அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
அத்ரி முனி குகை மற்றும் அம்ருத் கங்கா அருவி பகுதியிலிருந்து அந்த மாலை நேரத்தில் மனதே இல்லாமல் புறப்பட்டு நடக்க ஆரம்பித்தோம். கிராமப் பகுதியினை வந்தடைந்த போது முதலில் அனுசுயா மாதா ஆலயத்தில் அன்னையை தரிசிக்க திட்டம் இருந்ததால் நேரடியாக ஆலயத்திற்கு உள்ளே நுழைந்தோம். ஆலய வாயிலில் இருக்கும் தண்ணீர் குழாயில் கால்களையும் கைகளையும் சுத்தம் செய்து கொண்டு ஆலயத்தில் நுழைந்தோம். அங்கே நுழைவதற்கு முன்னர் சில கடைகளும் இருந்தன. அங்கே சில அழகிய செல்லங்கள் இருக்க, அவற்றை நண்பர் இந்தர்ஜீத் கொஞ்சிக் கொண்டு இருந்தார். அங்கே இருந்த கடையில் அந்தச் செல்லங்களுக்கு பிஸ்கெட் போடலாம் என்று கேட்டவுடன், அந்தக் கடைக்காரரும் அங்கே இருந்த பூஜை செய்யும் நபரும் நாய்க்கு போடுவதாக இருந்தால் பிஸ்கெட் தர மாட்டோம் என்று கண்டிப்புடன் சொன்னார். ஏன் என்று கேட்க, அதற்குத் தந்த பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
அவர்கள் சொன்ன பதில் இது தான் - நாங்கள் கஷ்டப்பட்டு வளர்க்க, பிஸ்கெட் போட்டு நீங்கள் அழைத்துச் செல்ல நாங்கள் அனுமதிக்கமாட்டோம். சிலர் இப்படி அழைத்துச் சென்று விட்டார்கள் என்று அவர் பக்கத்து விளக்கத்தினைச் சொன்னார். நாங்கள் ஒன்றிரண்டு முறை இப்படியெல்லாம் எங்களுக்கு எந்த வித யோசனையும் இல்லை என்று சொன்னாலும், பிஸ்கெட் நிச்சயம் தர முடியாது என்று கண்டிப்பாக மறுத்து விட்டதோடு, எங்களுக்கு எதையும் விற்பனை கூட செய்யவில்லை. இத்தனைக்கும் நண்பர் இந்தர்ஜீத், தன் வீட்டிலேயே, ஏற்கனவே இரண்டு செல்லங்கள் இருப்பதால் மூன்றாவதாக ஒரு செல்லத்தை நிச்சயம் வளர்க்க முடியாது என்று சொன்னபிறகும் அவர்கள் அவர்களது எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அந்தச் செல்லங்களோ, எங்கள் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்தது - கொஞ்சம் பாவமாகவும் இருந்தது - எங்களின் கைகளில் ஒன்றும் இல்லை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?
சரி அனுசுயா மாதா ஆலயத்தினுள் செல்வோம் வாருங்கள். இந்த ஆலயம் இருக்கும் கிராமமே இந்த ஆலயத்தினைச் சுற்றிதான் உருவாகியிருக்க வேண்டும். அத்ரி முனி - சப்தரிஷி மண்டலத்தில் ஒருவர் என்பதும், சப்தரிஷி மண்டலத்தில் நக்ஷத்திரமாக இருக்கும் அத்ரி முனி எத்தனை புகழ் பெற்றவரோ அதே அளவிற்கு அத்ரி முனிவரின் பத்னி அனுசுயா மாதாவும் நம் புராணக் கதைகளில் வரும் பாத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அந்த அனுசுயா மாதாவிற்கென அமைக்கப்பட்ட ஆலயம் தான் இது. தற்போது இருக்கும் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும், மிகவும் பழமையான ஆலயம் என்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த ஆலயத்தின் பக்கத்தில் நிறைய புராதனமான சிலைகள் இருக்கின்றன. ஆனால் அவை சிதிலமடைந்து இருந்ததால் அவற்றை படமாக எடுத்துக் கொள்ள மனம் வரவில்லை. ஆனாலும் சில படங்கள் எடுத்திருந்தேன் - அவை இந்தப் பதிவில் பகிர்ந்து இருக்கிறேன். அங்கே இருக்கும் ஒரு மரத்தின் அடிப்பகுதியினைப் பார்த்தால் அந்த மரத்திற்கு வயது நூற்றுக் கணக்கில் சொல்லலாம் என்பது போல இருந்தது.
சிறிய ஆலயமாக இருந்தாலும், சுத்தமாக பராமரிக்கப்பட்டு வரும் ஆலயம் என்பதை அங்கே சென்று பார்த்தபோது புரிந்து கொள்ள முடிந்தது. உள்ளே சென்று அனுசுயா மாதாவிடம் எல்லோருக்கும் நல்லதையே கொடம்மா என்று வேண்டிக்கொண்டு, வடக்கில் வழக்கமாகக் கிடைக்கும் சர்க்கரை மிட்டாய் பிரசாதத்தினை வாங்கிச் சுவைத்தபடி வெளியே வந்தோம். ஆலயத்தினைச் சுற்றிப் பார்த்தால் எல்லாப் பக்கங்களிலும் மலைச் சிகரங்களும் இயற்கை எழிலும் தான். அப்படியான இடத்தில் ஒரு ஆலயமும், இயற்கை எழிலும், பக்கத்தில் ஓடும் காட்டாற்றின் ஒலியும் நம்மை ஒரு ஏகாந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் விதமாக இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன? ஆலயத்தின் வெளிப்பக்கம் பக்தர்கள் வரிசையாக மணிகளைக் கட்டி பிரார்த்தனைகளைச் செய்திருப்பதையும் பார்க்க முடிந்தது. சில நிமிடங்கள் அந்த ஆலய வளாகத்தில் நின்று, சில பல நிழற்படங்கள் எடுத்துக் கொண்டோம். அனுசுயா மாதாவின் கதை நீங்கள் அனைவரும் அறிந்ததே - அதனால் இங்கே அந்தக் கதை குறித்த விவரங்களை நான் பகிரவில்லை.
ஆலயத்திலிருந்து வெளியே வந்து, கிராமத்தில் இருந்த கடைக்குச் சென்றோம். எங்களுக்காக நண்பர் Bபிஷ்ட் அவர்கள் சொல்லி வைத்திருந்தது போல, அருமையான கிராமிய உணவு, சுடச் சுட தயாராக இருந்தது. மிகவும் சுவையான, கிராமிய உணவு தான் - அதிக Variety எதிர்பார்க்காமல் கிடைத்த பொருட்களை வைத்துக் கொண்டு தயாரித்த உணவு என்பது மட்டுமல்லாது அந்த உணவைத் தயாரித்த மனிதர் உள்ளன்போடு தயாரித்திருக்கிறார் என்பதை, உணவைச் சுவைத்த போது எங்களால் உணர முடிந்தது. ரொட்டி, தால், சாதம் மற்றும் உள்ளூரில் விளைந்த பச்சைப் பசேலென்ற கீரை. கூடவே இயற்கையாக காட்டில் விளைந்த புற்களை உண்டு மாடுகள் தந்த பாலிலிருந்து எடுக்கப்பட்ட வெண்ணை ரொட்டியில் தடவிக் கொள்ள கிடைக்க, அத்தனையும் கபகபவென்ற பசியில் இருந்த எங்களுக்கு அம்ருதமாக இருந்தது. நாங்கள் நால்வருமே உணவை ஒரு கட்டு கட்டினோம்! அதன் பிறகு அவருக்குத் தேவையான பணத்தைக் கேட்டுக் கொடுத்து அவருக்கு நன்றி சொல்லி, காட்டுப் பாதையில் திரும்புவதற்குத் தயாரானோம். கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக் கொண்டு மாலை நேரம் வந்து விட்டதை எங்களுக்கு அறிவித்தது. கடக்க வேண்டிய காட்டுப் பாதை இன்னமும் இருக்க, விரைவாக அங்கிருந்து புறப்பட்டோம். அந்த அனுபவம் எப்படி இருந்தது - நிச்சயம் கொஞ்சம் திகிலான அனுபவம் தான் - அடுத்த பகுதியில் அது குறித்து சொல்கிறேன். அது வரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
27 ஏப்ரல் 2026












அந்த செல்லத்தின் கண்களில் தெரியும் எதிர்பார்ப்பு... அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குஅவர்கள் நினைப்பதிலும் நியாயம் இருக்கிறது. அவர்கள் சொல்வதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தோன்றும். அந்தப் பக்கம் வருபவர்கள் எல்லாம் ஏதாவது வாங்கித்தந்து பழக்கி விட்டால் அது எல்லோரிடமும் எதிர்பார்க்கும் என்பதோடு நலலவர் யார் கெட்டவர் யார் என்பதை பிரித்துப் பார்ப்பதையும் நிறுத்தி விடும் என்றும் தோன்றும்!
கோவில் பற்றிய விவரங்களை சொல்ல அங்கே யாரும் இல்லையோ... எளிய உணவு இப்படி ஒரு பயணக் களைப்புக்குப் பின் எவ்வளவு ருசியாக இருந்திருக்கும் என்பது சொல்லாமலே தெரிகிறது.
பதிலளிநீக்குஅந்தச் செல்லங்களோ, எங்கள் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்தது - கொஞ்சம் பாவமாகவும் இருந்தது - எங்களின் கைகளில் ஒன்றும் இல்லை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? //
பதிலளிநீக்குபாவமாகப் பார்க்கிறது அந்தக் குட்டிச் செல்லம்.
அவங்க சொல்வது சரிதான். ஏனென்றால் பொதுவாக சின்ன குட்டி நாய்கள் கொஞ்சம் பிஸ்கட் போட்டாலே நம்மோடு வரத் தொடங்கிவிடும் பெரிசுங்களே சிலதுங்க அப்படித்தான் ஜி. பழைய வீட்டருகில் இருந்த செல்லங்கள் அப்படித்தான். சிலதுங்க தங்களுக்கு நல்ல எஜமான் கிடைக்கமாட்டாரா என்று ஏக்கத்தில் இருக்கும்.
இப்போது இங்கு ஏரிக்கரையில் நிறைய செல்லங்கள் இருக்கின்றன. நான் போட ஆசைப்பட்டாலும் செக்யூரிட்டி தடுத்துவிட்டார். காரணம் நாம் போட்டால் அங்கு வருவோரிடம் எதிர்பார்க்கும். எல்லோரும் ஒரே மாதிரி இல்லை என்பதால்.
மற்றொன்று நாம் ஒரு நாள் போகலைனாலும் அதுங்க அந்த டயத்திற்கு நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அப்ப அங்கு வருவோரின் பின்னால் செல்லும் ஏதேனும் கிடைக்குமா என்று அதுங்களைப் பொருத்தவரை "மணி அடிச்சா" சோறு என்பதுதான்.
இத்தனையும் நான் சொன்னாலும், நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக வருத்தப் பட்டிருப்பேன்! எனக்கும் செல்லங்களைக் கண்டால் கொஞ்சி, ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன்.
கீதா
ஆலயத்தினைச் சுற்றிப் பார்த்தால் எல்லாப் பக்கங்களிலும் மலைச் சிகரங்களும் இயற்கை எழிலும் தான். அப்படியான இடத்தில் ஒரு ஆலயமும், இயற்கை எழிலும், பக்கத்தில் ஓடும் காட்டாற்றின் ஒலியும் நம்மை ஒரு ஏகாந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் விதமாக இருந்தது //
பதிலளிநீக்குஆலயத்தினைப் பார்த்ததும் எனக்கும் அப்படித்தான் தோன்றியய்து. இதில் முதல் படம் மும்பும் பகிர்ந்தீங்களோ ஜி?! பார்த்தது போன்று ஒரு நினைவு.
படங்கள் எல்லாம் சூப்பர்.
இன்றைய வாசகம் இந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமானது. நான் விரும்பும் ஒன்று,
இதே போன்று, சிறிய சிவாலயம், ஆற்றங்கரையில் வயல் தோப்பு, பின்னால் மலைகள் என்று எங்கள் கிராமத்திலும் உண்டு. அதைப் பற்றித்தான் இன்று பதிவில் எங்கள் தளத்தில் சொல்லத் தொடங்கியிருக்கிறேன். அங்கும் அப்படித்தான் அமைதியான இடம் எனக்கு ரொம்பப் பிடித்த இடம்.
கீதா
உணவு ஈர்க்கிறது ஜி. நிஜமாகவே எளிய உணவு இப்படி அன்புடன் பரிமாறப்பட்டால் அதன் சுவையே தனிதான். இப்படியான பிரயாணத்தில் வகை வகையாகச் சாப்பிடுவதை விட இப்படி எளிய உணவு கிடைத்தால் அதன் சுகமே தனிதான்.
பதிலளிநீக்குஅடுத்த திகில் அனுபவத்தை எதிர்பார்த்து ஆவலுடன்....
கீதா