அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : மகிழ்ச்சிக்கென ஒரு தினம்
எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. அந்த நாட்களும் மகிழ்ச்சியான நாட்களாக அமைவதும் நம் கையில் தான். அவ்வப்போது நமது மகிழ்ச்சியில் அடுத்தவர்களால் சில குறுக்கீடுகள் வந்தாலும், அதனைக் கடந்து மகிழ்ச்சியுடன் இருப்பதும் நம் கையில் தான் - கொஞ்சம் கடினமான விஷயமாகவே இது இருந்தாலும், நம் மகிழ்ச்சி நம் கையில் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சரி எதற்காக இந்த எண்ணம் இன்று? இந்த வாரம் இணையத்தில் உலா வந்தபோது, நேற்றைய தினம், அதாவது 20 மார்ச் நாளை International Day of Happiness என்று கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்தது. மகிழ்ச்சி எனும்போது சிரிப்பு எத்தனை கவர்ச்சிகரமானது என எனக்குத் தோன்றும். சிரித்தபடி இருக்கும் சிலரை நிழற்படங்களாக நானும் எடுத்ததுண்டு. அவற்றை இங்கே இணைக்க நினைத்தேன் - ஆனால் எதற்கு அதைத் தேடவேண்டும் என்று சொல்வது போல ஒரு தொகுப்பு கிடைத்தது - Flickr பக்கத்தில்! பாருங்களேன். மேலே இணைத்திருக்கும் படம் கூட அந்தப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதே!
எல்லோரும், ஒரு நாள் மட்டுமல்ல, எல்லா நாட்களும் மகிழ்வுடன் இருக்க, எல்லாம் வல்லவன் துணையிருக்கட்டும்….
******
இந்த வாரத்தின் வாகன வாசகம் : நோ ஓசி
பல சமயங்களில் அடுத்தவர்களின் வாகனங்களில் இருக்கும் வாசகங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கும். கடந்த வியாழனன்று எனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது என்னைக் கடந்த ஒரு பைக்கின் பின்புறத்தில் எழுதியிருந்தது - மூன்று இளைஞர்கள் விர்ரென்று பறந்து சென்றார்கள் - அந்த வேகத்திலும் அந்த பைக்கில் எழுதி இருந்ததை படிக்க முடிந்தது! அந்த வாசகம் இது தான்…
150 CC
No OC
இரண்டே வரிகள்! மொத்தமாக ஒன்பது எழுத்துக்கள் மட்டுமே! ஆனாலும் ஒரு விஷயத்தினைக் கடத்தும் விதமாக எழுதப்பட்ட வரிகள்! அதைப் பார்த்ததும் எனது சிந்தனை பலவிதமாக ஓடியது! எழுதிய இளைஞரும், அவர்களது வீட்டினரும் அரசாங்கம்/கட்சிகள் தரும் இலவசங்களைப் பெறுவார்களா, இல்லை வேண்டாம் என்று சொல்வார்களா? அதுவும் தேர்தல் சமயம் வேறு! பல கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை மாற்றி மாற்றி அறிவித்துக் கொண்டிருக்கிறார்களே! அவற்றுக்கு அடிமையாக இருக்கும் நம் பொதுஜனத்தில் அங்கம் வசிக்கும் நபர்கள் தானே இந்த பைக் ஓட்டும் இளைஞரும் அவரது குடும்பமும்? என்னென்னமோ சிந்தனைகளுடன் தான் அன்றைய பயணம் அமைந்தது! அது சரி இலவசம் இன்னும் சில நாட்களுக்கு நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கப்போகிறது! அதையும் கேட்டுத்தான் ஆக வேண்டும் - வேறு வழியில்லை!
******
பழைய நினைப்புடா பேராண்டி : காதிற்கு ஒரு பூட்டு
2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - காதிற்கு ஒரு பூட்டு... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. தலைநகர் தில்லியில் ஒரு சமயம் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம். அந்த சமயத்தில் கிடைத்த அனுபவங்கள் குறித்து வெளியிட்ட ஒரு பதிவு. அந்தப் பதிவு இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக!
தனியாக பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து கூர்ந்து [எதைப் பார்த்தாலும் பிளாக் எழுத ஏதாவது தேறுமான்னு பார்க்கத் தோன்றுவது தப்போ?] கவனித்தபோது நடந்தது இது தான்.
தாடியை தடவியபடி அவர் பேசியது “ம்ம்… சொல்லுங்க, நல்லா கேக்குது… ஓவர் [கையில் வாக்கி டாக்கி இல்லை]. பூமியில் ரொம்ப அநியாயம் தான் நடக்குது ஓவர். மழை, வெயில், குளிர் என மாறி மாறி ரொம்ப கஷ்டப்படறாங்க மக்கள். நீங்களும் கைலாசத்தில் இருந்து கொண்டு ஒன்றுமே கவனிக்க மாட்டேங்கறீங்க! ஓவர். என்னது சீக்கிரம் வரீங்களா? வாங்க – அது தான் நல்லது. நீங்க வருகிற வரைக்கும் நான் உங்க சார்பா எல்லாம் பார்த்துக்கிறேன் இங்கே… ஓவர். [இடையில் பக்கத்தில் அதிர்ந்துபோய் அமைதியாய் அமர்ந்து இருக்கும் ஒரு பெண்ணிடம், “என்ன? ஒண்ணும் கவலைப்படாதீங்க! எல்லாம் நான் பார்த்துக்கிறேன்! என்று வீர வசனம் வேறு!] திரும்பவும் இல்லாத வாக்கி-டாக்கியில் “ம். என்ன சொல்றீங்க, ஒழுங்கா கேட்கல… சிக்னல் சரியா இல்லை. ம். இப்ப கேட்குது. எப்ப வருவேன்னு சொல்லுங்க அடுத்த தடவை. எனக்கு இப்ப கொஞ்சம் வேலை இருக்கு, என் இருக்கை யாருக்கோ வேணுமாம். நான் இறங்கறேன்” என்று அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மறைந்து போனார். ஆனால் அவர் ஏற்படுத்திய அதிர்வு மட்டும் இன்னும் மறையாமல் என்னுள்.
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் சிறுகதை : தூண்டில் மீன்கள்
வறுமை மிகவும் கொடியது…. சிற்றூரில் இருக்கும் ஒரு குடும்பம்… அந்த ஊரில் இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலையால் நீர் நிலைகள் பாழாவது குறித்துச் சொல்ல ஆரம்பித்து, மீன்பிடிப்பது, வீட்டுச் சிக்கல்கள் என பல விஷயங்களைச் சொல்லிச் செல்லும் விதமாக இருக்கும் ஒரு சிறுகதை தான் தூண்டில் மீன்கள். சொல்வனம் தளத்தில் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் என்பவர் எழுதியிருக்கும் சிறுகதை. சிறுகதையிலிருந்து சில வரிகள் கீழே!
“இனியும் எத்தன காலத்துக்கு மாடு மாரி ஒங்க குடும்பத்துக்கு என்ன வேல செய்யச் சொல்றீங்க? இத்தன வருசமா மல்லுக்கட்டுனது போதும்ங்க. வேல செஞ்சு சலிச்சு வந்தா நிம்மதியா படுக்கக் கூட எடமில்ல. வாசல்ல வந்து நாயி மாரி படுக்க வேண்டியிரிக்குது” வருத்தமும் கோபமுமாக மும்தாஜ் வெடித்து புலம்புவதை மௌனமாக கேட்டுக்கொண்டிருப்பான் மசூது. அப்போது மனைவியைப் பார்க்க அவனுக்கு பாவமாக இருக்கும். இப்படியாக வேறுவழியில்லாமல் தனிக்குடித்தனம் போயே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டு .தரவாட்டிலிருந்து மனமே இல்லாமல் குடும்பத்துடன் வெளியேறி பாலக்காடு ரோட்டோரத்தில் இருந்த ஒரு குடிசை வீட்டில் குறைந்த வாடகைக்கு குடிபெயர்ந்தான் மசூது.
புளி பழுக்கும் காலங்களில் புளி அடிப்பதையும், மாங்காய் காய்க்கும் காலங்களில் மாங்காய் பறிப்பதையும் தொழிலாகக் கொண்ட கண்ணுக்குட்டி வீட்டு செய்தண்ணனுடன் அசன்ராவுத்தரும் சில சமயங்களில் அவர்களுடன் மீன் பிடிக்கச்செல்வார். சிறுவனாக இருந்த மசூதும் அப்போது வாப்பாவுக்கு துணையாக செல்வான். செய்தண்ணனின் வயதை ஒத்த அவரின் நண்பர்கள் நாலைந்து பேர் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்று சேர்ந்து மீன் பிடிக்கப் போவார்கள். இவர்கள் ஒரு வாரம் ஆற்றிலும் ஒரு வாரம் குளத்திலும் மீன் பிடிப்பதை ஒரு வழக்கமாகவும் பொழுது போக்காகவும் கொண்டிருந்தார்கள்.. வாரந்தவறாமல் இதை கடைபிடிப்பார்கள். பிடிக்கும் மீன்களை பங்கு பிரித்துக் கொள்வார்கள்.
ஒரு கட்டத்தில் அசன்ராவுத்தர் அவர்களுடன் மீன் பிடிக்கப் போவதை நிறுத்திக்கொண்டார். மசூது மட்டும் ஆர்வமுடன் அவர்களுடன் செல்ல ஆரம்பித்தான். சில சமயம் இரவுகளில் மொய்மீன் (விலாங்கு மீன்) பிடிக்கச் செல்லும்போது லாந்தர் விளக்கு பிடிக்க வேண்டி மசூதையும் அழைத்துக் கொள்வார்கள். கரிய இரவின் இருட்டில் ஆற்றின் சரிவில் அவர்களுடன் பயந்தபடியே மெல்ல இறங்குவான். ஆற்றுக்குள் இறங்கியதும் சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கும் ஒரு பெரிய இருட்டுப் பள்ளத்திற்குள் மாட்டிக்கொண்டதாக அவனுக்குத் தோன்றும்.
முழுக்கதையும் கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!
தூண்டில் மீன்கள் – சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
******
இந்த வாரத்தின் வேதனை : தேர்தல் வாக்குறுதிகள்
தமிழகத்தில் தேர்தலுக்கான நாளை அறிவித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் - அதுவும் ஊர் பேர் தெரியாத கட்சிகள், தன் சின்னத்தில் தேர்தலில் வாக்குக் கேட்க முடியாத கட்சிகள் கூட விதம் விதமான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்! அதுவும் அவர்கள் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும் வாக்குறுதிகளையும் அள்ளி வீசுவதைப் பார்த்தால் சிரிப்பதா, அழுவதா என்று தான் இருக்கிறது. கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகு தேர்தல் சமயத்தில் இங்கே இருக்கிறேன். பெரிதாக அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது என்றாலும் கூட, இந்த அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் பேசுவதைக் கேட்கும்போதும், சொல்வதைப் படிக்கும்போதும் வேதனை தான் மிஞ்சுகிறது! ஒருவர் இரயில்வே துறையை தமிழக அரசே நிர்வகிக்கும் என்று சொன்னால், இன்னொருவர் கவர்னரே இல்லாத மாநிலமாக நமது மாநிலம் திகழும் என்கிறார்! இவங்க எல்லார் கிட்டயும் சிக்கிச் சின்னாபின்னமாகும் நம்மை நினைத்தால் நமக்கே கவலை தான் வரும்!
******
இந்த வாரத்தின் விளம்பரம் - வேகம் விவேகமல்ல :
தாய்லாந்து விளம்பரங்களைத் தேடித் தேடிப் பார்ப்பது வழக்கம். சில விளம்பரங்கள் மனதைத் தொடும் விதத்தில் இருந்தால், சில விளம்பரங்கள் நம்மை புன்னகைக்க வைக்கும் விதமாக இருக்கும். அவற்றிலும் கூட ஒரு செய்தி இருக்கும். கிடைக்கும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு செய்தியைக் கடத்துவது என்பது மிகப் பெரிய வேலை. அந்த வேலையைச் சரியாகச் செய்து முடிப்பதற்குப் பின்னால் எத்தனை உழைப்பிருக்கும் என்று நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. வேகம் விவேகமல்ல என்று நாம் எப்போதும் படிக்கிறோம். வேகமாகச் செல்வதால் எரிபொருளும் அதிகம் செலவாகிறது என்பதைச் சொல்லும் இந்த விளம்பரம் - உங்களுக்கும் பிடிக்கலாம்! பாருங்களேன்….
******
இந்த வாரத்தின் நிழற்படம் - முகம் :
எங்கிருந்து தான் இந்தப் படங்களைப் பிடிக்கிறார்களோ என்று சொல்ல வைக்கும் விதத்தில் சில படங்கள் இருக்கும். அப்படியான படங்களைப் பார்த்ததும் அதனைப் பகிர்ந்து கவிதைகள் எழுதி பகிர்வார்கள் சிலர். நமது பதிவுலகத்தில் விமலன் அவர்கள் அப்படி நிறைய படங்களுக்கான கவிதைகளும் கதைகளும் எழுதியதுண்டு. நண்பர் பத்மநாபனின் உறவினரான திரு ராஜேஷ் சங்கரபிள்ளை கூட இப்படியான படங்களை வெளியிட்டு அதற்கான எழுதி அவரது முகநூல் பக்கத்தில் வெளியிடுவார். சில படங்களும், கவிதைகளும் பிடித்த வண்ணம் இருக்கும். சில படங்கள் பார்த்தவுடன் நமது எண்ண அலைகளை ஓட விடும் அளவிற்கு இருக்கும். சமீபத்தில் அப்படி பார்த்த ஒரு படம் தான் மேலே இருக்கும் படம்! இந்தப் படம் பல வித எண்ணங்களை எனக்குள்ளே எழுப்பிப் போனது! இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? சிறு குறிப்பாகவோ அல்லது ஒரு கவிதையாகவோ பின்னூட்டத்தில் எழுதுங்களேன்!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
21 மார்ச் 2026







படம் என்னவாயிருக்கும் என யோசிக்க வைத்தது.
பதிலளிநீக்குபிறகுதான் சிறுவனில் வளர்ப்பு ஆடு மேல் உள்ள பாசம் புரிந்தது. நல்ல ஓவியம் போன்ற படம்.
தேர்தல் பரப்புரை... இதுக்கே அலுத்துக்கிட்டா எப்படி? சிலின்டர், பெட்ரோலை தமிழக அரசே நேரடியாக இறக்குமதி செய்து பெட்ரோல் 70 ரூபாயிலும் சிலிண்டர் 200 ரூபாயிலும் விற்பனை செய்வோம். கவர்னர் மாளிகை இடத்தை, சமத்துவ அரசு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக வளாகமாக மாற்றுவோம், வருடத்திற்கு இருநூறு அரசுப் பள்ளி மாணவர்களை, வெளிநாட்டுக் கல்வி படிக்க அனுப்புவோம், மாவட்டங்கள் தோறும் விமான நிலையம் அமைத்து அரசே விமானம் நடத்த முயல்வோம்.... இந்த லிஸ்ட் போதுமா?
பதிலளிநீக்குமக்களும், நீ எதையும் செஞ்சு கிளிக்க வேண்டாம், ஓட்டுப் போட இப்போ எவ்வளவு பணம் தருவ? அதைச் சொல்லும்பாங்க. வேற என்ன எதிர்பார்க்க முடியும் தமிழகத்தில்?
பதிலளிநீக்கு