வெள்ளி, 10 ஜூலை, 2026

Sugar Cut - மலையாள குறும்படம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட இரயில் காட்சிகள் - SETC VOLVO பேருந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



சமீபத்தில் இணையத்தில் உலவிக் கொண்டிருந்த போது ஒரு குறும்படம் பார்க்கக் கிடைத்தது. மலையாள மொழி குறும்படம் - சுமார் 17 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படம்.  நிறைய குறும்படங்கள் முன்பெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது பார்ப்பதற்கு முடியவில்லை.  இந்தப் படத்தின் பெயரும் ஆரம்பக் காட்சிகளும் மனதை ஈர்க்க தொடர்ந்து பார்க்கத் தோன்றியது. பார்த்தேன்.  இயல்பான காட்சிகள், நடிப்பு என அனைத்துமே நன்றாகவே இருந்தது.  ஒரு டீக்கடையில் “ஒரு சுகர் கட்டு” என்ற குரலில் ஆரம்பிக்கிறது குறும்படம்! அதை எடுத்து அந்தக் கதையின் நாயகன் குடிக்க ஆரம்பிக்கும்போது, நாயகி அங்கே வந்து அவன் தோளை தொட்டு “அதே…” என்று கூப்பிட, அவன் திரும்புகிறான். உடனே அவள் “தானோ…” என்கிறார்! அப்போது ஒரு சிறு ஃப்ளாஷ் பேக்! மோதலில் முடிந்த அவர்கள் முதல் சந்திப்பைச் சொல்கிறார் இயக்குநர். 


அப்படி ஆரம்பித்து, அந்த நாள் முழுவதும் ஒன்றாக இருக்கிறார்கள் - அவர்கள் வாழ்க்கை, இருவருக்கும் இருக்கும் பிரச்சனைகள் என பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் அன்றைய நாள் முழுவதும் போகும் இடங்கள், உணவு என கதை செல்கிறது.  அன்று மாலை பிரியும் போது என்ன நடக்கிறது? வாழ்க்கை இனிப்பானது மட்டுமல்ல என்பதையும், வாழ்க்கை வேறு விதத்தில் பயணிக்கிறது என்பதையும் சொல்ல முயன்றிருக்கிறார்.  எனக்கு இதே கதையை தமிழில் ஒருவர் எடுத்திருந்தார் என்றால் எப்படி எடுத்திருப்பார் என்ற எண்ணம் தோன்றியது. ஒரு நாள் முழுவதும் பழகி இருந்தால் அந்தத் தொடர்பு காதலில், திருமணத்தில் முடிந்திருக்கும் என்று காண்பித்திருப்பார்கள் எனக்குத் தோன்றியது.  படம் கொஞ்சம் மெதுவாகச் செல்வது போல இருந்தாலும் எனக்கு ஓகே! பொதுவாகவே மலையாள, பெங்காலி படங்கள் கொஞ்சம் ஸ்லோவாகவே இருக்கும்! 


முப்பது வயதிற்கும் மேலாகி தலை முடி இழந்து சொட்டையாக இருக்கும் ஆண், காதலித்த ஆண் திருமணம் ஆனவர் என்று தெரிந்து காதலை இழந்த பெண் என அவர்கள் இருவரும் சந்தித்த அந்த நாள், நாள் முழுவதும் நடந்த நிகழ்வுகள் என சுவையாகச் சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர்.  நடிகர்களும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். காட்சி நடக்கும் ஆற்றங்கரை ஓரக் காட்சிகளும் அழகு - முடிந்தால் குறும்படத்தினை நீங்களும் பார்க்கலாம்! பார்க்க விரும்பினால் கீழே உள்ள சுட்டி வழி யூட்யூப் தளத்தில் பார்க்கலாம்! பாருங்களேன்.


Sugar Cut | Malayalam Short movie | Ohospace | Relatable |Relationship | Feel Good | Film 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

10 ஜூலை 2026


4 கருத்துகள்:

  1. கொஞ்சம்...  மிகக்கொஞ்சம் 96 படத்தின் சாயலோ..   பார்க்க முயற்சி செய்கிறேன்.  17 நிமிடங்கள்தான் படம் என்பது உற்சாகம் ஊட்டும் செய்தி.

    பதிலளிநீக்கு
  2. மலையாளிகள் தமிழ் தயாரிப்பாளர்களைவிட நல்ல கதையுடன் பெரும்பாலும் படங்கள் எடுக்கிறார்கள். வித்தியாசமான ப்ளாட். இதனைப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  3. கடைசியில் மனம் கனத்துவிடுகிறது. அழகான படம்.

    பெரும்பாலும் மலையாளப் படங்கள் மிக மிக் யதார்த்தமாக, இயல்பான நடிப்புடன், நிஜ வாழ்க்கையில் எப்படிப் பேசுவார்களோ அப்படியே இருக்கும். உடைகள் எல்லாமே...இக்குறும்படமும் அப்படியே. நல்லா எடுத்திருக்காங்க சுகர் கட் தலைப்பும் பொருத்தமாக வாழ்க்கை எப்படிச் செல்கிறது இருவருக்கும்.. இருவருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. ரொம்ப இயல்பாக

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அலைபேசியிலேயேதான் எடுத்திருக்கிறார்கள்!

    ஸ்வராஜ் நல்லா எடுத்திருக்கிறார்....பிஸ்வாஸின் கதை என்று தெரிகிறது. இருவரும் படத்தை எப்படி எடுத்தார்கள் என்பதையும் காட்டும் காணொளியும் பார்த்தேன். மொபைலில் தான் எடுக்கிறார்கள்! அட! போட வைத்தது எடிட்டிங் நல்லா பண்ணிருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....