அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
********
குலுக்கி சர்பத்:
குலுக்கி சர்பத் என்ற பெயரைக் கேட்டு இருக்கிறேன் என்றாலும் அதனை சுவைக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு கோவை பயணத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. கோவையை பூர்வீகமாகக் கொண்டது இந்த குலுக்கி சர்பத் என்று சொல்கிறார்கள். மலையாள மொழியில் குலுக்கி என்றால் குலுக்கப்பட்டது என்று அர்த்தம் என்கிறது AI தகவல். இதில் நிறைய Flavours உண்டு. சமீபத்தில் மகளும் நானும், ஞாயிற்றுக் கிழமை அன்று Lulu Mall சென்றிருந்தோம். அங்கே அப்படி ஒரு பேய்க்கூட்டம். அது தனிக் கதை. முதலில் குலுக்கியைக் கவனிப்போம். ஆளுக்கு ஒரு குலுக்கி சர்பத் என்று சொன்னதும் எந்த குலுக்கி சர்பத் வேண்டும் என்று வரிசையாக அடுக்கினார். நாங்கள் Mango குலுக்கி தேர்ந்தெடுத்தோம். வரிசையாக எதை எதையோ ஒரு பெரிய டம்ளரில் போட்டு அதனை மூடி நிறைய முறை குலுக்கி, மீண்டும் சில பொருட்கள் சேர்த்து நீண்ட ஸ்பூன் மூலம் கலக்கி, பேப்பர் கப்பில் தருகிறார் அந்த சிப்பந்தி..... கேரளத்தில் உருவான அந்த குலுக்கியை ஒரு வட இந்திய நபர் தயாரிக்க, அதை இரண்டு தமிழர்கள் அருந்தினோம்...... அட இதுவல்லவோ National Integration:) தயாரிக்கும் போது ஒரு காணொளியும் எடுத்தேன். அதைக் காண சுட்டி கீழே...
குலுக்கி சர்பத் @ Lulu Mall, Coimbatore
*********
பாவ் பாஜி மற்றும் சமோசா சாட்:
எப்படி குலுக்கி சர்பத் பிரபலமோ அதைப் போலவே கேரளத்தின் தட்டு கடையும் பிரபலம். தட்டு கடை என்ற பெயரில் Lulu Mall வளாகத்தில் கடை இருக்கிறது. அங்கே தான் மதிய உணவு ஆக நானும் மகளும் சாப்பிட்டோம். சாப்பிட்டது வட இந்திய நொறுக்கான சமோசா சாட் மற்றும் பாவ் பாஜி. முதலாவது எனக்கும் இரண்டாவது மகளுக்கும். அவற்றை தயாரித்தது கூட வடக்கர் தான். எல்லா இடங்களிலும் அவர்கள் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள். மால் உள்ளே, உணவகங்கள், கடைகள் என எங்கே சென்றாலும் அவர்கள் தான் உழைப்பாளிகள். வாழ்க தமிழ்நாடு. அன்றைய எங்களது மதிய உணவு - சமோசா சாட், பாவ் பாஜி, ஆளுக்கு ஒரு குலுக்கி என்பதாக முடிந்தது. சுவை நன்றாகவே இருந்தது. இருவருக்கும் சேர்த்து ஆன செலவு - அதிகம் இல்லை - 280/- மட்டுமே.
*********
அள்ளுவதும் தள்ளுவதும்:
ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ அன்றைக்கு மால் உள்ளே அப்படி ஒரு பேய்க்கூட்டம். Bag Tag போடவேண்டும் என்று நுழைவாயில் அருகே சொல்ல, அந்த இடத்தில் அப்படி ஒரு தள்ளு முள்ளு. ஒரு பத்து நிமிடப் போராட்டத்திற்கு பின்னர் வெற்றிகரமாக அதை முடித்துக் கொண்டு உள்ளே சென்றால் அடடா என்று வியக்க வைக்கும் திருவிழாக் கூட்டம். குடும்பத்துடன் வந்து பொருட்களை அள்ளுகிறார்கள். தள்ளு வண்டியில் போட்டுக் கொண்டு தள்ளுகிறார்கள் - வண்டியை மாத்திரம் அல்ல, சக மனிதர்களையும் இடித்துத் தள்ளுகிறார்கள். எதைப் பார்த்தாலும் எடுத்து வண்டியில் போட்டு நிரப்புகிறார்கள். தேவையா இல்லையா என்று பார்ப்பது போல தெரியவில்லை. எங்கள் தேவை கையளவு இருக்க, அங்கே அந்த ஞாயிறில் வந்தது தவறு என்று தோன்றியது - முன் அனுபவம் இல்லை என்பதால் ஞாயிறில் வந்து விட்டோம். பில் போடும் பகுதிக்கு சென்று பார்த்தால் ஒவ்வொரு கவுண்டரிலும் பெரிய கியூ - அதில் நிற்கும் ஒவ்வொரு நபரிடமும் பெரிய தள்ளு வண்டி நிறைய பொருட்கள். அவர்கள் பில் போட்டு முடிக்க நிச்சயம் ஒரு மணி நேரம் ஆகும். போங்கடா நீங்களும் உங்க மாலும் என்று சொல்லி, எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைத்து விட்டு, எங்கள் பைகளை ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகு எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். இதனால் கிடைத்த பாடம் - (1) மக்களிடம் காசு நிறையவே இருக்கிறது. (2) ஞாயிற்றுக் கிழமை Lulu Mall சென்றுவிடக் கூடாது!
*********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
20 ஜூலை 2026






குலுக்கி பெயர் புன்னகைக்க வைக்கிறது., இரண்டு பேருமே ஒரே ஐட்டம் சொல்லாமல் வெவ்வேறு ஐட்டங்கள் சொல்லியிருந்தால் இரண்டு சுவை பார்த்திருக்கலாம்!
பதிலளிநீக்குகுலுக்கி - புன்னகை தான்.
நீக்குஇரண்டு பேரும் வெவ்வேறு சுவைகளில் சொல்லி இருக்கலாம் - ஏனோ சொல்லத் தோன்றவில்லை ஶ்ரீராம்.
தமிழ்நாட்டில் அமர்ந்து கேரளக்கடையில் வட இந்திய உணவு சாப்பிட்டிருக்கிறீர்கள்! தேசிய ஒருமைப்பாடு!!
பதிலளிநீக்குஆம். அதைத்தான் பதிவிலும் குறிப்பிட்டு இருக்கிறேன் - ஆங்கிலத்தில்!
நீக்குமாதத்துவக்கத்தில் எல்லா கிழமைகளிலும் இங்கு கூட்டம் இருக்கும். மற்ற நாட்களிலும் குறைவிருக்காது. மால் என்றில்லை, சரவணா ஸ்டோர்ஸ் போன்ற இடங்களும் அப்படிதான். மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேறெதுவும் வாங்காமல் வெளியே வந்தது சிறப்பு.
பதிலளிநீக்குகூட்டம் இருக்கலாம் - ஆனால் இந்த இடத்தில் இருந்தது திருவிழாக் கூட்டம்.
நீக்குபொதுவாகவே இப்படியான இடங்களுக்குச் செல்வது குறைவு. அப்படியே சென்றாலும் வாங்குவதும் குறைவு.
எ பி யில் பா வெ மொய்டா கடைவிரித்திருக்கிறார். இங்கு நீங்கள் குலுக்கி சர்பத் கடை போட்டிருக்கிறீர்கள். என்ன தற்செயலா.
பதிலளிநீக்குJayakumar
இதேயேதான் நானும் மாற்றி எபியில் குறிப்பிட்டுள்ளேன். இங்கு நீங்களும்..! இதுவும்( இந்தக் கருத்துப் பரிமாற்றங்களும்) தற்செயலாக அமைந்து தான் போலும். :))
நீக்குஆம் அங்கு மோயிட்டோ இங்கே குலுக்கி சர்பத். தற்செயலாக அமைந்தது தான். திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல JKC சார்.
நீக்குஎ பி பதிவும் பார்த்தேன். அங்கே உங்கள் கருத்தும் கண்டேன். தற்செயலாக அமைந்தது தான் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குBIG BAZAAR உம் இப்படித்தான் துவங்கியது. இன்று ? ஸ்மார்ட் பஜார் ஆகி விட்டது (ரிலையன்ஸ்).
பதிலளிநீக்குவெளி நாடுகளில் self checkout வசதி உண்டு. ஸ்கேன் செய்து பில் amount கார்டு மூலம் செலுத்தி விட்டு வெளியே போகலாம்.
இந்த வரிசை போன்றவயை தவிர்க்க ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கு டெலிவெரி செய்ய சொல்லலாம். நாங்கள் செய்வது அவ்வாறே.
தில்லியில் இருந்தவரை Blinkit வழி வாங்குவதுண்டு. இங்கே எங்கள் பகுதியில் Blinkit வசதி இல்லை. Jio Mart மட்டுமே இந்த வசதியைத் தருகிறது. சில சமயங்களில் பயன்படுத்தியது உண்டு JKC சார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. குலுக்கி சர்பத், சமோசா படங்களுடன் பதிவை மிகவும் ரசித்தேன்.
/கேரளத்தில் உருவான அந்த குலுக்கியை ஒரு வட இந்திய நபர் தயாரிக்க, அதை இரண்டு தமிழர்கள் அருந்தினோம்.../
சூப்பர்.. மாநிலங்கள் மாறினாலும் சுவை மாறாதிருப்பதற்கு மகிழ்ச்சி. இந்த மாதிரி பானங்கள் கடைகளில், அவர்கள் தயாரித்து கொடுக்கும் போது சுவையானதாகத்தான் இருக்கும்.
மால்களில் எப்போதும் கூட்டம்தான். அதிலும் ஒரு மாத முதல் வாரங்களில் எங்கிருந்துதான் இவ்வளவு மக்கள் வருகிறார்களோ என்ற பிரமிப்பு ஏற்படும். உங்களைப் போலவே இப்போதிருக்கும் மக்களிடம் நிறைய பணம் உள்ளது என்றுதான் நானும் நினைத்துக் கொள்வேன்.
மலர்களின் படங்கள் இரண்டும் மனதை விட்டு அகலவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டமாக பதிவு செய்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
குலுக்கி புதிதாக இருக்கிறது.
பதிலளிநீக்குமலர்கள் படம் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்கு