வியாழன், 30 ஏப்ரல், 2026

தூக்கம் கண்களை தழுவட்டுமே - பகுதி இரண்டு - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட, மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் தொடரின் பகுதியான அடர் இருளில் காட்டுப்பாதையில் ஒரு திக் திக் பயணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.



*******


இன்றைக்கு, கடந்த செவ்வாய் அன்று வெளியிட்ட பத்மநாபன் அண்ணாச்சியின் பதிவின் தொடர்ச்சி - இரண்டாம் பகுதியாக. ஓவர் டு பத்மநாபன் அண்ணாச்சி - வெங்கட் நாகராஜ். 


தூக்கம் கண்களை தழுவட்டுமே - இரண்டாம் பகுதி - பத்மநாபன்


என்ன நல்ல தூங்கினீங்களா?  என் தூக்கம் பத்தி தொடர்ந்து பாக்கலாம் வாங்க! இது ஒரு எலக்சன் சமயத்துல நடந்தது. இத இப்ப சொல்லாட்டா எப்போ சொல்லுகது. ஆனா இதுவும் பழைய கதைதான். அதாவது இந்த வோட்டிங் மெஷின்லாம் வருகதுக்கு முந்தின கதை. வாக்குச்சீட்டுல நச் நச்சுன்னு ஓட்டு போட்ட காலம். 1996 ஜெனரல் எலக்சன். கூடவே தமிழ் நாடு எலக்சனும் நடந்தது. 


எனக்கு நல்ல வேளையா எலக்சன் டூட்டி போடல்லன்னு ஜாலியாத்தான் இருந்தேன். ஆனா அந்த ஜாலிக்கு ஆப்பு வச்ச மாதிரி கவுண்டிங் டூட்டி போட்டுப் போட்டாம்லா. கவுண்டிங் டூட்டி அது வரை பண்ணியது இல்ல. எலக்சன் டே டூட்டியை விட நல்லாத்தான் இருக்கும். கிழக்கு தில்லி தொகுதியோட கவுண்டிங் டூட்டி. பிரகதி மைதான்ல வச்சுத்தான் கவுண்டிங். எங்க டீம்ல மொத்தம் அஞ்சு பேருன்னு நினைக்கேன். எங்க டீம் லீடர் குப்தாஜி ஒண்ணு ரெண்டு வருஷத்துல ரிட்டயர் ஆகப் போறவரு. மற்ற நாலு பேரும் இளைஞர்கள்தான். 


அப்பல்லாம் கவுண்டிங் ரெண்டு நாளா  நான்-ஸ்டாப்பா நடக்கும். சுத்தி ஜெயில் மாதிரி கம்பி போட்டு உள்ள போட்டுருவாங்க. முழு கவுண்டிங்கும் முடிஞ்சப்புறம்தான் வெளியில போக முடியும். நல்ல சாப்பாடெல்லாம் தருவாங்க. அந்த தொகுதில அப்போ 63 பேரு எலக்சனுக்கு நின்னாங்க. அதனால வாக்குச்சீட்டு ஒரு நியூஸ் பேப்பர் அளவுக்கு இருக்கும். எங்க கவுண்டிங் ஏரியாவில மொத்தம் 12 டீம். யார் யாருக்கு எந்த பூத் வாக்குப் பதிவுன்னு தெரியாம இருக்கதுக்கு ஒவ்வொரு வாக்குபெட்டியையும் முறையா திறந்து அதுல உள்ள வாக்குச்சீட்டெல்லாம் எடுத்து பண்டில் ஆக்கி ரப்பர் பேண்ட் போட்டு தனித் தனி கட்டுகளாக்கி எல்லாக் கட்டுகளையும் ஒரு இடத்துல சேத்து ஒரு மிக்ஸிங். அப்புறம் பண்டில் பண்டிலா கவுண்டிங் டேபிளுக்கு அனுப்புவாங்க. நாங்க எல்லாத்தையும் பிரிச்சு முத்திரை குத்தின வாக்குச்சீட்டை அதுக்குரிய பெட்டியில போடனும். நாங்க சரியா பொடுறோமா இல்லையான்னு கம்பிக்கு அந்தப் பக்கமா நின்னு கட்சி ஏஜென்ட் பாத்துகிட்டு இருப்பான். 


ஃபர்ஸ்ட் ரவுண்டு ஆரம்பிச்சு எண்ணத் தொடங்கினோம். நல்ல உற்சாகமா இருந்துச்சு. ரவுண்டு ஆரம்பிச்சாலே உற்சாகம்தானே. அதுக்கேத்த மாதிரி கொஞ்ச நேரத்தில பேப்பர் பிளேட்டில் ஒரு சமோஸா கொஞ்சம் ஆலு சிப்ஸ் கொண்டு வச்சாங்க. ரவுண்டுன்னு வந்துட்டாலே சைடு டிஷ் இருக்கணும்லா. அப்படி இப்படின்னு ஒரு மூணு ரவுண்டு முடிஞ்சு போச்சு. மத்தியானம் ஒரு மூணு மணி இருக்கும். எங்க குப்தாஜி ஒரு வாக்குச்சீட்டை விரிச்சு வச்சிகிட்டு பாத்துக்கிட்டு இருக்காரு. ஒரு அங்கு நிமிஷமாச்சு, பது நிமிஷமாச்சு அந்த வாக்குச்சீட்ட கீழ இறக்க மாட்டாங்காரு. என்னன்னு பாத்தா மனுஷனுக்கு உண்ட மயக்கம். வாக்குச்சீட்ட பாக்க மாதிரி முகத்த மறைச்சுக்கிட்டு மனுஷன் ஒரு குட்டி தூக்கம் போடுகாரு. 


இன்னும் ரெண்டு மூணு ரவுண்டு முடிஞ்சது. ராத்திரி ஆயாச்சு. அப்பவும் நாங்க கண்ணயராம வேலையைப் பாத்துகிட்டு இருக்கோம். அடுத்த நாள் காலையில கிடைச்ச கேப்புல போய் பல்லு கில்லு எல்லாம் தேய்ச்சு முடிச்சு அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சுட்டோம். அப்போ இன்னும் ரெண்டு மூணு டேபிள் தள்ளி இருந்த டீம்ல இருந்த தல ஸ்ரீபதி ஓடி வந்து ஜெயலலிதா தோத்துப் போய்ட்டாங்களாம் தெரியுமான்னாரு. அப்படியா ஆன்னு வாயப் பொழந்த என்னப் பாத்து ஒரு சிரி சிரிச்சுகிட்டு அவரு அவரோட டேபிளுக்கு போய்ட்டாரு. அதனாலதான் எனக்கு வருஷம் ஓர்மையில இருக்கு.


இன்னும் ஒரு ரெண்டோ மூணோ ரவுண்டுதான் மீதி இருக்கு. ஆனாலும் முடிய மத்தியானம் ஆயிரும். எனக்கு கண்ணு கறங்கிகிட்டு வருகு. அப்படி இப்படின்னு கடைசி ரவுண்டு வரைக்கும் சமாளிச்சிட்டேன். எல்லாம் எண்ணி முடிச்சாலும் உடனே கிளம்பி போயிட முடியாது. எல்லாம் ஃபைனல் பண்ணி டிக்ளேர் பண்ணியதுக்கு அப்புறம் தான் நம்மள ரிலீஸ் பண்ணுவாங்க. எப்படியும் இன்னும் ஒரு மணிக்கூர் ஆயிரும். எனக்கோ உறக்கம் கன்ட்ரோல் பண்ண முடியல. நான் அப்படியே கொஞ்சம் நழுவி கொஞ்சம் தள்ளியிருந்த ஒரு டேபிள் மேல போய் கட்டய நீட்டிட்டேன். இன்னும் கொஞ்சம் பேரும் ஏற்கனவே கட்டய நீட்டியிருந்தாங்க. நல்ல உறக்கம். சுத்தி என்ன நடக்குன்னு தெரியலை. அப்படி ஒரு உறக்கம். யாரோ எழுப்புற மாதிரி இருந்தது. அந்த புண்ணியவான் யாருமில்ல, எல்லாரும் போன பிறகு அந்த இடத்த கூட்டி பெருக்குவதுக்கு வந்த தூய்மை பணியாளர்தான். சுத்தி முத்தி பார்த்தா இன்னும் ஒன்னு ரெண்டு தூய்மை பணியாளர்கள் அவங்க அவங்க வேலைய பார்த்துக்கிட்டு இருந்தாங்க. என் கூட இருந்த என் டீம் புண்ணியாத்மாக்கள் ஒருத்தரையும் காணல்ல. என்னை காணாததால நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன்னு நினைச்சுகிட்டு அவங்களும் கிளம்பிட்டாங்க போல. நான் அந்த பிரகதி மைதான் ஹாலில் அம்போன்னு கிடந்திருக்கேன். என்னத்த சொல்ல. எனக்கு அன்னைக்கு அம்போன்னு ஆன்னு வாயை பொளந்து கிடந்து உறங்கணும்னு இருந்திருக்கு.


அய்யோ! அய்யய்யோன்னு ஒரு படத்துல சிங்கமுத்து வடிவேலுவப் பாத்து ஓடின மாதிரி நீங்களும் ஓடப் பாத்தா எப்படி! இன்னும் ஒண்ணு இருக்கு. லாஸ்ட் அண்ட் ஃபைனல். அதையும் சொல்லி முடிச்சிருகேன். இதுவும் விவேகானந்தா கேந்திரா சமயத்துல நடந்ததுதான். அப்போ என்னோட நாலாவது அக்காவை அவளோட ரெண்டாவது பிரசவத்துக்கு நாகர்கோயிலில லதா ஹாஸ்பிடலில சேர்த்திருக்கு. நல்ல ராசியான ஆஸ்பத்திரி. எங்க அம்மாவுக்கு கடைசி பிரசவம் அங்கதான. அதனால எனக்கு அந்த ஆஸ்பத்திரி என்னோட ஆறு வயதுலயிருந்தே பழக்கமுல்லா! 


ஒரு நாளைக்கு கேந்திரா ட்யூட்டி முடிஞ்சு  ஒரு நாள் லீவில ஊருக்கு வருவதா பிளான். ஆனா அன்னைக்கு கேந்திரா டூட்டி முடிய ரொம்ப நேரமாயிற்று. வள்ளியூர்லேயிருந்து பஸ் ஏறும்போது மணி பத்துக்கு கிட்ட ஆச்சு. நாகர்கோயிலில் இருந்து எங்க ஊருக்கு லாஸ்ட் பஸ் பத்தரைக்கு. நாகர்கோயில் வந்து சேரும் போது மணி பத்தே முக்கால் ஆகிப் போச்சு. அப்புறம் எங்க போட்டு கடைசி பஸ்ஸை புடிக்கது. ஊருக்கு நடந்தும் போக முடியாது. பத்து கிலோ மீட்டரு. அப்படியே ராத்திரி ஒத்தைக்கு நடந்துட்டாலும் கோணம் தாண்டியாச்சுண்ணா ஆளரவம் இருக்காது. கொஞ்சம் தள்ளி தம்மத்துக்கோணம் தாண்டி சுடலைமாடன் கோயில் தாண்டுகத்துக்கு முன்னாலேயே கால் வழியா ஒண்ணுக்கு போயிறாதக்கும். 



படம்: நன்றி AI....

(அனாதைப் பிள்ளை வார்த்தை பார்த்து, சின்ன வயது படம் தந்திருக்கு போல!)

ஆனா அன்னைக்கு ஆண்டவன் நம்ம பக்கமுல்லா. லதா ஆஸ்பத்திரியில எங்க அக்கா இருக்கால்லா. வுடு நடராஜா வண்டியை லதா ஆஸ்பத்திரிக்கு. ரெண்டு கிலோ மீட்டர்தான். அங்க போய் சேரும் போது மணி பதினொன்னு தாண்டியாச்சு. கேட்டுல வேற செக்யூரிட்டி நிப்பாரு. என்னா ஏதுன்னு கேட்கதுக்கு வாய்ப்புண்டு. ஆனா பாருங்க, நான் போகும் போது அவரு கொஞ்சம் தள்ளி ரிசப்ஷன் பக்கம் யாரு கிட்டயோ சுவாரசியமா பேசிக்கிட்டு நிக்காரு. நான் அவர கண்டுக்காம வார்டு இருக்கும் பிளாக் பக்கமா போய் ஃபர்ஸ்ட் ப்ளோர்ல ஏறி மூணாம் நம்பர் ரூமுக்கு போனா ரூம் வெளியில கொண்டி போட்டு இருக்கு. ஆமா, எங்க அக்கா அன்னைக்கு சாயங்காலமே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போயாச்சு. அப்பல்லாம் இந்த செல் போன் மட்டும் இருந்துன்னா விவரம் தெரிஞ்சுருக்கும். ஆனா, இல்லயே. சரி, இப்போ என்ன செய்ய. ரூமுக்கு வெளியில இருந்த வராந்தாவுல நம்ம ஜோல்னாப் பையிலேயிருந்து துண்ட எடுத்து விரிச்சு சிவனேன்னு படுத்தாச்சு. என்ன ஒரு வசதின்னா, அந்த வரிசையில இன்னும் அஞ்சாறு ரூம்ல ஆள் இருந்ததால அதுல உள்ள ஆட்களும் அந்த வராந்தாவுல படுத்திருந்தாங்க. அதனால நானும் அந்தக் கணக்குல சேர்ந்துட்டேன். அடுத்தநாள் காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எந்திச்சு மூச்சுக் காட்டாம வெளியில வந்து மொத பஸ்ஸை பிடிச்சு வீடு வந்து சேர்ந்தேன். ஆனா இந்த விஷயத்தை எங்க வீட்டுல இது வரை சொல்லலியே. சொன்னா சமயம் கிடைக்கும் போதெல்லாம் என் அக்காமாருங்க ஒன்னு சேர்ந்து மானத்த வாங்கிருவாங்க. என்ன செய்ய, அன்னைக்கு அனாதைப் பிள்ளை மாதிரி ஆஸ்பத்திரி வராந்தாவுல பள்ளி கொள்ளணும்னு இருந்திருக்கு.


ஏதோ பதிவு தேறுதுன்னு பல ரகசியங்களை சொல்லிட்டேன். இப்ப இந்த பதிவை என் பொண்டாட்டி படிக்காம பாக்கணும். படிச்சா கிடைக்க சந்தர்ப்பத்திலேயெல்லாம் நல்ல ஒரு டீசென்ட்டான குடும்பத்திலேயிருந்து வந்த என்ன இப்படியெல்லாம் நடுத்தெருவுல உருண்டு கிடந்த ஒரு புண்ணியாளனை கட்டி வச்சுட்டாங்களேன்னு கதறுவாளே! அப்புறம் எங்களுக்குள்ளே அடிக்கடி வரும் சௌந்தர்ய பிணக்கு எல்லாம் சவுண்ட்டர்ய பிணக்கா போயிருமே. அதனால இந்த பதிவ பற்றி என் பொண்டாட்டிகிட்ட போட்டுக் கொடுத்துறாதீங்க.


வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை….


நட்புடன் 


பத்மநாபன்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

30 ஏப்ரல் 2026


5 கருத்துகள்:

  1. ரவுண்டுன்னு வந்தாலே சைட் டிஷ்... சந்தோஷம்.. ஹா.. ஹா.. ஹா...

    பதிலளிநீக்கு
  2. ரசனையான சம்பவங்கள்தான்..  நினைவுகள் தூங்கவில்லை பாருங்க..!  அலலது தூங்கிய நினைவுகளை தட்டி எழுப்பிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  3. தூங்கிய நினைவுகளை கனாப் போல மறந்துடாம நினைவில் வச்சிருக்கீரே. கில்லாடிதாம் போங்க

    பதிலளிநீக்கு
  4. அப்போ ஜெயல்லிதா தோக்க மாட்டாருன்னு நினச்சதுக்கே உமக்கு ஒரு பரிசு கொடுக்கணும், புலம் பெயர்ந்து அயர்ந்த தமிழர்னு.

    பதிலளிநீக்கு
  5. பிரம்மாண்டமான பிரகதி மைதானில் தூங்கிய அனுபவமும், ஆஸ்பத்திரியில் கூட்டத்தோடு கூட்டமா தூங்கினதும் ...ஹா..ஹா..ஹா. அப்படிப்பட்ட தூக்கம் கிடைப்பதும் வரம்.

    பதிவு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....