திங்கள், 20 ஏப்ரல், 2026

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - அனுசுயா தேவி - ஒரு சிறு கிராமம் - பகுதி பதினொன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி அறுபத்தி ஏழு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



அழகிய பிள்ளையார்....

சென்ற பகுதியில் சொன்னது போல தொடர்ந்து எங்கள் நடைப்பயணத்தில் கிடைத்த அனுபவங்களை மேலும் பார்க்கலாம். ஷிலாலேக் எனும் கல்வெட்டுகளை பார்த்த பிறகு தொடர்ந்து நடந்தால் நாங்கள் அடுத்ததாகப் பார்க்கக் கிடைந்தது விநாயகர்!  விநாயகர் எங்கேயும் கொண்டாடப்படுபவர் என்பதோடு எந்தப் பொருளைக் கொண்டும் வடிவமைத்து விடலாம் - வணங்கலாம் என்பதால் எல்லா இடங்களிலும் நமக்காகவே காட்சி தருகிறார்.  அந்த அத்துவான மலைப்பகுதியிலும் கூட எங்களுக்காகவே காத்திருந்தார் அந்த செஞ்சிவப்பு விநாயகர்.  சற்றே பெரிய உருவம் கொண்டு, ஒரு சிறு கூரையின் கீழே அமைக்கப்பட்ட அந்த விநாயகர் சிலைக்கு அருகே ஒரு குடும்பம் - உள்ளூர்வாசி தனது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். விநாயகரிடம் ஹலோ சொல்லி மனதுக்குள் கொஞ்சம் அளவளாவினோம். விநாயகரிடம் பேசி முடித்த பிறகு அங்கே அமர்ந்திருந்த குடும்பத்தினரிடமும் பேசினோம்.  ஹாய் ஹலோ என்று சொல்லி பேச ஆரம்பித்தால் உள்ளூர் வாழ்க்கை குறித்த தகவல்கள் நமக்குக் கிடைக்குமே - ஒன்றும் இழப்பில்லையே!



குனிந்து நிற்பவர் தான் எங்களின் அன்றைய அன்னதாதா....



சிற்றூரும் ஆலயமும்...

விநாயகரை தரிசித்து மேலும் தொடர்ந்து வனப்பகுதியில் நடக்க, நாங்கள் சென்று சேர்ந்தது அனுசுயா மாதா ஆலயம் அமைந்திருக்கும் சிற்றூரை.  அங்கே இருக்கும் ஒரு கடையினை நடத்துபவர் நண்பர் Bபிஷ்ட் அவர்கள் எப்போதும் சந்திக்கும் நபர்.  அவரிடம் எங்களுக்குத் தேவையான உணவை தயாரித்து வைத்திருங்கள் என்று சொல்லி புறப்பட்டோம்.  மிகச் சாதாரணமான ஒரு கொட்டகை, விறகு அடுப்பு, சில பாத்திரங்கள் மற்றும் தட்டுகள் என அந்தக் குடிசையில் தான் அவர்கள் உணவு தயாரிக்கிறார்கள். வீடும் அங்கேயே. பெண்கள் எல்லாம் தனிக்குடில்களில் இருப்பார்கள் போலும். ஆண்கள் தான் அந்தக் கடையினை நடத்துகிறார்கள்.  நாங்கள் சென்ற போது மதியம் ஆகிவிட்டது என்றாலும் அப்போது சாப்பிடவில்லை.  உணவுக்குப் பிறகு நடப்பது கொஞ்சம் கடினம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.  இன்னும் க(ந)டக்க வேண்டிய தொலைவு இருக்கிறது என்பதால் கடைக்காரரிடம் சில நிமிடங்கள் பேசி ஆலயத்தினையும் கடந்து மேலே நடந்தோம்.  நண்பர் பல முறை அங்கே வந்திருப்பதால் என்ன தேவை என்று பெரிதாக விவரிக்கவே இல்லை. அந்தக் கிராமத்தில் வீட்டு உணவு கிடைப்பதே பெரிய விஷயம் என்பதால் அதிகம் எதிர்பார்க்கவும் கூடாது என்பதையும் நாம் உணர வேண்டும். 



காட்டுப் பாதையில் நடை...



நடையாய் நடந்து...


ஆங்காங்கே குறிப்புகள்...


சின்னஞ்சிறு பூவே....

பாதையில் எங்கே பார்த்தாலும் இயற்கையின் பேரெழில் மனதைக் கவரும் விதமாக இருந்தது.  மேலும் கீழுமான ஒற்றையடிப் பாதையில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம்.  மனித நடமாட்டமே இல்லாத அந்த மலைப்பாங்கான பகுதிகளில் நாங்கள் நான்கு பேர் மட்டுமே நடந்து கொண்டிருந்தோம். எந்தப் பகுதியிலிருந்து எந்த விலங்கு வருமோ என்ற கவலைகள் கூட எங்களிடம் இல்லை.  மெதுவான குரலில் பேசிக்கொண்டே நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.  நண்பர் அந்த இடத்திற்கு முன்னரே வந்திருப்பவர் என்பதால் அந்த இடம் குறித்த தகவல்களைச் சொல்லிக் கொண்டு வந்தார்.  அந்த இடத்தில் ஒடிஷா மாநிலத்தினைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர், தனது தொழில், வீடு, குடும்பம் என அனைத்தையும் விட்டுவிட்டு நிரந்தரமாக தங்கி விட்டார் என்று சொல்லிக் கொண்டு வந்தார்.  நாங்கள் செல்லப்போகும் இடத்திற்கு அருகிலேயே ஒரு குகைப் பகுதியில் சிறிய குடில் ஒன்றை அமைத்து அங்கேயே தங்கி இருக்கிறார் அந்த மனிதர்.  ஒரு வருடம், இரண்டு வருடம் என தொடர்ந்து மௌன விரதம்.  



வனத்தில் தங்கிவிட்டவரின் வீடு...

உள்ளூர்வாசிகள் அவருக்குத் தேவையான பொருட்களை - உணவு, கோதுமை என தேவையானவற்றை கொடுத்து விடுகிறார்கள். சைகை மொழியிலும், பேப்பர் பேனா இல்லாவிட்டால் கைகளால் மண்/பாறை பகுதிகளிலும் எழுதிக் காண்பித்து அவர்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லி விடுகிறார் என்பதால் உள்ளூர்வாசிகளுக்கு அவர் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.  அவரது குடிசைக்கு தனியே மின்சார வசதிகள் இல்லை என்பதால் சோலார் பேனல்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் சிலர்.  அது எதுவுமே தனக்குத் தேவை இல்லை என்ற நோக்குடன் அவர் இருந்தாலும் அவரை யாரும் விடுவதில்லை. அவருக்குத் தேவை எனும் சில பொருட்களை தந்து விடுகிறார்கள்.  ஆனால் அவர் எதையுமே பொருட்படுத்துவதில்லை. அந்த வனப்பகுதியில் ஒற்றை வேட்டி, மேல் துண்டுடன் காட்சியளிக்கும் அவர் குறித்து நண்பர் சொல்லிக்கொண்டு வரும்போது அவரே எதிரே வனப்பகுதியிலிருந்து வெளியே வந்தார்.  அவர் எங்களைப் பார்க்கும்போதும் மௌனவிரதத்தில் தான் இருந்தார்.  


நண்பர் அவரைப் பார்த்து வணங்க, அவரும் பதிலுக்கு வணக்கம் சொல்லி புன்னகைத்தார்.  சில வருடங்களுக்கு முன்னர் நண்பர் வேறு சிலருடன் வந்திருந்தபோது பேசிய விஷயங்களை கீழே மண்தரையில் எழுதிக் காண்பித்து “அந்த விஷயங்கள் நினைவிலிருக்கிறதா?” என்று கேட்டதை புரிந்து கொள்ள எங்களுக்குச் சில மணித்துளிகள் பிடித்தது!  நண்பர் சில நிமிடங்களில் அதனைச் சரியாக புரிந்து கொண்டு அதானே என்று கேட்க, அந்த மனிதரிடம் அப்படி ஒரு புன்சிரிப்பு.  சில நிமிடங்கள் அவருடன் நாங்கள் பேசிவிட்டு நகர்ந்தோம். மௌன விரதம் இருக்கும் ஒருவரை இப்படித் தொல்லை செய்யக்கூடாது என்ற எண்ணமும் எங்களிடம் இருந்தது.  ஆனாலும் இப்படி ஒரு மனிதர் தனியாக அந்த அத்துவானக் காட்டில் இருந்து கொண்டு உள்ளூர் மக்களுக்குத் தேவையான மருந்துகள் - ஆங்கில, பொது மருத்துவம் - எழுதித் தருவார் என்றும் சொல்லிக்கொண்டு வந்தார் நண்பர். 


வனப்பகுதியில் தொடர்ந்து நடக்க எங்களைச் சுற்றி எங்கும் வனாந்திரம் - மலைகள், எங்கோ சலசலத்து ஓடும் ஓடை ஒன்று என்று மிக மிக ரம்மியமான உணர்வுகளைத் தந்து கொண்டிருந்தது.  நடந்து வந்தாலும் அந்தக் களைப்பு தெரியாமல் இருக்க அந்தச் சூழல் எங்களுக்கு உதவி செய்தது என்றும் சொல்லலாம்.  நாங்கள் தொடர்ந்து நடக்க, வழியில் பார்த்த மனிதர் தங்கும் இடமும் வந்தது.  அவர் அங்கே இல்லை என்பதால், ஒரு சிறு கதவு கொண்டு மூடியிருந்தது அந்த இடம். அது மட்டுமல்லாது மூடி வைக்காமல் விட்டால், அந்த மனிதர் தங்கும் வீட்டுக்குள் காட்டு விலங்குகள் உள்ளே சென்றுவிடும் என்பதால் தான் இப்படி மூடி வைத்திருக்கிறார் என்றும் தெரிந்தது.  காட்டு விலங்குகள் இருக்கும் இடத்தில் இப்படித் தனியாளாக இருக்க எத்தனை தைரியம் வேண்டும் என்று தோன்றினாலும், அவற்றை நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் நம்மை அவை ஒன்றும் செய்யாமல் இருக்கும் என்பதையும் மனது சொன்னது.  காட்டு விலங்குக்கு அந்த இடம் சொந்தம், மனிதர்களாகிய நாம் தானே அந்நியர்கள் என்ற எண்ணமும் வந்தது.  இருந்தாலும் அந்த மனிதர் எந்த வித பயமும் இல்லாமல் அங்கேயே தங்கியிருக்கிறார் என்று எண்ணும்போதே அவர் மீது மரியாதை வந்தது.  




நீரோடையும், அதைக் கடக்க பாலமும்....

எதற்காக வீட்டை விட்டு வந்தார்? அந்த வனாந்திரத்திற்கு வந்து சேர்ந்து இறைவனைத் தேட வேண்டும் என்ற எண்ணம் ஏன் அவருக்கு வந்தது? காட்டில் அவருடன் பேச யாருமே இல்லாதபோது மௌனவிரதம் இருக்க வேண்டிய அவசியம் என்ன? என்று பல கேள்விகள் அவரைப் பற்றி எழுந்தாலும் இப்படி எல்லாம் இருப்பதற்கு ஒரு சிலரால் மட்டுமே முடியும் என்ற எண்ணமும் வராமல் இல்லை. அந்த மனிதரைப் பார்க்கும்போது படம் எடுக்கலாம் என்ற எண்ணம் வந்தாலும் ஏனோ எடுக்கவில்லை.  அந்த குகைப்பகுதியில் இருந்திருந்தால், அந்த மனிதர் தன்னிடம் இருக்கும் பொருட்கள் கொண்டு தேநீர் தயாரித்துத் தருவார் என்றும் அந்த நேரத்திற்கு அந்தத் தேநீர் மிகமிகச் சுவையாக, அம்ருதமாக இருக்கும் என்றும் நண்பர் சொல்லிக்கொண்டு வர ஆகா, அப்படி ஒரு தேநீர் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டே வந்தோம்.  நாங்கள் கண்ட காட்சியை எப்படி விவரிப்பது? ஓடைக்கு நடுவே பாறைகள், அதன் மீது மரக்கட்டைகள் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு சிறு பாலம், பக்கத்தில் தெரியும் அருவி, குகை என அனைத்துமே எங்களை மகிழ்விக்க வைக்கும் விதத்தில் இருந்தது. தொடர்ந்து அந்தப் பகுதியில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன, நாங்கள் கண்ட காட்சி என்ன என்பதையெல்லாம் தொடர்ந்து வரும் பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே…


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

20 ஏப்ரல் 2026


8 கருத்துகள்:

  1. இலைக் குப்பைகள் நிறைந்த குறுகிய பாதை!  ஏனோ குடும்பத்தை விட்டு இங்கு தனியாகத் தங்கினார் அந்த பல் மருத்துவர்?  எந்த வசதியும் வேண்டாம் என்று இருக்கும் அவர் குறித்த தகவல் ஆச்சர்யம்.  விறகு கட்டைகளால் ஆன பாலம்..  காலில் குத்தாதோ..  அந்த மனிதர் ஒரு புத்தகம் எழுதினால் அது மிக மிக சுவாரஸ்யமாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.  பிலோ இருதயநாத் கட்டுரைகளை விட சுவாரஸ்யமாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மனிதர் ஒரு புத்தகம் எழுதினால் அது மிக மிக சுவாரஸ்யமாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. பிலோ இருதயநாத் கட்டுரைகளை விட சுவாரஸ்யமாய் இருக்கும்.//

      அதே! நிச்சயமாக ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  2. விநாயகர் ரொம்ப சொகுசா சாஞ்சு படுத்திருக்கும் அழகு!!!

    இலைச் சருகுகளில் நடக்கும் பாதை கவர்ந்தது. சருகின் சத்தமும் கேட்டது.

    //அந்த இடத்தில் ஒடிஷா மாநிலத்தினைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர், தனது தொழில், வீடு, குடும்பம் என அனைத்தையும் விட்டுவிட்டு நிரந்தரமாக தங்கி விட்டார் என்று சொல்லிக் கொண்டு வந்தார். //

    அட! குடும்பம் எல்லாம் செட்டில் செய்துவிட்டு இவர் ஆன்மீகத்தில் இறங்கி வனவாசம் செய்ய வந்துவிட்டார் போல! ஒரு சிலர் இப்படிக் குடும்பத்தைச் செட்டில் செய்துவிட்டு போய்விடுவது அறிந்திருக்கிறேன். ஆனால் குடும்பத்தோடு பேசி தன் விருப்பத்தைச் சொல்லிவிட்டுத் தேடலில் இறங்கலாம்!

    கீதா



    பதிலளிநீக்கு
  3. இப்படி ஒரு மனிதர் தனியாக அந்த அத்துவானக் காட்டில் இருந்து கொண்டு உள்ளூர் மக்களுக்குத் தேவையான மருந்துகள் - ஆங்கில, பொது மருத்துவம் - எழுதித் தருவார் என்றும் சொல்லிக்கொண்டு வந்தார் நண்பர். //

    அட! ஆன்மீக மருத்துவர்! எப்படி அவருக்கு இப்படி ஓர் எண்ணம் வந்தது என்று அறிய ஆவல்! சின்ன வயதிலேயேவா இல்லை ஓரளவு வாழ்ந்த பிறகா...குடும்பம் அனுமதித்ததா...

    மௌனவிரதம் இருக்கும் போது மூளையின் செயல்பாடுகள் இன்னும் நல்லா பக்குவமாக இன்னும் நல்லா வேலை செய்யும் கிரகிக்கும் திறனும் அதிகரிக்கும் என்றும் வாசித்த நினைவு. அவருக்கு மனமும் தெளிவாக இருக்கிறது என்று தெரிகிறது. ஆச்சரியம் அவரைப் பற்றி மேலும் அறிய ஆவல் வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஓ என் மனதில் வந்த கேள்விகள் நீங்க அடுத்தாப்ல சொல்லிட்டீங்க!!!!! ஆமாம் சிலருக்கு இப்படி எண்ணம்.

    அவரிடம் நிச்சயமாக ஒரு வித சக்தி...நீங்க பாத்தீங்கனா மலைப் பகுதிகளில் இப்படித் தனியாக நல்ல எண்ணங்களோடு பேசாமல், தானுண்டு தன் வாழ்வுண்டு என்று வாழ்பவர்களின் சக்தி தனி. அவர்கள் எது செய்தாலும் நன்றாக இருப்பதாகவே இருக்கும்...நானும் நினைத்தேன் கண்டிப்பாகப் படம் எடுத்திருக்க மாட்டீங்கன்னு. நமக்குத் தோன்றாது இப்படியானவர்களைப் பார்க்கும் போது. அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நாம் நுழைவது போன்றாகிவிடும் இல்லையா.

    அந்த ஓடையும் ரம்மியமுமே நமக்கே அங்கிருந்தால் கண்டிப்பாக மனதில் அமைதியும் மாற்றங்களும் வரும்.

    கீதா

    அந்த ஓடை ஆஹா!!!!! ரம்மியமான பகுதி. நிஜமாகவே விலங்குகள் இருக்கும் பகுதி என்றே தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்குக் கிடைத்த அனுபவம் வித்தியாசமானது.

    அவரை ஏன் புகைப்படம் எடுக்கவில்லை?

    படங்களும் விவரங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. வாசகம் அருமை.
    செந்தூர சொகுசு பிள்ளையார் அழகு.
    அன்னதாதாவிற்கு வணக்கம் சொல்லவேண்டும் .
    சிற்றூரும் கோயிலும் படம் அழகு.காட்டுப்பாதை தனியாக நடக்க பயமாக இருக்கும் போலவே!

    ஆங்காங்கே குறிப்புகள் இருப்பது நல்லது பயணம் செய்பவர்களுக்கு வசதி. சிறு பூ அழகு.
    தனியாக வனபகுதியில் தங்கை விட்ட பல் மருத்துவர், அவரின் மெளன விரதம், அவருக்கு வேண்டியதை செய்து கொடுக்கும் மக்கள் பரஸ்பர அன்பை தெரிவிக்கிறது.
    அருவி, குகை, பாலம் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  7. மிக அதிசயமான பதிவு. அந்தக் காட்சிகளை நினைத்துப் பார்க்கவே இனிமையாக இருக்கிறது.. உங்கள் நடைப் பயணம் மேலும் மேலும் சிறப்புற வேண்டும். நாங்களும் தொடருகிறோம்.வல்லிம்மா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....