதில் நன்கு வாயையும், மூக்கையும் மூடிக் கொண்டிருந்த ஒரு பிரஹஸ்பதி, அதனை விலக்கி விட்டு இருமல்! ”அடேய்! ஏண்டா இப்படி?” //

    இதை நானும் கவனித்து வருகிறேன் வெங்கட்ஜி. மாஸ்கே அதுக்குத்தான் ஆனால் இவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். என்ன சொல்ல...

    வாசகம் அருமை பதிவிற்குப் பொருத்தம்..ரொம்பவே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி பலர் இங்கே இருக்கிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. உங்களது உள்ளூர்ப் பயணங்களிலும் உங்களுக்குச் சுவாரசியமான அனுபவங்களைச் சுவைபடக் கொடுக்க முடிவதற்குக் காரணம் கவனிப்பும் உங்களின் எழுத்துத் திறனும் தான் காரணம்.

    வாசகம் ரொம்பவும் உண்மை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவும் விமான பிரயாணத்தைப் பற்றி சொன்னவிதமும் அருமையாக இருக்கிறது. இப்போது தீநுண்மி முற்றிலும் விலகி இருப்பது போல் அனைவரும் காட்டிக் கொண்டாலும்,முக கவசத்தை சரியான முறையில் போடாமல் இருப்பது தனக்கும், பிறருக்கும் ஆபத்தை விளைவித்தால் என்ன செய்வது என்ற பயம் அனைவருக்கும் போய் விட்டது போலும்...! எப்படியோ தொற்றும் இதற்கு பயந்து உலகை விட்டு ஓடினால் சரிதான்.

    அமர்ந்திருந்த உங்கள் இடத்தை விட்டுக் கொடுத்து இருப்பதில் உங்கள் பெருந்தன்மை தெரிகிறது. அதை நகைச்சுவையாய் நீங்கள் சொன்ன விதம் அருமை. சிலர் இப்படித்தான்.. பிடிவாதமாக இடத்தை கேட்டு வாங்கி அனுபவிப்பது.. ரயிலில், பஸ்ஸில்தான் இந்த மாதிரி சம்பவங்கள் இயற்கையாய் நடக்கும் என்றால் விமானத்திலுமா..? பிரயாணத்தை ரசித்து அனுபவித்து எழுதியுள்ளீர்கள். நானும் உங்களுடன் ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  12. வாசகம் அருமை. அமெரிக்கா வந்த போது நானும், மகனும் நடுவில் மாட்டிக் கொண்டோம் நடுவில் அமர்ந்தால் வெள்ளை அங்கி அணிய வேண்டும். மகன் பின் பக்க இருக்கையில் நடுவில். நான் முன் பக்க இருக்கையில் நடுவில்.

    ஒற்றையாக பயணம் செய்யும் போது இப்படி நிகழும்தான்.(மாற்றி அமர சொல்வது)


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நடு இருக்கை எனக்கு பிடிப்பதே இல்லை. பொதுவாக நடு இருக்கை வேண்டாம் என சொல்லி விடுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அன்பின் வெங்கட்,

    சாதாரண விமானப் பயணத்தை உங்களுடைய
    பொறுமையும் சகிப்புத் தன்மையும்

    நகைச்சுவையாக மாற்றித் தருகிறது.

    சிங்கத்துக்காக நாங்கள் முன் சீட்டைப் பதிவு செய்து விடுவோம்.
    சிலசமயம் குழந்தையுடன் வரும் தாயார்களுக்காக
    விட்டுக் கொடுத்து விடுவார்.
    அவர் சிரமப் படுவதைப் பார்த்தே நாங்கள் கடைசியில் அமெரிக்கப்
    பயணத்தை ஒத்தி வைத்தோம்.

    அராஜக மனிதர்களை எங்க்கும் சந்திக்கலாம்
    போல இருக்கிறது.

    திரு நங்கைகளைப் பழிப்பவர்கள் மேல்
    நாம் சினந்து பயன் இல்லை.
    வாயில்லாத பிராணிகளை வதைப்பவர்கள் போகத்தான் அவர்களும்.

    அருமையான பதிவுக்கு நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயரமானவர்களுக்கு இடைவெளி (Leg Space) குறைவாக இருக்கும் இருக்கைகளில் அமர்வது மிகவும் கடினம் தான் வல்லிம்மா. நானும் அவதிப்படுவதுண்டு.

      பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. பயணம் குறித்த இந்தப் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....