புதன், 29 ஏப்ரல், 2026

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - அடர் இருளில் காட்டுப்பாதையில் ஒரு திக் திக் பயணம் - பகுதி பதினைந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட தூக்கம் கண்களை தழுவட்டுமே - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இந்தத் தொடரின் சென்ற பகுதியில் அனுசுயா தேவி ஆலயம் சென்றது குறித்தும் அங்கே இருந்த ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்டது குறித்தும் எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம்.  அங்கே உணவு உட்கொண்ட பிறகு அங்கிருந்து புறப்படும் போது மெல்ல மெல்ல இருள் சூழத் துவங்கியிருந்தது.  எங்கள் வாகனம் நிறுத்தியிருந்த மண்டல் கிராமத்தின் பகுதிக்கு வருவதற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடக்க வேண்டியிருக்கும்.  அப்படி நடக்கும்போது சூரியன் மறைந்து நல்ல இருட்டாக ஆரம்பித்துவிடும் என்பதெல்லாம் நாங்கள் முன்னரே யோசித்து இருந்தோம். இருட்டி விட்ட பிறகு அந்தக் காட்டுப் பாதையில் நடப்பது கொஞ்சம் ஆபத்தானது.  தங்குவதற்கும் வழியில்லை என்பதால் சீக்கிரம் சீக்கிரமாகவே நடக்க வேண்டியிருக்கும் என்பதையெல்லாம் முன்னரே பேசிக் கொண்டோம். ஆனாலும் உண்ட பிறகு வேகமாக நடப்பதென்பது கொஞ்சம் கடினமான விஷயம் தானே.  சூரியனின் கிரணங்கள் ஆங்காங்கே மரங்களின் இடைவெளி வழியே தெரிய அந்த வெளிச்சத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம்.  



நாங்கள் அருவிப் பகுதிக்குச் செல்லும்போது வழியில் பார்த்த முதியவர் - அவரது கடையில் தான் தேநீர் அருந்தினோம் - அப்போது சொன்னபடி எங்களுக்காக காத்திருந்தார்! பாங்க் பகோடா தயாரிப்பதற்கான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்திருந்தேன் - நீங்கள் வரவில்லை என்றதும், மேலேயே தங்கிவிட்டீர்களோ என்று கடையை மூடுவதற்கான ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன் என்று எங்களைப் பார்த்ததும் சொன்னார்.  இல்லை இல்லை அதையெல்லாம் இப்போது தயாரிக்க வேண்டாம் - நேரம் இல்லை - முடிந்தால் ஒரு தேநீர் மட்டும் தயாரித்துத் தாருங்கள் என்றோம். அடுப்பினை அணைத்து விடுவதற்காக விறகுகளை வெளியே இழுத்து விட்டேனே, பரவாயில்லை கங்கு கொஞ்சம் இருக்கிறது…. சற்றே காத்திருங்கள், அதற்குள் தேநீர் தயாரித்து விடுகிறேன் என்று அதற்கான வேலைகளைத் தொடங்கினார்.  அவருக்கு ரொம்பவே வருத்தம் - எங்களுக்கு பாங்க் பகோடா தயாரித்து தரமுடியவில்லையே என வருத்தம் கொண்டார்.  சரி பகோடா தான் தரமுடியவில்லை, காய்ந்த இலைகள் வைத்திருக்கிறேன் - அதற்கான குழாயில் (சில்லம்!) அடைத்து பற்ற வைத்து தருகிறேன் - ஒரு இழுப்பு இழுங்கள் - குளிருக்கு இதமாக இருக்கும் என்றார்!  



ஹாஹா… எப்படியாவது எங்களை அந்த கஞ்சா செடிகளை பயன்படுத்த வைக்க வேண்டும் என்று முயற்சித்தார் போலும்.  எங்களில் எவருக்குமே அந்த பழக்கங்கள் இல்லை என்பதால், “எங்களுக்குப் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்! அதனால் இப்போது இந்த விளையாட்டெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை… பிறிதொரு முறை வரும்போது பார்த்துக் கொள்ளலாம்” என்றெல்லாம் சமாதானம் சொல்லி அவரை அப்போதைக்கு ஆஃப் செய்தோம்.  இருட்டாகி விட்டதே, தைரியமாக நடந்து சென்று விடுவீர்களா? டார்ச் லைட் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு, சற்றே கிண்டல் தொனியில் அவர் சொன்ன விஷயம் எங்களை கொஞ்சமாக அதிரச் செய்தது. அவர் சொன்ன விஷயம் அப்படி! இருட்டாகி விட்டால் காட்டு மிருகங்கள் இரை தேடி ஓடைப் பக்கம் வரும் - சர்வ சாதாரணமாக “Bபாgக்” (புலி) வரும் - மிருகங்களை அடித்து இழுத்துச் செல்லும் என்றெல்லாம் சொன்னதோடு, தேநீர் தயாரித்தபடியே, சில்லம் புகைத்தபடி, அந்தக் கதைகளை விவரிக்க ஆரம்பித்தார்.  



“நேத்து, கடையில இப்படித்தான் சாயங்காலம் உட்கார்ந்து இருந்தேன்… ஒண்ணும் பெரிசா வியாபாரம் இல்லை.  காலைல இருந்து மூணு நாலு பேர் தான் இந்தப் பக்கம் வந்தாங்க! அவங்களும் ஒரு டீய மட்டும் குடிச்சுட்டு காசு கொடுத்துட்டு போயிட்டாங்க. சாயங்காலம் திரும்பி வரும்போது டீ குடிப்பாங்களேன்னு கடைல உட்கார்ந்திருந்தேன். ஆனா டீ குடிக்காமலேயே போயிட்டாங்க! சரி ராத்திரில இங்க உட்கார்ந்து என்ன பண்ணப் போறேன்னு அடுப்பெல்லாம் அணைச்சு, இருக்கற பொருள எல்லாம் பொட்டில வைச்சு பூட்டி, சாவியை இடுப்புல சொருகிட்டு தட்டியை எடுத்து வெளிப்பக்கம் மூடறேன்…  கர்ஜிக்கிற சத்தம் எங்கிருந்தோ வருது!  கூடவே ஒரு அபயக் குரல் வேற! ஆஹா….  இன்னிக்கு வீட்டுக்கு போறதுக்கு நேரம் சரியில்ல போல! என்ன செய்யலாம்னு யோசிச்சபடியே ஒரு பீடிய பத்த வைச்சு இழுத்துட்டு நின்னேன்.  கடையிலிருந்து கொஞ்சம் தள்ளி அருவி தண்ணி ஓடி வருமே அந்தப் பக்கத்துல இருந்து தான் சத்தம் வருது! சரி ஆனதப் பார்ப்போம்னு பீடியை இழுத்தபடி, டார்ச் வெளிச்சத்துல நடக்க ஆரம்பிச்சிட்டேன்… சத்தம் பாட்டுக்கு கேட்டுட்டே இருக்கு! ஒரு பக்கம் புலியின் சத்தம், இன்னொரு பக்கம் மாடுடைய குரல்! வேகவேகமாக நடந்து வீட்டுக்குப் போயிட்டேன் - இன்னிக்கு காலைல வரும்போது பார்த்தா ஓடைப் பக்கம் மாட்டின் உடல் - பாதி தின்னுட்டு மீதியை புலி விட்டுட்டுப் போயிருக்கு! நீங்க பார்க்கலையா?” என்றார்.



ஏற்கனவே இருட்டி விட்டது.  எங்களுக்கே அந்தப் பகுதியில் நடக்க வேண்டுமே என்ற கவலை இருந்தது.  அந்தப் பெரியவர் சொன்ன கதையைக் கேட்ட பிறகு இன்னும் கொஞ்சம் யோசனைகள் - பேசாம, மேலேயே தங்கியிருக்கலாமோ?”  ஆனால் எப்படியிருந்தாலும் இனிமேல் யோசித்து ஒன்றும் ஆகப் போவதில்லை.  எங்களில் இருவரிடம் டார்ச் இருந்தது.  அதனால் முதலில் டார்ச்சுடன் ஒருவர், அதன் பிறகு டார்ச் இல்லாதவர், மூன்றாமவரிடம் டார்ச், நான்காவது நபர் டார்ச் இல்லாமல் நடப்பது என நடக்க ஆரம்பித்தோம்.  எங்கள் நடையில் அப்படி ஒரு வேகம்.  நண்பர் பிஷ்ட், பேசிக் கொண்டே நடந்து செல்வோம். பேச்சு சப்தம் கேட்டால், மிருகங்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கும் - அதனால் நம்மைத் தாக்காது என்றெல்லாம் சொல்ல, சரி ஆனதைப் பார்ப்போம் என்று வேக வேகமாக நடந்தோம்.  கும்மிருட்டு, காட்டுப் பாதை, சலசலவென ஓடும் நீரோடை என காட்சிகள் எல்லாம் இருந்தன.  காலையில் ரம்மியமாகத் தெரிந்த பாதைகள், அந்த இருட்டில் பயமுறுத்துவதாக இருந்தது என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ள வேண்டும். எங்கேயேனும் தூரத்தில் மிருகங்களின் சப்தம் கேட்கிறதா என்ற கவனிப்பும் இருந்தது எங்களிடம். 



ஏதேனும் வித்தியாசமான சப்தம் என்றால் உன்னித்து ஏதேனும் மிருக நடமாட்டம் இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொண்டோம் - சில இடங்களில் மிருக நடமாட்டம் இருப்பதைப் போன்ற பிரமையும் இருந்தது! அதைச் சொன்னால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் வர, நடையின் வேகம் அதிகரித்தது. ஓட்டமும் நடையுமாக முக்கால் மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்து வந்த போது தூரத்தில் கிராமமும் கிராமத்து வீடுகளில் இருக்கும் விளக்கின் ஒளியும் வர, மனதில் கொஞ்சம் கொஞ்சம் அமைதி திரும்பியது. இதில் எங்களுடன் வந்த இளைஞர் வேறு ஏதேனும் மிருகம் நம்மைத் தாக்கிவிட்டால் என்ன ஆகும்? நம்மை யார் பார்த்து தகவல் சொல்வார்கள் என்ற கேள்விகளை எல்லாம் கேட்கத் தொடங்கி இருந்தார்.  அவரை “சும்மா வாடாப்பா! நீ வேற எதையாவது கேட்காத! பின்னாடி கடைக்காரத் தாத்தா வரார் இல்ல, அவர் நமக்கு ஏதாவதுன்னா பார்த்துப்பார்!” என்று சொல்லிக் கொண்டு நடையின் வேகத்தினை அதிகரித்தோம்.  


கிராமத்து வீடுகள் கண்களில் புலப்பட்ட பிறகே எங்களுக்கு கொஞ்சம் அமைதி கிடைத்தது. கிராம மக்களின் நடமாட்டமும் அங்கே வீடுகளில் சமைக்கும் உணவின் மணமும் நாசிகளில் ஏற, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு நாங்கள் நால்வரும் திரும்பினோம்.  “எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா இவன்!” என்பது போல, அப்படி ஒரு வித கலக்கத்துடன் வேகமாக நடந்து கிராமப் பகுதிக்குத் திரும்பிய பிறகு, பயமெல்லாம் ஒண்ணும் இல்லையே…  வேகமாக நடந்தால் சீக்கிரமா வண்டில புறப்பட்டு குளிருக்கு இதமா ரூமுக்குப் போயிடலாம்னு தான் நினைச்சோம்” என்று பேசிக் கொண்டோம் - குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல கதை தான்!  இதில் ஒரு கவலை வேற எங்களுடன் வந்த இளைஞருக்கு - நிழற்படமோ, காணொளியோ எடுத்துக் கொள்ள முடியவில்லை என்ற கவலை தான்! அந்த இருட்டில் எடுத்தாலும் பெரிதாக ஒன்றும் அதன் தரம் இருக்காது என்று அவருக்கு சமாதானம் வேறு சொல்லிக் கொண்டிருந்தோம்! இப்போது அந்த கும்மிருட்டில் வேகமாக நடந்த நினைவுகள் சிரிப்பை வரவழைத்தது என்றாலும் அந்த நேரத்தில் அந்த காட்டுப் பாதை பயணம் திக் திக்கென்றே இருந்தது என்பதில் சந்தேகமில்லை.  தொடர்ந்து பயணத்தில் கிடைத்த அனுபவங்களை அடுத்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே. 



*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

29 ஏப்ரல் 2026


பின் குறிப்பு:  பதிவில் குறிப்பிட்ட இருளில் நடந்த அனுபவங்கள் போது படங்கள் ஏதும் எடுக்கவில்லை என்பதால் இணையத்தின் வழி, Gemini AI கொண்டு உருவாக்கப்பட்ட படங்களை இணைத்திருக்கிறேன். தகவலுக்காக! Thanks to Gemini AI for giving such timely help! :) என்ன, இந்த விஷயங்கள் நடந்த இடம் உத்திராகண்ட் என்றாலும், படங்களில் கொடுக்கப்பட்ட மனிதர்கள் தமிழகத்தினைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் - கைலி கட்டிக்கொண்டு! என்ன இருந்தாலும் Original, Original தான் இல்லையா?


1 கருத்து:

  1. திகிலான அனுபவங்கள்தான்.  அந்த நேரம் திக்திக்கென்று இருந்திருக்கும்.

    படங்கள் பார்க்கும்போதே AI என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....